விக்கி- சில குறிப்புகள்




பெயர்: விக்னேஷ் (அ) விக்கி
நிறம்: மாநிறம்
குணம்:குசும்பு

எல்லா விக்னேஷ்களை போலவும் அவனும் 'விக்கி' என்றே அழைக்கப்பட்டான். விக்கியுடன் நான் அதுவரை அதிகம் பேசியது கிடையாது. பதினொன்றாம் வகுப்பில் எங்கள் பெஞ்சில் வந்து உட்காந்த போது முதலில் நானும் பிரிதிவியும் கொஞ்சம் பீதி ஆனோம். ஏனெனில் அதுவரை அவனை பற்றி கேள்விப்பட்ட விஷயங்கள் அப்படி. 'மாப்ள...நா இங்க உட்கார்ந்துக்கவா??' என விக்கி கேட்ட போது, நான் பிரிதிவியை பார்த்தேன். அவன் சாணியை மிதித்தவன் போல் முழித்தான். ஒரு வழியாய் 'ஹி..ஹி..' என இளித்துக்கொண்டே இடம் கொடுத்தோம். 'இனிமே நமக்கு சங்கு தான் டா' என பிரிதிவி என் காதில் மெல்லமாய் சொன்னான். அவன் நம்பிக்கை வீண் போகவில்லை. விக்கி தன் பணியை அன்றே செவ்வனே துவக்கினான். வாத்தியார் 'Computer Science' வகுப்பில் Internet க்கும் Intranet க்கும் என்ன வித்யாசம் என ஒரு கேள்வியை பொத்தாம் பொதுவாய் கேட்டார். வழக்கம் போல் மொத்த வகுப்புமே அமைதி காக்க, விக்கி "ஸ்பெல்லிங் சார்" என குனிந்து கொண்டு சத்தம் போட்டு சொன்னான். எல்லோரும் பயங்கரமாய் சிரித்தார்கள். கொடுமை என்னவெனில், யார் சொன்னதுனு யாருக்கும் தெரில. மொத்த வகுப்பும் எங்கள் பெஞ்சையே வெறித்து பார்த்தது.

வாத்தியார் எங்கள் அருகில் வந்து ,'மூணு பேருல யாருடா??' என்றார். நான் 'நாங்க இல்ல சார்' என்றேன். என் கன்னத்தில் ஜெட் வேகத்தில் ஒரு அறை விழுந்தது.அடுத்து விக்கி கண் கலங்கி 'எனக்கு சத்தியமா தெரியாது சார்'னு என கேட்பதற்கு முன்னே சொன்னான்.அந்த உலக நடிப்பை பார்த்து மிரண்டு போனேன். கடைசியாய் நின்ற ப்ரிதிவியை பார்த்தார். கோழி திருடியவன் போல முழி,கையில் கலர் கலரான கயிறுகள், பாக்கெட்டில் சீப்பு என சந்தர்ப்ப சாட்சிகள் எல்லாமே பிரிதிவிக்கு எதிராக அமைந்தது. அவன் பேச ஆரம்பிக்கும் முன்னாலே வாத்தி அவன் கன்னத்தில் மானாவாரியாய் தூர் வாரினார். அவர் போனப்பிறகு விக்கி ப்ரிதிவியிடம் ,'மாப்ள அப்டி இப்டி அழுது சீன போடுறத விட்டுட்டு ..மலையூர் மம்பட்டியான் மாதிரி வெரப்பா நின்னா இப்டி தான்' என்றான். பிரிதிவி பதிலேதும் பேசவில்லை. அவ்வளவு அடி வாங்கினால் யாரால் தான் பேச முடியும்.

பிடிக்காத பாடம்:வேதியல்

ஆனால் கொஞ்ச நாட்களிலேயே நாங்கள் மூவரும் நெருங்கி விட்டோம். அதுவரை சாம்பார் பெஞ்ச் ஆக இருந்த நாங்கள் சண்டியர் பெஞ்சாக மாறினோம். நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் திரும்பி பார்க்கும் முதல் பெஞ்ச் மாணவர்களுக்கு கெட்ட வார்த்தைகளை பரிசளித்தோம். விக்கி வேதியலை கண்டாலே சிலுவையை கண்ட ரத்த காட்டேரி போல் தெறித்து ஓடுவான். வேதியலில் இரண்டு இலக்க மதிப்பெண்களை அவன் வாங்கியதே இல்லை.இப்படி இருக்க, 'கொடுக்கப்பட்ட உப்பு என்ன வகையை சார்ந்தது' என்று கண்டுபிடிக்கும் ஆய்வுக்கூட சோதனை நடந்து கொண்டு இருந்தது. ஒவ்வொரு மாணவனுக்கும் கொடுக்கப்பட்ட உப்பு எந்த வகையை சார்ந்தது என்று அவரவர் வேதியல் சோதனை செய்து கண்டு பிடித்து சொல்ல வேண்டும். விக்கி பாராளுமன்றம் சென்ற 'அண்ணன் அஞ்சாநெஞ்சர்'
போல் முழித்து கொண்டிருந்தான். 'டேய் மாப்ஸ்.. இந்த கருமம் என்னா உப்புடா??' என கேட்க, பிரிதிவி விளையாட்டாய் 'ஜாவா டை ஆக்ஸைட்' என்றான். அது கிண்டல் என்பது கூட தெரியாமல் வாத்தியாரிடம் போய் உப்பை காட்டி 'ஜாவா டை ஆக்ஸைட்' என்று பெருமை பொங்க சொல்லித்தொலைந்து விட்டான். அன்று விக்கிக்கு வேதியல் ஆய்வுக்கூடத்தில் சிறப்பு பூஜை நடந்தது. மூஞ்சி வீங்கி வெளியே வந்த விக்கியை பார்த்து நானும் ப்ரித்திவியும் அடக்க முடியாமல் சிரித்தோம்.கடைசியில் ஒரு பப்ஸ் வாங்கி கொடுத்து அவனை சமாதான படுத்தினோம்.


பொழுபோக்கு: நடிகைகளின் புகைப்படங்களை சேகரிப்பது

விக்கியின் maths நோட்டுக்குள் அழகான பாலிவுட் நடிகைகளின் போஸ்டர்களை வைத்திருப்பான். கரீனா கபூரும் ,கரிஷ்மா கபூரும் இருக்கும் படத்தை காட்டி ,'மாப்ள அக்காள நீ கட்டுற..தங்கச்சிய நான் கட்டுறேன்..' என சொல்வான். எதாவுது சுமாரான பெண்ணாக பார்த்து ப்ரித்திவிக்கு ஒதுக்கி விடுவான். என்ன காரணத்தினாலாவோ விக்கிக்கு தென்னிந்திய நடிகைகளை பிடிப்பதில்லை.

பட்ட பெயர்: மாரி

சில நேரங்களில் கட்டுக்கு அடங்காமல் எங்களை கேலி செய்து கொண்டிருப்பான். அப்போது எங்களின் பிரம்மாஸ்த்திரம் 'மாரி' தான். அவனை மாரி என கூப்பிட்டால் வெறியாகி விடுவான். எதற்காக அவனுக்கு அப்படி ஒரு பட்ட பெயர் வந்தது என்பது தெரியவே இல்லை.

பிறந்த நாள்: 25-12-1983

பிறந்த நாளை எப்போதும் சீரும் சிறப்புமாய் கொண்டாடுவான். 'ஆமா..இவர் பெரிய நேரு மாமா..' என நாங்கள் கேலி செய்வதையும் பொருட்படுத்த மாட்டேன். அந்த பிறந்த நாளில் சூராம்பழம்,முட்டைபஜ்ஜி, Fanta என எனக்கும் ப்ரித்திவிக்கும் வாங்கித்தந்தான். பதிலுக்கு நாங்கள் சுமார் ரூபாய் நாலு பெருமானமுள்ள ஒரு Handband பரிசளித்தோம். வாங்கி பார்த்த விக்கி 'பிச்சைக்கார பசங்களா..' என சொல்லிக்கொண்டு எங்களை ரோட்டில் விரட்டி வந்தது இன்னமும் பசுமையாய் இருக்கிறது.

மறைந்த நாள்: 13-03-2003

என் வாழ்வின் சோகமான தருணங்களில் ஒன்று விக்கியின் மரணம். ஒரு பைக் விபத்தில் மரணித்தான். அதீத வேகமாய் மூவர் பயணித்த வண்டி மைல் கல்லில் மோதி ,இருவர் அந்த இடத்திலேயே மடிந்தார்கள். விக்கி மட்டும் மதுரை மீனாட்சி மிசன் மருத்துவ மனையில் கோமாவில் ஒரு வாரம் இருந்து ,பின் மீண்டு எல்லோரையும் அழ வைத்து இறந்தான். விக்கியின் எல்லா செயல்களிலும் ஒரு மெத்தனம் இருக்கும். அந்த நேரத்தில் அது எங்களுக்கு சிரிப்பாய் இருக்கும். எத்தனையோ முறை அவனிடம் 'டேய் வெண்ணை.. மெதுவா போ... எங்கயாவுது விழுந்து வைக்கப்போறோம்' என அவன் வண்டி ஓட்டுகையில் சொல்லி இருக்கிறேன். 'மாப்ள மோளாத டா..இது தாண்டா திரில்லே' என்பான். ஹெல்மெட் போட்டிருந்தால்,மித வேகமாய் போயிருந்தால், சாலை விதிகளை மதித்து இருந்தால்..இப்படி எல்லா 'ஆல்களும்' நடந்திருந்தால் எங்கள் விக்கி இன்று எங்களுடன் இருந்திருப்பான்.விக்கியின் அம்மாவின் அழுகையை பார்த்த பிறகு விக்கி மேல் எனக்கு கோபமே மிஞ்சியது. இன்று ரோட்டில் மிக வேகமான பைக்குகளை செலுத்தும் நிறைய 'விக்கிகளை' பார்க்கிறேன். சொன்னால் கேட்பார்களா தெரிய வில்லை??

மெத்தனமாய் வாகனம் செலுத்துவோருக்கு ஒரு சின்ன வேண்டுகோள். விக்கியை பார்த்தால் நான் விசாரித்ததாய் சொல்லவும்!!!!



கருத்துகள்

Ramesh இவ்வாறு கூறியுள்ளார்…
என்னடா ஒரு பையனைப் பத்தி ஓவரா புகழறீங்களேன்னு அப்பவே ஒரு டவுட்டா.. அவன் உயிரோட இல்லாமத்தான் இருப்பான்னு நினைச்சேன்.. பாவம்.. இப்படி சின்ன வயசுல போயிட்டானே...

//மெத்தனமாய் வாகனம் செலுத்துவோருக்கு ஒரு சின்ன வேண்டுகோள். விக்கியை பார்த்தால் நான் விசாரித்ததாய் சொல்லவும்!!!!//

செம சூடு...
Raju இவ்வாறு கூறியுள்ளார்…
கலங்கடிச்சீட்டிங்க சிவா..
மெல்லிய நகைச்சுவையிழையோட படிச்சுட்ட்டே வந்து, இறந்த செய்தியைப் படித்ததும் ஒரு திடு,!
விக்கி என்ற பெயருக்கும் எனக்கும் ஒரு நெருக்கம் உண்டு.
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ரமேஷ்...
நன்றி ராஜு( அதென்ன நெருக்கம்??)
அமுதா கிருஷ்ணா இவ்வாறு கூறியுள்ளார்…
கடைசியில் நான் எதிர்ப்பார்க்கவேயில்லை.ரொம்ப ஷாக்காகி போனேன்.ஜாக்கிரதையாக இல்லாமல் உயிரே போயிடுச்சே..விக்கியின் அம்மாக்கு யார் ஆறுதல் சொல்றது.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
என்னாபா கடைசில என்னைய கொன்னு புட்டீயே!

பகிர்வுக்கு நன்றி.
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
//அமுதா கிருஷ்ணா said...
கடைசியில் நான் எதிர்ப்பார்க்கவேயில்லை.ரொம்ப ஷாக்காகி போனேன்.ஜாக்கிரதையாக இல்லாமல் உயிரே போயிடுச்சே..விக்கியின் அம்மாக்கு யார் ஆறுதல் சொல்றது.//

அம்மா இப்போ பரவா இல்லங்க..அவனது தம்பி,தங்கைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டார்கள். சென்ற முறை அவர்கள் வீட்டுக்கு போன போது விக்கி போட்டோவில் சிரித்துக்கொண்டிருந்தான். இது உணர்ச்சி கட்டுரையாக இல்லாமல் விழிப்புணர்வு கட்டுரையாக தெரியுமேயானால் அதுவே விக்கிக்கு நான் செலுத்தும் அஞ்சலி....
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
// விக்கி உலகம் said...
என்னாபா கடைசில என்னைய கொன்னு புட்டீயே!

பகிர்வுக்கு நன்றி.//


வந்தமைக்கு நன்றி...
Gangaram இவ்வாறு கூறியுள்ளார்…
தம்பி .... screen play அருமை ....
இந்த பதிவில் நகைச்சுவை ததும்பினாலும் ... விஷயம் மிக தெளிவாக இருக்கிறது ...
எழுது நடையில் நேர்த்தி தெரிகிறது....

என்னடா இவன் பெரிய எழுத்தாளர் மாதிரி கமெண்ட் கொடுகுரநேன்னு கண்டுக்காத :)....

நாங்களும் புத்தகம் படிக்குரோம்ல ....
Anisha Yunus இவ்வாறு கூறியுள்ளார்…
சிரிச்சுட்டே படிச்சிட்டு இருந்தேன்... கடசில திகைச்சு போயிட்டேன்... :((
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
nice message to everyone..
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
nice message to everyone..