விலைமாது(A)






தொலைக்காட்சி,குளிரரூட்டி,நாற்காலி,கணினி 
 என எல்லாமிருந்த அறையில் அவர்களுக்கு 
  கட்டில் மட்டுமே தேவைப்பட்டது....


அவன் முயன்று முன்னேற 
  அவள் முனங்கிப் பின்வாங்கினாள்.
மனிதஇனத்தின் மகரந்த சேர்க்கை அங்கே 
             நடந்துகொண்டிருக்கிறது...
யார் பூ யார் வண்டு ஆராய்தல் 
         அவசியம் இல்லை...


ஆதாம் கண்டுபிடித்த ஆட்டம் 
           நிறைவு பெற்றது.
இளைத்துக் கலைத்தனர்- வியர்வை
   முத்துக்கள் உடல் முழுக்க கோலம் போட்டது.


 அவன் கலைமகன். 
  அவள் விலைமகள்.


கற்பனையை பேனாவுக்குள் ஊற்றி 
    காட்சிகள் படைப்பவன் அவன்.
தன் உடலை பொதுவுடைமை 
   ஆக்கியவள் அவள்.


நாற்பதை தொட்டவன் அவன்.
 இலக்கியம் இறுமாப்பு இரண்டும் 
   இரு கண்கள் அவனுக்கு...
 குடும்பம்,பொறுப்பு போன்ற 
     இமைகள் கிடையாது..


பட்டினத்தாரையும் காதல் பாட்டு எழுத 
  வைக்கும் அழகு அவளது..
இந்த அவசர உலகம் கொடுத்த 
 "ஒரு மணி நேர மனைவி"- இவள்


ஜன்னல்களை திறந்தான். வானத்தை ஆராய்ந்தான்.. 
                           பேனா புத்தி அது 
நிலவு நட்சத்திரங்கள் ஏதுமின்றி வானமும் 
             நிர்வாணமாய் இருந்தது......




                                                


புகைக்க தொடங்கினான்.
  அவள் கோபம் கொண்டாள்.
கூடிய பின் புகைப்பது 
   அவனது நெடுநாள் பந்தம்.
ஆனால் புகைக்கக்கூடாதென்பது அவர்கள் 
  முன்னமே செய்த ஒப்பந்தம்!!!


அவனை ஏசினாள்.
  காற்றை கற்பழிக்காதே என்றாள்.
அவனுக்கு கோபம் பற்றியது.
 "வேசை தானே நீ... பலர் தொடும் பரத்தைக்கு திமிறென்ன??"
தீப்பிழம்பை கக்கினான். 
  அவளோ எரிமலையானாள்.


அவள் கண்கள் சிவப்பானது. 
   அவனை ஏறிட்டு அற்பமாய் பார்த்தாள்.
"ஆம்.வேசை தான் நான்.." என 
              ஆரம்பித்து தொடர்ந்தாள்.


என்னிடம் வறுமைக்கதைகள் இல்லை.
   நியாயப்படுத்தும் காரணங்கள் இல்லை.
உனக்குக் காமம் எப்படியோ 
       எனக்கும் அப்படியே...


துணை இழந்த வயதானவனின் வடிகால் நான்...
  எங்கோ நடக்க இருக்கும் பாலியல் குற்றத்தைத்தடுக்கிறேன்...
உண்மையில் மிருகங்களின் காமங்களைந்து 
  மீண்டும் நாங்கள் தான் மனிதர்களாக்கி அனுப்புகிறோம்.
நாங்களில்லையேல் உன் சமுதாயம் 
              நாறி நாற்றமடிக்கும்.... 


இதுவும் ஒரு வியாபாரமே ....
         ஏமாற்றில்லா...ஊழலில்லா... வியாபாரம்.
நீ அசைவம் கொலை என ஒத்துக்கொள் 
  நான் விபச்சாரம் தவறென ஏற்றுக்கொள்கிறேன்.


கற்பிழப்பவர் வேசை என்பது உன் சித்தாந்தமெனில் 
    நீயும் ஒரு வேசை தானே......


"வேசி" பெண்பால் என 
  எவன் சொன்னது??...


அவனருகே வந்து தாழ்ந்த குரலில் 
         மீண்டும் சொன்னாள்....


"உனக்குக் காமம் எப்படியோ 
   எனக்கும் அப்படியே...."


பேசிவிட்டு அறையிலிருந்து 
    விடைபெற்றாள்....


அவன் கண்ணிமைக்காமல் அவள் 
     சென்ற திசை நோக்கிக்கொண்டிருந்தான்.


தாளில் அடுத்த நாவலுக்குத் தலைப்பிட்டான்.
  விலை(மதிப்பில்லா) மாது!!!!!!!!!!

கருத்துகள்

arya இவ்வாறு கூறியுள்ளார்…
Good One..

after a long time, reading some thing that's very thought provoking in tamil..
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
Thanks Gokul
லெமூரியன்... இவ்வாறு கூறியுள்ளார்…
hey...nallairukkupaa...! :)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
விலை மாது
இடை இடையே இடி தாங்கும்
திரை இல்லா சிலை இவளோ .....

nice post...