குவாண்டம் -(பால குவாண்டம்)




"ஊதா கலர் நைலான் சேலை கட்டியிருந்தாள். கொஞ்சம் வியர்வை வாடையுடன் பாண்ட்ஸ் பவுடர் வாசமும் அவள் மீதிருந்து வந்தது. நான் பின்னே நிற்பது தெரிந்ததும் அலமாரியை துடைப்பதை நிறுத்தி விட்டு திரும்பி நின்று "என்ன??" என்பது போல் புருவத்தை உயர்த்தினாள். நான் சிரித்துக்கொண்டே அவள் கன்னத்தை கிள்ளினேன். "அர்ஜுன் எங்க??" என்றேன். அவள் உள்ளறையை பார்த்தாள். நான் அந்த திசையை நோக்கி பார்த்தேன். அர்ஜுன் உள்ளே கை சூப்பிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தான். அவளை வளைத்து பிடித்துக்கொண்டேன். என் மூக்கை பிடித்து திருகினாள். நான் அவள் தலையை கையால் பிடித்து உதட்டில் முத்தமிட்டேன். ஆரஞ்சு பழத்தில் தேன் ஊற்றியது போல் இனிப்பு. உடல் முழுக்க ஒரு பரவசம் பரவியது. கொஞ்சமாய் கண்ணை திறந்து என்னை பார்த்தாள். அந்த பார்வை முத்தத்தை விட போதையாய் இருந்தது. என்னை முழுவதுமாய் கட்டிக்கொண்டாள். எனக்கெல்லாமே நீ தான் என்பது போல் ஒரு ஸ்திரம் அந்த தழுவலில் இருந்தது. என் உடல் முழுக்க அவளது அணைப்பால், வெதுவெதுவென இருக்கிறது."   

  எழுந்துவிட்டேன். அது கனவு. ஏமாற்றமாய் இருந்தது. விளக்கை போட்டேன். மேலே நிர்மலாவும், அர்ஜுனும் மாலை போட்ட புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருந்தார்கள். புகைப்படத்தில் அர்ஜுனின் நெற்றியில் சந்தனம் இருந்தது. கண்ணீர என் கன்னம் தாண்டி இறங்கியது. ஓவென கதறி அழ வேண்டும் போலிருந்தது. சத்தம் கேட்டு அப்பா வந்துவிடுவாரென உணர்ந்து சத்தத்தை அடக்கிக்கொண்டேன். ரொம்ப அழுததால் வீசிங் வந்து மூச்சி வாங்கியது. என்னுடைய இன்ஹலிங் மிசின் தேடினேன். எடுத்து உறிஞ்சினேன். கொஞ்சம் பரவாயில்லை போல் இருந்தது. படுக்கைக்கு பக்கத்தில் இருந்த டிராயரில் அர்ஜுனின் கரடி பொம்மை இருந்தது. எடுத்து கட்டிக்கொண்டு படுத்தேன். தலை கொஞ்சம் வலித்தது. கொஞ்ச நேரத்தில் தூங்கிப்போனேன். "ரவி..ரவி" என அம்மா என் தோளை உலுக்கினாள். எழுந்தேன்.

"மணி ஒன்பதரைப்பா.. இன்னைக்கு ஆபிஸ் போலையா" என்றாள். பக்கத்தில் அப்பா சோகமாய் நின்றிருந்தார். அம்மாவின் கையிலிருந்த காபியை வாங்கிக்கொண்டு நடந்து பால்கேணி போனேன். "அருண்..கால் பண்ணாண்டா...நேத்து தான் ஹங்கேரில இருந்து வந்தானாம்.. சாயங்காலம் வீட்டுக்கு வரேன்னு சொல்லிருக்கான்.." என அப்பா என்னைப் பார்க்காமல் அந்த ரூமை நோட்டம் விட்டபடியே சொன்னார். சரி என்பது போல் தலையாட்டினேன். அம்மா அப்பாவை பொறுத்தவரை நான் இந்த துயரத்துல இருந்து வெளிய வந்திரனும். எதோ சுவிட்ச் போட்டமாறி நாளைக்கே ஈன்னு சிரிச்சுகிட்டு நிக்கணும். அதுசரி அவுங்கள சொல்லியும் குத்தமில்லை. அபார்ட்மென்ட்ல  இருக்குற பல பேரு என்னை பாவம் போல பார்க்கிறார்கள். "நாசமா போ" வை விட "ஐயோ பாவம்" நமக்கு மிக வலியை தரும்னு பலருக்கு புரிவதில்லை.

அருண் வருவான் என்பதால் ஆபிசில் இருந்து வேகமாய் வந்தேன். மேலே ரூமுக்கு படியேறினேன். அருண் அப்பாவுடன் பேசிக்கொண்டிருக்கும் குரல் கேட்டது. என்னோட க்ளோஸ் பிரெண்ட் அவன். பிசிக்ஸ்ல பி.எச்.டி பண்ணினவன். அமெரிக்க நிறுவனமான ஆல்பால ஆய்வு விஞ்ஞானியா வேல பண்றான்.ஒரு வருஷமா ஹங்கேரில வேலையா இருந்திட்டு அப்போ தான் சென்னை வந்திருக்கான். நான் உள்ளே நுழைந்ததும் ஓடி வந்து கட்டி பிடித்தான். நானும் அணைத்துக்கொண்டு அழுதேன். இப்போதெல்லாம் அழுகை எனக்கு நினைத்த நேரத்தில் வருகிறது. சோகத்தை பாக்கெட்டில் வைத்தே திரிகிறதாய் தோன்றுகிறது. "அப்பா பேசிட்டு இருங்க" என சொல்லி நகர்ந்தார். நானும் அருணும் ஓல்ட் மாங்க் ரம்மை எடுத்து கிளாசுடன் உட்கார்ந்தோம். நிறைய பேசினோம். மூன்று ரவுண்ட் முடிந்தது. நிறைய புலம்பினேன். நிறைய பேச வேண்டும் போல இருந்தது.




"ந்தா..இவ்ளோ தண்டி..கருப்பா கரிக்கட்டை மாதிரி ரெண்டு பொட்டணம் கொண்டு வந்து இது தான் நிம்மியும்,அர்ஜுனும்னு சொல்றானுங்க டா..  தாங்கள டா.. அர்ஜுன் எங்கூட வரேன்னு அழுதான்..நான்தான் நீயும் அம்மாவும் பிளைட்ல போங்கன்னு அனுப்பினேன்...மைசூர் ஏர்போர்ட்ல இறங்கிரப்போ....." மீண்டும் அழுகை. ஐந்தாவது ரவுண்ட்டுக்கு தயாரானேன். நிம்மி இருந்திருந்தா காதை பிடிச்சு திருகிருப்பா.. அருண் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான்.

"நோஸ் லேன்டிங்கா..."

"ஆமா"

"ஸ்கௌண்ட்ரல்ஸ்..."

"தினமும் ஆயிரம் விபத்துல ஆயிரம் பேரு சாகுறான். எல்லாரையும் போய் திட்ட முடியுமா...எல்லா என் விதி.." சொல்லி விட்டு அருணை பார்த்தேன். அவன் அர்ஜுன் போட்டோவையே பார்த்துக்கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் கழித்து "சாகாம இருந்திருக்கலாம்.." என்றான், நான் "ம்ம்.." என்றேன். அவன் கொஞ்சமாய் சிரித்து "இல்லடா அவுங்க உயிரோட இருக்கலாம்..இப்போ இந்த நொடில...". 

"என்னடா அருண்..அஞ்சு ரவுண்ட்ல தூக்கிருச்சா.." சத்தமாய் சிரித்தேன். குடித்து விட்டு சிரிப்பது சுகமானது. அருண் பேசாமல் உட்கார்ந்திருந்தான். "சயின்டிஸ்னா அமைதியா இருக்கனுமாடா குண்டா.." னு அவனை நானே பல முறை கேலி பண்ணியிருக்கேன். என் சேரை அவன் பக்கம் திருப்பினான். என் தலையை தூக்கினான்.

"சொல்லுடா ரவி...பூமி எப்டி உருவாச்சு..." 

யோசிச்சேன். எங்கோ படிச்சது ஞாபகம் வந்தது. "பிக் பேங்..." இழுத்தேன்.

"கரக்ட்..அப்டினா.."

"மறந்து போச்சுடா.."

" அதாவுது ஒரு பெருவெடிப்பு. அதுல உருவான ஒரு சின்ன தூசு மண்டலம் தான் பூமி. சூரியன்,சந்திரன், நம்ம பக்கத்து கோள்கள் எல்லாம் அந்த வகைல உருவானது தான். இந்த மாதிரி லட்சமோ, கோடியோ இல்ல எண்ணவே முடியாத அளவு உருவாக்கங்களை இந்த பெருவெடிப்பு பண்ணிருக்கு. நிறைய யுனிவர்ஸ்கள்,நிறைய கேலக்சிகள்... "

"சரி இப்போ அதுக்கென்ன..."


"இப்போ நீ பேப்பர்ல பேனா வச்சி கண்டா மாதிரி கிருக்கிறேன்னு வை. உன்னையே அறியாம அதுல ஒரு பேட்டர்ன் இருக்கும். அதாவுது வளைவுகளில், கோடுகளில் சில ஒற்றுமை வந்திரும். இத மாத்ஸ்காரன் ப்ரூவ்லாம் பண்ணிட்டான்.அத விடு. அப்போ இந்த பெருவெடிப்புல உருவான அமைப்புலேயும் ஒரு பேட்டர்ன் இருக்கும். எங்கயாவுது லட்சம் கோள்கள் தள்ளி பூமீ மாதிரி ஒரு கோள் திரும்பவும் உருவாகியிருக்கும்.."

"ஸோ ??"

"ஸோ வா... அதுக்கும் அதே புவிஈர்ப்பு விசை..அதே சுழற்சி...அதே மாதிரி கடல்கள்...பக்கத்தில் நிலா..அதே ஓஸோன்...ஆக்சிஜன்..சூரிய ஒளி...போட்டோசின்தசிஸ்..."

"அதுனால.... புரில மச்சி எனக்கு.." குழப்பமாய் இருந்தது.



"சரி உனக்கு புரிற மாதிரி சொல்றேன். எல்லாம் பூமியை மாதிரியே இருந்துச்சுன்னா என்ன நடந்திருக்கும். இங்க மாதிரியே அமீபா தோன்றிருக்கும்.அப்புறம் நிறைய உயிர்கள். பரிணாமம். டினோசர்கள், குரங்குகள்,மனிதர்கள்.." கொஞ்சம் இடைவெளிவிட்டு  "ஆதாம்-ஏவாள்...உன் கொள்ளு தாத்தன்..உன் அப்பன்...நீ,நிம்மி,அர்ஜுன்....." என்றான்.

எனக்கு கொஞ்சம் கோபமாய் இருந்தது. என் சிந்தனைக்கு அப்பாற்பட்டதாய் தோன்றியது. "அப்போ இங்க மாதிரியே ஆளுங்க அங்க பிறந்திருப்பாங்கன்னு சொல்றியா.."

"ஆமா கண்டிப்பா. ஆனா நடந்த விஷயங்கள் மாறி நடக்கலாம். ஹிட்லர் கடைசி போர்ல ஜெய்ச்சிருக்கலாம். காந்தி அமைதியா குடும்பஸ்தனா அவருண்டு அவர் வேலையுண்டுன்னு இருந்திருக்கலாம். தோனி வேல்டு கப் பைனல்ல மொத பால்லையே அவுட் ஆகி இருக்கலாம்...அதே மாதிரி..."

"அதே மாதிரி.."

"அன்னைக்கு விமானம் மைசூர்ல நோஸ் லேன்டிங் ஆகாமவோ...இல்ல நிம்மியும் அர்ஜுனும் அதுல போகமாவோ இருந்திருக்கலாம். இப்போ இந்த நொடில ரவி, நிர்மலா, அர்ஜுன் மூனு பேரும் பெசென்ட் நகர் பீச்ல ஜாலியா கடலைப்பொறி வாங்கி சாப்டுகிட்டு இருக்கலாம்......."

இப்போது அழுகை வரலை.அவன் சொன்ன காட்சியை மன கண்ணில் ஓட விட்டு ரசித்தேன். ஜன்னல் வழியே வானத்தை பார்த்தேன். ஆங்காங்கே சின்ன வெள்ளை புள்ளிகளுடன் வானப் பெருவெளி தெரிந்தது. 

                                                                                                                          





                                                                                                         -----குவாண்டம் தொடரும் 

கருத்துகள்

Raju இவ்வாறு கூறியுள்ளார்…
குட் ஓப்பனிங் தல...
அடுத்த பார்ட் டெரரா இருக்கும் போலயே! கலக்குங்க...
SATHISH இவ்வாறு கூறியுள்ளார்…
superb story narration. Wonderful theme. Eagerly waiting for next part
ARUN RAMA BALAN இவ்வாறு கூறியுள்ளார்…
Very nice opening.. Waiting for Next episode.. Adikadi eluthu machi..
Lusty Leo இவ்வாறு கூறியுள்ளார்…
"நாசமா போ" வை விட "ஐயோ பாவம்" நமக்கு மிக வலியை தரும்னு பலருக்கு புரிவதில்லை. அருமையான வரிகள்.