முட்டைகன்னிகளும் பின்னே அவனும்- பகுதி 5




தன்னையே மறக்கவைக்கும் சந்தோசத்தையும்,தாங்கொணா துயரத்தையும் உலகத்தில் தரும் ஒரே விஷயம் காதல். பிரவீனும், மதியும் தங்களை தம்பதிகளாவே நினைத்துக்கொண்டார்கள். பிரவீனுக்கு மதிய உணவு சமைத்துக்கொடுத்தாள்.இவன் சேலைகள் வாங்கிக்கொடுத்தான். மதி காதல் விஷயத்தை வீட்டில் சொன்னவுடன் அவர்கள் கொதித்துப் போனார்கள். காரைக்குடியில் ஒரு வசதியான குடும்பம் அவளுடையது. அவளுடைய இரண்டு அக்காக்களுக்கும் திருமணமாகி விட்டது. மூத்த அக்காவின் வீட்டுக்காரர் இவர்களின் சொத்துக்களையும், குடும்ப வியாபாரத்தையும் பார்த்து வருகிறார்.அம்மாவுக்கு மதி வேலைக்குப் போவதில் பெரிய விருப்பமில்லை. மதி தினமும் போனில் வீட்டில் சண்டை
போட்டுக்கொண்டிருந்தாள். இவர்களின் காதல் அசுர பலமாய் இருப்பதால் யாரும் ஆட்டையை கலைக்க முடியாது என்று நான் நம்பினேன். ஆனால் வாழ்க்கையின் போக்கை அற்ப மனிதர்களால் பல நேரங்களில் புரிந்துகொள்ள முடியவில்லை.


மதியின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என செய்தி வந்ததால் அவள் ஊருக்கு கிளம்பிப்போனாள். அழுதுகொண்டே இருந்தவளை போய் ட்ரெயின் ஏத்தி விட்டு வந்தான் பிரவீன். அவனும் சங்கடமாய் காணப்பட்டான். மதி ஊருக்கு போனவுடன் தான் தெரிந்தது, அவளது அம்மா இந்த காதல் பிரச்சனையில் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். ஐ.சி.யூ விலேயே மூன்று நாட்கள் இருந்ததாக சொன்னார்கள். வீட்டில் இருப்பவர்கள் மதியை திட்டித்தீர்த்தனர். அவளது பெரிய அக்கா "அம்மாவ கொன்றாத டீ" எனச்சொல்லி மதியின் காலில் விழுந்து கதறி அழுதிருக்கிறாள். பொது நண்பர்கள் மூலம் இந்த செய்தி கிடைத்தது. மதியின் போனும் அணைக்கப் பட்டிருந்ததால் பிரவீனுக்குப் பதற்றம் அதிகமாகியது.ஒரு வாரமாய் அவள் அலுவலகம் வரவில்லை.

"ஏன்டா... அவ சூழ்நிலையை நினைச்சுப் பாரு..இப்போ போய் உனக்கு கூப்பிட முடியுமா.."

அவன் ஜன்னல் வழியே ரோட்டை வேடிக்கை பார்த்த படி இருந்தான். நான் பேசிய எதற்கும் பதிலே இல்லை. பக்கத்தில் போய் தோளைத் தொட்டேன். என் கை மேல் கை வைத்தான். "பயமா இருக்குடா.." .கேட்கவே சங்கடமாய் இருந்தது. அன்று சாயங்காலம் வரை யோசித்துக்கொண்டே இருந்தோம். எனக்குத் திடீரென ஒரு யோசனை வந்தது.

"பேசாம காரைக்குடிக்கு போய் பாப்போமா.." 

"நானும் நேத்துல இருந்து அதத்தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன். பேசாம குரு சித்தப்பாக்கிட்ட விஷயத்தை சொல்லி, அவரையே மதி வீட்டுக்கு அனுப்புனா என்ன?.."

பிரவீனின் சித்தப்பா சென்னை எக்மோரில் சி.ஆர்.பி.எப் போலிஸாய் வேலை பார்த்து வந்தார். சின்ன வயதிலிருந்தே பிரவீன் மீது அவருக்கு தனி பிரியம்.அவனுக்காக இதை செய்வார் என்று தோன்றியது. அவரை போய் பார்க்க எக்மோர் போனோம். நல்லா ஆறு அடியில் வினுசக்ரவர்த்தி ஜாடையில் இருப்பார். 

"வாங்கடா...இங்கயும் செட் சேர்ந்துட்டீங்களா..டீ சொல்லவா.."  என்றார்.

நலம் விசாரிப்புகள் முடிந்து பிரவீன் விஷயத்தை துவக்கினான். நான் தள்ளிப் போய் நின்று கொண்டேன். கொஞ்ச நேரத்தில் பிரவீனை பொலேரென அறைந்தார்."இந்தாளு சேம் சைடு கோல் போடுறானே.." என நினைத்துக்கொண்டேன். பிரவீன் அழுதுகொண்டே மேற்கொண்டு எதோ பேசிக்கொண்டு  இருந்தான். எனக்கு எதுவும் கேட்கவில்லை. "லேய்..நீ இங்க வா டா " என என்னை கூப்பிட்டார். "விடுங்க பாஸு..எதோ சிறுசுக...இதுக்குப் போய் கோபப்பட்டுக்கிட்டு.." வென சொல்லலாம் என்று நினைத்துக்கொண்டே பக்கத்தில் போனேன். எனக்கொன்று பொலேரென கொடுத்தார். "இதத்தான் மெட்ராஸ்ல பண்ணிட்டு இருக்கீங்களா.." என நாக்கை உருட்டிக் கேட்டார்.  பிரவீனுக்காக அடிவாங்குவேன் என்று தெரியும் ஆனால் எக்மோரில் ஊரே வேடிக்கை பார்க்கும் போது வாங்குவேன் என நினைக்கவில்லை. உள்ளே ரூமில் போய் உட்காரச்சொன்னார்.செய்தோம். டீ வந்தது. 



பிரவீன் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தான். சித்தப்பா உள்ளே வந்தார். "பொம்பள புள்ள  மாதிரி அழுகாத... நாளைக்குப் போலாமா.. இன்னைக்கு மாத்துறதுக்கு ஆளில்லை...". தலையாட்டினோம். கன்னம் பழுத்தாலும் காரியம் சாதித்த சந்தோசம் எங்களுக்கு. வீடு வந்தோம். சித்தப்பு மீண்டும் எனக்கு போன் செய்து நடந்தவைகளை கேட்டுத் தெளிந்தார். "நாளைக்கு சாயந்தரம் கெளம்புவோம்...நேரா பிள்ளையார்பட்டி போய் சாமிய கும்பிட்டிட்டு போவோம். எல்லாம் நல்லபடியா நடக்கும். அவனுக்கு தைரியஞ்சொல்லு.." . "ம்" என்றேன்.

மறுநாள் அவர் சொன்ன படியே பிள்ளையார்பட்டியில் மூவரும் இறங்கினோம். ரூமை போட்டு, குளித்துக்கிளம்பினோம். விநாயகரை தரிசனம் செய்தோம். பிரவீனை அங்கேயே இருக்கச்சொன்னார். முதலில் மறுத்தான். "நீ வந்தா சரியா இருக்காது.." என்றார். சரியென்றான். நானும் சித்தப்பாவும் பஸ்ஸில் ஏறி காரைக்குடி வந்தோம். பிள்ளையார்பட்டியிலிருந்து காரைக்குடி பன்னிரண்டு கிலோமீட்டர் தூரம் தான். சித்தப்பு பேருந்து நிலையத்தில் இறங்கி பழம், ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்கினார். "பெருசுக..பெருசுக தான்" என எண்ணிக்கொண்டேன். நடந்தே மதியின் வீட்டுக்குப் போனோம். விலாசம் கையில் இருந்தததால் அலையவில்லை. நல்லாப் பெரிய வீடு. வீட்டுக்கு முன் தூண்கள் இருந்தது. போய் காலிங் பெல்லை அழுத்தினார். என் பக்கம் திரும்பி "நீ சும்மா அமைதியா நில்லு போதும்" என்றார். "அப்றமெதுக்கு நா வந்தேன்" னு கத்தலாமென நினைத்தேன். செய்யலை. ஒரு நடுத்தர வயது பெண் வந்து கதவைத் திறந்தார்.

"நீங்க.."

சித்தப்பு கேள்விக்கு பதில் சொல்லாமல் சாஷ்டாங்கமாய் இரு கைகளையும் குவித்து வணக்கம் சொன்னார்.நான் அதை ஒரு ஜெராக்ஸ் போட்டேன். பதிலுக்கு அந்தப்பெண்ணும் எங்களுக்கு வணக்கம் சொன்னார்.

"நான் குமரகுரு..சி.ஆர்.பி.எப் ல இருக்கேன்..பாப்பா கூட வேலை செய்யுற பிரவீனோட சித்தப்பா. அம்மாவுக்கு முடிலனு கேள்விப்பட்டேன். அதான் வந்தோம். உள்ள வரலாங்கள..."




அந்தப்பெண் முகம் மாறியது. அவளேதும் யோசிப்பதற்கு முன்னாடியே வீட்டுக்குள் நுழைந்தோம். மிகப்பெரிய ஹால். வேண்டா வெறுப்பாய் சேர் கொடுத்தார்கள். மதியின் அம்மா சோபாவில் உட்கார்ந்திருந்தார். முகம் மதி ஜாடையில் இருந்தது. எங்களை பார்த்து எதுவும் பேசாமல் உம்மென இருந்தார்.நான் மதியைத் தேடினேன். எங்களுக்கு கதவை திறந்து விட்டவர் மதியின் மூத்த அக்கா. அவள் தான் பேசினாள்.

"சார்...நீங்க ஏன் வந்திருக்கீங்கனு தெரில..எங்களுக்கு இதையெல்லாம் கேக்கவே அசிங்கமா இருக்கு...சொந்தக்காரவுங்களுக்கு தெரிஞ்சா நாண்டுக்கிட்டு சாக வேண்டியது தான்.."

"என்னம்மா..இப்படி பேசுறீங்க..நாங்க ஒன்னும் ஒன்னும்மில்லாதவுங்க இல்ல..மேற்கொண்டு பையன் தங்கமான பையன்..படிச்சவன்..நல்ல சம்பாத்தியம். பிள்ளைங்க சந்தோசமா இருந்தாத்தான நமக்கு நிம்மதி.."

"நிப்பாட்டுங்க..எதோ பெரியவர்னு தான் பேசாம இருந்தேன்..கண்ட சாதி ஆளுங்க வந்து சம்பந்தம் பேச காளிராசனார் வீடு என்ன சத்திரமா?...எதோ பொறிக்கி நாயி சின்னப்பிள்ளை மனச கெடுத்து வச்சிருக்கு..நாங்கெல்லாம் சேந்து பேசி இப்பத்தான் சரி பண்ணி வச்சிருக்கோம்..தேவையில்லாம இப்ப வந்துக்கிட்டு...அம்மாவுக்கு இப்பத்தான் உடம்பு திரும்பியிருக்கு..."

மதியின் அக்கா ஆங்காரமாய் பேசினாள். ஹால் முழுக்க எதிரொலித்தது. சாதி தான் முதல் எதிரி என நினைத்துக்கொண்டேன். சித்தப்பா பொறுமையாய் பேச முயன்றார். அவள் அவரது பொறுமையை சோதித்தாள்.பேச்சு பிரவீனையும் அவனது குடும்பத்தையும் அவமதிப்பதாகவே இருந்தது. ஒருகட்டத்தில் பொறுமையிழந்து கத்தினார். "வெளிய போய்யா.." வென மதியின் அக்கா கத்தினாள். சித்தப்பா விருட்டென எழுந்து வெளியே நடந்தார். நான் மெதுவாய் தொடர்ந்தேன்.ரூம் ஜன்னல் வழியாய் மதி பார்த்துக்கொண்டே இருந்தாள். அழுதாள். இயலாமை திரவமாய் திரண்டு கண்களிலிருந்து உருண்டது. சமுதாயம் எழுப்பியிருக்கிற மதில்களை பெண்ணால் தாண்ட முடிவதில்லை. அவள் அக்காவை மீண்டும் ஒரு முறை பார்த்தேன்.கண்களில் கொடூரமான கோபம் தெரிந்தது.அவள் ஒரு முட்டக்கண்ணி.

பிரவீனிடம் வந்து நடந்ததை சொன்னேன். திரும்பவும் சென்னை வந்தோம்.
சினிமாவில் நடப்பது போலெல்லாம் நிஜவாழ்க்கையில் ஆச்சர்யங்கள் நடப்பதில்லை. மேலிருந்து தேவதைகள் வந்து காதலை சேர்த்து வைப்பதில்லை.பிரவீன் அடுத்த ஒரு மாதம் பட்ட அவஸ்தையை எவனும் பார்த்தால், காதலே செய்ய மாட்டான். நண்பர்கள் இருவர் அவனை தினமும் காவல் காக்க வேண்டியிருந்தது. ரூம்களில் தாழ்ப்பாளைக் சுழற்றிவிட்டிருந்தோம். பிரவீன் பைத்தியம் போலத் தான் இருந்தான். சில நேரங்களில் மந்தவெளி ரயில்நிலைய பெஞ்சில் போய் உட்கார்ந்து கொள்வான். அங்கே தான் உட்கார்ந்து மணிக்கணக்கில் பிரவீனும் மதியும் பேசுவார்கள்.மாதங்கள் ஓடியது.


வருடங்கள் எனச் சொல்லும்போது பெரியதாய் தெரிகிறது, ஆனால் அவைகள் நம்மை எளிதாய் கடந்துவிடுகிறது. மூன்று வருடங்கள் இவ்வளவு வேகமாய் போகுமென நான் நினைத்ததில்லை. மதி திருமணமாகி புனேயில் செட்டில் ஆகிவிட்டாள். பிரவீன் அமெரிக்காவில் சில காலம் இருந்தான்.கொஞ்சம் தொப்பை போட்டுவிட்டது.எப்போதாவது தான் பேசுகிறான். பேஸ்புக் போட்டோக்களில் பார்த்துக்கொள்கிறோம். அவனுக்கும் போன வருடம் ஊரில் திருமணம் நடந்தது. போயிருந்தேன். சொல்லவே தேவையில்லை, அவன் மனைவியும் முட்டக்கண்ணி தான். தம்பதிகள் கூட நின்று போட்டோ எடுக்க மேடை ஏறினேன்.பக்கத்தில் பிரவீனின் காதில் பேசினேன்.

"ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டேயே..."

"சொல்லிட்டு வேமா ஓடிரு.."

"ஒன்னோட எல்லா பிகரை விடவும், வீட்டுக்காரம்மா தான் அழகா இருக்காங்க...இதுக்குத்தான் கடவுள் எல்லாத்தையும் கழட்டி விட்டிருக்கிறார்."

"இலவச இணைப்பா இன்னொன்னு சொல்லிக்கிறேன்..."

"ம்.."

"ஆப்பரேசன் பண்ணி கண்ணை மட்டும் மாத்திரு.."


சிரித்தான். இப்போது இனிப்பான இல்லறம் நடத்திக்கொண்டிருக்கிறான். அடிக்கடி தொலைப்பேசியில் பழைய கதை பேசிக்கொள்கிறோம். சமீபகாலமாய் ஆன்மீகத்தில் அவனுக்கு நாட்டம் வந்து விட்டது. பேசும் போது தத்துவங்கள் பேசி என்னை வெறியேற்றுகிறான். சமீபத்தில் அவன் வீட்டுக்கு போயிருந்தேன். ஹாலில் பெரிய எழுத்துக்களில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. "இதுவும் கடந்து போகும்"

                                                                                                                ---முற்றும்---

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
aagaa.. arumayana pathivugal.. oru unarvu poorvamana kadha(i/l)..

Unakum oru muttai kaani engo kaathirupaaal...

Vaazhga valamudan...
ARUN RAMA BALAN இவ்வாறு கூறியுள்ளார்…
Very nice writing da.. Keep it up..
Raju இவ்வாறு கூறியுள்ளார்…
அஞ்சு பாகத்தையும் ஒரே மூச்சுல வசிச்சுட்டேன். உண்மை நிகழ்வா...? எனிவேஸ்ம, சூப்பர் ரைட்டப்! என்னா ஒரு ஃப்ளோ...? அட்டகாசம்.

"டெய்லி டியூசன் வந்தா தெரியும். நம்ம இங்க கௌரவ தோற்றம் தான கொடுக்குறோம்.."

"ஆறுதல் சொல்வதெல்லாம் என் ஏழாவது சிலபஸில் இல்லை."

"விதி இந்தமுறை வீட்டுக்குள்ளேயே ஆள் பிடித்திருந்தது"

"விதி அவனுக்கு ஒரு வேலையை கொடுத்துவிட்டு தன் வேலையை காட்டப்பாக்கிறதோ என எனக்கு பயம் வந்தது."

"மிக்ஸி,கிரைண்டர் தவிர எல்லாமிருக்கிற போன் வாங்கினான்."

"பிரவீனெல்லாம் இவ்வளவு சிரிப்பானென்பதே எனக்கு அந்த நாள் தான் தெரியும். "

"நீ சும்மா அமைதியா நில்லு போதும்" என்றார். 'அப்றமெதுக்கு நா வந்தேன்' னு கத்தலாமென நினைத்தேன்"

"சாஷ்டாங்கமாய் இரு கைகளையும் குவித்து வணக்கம் சொன்னார்.நான் அதை ஒரு ஜெராக்ஸ் போட்டேன்"

இந்த வரிகளுக்கெல்லாம் 'அதகளம்'ன்னு சொன்னாலும் அது கம்மிதான்! ஒரு பெர்ர்ர்ரிய விசில் போட்டுக்கிறேன். :-))

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு.. நான் விரும்பி ரசித்த கதை... சூப்பர் சிவா.. கலக்கிட்டீங்க..
உங்களுக்கு ஒரு நல்ல நண்பன், நீங்களும் ஒரு நல்ல நண்பன்..
பவர் புல் வசனங்கள்...
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
முட்டைகண்ணி spelling mistake.. 3சுழி 'ண'
Robert இவ்வாறு கூறியுள்ளார்…
கலக்கீட்டிங்க போங்க.. ரொம்ப அருமை!!! .