லூஸர்ஸ் (பகுதி - 1)




நானும் அனந்த்துவும்  காலில்  பேடை கட்டிக்கொண்டு புளியமரத்தின் கீழே போடப்பட்டிருந்த மர பெஞ்சில் அமர்ந்திருந்தோம்.  வி.கே.சி 126/4 என எழுதப்பட்ட ஸ்கோர் போர்ட் எங்களை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது. மதிய நேரம் என்பதால் வியர்த்து ஊத்தியது.உபயம் சித்திரை மாதம். சுருளி ஓரமாய் உட்கார்ந்துகொண்டு அவன் அவுட்டானது பற்றி சத்தமாய் பேசிக்கொண்டிருந்தான்.அனந்த்து என் கையை சுரண்டினான்.

" எப்ப பார்த்தாலும் பத்து பால் மிச்சமிருக்கிற நேரத்துலேயே நம்ம இறங்கிற மாறி இருக்கே..இத பத்தி நீ என்ன நினைக்குற.."

" இந்த கேள்விக்கு அவசியம் இப்பயே பதில் தெரிஞ்சாகனுமா.."

" கூலா இருடா..செஞ்சூரியன்ல.. பாகிஸ்தான் மேச்சப்போ... இன்னிங்ஸ் பிரேக்ல சச்சின் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுட்டு பேட்டிங் இறங்கினாராம்.."

சாதாரணமான நேரத்தில் இந்த துணுக்கை ஆர்வமாய் கேட்டிருப்பேன். ஆனால் அப்போது எரிச்சலாய் இருந்தது. அதே நேரத்தில் ஐயப்பன் அடித்த பந்து உயரமாய் பறந்தது. அனந்த்து என்னை நோக்கி"பாஸ்..கெளம்புங்க..கட்சிப்பணி அழைக்கிறது...".  பேட்டை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். "கார்டு" வைத்திருக்கிறேனா என ஒரு முறை செக் செய்தேன். இருந்தது. லேசாய் படபடப்பாய் இருந்தது. 140 கூட எடுக்கலேனா காளிமுத்து சார் காரித்துப்பிருவாரே என பயமாய் இருந்தது.பார்ட்னரிடம் பேசவில்லை, நேராய் போய் பேட்டிங் சைடில் நின்றேன். கீப்பர் எதோ கத்திக்கொண்டு இருந்தான். சுந்தர் பந்து வீச தயாராய் இருந்தான். மதுரை மெடிக்கல் காலேஜின் ஆஸ்தான வேகப்பந்து வீச்சாளர். இதற்கு முந்தைய போட்டியில் இவன் போட்ட பந்து என் பேட்டுக்கும் பேடுக்கும் நடுவில் புகுந்து நடு ஸ்டம்பை பரத நாட்டியம் ஆட வைத்தது. இன்னும் ஏழே பந்துகள்.  சுந்தர் ஓடி வர ஆரம்பித்தான். பதட்டம் என் உடல் முழுக்க பரவ தொடங்கியது. என் மூளையை யோசிக்கத்தூண்டினேன். பழக்கமில்லாத வேலை. என்ன செய்யும் பாவம். குதிரை போல முடிகள் தெறிக்க ஓடி வந்து கொண்டிருந்தான்.





" ஸீமுக்கு இடது புறமாய் விரல்கள் வைத்து பந்தை பிடித்திருக்கிறான். உறுதியாய் இன்ஸ்விங்....இல்ல ஸீமுக்கு குறுக்காய் விரல்கள் இருக்கிறது..ஷார்ட் பிச்...ரெடியாகு..."  என யோசித்துக்கொண்டிருக்கையில் பந்து fullடாஸாய் என் தொடை உயரத்தில் வந்தது. முதல் பந்தே fullடாஸாய் வருவதென்பது கேத்தரினா கைப், கரீனா கபூர், ஹன்சிகா எல்லோரும் ஒரே நேரத்தில் வந்து    "எனக்கு முதல்ல முத்தம் கொடு " ன்னு சொல்றது மாதிரி. என்ன செய்றதுன்னே தெரியாது. ஆனந்த அவஸ்தை.  மிட்விக்கெட் ஏரியா பக்கம் ஆள் அரவம் இல்லை. என் காஷ்மீர் வில்லோ, பந்தின் பொடனியில் ஒரு போடு போட்டு மிட்விக்கெட் திசையில் விரட்டியது. பவுண்டரி. சிலர் கை தட்டினார்கள். ரன்னர் கார்த்திஅண்ணன் வந்து "குட்ஷாட்..நல்ல பிளேஸ்மென்ட்.." என்றார்.இப்போது தைரியம் வந்திருந்தது. அடுத்த ஓவரில் மேற்கொண்டு ஒன்பது ரன் எடுத்தோம். இருபது ஓவர்களில் 139 ரன்கள் என்பது கொஞ்சம் கௌரவமாய் இருந்தது. போன தடவையை விட 19 ரன்கள் அதிகம். வேகமாய் ஓடி வந்து பேட்டிங் பேடை கழட்டிவிட்டு கீப்பிங் பேடை மாட்ட ஆரம்பித்தேன். காளிமுத்து சார் நடுவில் வந்து நின்றார். எல்லோரும் அவரை சுற்றி நின்றோம். தாடையை தடவிக்கொண்டு பேசினார்.

"பரவால்ல..ஜெயிக்கிற ஸ்கோர் தான்...செந்திலு லைன்லய போடு..லெக்ல காட்டிராத...சுருளி ஸ்பீட குறைச்சிறாத..சிவா வேமா பேட கட்டு...கத்திட்டே இருக்கனும்"

எல்லோரும் மொத்தமாய் கிரவுண்டுக்குள் இறங்கினோம்.யாரும் கை தட்டவில்லை. செந்திலிடம் போய் பேசினேன். செந்தில் எங்களின் முதல் ஓவர் வேகப்புயல்.உடல் முழுவதும் அவனுக்கு முடிகள் கண்டபடி இருந்ததால் அவனுக்கு வேறொரு பட்டப்பெயரும் இருந்தது. 

"டேய் கரடி...இன்னைக்கு மட்டும் நீ லெக் சைடு போடு.. ஒனக்கு லெக்கே இருக்காது..."

" ஆமா நேரா போட்டாலும் இவரு அப்படியே "கிளுக்" குனு பிடிச்சிருவாரு..போன மேச்சில நாலு பைஸ் விட்டது ஞாபகம் இல்லையா.."

"  நம்ம வரலாற்ற நோண்டினோம்னா வாடை தாங்காது..அத விடு..சுதாகருக்கு நம்ம போட்ட பிளான் ஞாபகம் இருக்குல்ல.."

"  பிளானா..இவுங்க பெரிய அல்கொய்தா... மூனு ஷார்ட் பிட்ச்...நாலாவது ஸ்ட்ரைட் புல் பால்..அதான..."

முறைத்துக்கொண்டே போனேன். செந்தில் சிரித்துக்கொண்டே "கோவிச்சிக்காதீங்க கில்கிறிஸ்ட்.." என கத்தினான். வந்து நின்றேன். ரெண்டு மூன்று முறை உட்கார்ந்து எழுந்து கொண்டேன். பயங்கர இரைச்சல் கேட்டது. மதுரை மருத்துவ கல்லூரியின் ஒப்பனர்கள் சுதாகரும், தாமசும் நடந்து வந்தார்கள். போன போட்டியில் விக்கெட்டே விழாமல் ஜெயித்தார்கள். காளிமுத்து சார் அந்த தோல்வியை "ரேப்" என்றார். சுதாகர் அந்த அணியின் அதிரடி ஒப்பனர். அவன் கரடியை எதிர்கொள்ள தயாராய் நின்றான். முதல் பாலே அவனின் நெஞ்சை உரசிக்கொண்டு வந்தது. தொடவில்லை. என் தலைக்கு அருகில் பிடித்தேன். பந்து காற்றை கிழித்துகொண்டு வந்தது. கரடி, சுதாகரை நேருக்கு நேராய் நின்று முறைத்து விட்டு சென்றான். முதல் ஸ்லிப்பில் இருந்த அனந்த்து "கரடிக்கு மெக்ராத்னு நெனப்பு..சீன பாத்தியா..போன மேட்ச்ல தான விரட்டி விரட்டி அடிச்சான்.." என்றான்.

சரியாய் நாலாவது பந்து சுதாகரின் பேட்டின் நுனியில் பட்டு இரண்டாவது ஸ்லிப்பில் வீராவின் கையில் பிடிபட்டது. செந்தில் கத்திக்கொண்டு ஓடி வந்தான்.எல்லோரும் கூடி கும்மாளமிட்டோம். சுருளியும், கார்த்தியன்ணனும் அடுத்தடுத்து விக்கெட் எடுத்தார்கள். ஆனால் அதன் பின் வந்த உயரமானவனும், தாமசும் வெளுத்து வாங்கினார்கள். அதுவும் அனந்த்துவின் ஒரு ஓவரில் இரண்டு சிக்சரும், இரண்டு பவுண்டரியும் பறந்தது. இறுதியில் பதினேழாவது ஓவரில் ஒரு பவுண்டரி மூலம் எங்களது மூன்றாவது தொடர் தோல்வி உறுதியானது. உண்மையில் கடைசியாய் எப்போது ஜெயித்தோமென்று எங்களுக்கு ஞாபகமில்லை.எல்லோருக்கும் கை குலுக்கிவிட்டு கிரவுண்டிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தோம். சட்டை முழுக்க அழுக்கு, ஆங்காங்கே காயங்கள்,வியர்வை வாடை, மொத்தத்தில் சோர்ந்து போயிருந்தோம். கேப்டன் கார்த்தியண்ணன், வீரா, சுருளி, ஐயப்பன், ரஞ்சித் ஆகியோர் முன்னால் நடந்து கொண்டிருந்தார்கள். நான்,அனந்த்து,கரடிசெந்தில் ஆகியோர் கொஞ்சம் இடைவெளியில் பின்னாடி நடந்தோம்.



அனந்த்து என் பக்கத்தில் வந்து கொஞ்சம் தாழ்ந்த குரலில் "டேய் பைரேட்ஸ் ஆப் கரீபியன் போலாம்டா...வேமா போயிட்டா டிக்கெட் உறுதியா கிடைக்கும்.." என்றான். நான் கொஞ்சமாய் யோசித்து கரடியை பார்த்தேன். அவன் எரிச்சலாய் "டேய் ஏன்டா....நீட்டா ராம்விக்டோரியாவில ஒரு சீன் படத்த பாத்திட்டு கெளம்புவோம்" என்றான். எனக்கென்னவோ கரடியின் பக்கம் நியாயம் இருப்பதாய் பட்டது. பேட்டுகள், பேடுகள்,க்ளோவ்கள் என எல்லாத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தோம். காளிமுத்து சார் வந்தார். அவரது பச்சை டீ ஷர்ட்டில் சின்னதாய் ஒரு முதலை படம் போட்டிருந்தது. எங்கள் கல்லூரியின் இளம் வேதியில் பேராசிரியர், கடைசி நாலு மாதமாய் கல்லூரியின் கிரிக்கெட் கோச். எப்போதும் பல்லை கடித்துக்கொண்டே பேசுவது போல் பேசுவார். இந்த முறை உண்மையிலேயே பல்லை கடித்துக்கொண்டு பேசினார்.

"வெக்கமே இல்லையா டா..தோக்கிறது அசிங்கமில்லே..ட்ரை பண்ணாம தோக்கிற பார் அதான் அசிங்கம்...பதினாலு ஓயிடு போட்டிருக்கோம்.. ப்ராக்டிஸ் வரச்சொன்னா...ஏமாத்திட்டு ஓடுறது... இன்னைக்கு ரெண்டு ஓவர் போட்டிட்டு நாயி மாறி இளைக்குறீங்க...நீங்கெல்லாம் ஆம்பளையா??... எப்பப்பாத்தாலும் கேனப்பயக மாதிரி ஈனு இளிக்க வேண்டியது...  யூ புவர் லூஸர்ஸ்......"

கோபமாய் திரும்பி நடந்தார். அவர் கடைசியாய் சொன்ன வார்த்தை சத்தமாய் எதிரொலித்தது. எனக்கு கோபம் தாளவில்லை.கூட்டத்தில் நாங்கள் மட்டும் நிர்வாணமாய் நிற்பது மாதிரி இருந்தது. செந்திலை பார்த்தேன். அவன் கோபமாய்  "என்னடா இப்படி பேசிட்டு போறாரு..நம்மள பாத்தா லூஸு மாதிரியா இருக்கு.." என்றான்.


                                                                                         -- ---தொடரும் 

கருத்துகள்

Raju இவ்வாறு கூறியுள்ளார்…
A Good start!
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
Thanks Raju. Hope it will go well..
ARUN RAMA BALAN இவ்வாறு கூறியுள்ளார்…
புத்தாண்டில் ஒரு ரணகள தொடக்கம்.. :-)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
boss appidyae school, collage team match parthamathiri irukku. Excellent remembrance of olden, golden days