அண்ணே (23-10-2014)


போன் கிச்சுகிச்சு மூட்டியது. யாரோ கால் செய்கிறார்கள்.ஜீன்ஸ் பாக்கெட்ல இருந்து போனை எடுப்பது அம்மாவை பெயிலில் எடுப்பதை விட கஷ்டமான காரியமாய் இருந்தது. நண்பர் தான் அழைக்கிறார். என்னை விட மூத்தவர் என்பதால் "அண்ணே" யென தான் எப்போதும் அழைப்பேன். அண்ணனும் நானும் நாயா பேயா பழகும் கொடூர நண்பர்கள். எனக்கும்அண்ணனுக்கும் உலக நடப்புகளை ஒரு வாரத்துக்கு ஒரு தடவையாவது அலசவில்லையெனில் அடுத்த நாள் காலையில் கக்கா வராது. திடீரென போன் செய்து "ஏந்தம்பி..இந்த விராட் கோலி கூட சுத்துற அனுஷ்கா வாய் கொஞ்சம் வித்யாசமா இருக்கேப்பா..ஆப்ரேசன் கீப்ரேசன் பண்ணீருப்பாளோ..."என்பார். நானும் அவள் போட்டோவை ஜூம் பண்ணி பார்த்து விட்டு "ஆமாண்ணே..அப்டித்தாண்ணே நினைக்குறேன்..ஆப்ரேசன் பண்றப்போ கரண்ட் வேற போயிருச்சுன்னு நினைக்குறேன்"னு சொல்லுவேன்.இவ்வாறாக எங்களது ஆராய்ச்சி கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டு இருக்கும். இப்போது எதுக்கு கூப்பிடுறாரென யோசித்துக்கொண்டே போனை எடுத்தேன்.

"தம்புடு எங்க இருக்கே...வேலையா இருக்கியா..பேசலாமா"

"ண்ணே..ஆபிஸ்ல இருக்கேன்..."


"சரி அப்ப வெட்டியா தான் இருக்க..பேசலாம்... தம்பி பக்ரீத் விழா ஒன்னுல நம்ம கேப்டன் பேசுனத கேட்டியா..அம்மாவ அந்த வாறு வாறிருக்காரு...மனுஷனுக்கு எவ்வளவு கோபம்.."





"கேப்டன்லாம் இல்லேன்னா தமிழக மக்கள் என்னாவாங்களோ...சிலர் காமெடியா பேசுனா தான் சிரிப்பு வரும்..நம்மாளு எப்படி பேசினாலும் சிரிப்பு வருதுங்க..அவருக்கேண்ணே பாரத ரத்னா கொடுக்கக் கூடாது..."


"ம்க்கும்..பாவம்பா மனுஷன்.. ஏதாவது கூட்டத்தில பேசிட்டு அடுத்த நாள் காலைல பேப்பர பாத்து தான் என்ன பேசுனோம்னு அவரே தெரிஞ்சிக்கிறார்.. ஆமா இந்த  பேங் பேங் படம் மொக்கப்படம்னு ரிவ்யூ போட்ருக்காய்ங்க...ஆனா நூறு கோடி ,இருநூறு கோடி கலெக்ட் பண்ணுச்சுனு சொல்றாய்ங்க..அப்டியா.."


"அவய்ங்க அப்டித்தான்..மொக்கப்படம்னு ரிவ்யூ போடுவாய்ங்க..அடுத்த பக்கத்துல முன்னூறு கோடி கலெக்சன்னு செய்தியிருக்கும்..இங்க நாலு ஸ்டார் வாங்குன படமே ரெண்டாவுது வாரம் நாக்குத் தள்ளுது..."

"செரி..என்னப்பா கத்தி தேறுமா? நம்பி போலாமா..இல்ல சிதைச்சு அனுப்புருவாய்ங்களா....ரிஸ்க் எடுக்காம ஸ்ருதிஹாசன தரிசிச்சிட்டு வந்திறலாமா.."

"எப்டி இருக்குனு தெரில...ப்ளாக்ல ஒவ்வொருத்தன் ஒவ்வொரு மாதிரி எழுதுறான்..நான் கடவுள் மேல பாரத்த போட்டுட்டு டிக்கெட் புக் பண்ணிட்டேன்...பாத்துக்கலாம்...நம்ம சூப்பர் ஸ்டார் ஃபுட் பால் பாக்க வந்தார் பாத்தீங்களா? அவரு எதுனா டீம் கீம் வாங்கிருக்காரா.."

"யோவ் நீ வேற..அவரே எதோ பழக்கத்துக்காக போய் உக்காந்திருக்கார்... அது சென்னைக்கும் கேரளாக்கும் நடந்த ஐ.எஸ்.எல் ஃபுட்பால் மேட்ச்.பாவம் மனுஷன் எது சென்னை, எது கேரளானு குழம்பிப்போய் ரொம்ப நேரம் மேட்ச் பார்த்த மாதிரி தெரிஞ்சது.. கேரளா கோல் போட்டதுக்கு கைத்தட்னார்னா, இங்க எவனாவுது போராட்டம் பண்ண ஆரம்பிச்சிருவானுங்க....நம்ம ஊர்ல தான்யா தெருவுக்கு முப்பது போராளிகள் இருக்காய்ங்க.."




"அண்ணே..அந்த வெள்ளைப்புலி  ஒரு பையனை கொன்னுச்சே அந்த வீடியோ பாத்தீங்களா..ரொம்ப கொடூரமா இருந்துச்சுல்ல.."



"ஆமாய்யா..அத விட கொடூரம் இவய்ங்க எழுதறது..ஒருத்தன் அந்த புலி அது குட்டிய தூக்குற மாதிரி தான் தூக்குச்சுனு படத்த போட்டு விளக்குறான்.. மக்கள் கல்ல தூக்கி எரிஞ்சதுனாலதான் டென்ஷன் ஆச்சுனு ஒருத்தன் எழுதுறான்..இன்னொருத்தன் அந்த பையன் என்ன செஞ்சிருக்கணும்னுபெனாத்துறான்..கருத்து சொல்லலேன்னா இவனுங்களுக்கு அடில கட்டி வந்திரும்...அடப்போய்யா.."

"அண்ணே ஒய் திஸ் டென்சன்...வீட்ல காலைல உப்மா வா?"

"இல்ல தம்பி...ஃபேஸ்புக் பக்கம் போனாலே இவய்ங்க தொல்லை தாங்க முடில...காஸா குண்டுவீச்சுக்கு பொங்குறாய்ங்க,பக்கத்து தீவுல நம்ம சொந்தமெல்லாம் செத்தாய்ங்களே அப்போ உட்வாட்ஸ் குடுச்சிட்டு இருந்தானுங்களா... சச்சின் யாருன்னு ரஷ்யாக்காரி ஷரபோவாவுக்கு தெரிலயாம் அதுக்கு அவ்ளோ கரைச்சல்..இப்போ அமைதிக்கு நோபல் பரிசு வாங்குனார்ல நம்மூர்காரர் கைலாஷ் சத்யார்த்தி..அவர நம்மள்ள எத்தன பேருக்கு தெரியும்..வெக்கங்கெட்டவனுங்க..நெட்ல எழுதுறவன்லாம் அறைவேக்காடு..கழிசடைகள்.."

"ப்ரோ..திஸ் இஸ் டூ மச்... பக்கத்து வீட்ல கூட எவனும் பேச மாட்றான்..போன்ல பேசுனா பில் ஏறுது..தவிர எவனும் கருத்து சொல்ல விட மாட்றான்..இது ஒரு மாதிரி ஸ்ட்ரெஸ் பஸ்டர்... கண்ட படி எதயாவுது எழுதி விட்டுட்டு லைக்ஸ் வாங்கிட்டு ஜாலியா இருக்கலாம்.. எதுக்கெடுத்தாலும் பொங்குறான், இவன் ஒரு போராளினு நம்ம நேம் ரீச் ஆகிடும்....ஆமா நீங்க ஏன் வர வர கௌதம் கம்பீர் மாதிரி செம்ம டென்ஷன் ஆகுறீங்க..நம்மெல்லாம் சி.எஸ்.கே பாஸ்"

"இத பத்தி பேசுனா எனக்கு செம்ம டென்ஷன் ஆகுது..வேற பேசுவோம்.."

"இந்த மழை என்னங்க பட்டைய கெளப்புது..நல்ல காலத்துலேயே ஆபிஸ் போக எரிச்சலா இருக்கும்..இதுல இது வேற...ரோட்லலாம் தண்ணி தேங்கி நிக்குது..ஒவ்வொரு தடவ வெளில போயிட்டு வர்றதும் ஒரு ஆக்சன் ப்ளாக் தான்.."

"நல்லவேளடா ஊருக்கு வந்துட்டேன்..இங்க ஜில்லுனு நல்லா இருக்கு..என்ன கரண்ட் மட்டும் அடிக்கடி போகுது..அதான் ஒரே தொல்லை" 




"அரசியல் பேசாதீங்க..இந்த குன்ஹானால தமிழகமே சோகமெனும் பேரிருள்ல மூழ்கி கெடக்குது...ஒங்களுக்கு கரண்ட் கேக்குதா..பதவி ஏற்பு விழால மினிஸ்டர்ஸ்லாம் அழுதத பாத்தீங்களா...பாக்றப்போ எனக்கே தொண்டைய அடைச்சிடுச்சு"     

"சத்தமா பேசாத... உடன்பிறப்புகள் அள்ளிட்டு போய் ஆறு நாள் வச்சு அடிப்பாய்ங்க..நம்ம சி.என்.என் ல சைரஸ் னு ஒருத்தன் வருவானே..அவன் செம்மயா கலாய்ச்சி விட்ருக்கான்..அவன் மேல ஏற்கனவே அம்மா ஒரு கேஸ் போட்ருக்காங்க தெரியுமா..ஒரு தடவ..."

திடீரென எதிர்முனை அமைதியானது. தூரமாய் நாளைந்து பேர் கத்துவது கேட்டது. நான் "ணே..ணே.." வென கத்தினேன். அண்ணன் "திரும்பவும் கூப்பிடுறேன்டா" என சொல்லி கட் செய்தார். கொஞ்சம் குழப்பமாய் இருந்தது. ஒரு மணி நேரம் கழிச்சு நானே கூப்பிட்டேன்.

"என்னாச்சுங்க..எதுவும் ப்ரிச்சனையா??"

"ஆமாடா..எம்பையன் லேப்டாப்ப கீழ போட்டுட்டான்..சுக்கு நூறாயிருச்சு..போய் நாலு சாத்து சாத்தினேன்...இத்துனூன்டு இருந்து கிட்டு அவனுக்கு எவ்ளோ கோவம் வருது தெரியுமா... "என் ஃபிரண்டு அபிநயா கூட போன மாசம் லாப்டாப்ப ஒடச்சிட்டா...அவுங்கப்பா அவள ஒன்னுமே சொல்லல தெரியுமா.." ங்கறான்.."

"ஆக்சுவ்லா நீங்க அடிக்க வேண்டியது அபிநயாவோட அப்பனை.. எதுக்கும் அபிநயா எதை எதை ஒடச்சிச்சுனு கேட்டு வச்சிக்கோங்க... நம்ம பைய எதோ லிஸ்ட் வச்சிருக்க மாதிரி தெரியுது..ஹஹஹா .."

"ஒனக்கு நக்கலா இருக்கு..ஹூம்..சரி போனை வைக்குறேன்..உங்கூட பேசிட்டே தான் கேர்லெஸ்ஸா விட்டுட்டேன்னு நம்ம ரெண்டு பேரையும் கேஸ்ல அக்யூஸ்ட்டா சேத்துட்டா எம்பொண்டாட்டி..அதுனால மூடிட்டு போனை வை..அப்புறம் கூப்பிடுறேன்.." 
   






கருத்துகள்