டவுசர் காலங்கள் - 1

                                  

தொண்ணூறுகளில் இதே உலகத்தில் தான் வளர்ந்தோமா என அடிக்கடி தலையை சொரிய வேண்டியிருக்கிறது. இந்த "வாட்ஸ் அப்" யுகத்திற்கு, அஞ்சல் அட்டையில் எச்சில் தொட்டு நாங்கள் ஸ்டாம்ப் ஒட்டிய காலத்தை விளக்க முடியாது.சந்திரகாந்தாவுக்கும் சக்திமானுக்கும் வாரம் முழுக்கக்காத்திருப்போம். "ஆசை" மிட்டாய்கள் எங்கள் பால்யத்தை இனிக்க வைத்தது. வாடகை சைக்கிள்கள், சீனி வெடிகள், ஜாமிட்ரி பாக்ஸ்கள்,ஒளியும் ஒலியும் என ஏக்கப்பெருமூச்சு ஏகமாய் வருகிறது. என் டவுசர் காலங்களில் வேகமாய் வளர்ந்து "பேண்ட்" போட்டு பெரியாளாகிவிட வேண்டுமென்பதே என் ஆகப்பெரிய லட்சியமாய் இருந்தது. பேருந்துகளில் அரை டிக்கெட் எடுக்கப்படுவது, அம்மாவின் மடியில் உட்கார்ந்துகொண்டு தியேட்டரில் படம் பார்ப்பது போன்றவையெல்லாம் எனக்கு பெருத்த அவமானத்தை கொடுத்தது. அந்த நாட்களில் "கொடிக்கா" பழங்களை பாக்கெட்டுகளில் போட்டுக்கொண்டு "ஆன் தி வே" யில் சாப்பிட்டுக்கொண்டே நடப்போம். "சா பூ த்ரீ" போட்டு ஆட்டங்களை ஆரம்பிப்போம். விருந்தினர்களுக்கு வாங்கி வரப்பட்ட "டொரினோ"க்கள் காலியாகி விடக்கூடாதென வேண்டிக்கொள்வோம்.
இப்படியாகவே எங்களின் டவுசர் காலங்கள் கிழிந்தது...மன்னிக்கவும் கழிந்தது.

எங்கள் தெருவின் பெயர் "ஒயிட்ஹவுஸ் தெரு". மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிமடியில் கிடக்கும் டவுன் தேனி. இந்த ஊரில் இருக்கும் ஒரு தெருவுக்கு இந்தப் பெயரா என பலர் குழம்புவார்கள். எங்கள் ஏரியாவிற்கு பக்கத்தில் ஒரு பெரிய வெள்ளை பங்களா இருந்தது. அது ஒரு முக்கியமான லேண்ட் மார்க், ஆகையால் "ஒயிட் ஹவுஸ்" தெரு என பெரும்பேரு பெற்றது எங்கள் தெரு. மணிரத்னம் ஒருவேளை அஞ்சலி படத்தை குறைந்த பட்ஜெட்டில் எடுக்க நினைத்திருந்தால் எங்கள் தெருவிற்கு வந்திருப்பார். கூட்டமாய் எல்லா வயதிலும் குழந்தைகள் இருந்தார்கள். விசித்திரமான குணச்சித்திரங்கள் இருந்தார்கள். எல்லா நாட்களும் நிறைய சுவாரசியங்களை சுமந்து கொண்டே நகர்ந்தது. எங்கள் தெருவில் மொத்தம் நாற்பது வீடுகள். தெரு,மூன்று உபதெருக்களாக மானசீகமாய் பிரிக்கப் பட்டிருந்தது. அதை நாங்கள் "முன்னாடி லயன்" ,"நடு லயன்", "மூனாவது லயன்" என அழைத்து வந்தோம். நடு லயனுக்கு முன்னால் ஒரு பெரிய கிணறு இருந்தது. நிறைய கம்பிகள் போட்டு கிணற்றின் வாயை அடைத்திருந்தார்கள். அந்தக்கிணறு எண்பது சதவீதம் தண்ணீராலும், இருபது சதவீதம் ரப்பர் பந்துகளாலும் ‏நிரம்பியிருந்தது. உபயம் எங்களின் தெருக்கிரிக்கெட்.




நான் "மூனாவது லயன்" பிரஜை. அன்று நடு லயனில் கொஞ்சம் சத்தம் அதிகமாய் கேட்டுக்கொண்டிருந்தது. கண்டிப்பாய் "காக்காக்குஞ்சு"* விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். வேகமாய் கிளம்பினேன். கொய்யாவை ஒரு கடி கடித்து விட்டு மிச்சத்தை பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன். எல்லோரும் கிணற்றை சுற்றியிருந்த தூணில் ஏறி இறங்கி ஓடிக்கொண்டிருந்தார்கள். "காக்காக்குஞ்சு" களை கட்டியிருந்தது. "ண்ணே..நானும் வரேன்.." யாரும் என்னைக்கண்டு கொள்ளவில்லை. பாலாவும், செல்வாவும் வெறியாய் திரும்பிப்பார்த்துவிட்டு விளையாட்டைத் தொடர்ந்தார்கள். அவர்கள் வெறியேறித்திரிவதற்கும் ஒரு காரணம் இருந்தது. முதல் நாள் எல்லோரும் "ஐஸ்பால்" விளையாடினோம். சாபூத்ரீயில் நான் தான் "பட்டு" ஆனேன். விதிப்படி கண்ணை மூடிக்கொண்டு மரத்தைத் தொட்டு நூறு எண்ண வேண்டும். எல்லோரும் ஒளிந்து கொள்வார்கள். பிற்பாடு ஒளிந்திருப்பவர்களை கண்டுபிடிக்க வேண்டும். நான் நூறு எண்ணி விட்டு எல்லோரையும் தேடக்கிளம்பினேன். தாகமாய் இருந்ததால் வீட்டில் போய் தண்ணீர் குடித்தேன். அங்கே டிவியில் வந்த ஒரு பாடலை பார்த்துகொண்டே அசந்து தூங்கிப்போனேன்.செடிகளின் நடுவிலும், கிணற்றின் கம்பி மேலும் ஒளிந்து கொண்டிருந்தவர்கள் "என்றாவது அவன் வருவான்" என முக்கால் மணி நேரமாய் காத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். பிற்பாடு பொறுமையிழந்து வீட்டிற்கு வந்து பார்த்திருக்கிறார்கள். நான் வாயை திறந்து கொண்டு தூங்கிக்கொண்டிருந்தது அவர்களுக்கு பெருங்கோபத்தை கொடுத்திருக்க வேண்டும்.எனக்கு அக்கனமே "ரெட் கார்டு" போடப்பட்டது. என்னை "ஆரும்" ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.என்னோடு "ஆரும்" அன்னந்தண்ணி புழங்க மாட்டார்கள்.

"ண்ணே..ப்ளீஸ்ண்ணே" கொஞ்சம் சத்தமாய் கத்தினேன். எல்லோரும் என்னைத்திரும்பிப் பார்த்தார்கள். செல்வா, பாலா, சேகர், சின்ன கார்த்தி எல்லோரும் என்னை விட ஒன்று இரண்டு வயது பெரியவர்கள். மாணிக்கம் என்னை விட நாலு வயது சீனியர்.இது போன்ற இக்கட்டான சூழலில் எல்லோரையும் "ண்ணே..." வென கூப்பிட்டு ஸ்கோர் செய்வது என்னுடைய வழக்கம், அன்று அது எடுபடுவது போலில்லை. மாணிக்கம் மட்டும் பக்கத்தில் வந்தார். முகத்தை கடுமையாய் வைத்திருந்தார். சம்பவத்தன்று சட்டையை கழட்டிவிட்டு புழுதி தரையில் அரை மணி நேரம் ஒளிந்து படுத்துக்கிடந்திருக்கிறார். அவருக்கு வகிடெடுத்து சீவிய தலை. சினிமா படங்களின் பாதிப்பால் கோபத்துடன் பேசும் போது முகத்தில் ஒன்றரை வண்டி ரியாக்சன்கள் காட்டுவார்.

"ரெண்டாவது படிக்கிறவெனெல்லாம் ஆட்டைல சேக்குறதில்லை...மரியாதையா ஓடிரு..."

இதற்கு மேல் அமாவாசையாய் இருந்து பயனில்லை. ராஜராஜ சோழனாய் மாறினேன். "போடா செரட்டைத்தலையா" என சொல்லிவிட்டு நாலாவது கியரில் ஓடத்தொடங்கினேன். மாணிக்கம் "டேய்" என கத்திக்கொண்டே விரட்டத்தொடங்கினார். கண்ணிமைக்கும் நேரத்தில் மூன்று தெருக்களை கடந்து ஓடிவிட்டேன். அந்தக்காலங்களில் நான் ஓடினால் ஒரு பய பிடிக்க முடியாது. மாட்டிக்கொள்வது போல இருந்தால் ஏதாவது வீட்டிற்குள் நுழைந்து விடுவேன். எதிராளிகள் உள்ளே நுழைய முடியாமல் திணறிப்போவார்கள். இப்படித்தான் ஒருமுறை ஒரு இக்கட்டான தருணத்தில் ஒரு வீட்டிற்குள் நுழைந்து விட்டேன். யார் வீடெனத் தெரியவில்லை. நிறைய பேர் கூட்டமாய் உட்கார்ந்து வி.சி.ஆரில் "நடிகன்" படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சேர்ந்து பார்க்க ஆரம்பித்து விட்டேன். ஒரு மணி நேரம் கழித்து லைட்டை போட்டார்கள். ஒரு பெரியவர் மிரண்டு போய் "யார்றா நீ??" என்றார். நடந்ததை சொல்லி அந்த வீட்டில் ரெண்டு முறுக்கு சாப்பிட்டு கிளம்பி வந்தேன்.இந்த முறை அதற்குத் தேவையிருக்கவில்லை. மாணிக்கம் கொஞ்ச நேரத்தில் நின்று விட்டார்.



வேப்பமரத்தின் கீழே சோகமாய் நின்று கொண்டிருந்தேன். அங்கே குழி பறித்து ஒரு கூட்டம் 'குண்டு' விளையாடிக்கொண்டிருந்தது. மனம் அதில் ஒட்டவில்லை.  மூனாவது லயனில் ஒரு வீட்டிலிருந்து அதிகமாய் சத்தம் வந்தது. ஒலியை பின் தொடர்ந்து வீட்டை நோக்கி நடந்தேன். நிறைய பேர் உட்கார்ந்து தூர்தர்ஷன் செய்தி கேட்டுக்கொண்டிருந்தார்கள். ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார் என பேசிக்கொண்டார்கள். ஒரு பெரியவர் வீட்டின் வெளியே உட்கார்ந்து பொலம்பிக்கொண்டிருந்தார். 

"ரோசாப்பூ மாதிரி மொகம்..அதப் போய் கொல்ல அந்த பாவி பயலுகளுக்கு எப்படி மனசு வந்துச்சோ... நாட்டோட தூண சாச்சிட்டாய்ங்களே..."

கிட்டத்தட்ட அழுவது போல இருந்தார். கதர்சட்டை அணிந்து பாக்கெட்டில் வெள்ளைக்கலர் பேனா வைத்திருந்தார். திடீரென அந்த கேள்வி என் மனதில் உதித்தது. 

"அப்போ நாளைக்கு லீவா தாத்தா??.."

தாத்தா தலையில் அடித்துக்கொண்டார். அவருக்கு இன்னும் சோகம் குறையவில்லை போல என எண்ணிக்கொண்டேன்.
   




கருத்துகள்

Nagendra Bharathi இவ்வாறு கூறியுள்ளார்…
அந்தக் காலம் கண் முன்னே வந்தது
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்-ன்னு பின்னாடி போயி பாத்தா,
ரொம்ப குறைவான ஞாபகங்களே இருக்கு..

நான் பேபி கிளாஸ்-ல இருந்து ஓடி வந்தது, 4 வயசு.
1ம் வகுப்பு ஒரு சில மூஞ்சிங்க..
4வது வகுப்பு நிறைய மூஞ்சிங்க... அதுக்கு அப்புறம் நடந்தது எல்லாம் தெளிவா இருக்கு.

ஆனா, நீங்க ரொம்ப சின்ன வயசுல நடந்தது எல்லாம் ஞாபகம் வச்சி இருக்கீங்க. பரவால்ல..