டவுசர் காலங்கள் - பகுதி 2



காலையில் எழும்போது மிகப்பெரிய எரிச்சல் வந்தால் அது திங்கட்கிழமை. வீட்டுப்பாடம் முடித்தாகிவிட்டதா? மனப்பாட பாடல்கள் ஞாபகம் இருக்கிறதா என ஒரு பதட்டத்துடனே பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்தேன். ட்ரவுசர் போடும் போது எரிச்சல் இன்னும் அதிகமானது. ட்ரவுசர் சிறியதாய் என்னுடைய பாதி தொடை தெரியும்படி ஏறியிருந்தது. நண்பர்கள் சிலர் "இப்படியே போச்சுனா இன்னும் கொஞ்ச நாள்ல ஒன்னோட "குஞ்சுமணி" வெளில தெரிஞ்சிடும்டோய்" என கேலி செய்தார்கள். "இப்போ தானே ஜூன்ல எடுத்தோம் அரைப்பரீட்சை முடியட்டும்.." என அப்பா சொல்லிவிட்டார். பல்லைக்கடித்துக்கொண்டு கிளம்பினேன். தட்டில் வைத்திருந்த இட்லியை கடித்துக்குதறிவிட்டு வெளியேறினேன்.அம்மா எதிர்வீட்டு ரமாக்காவுடன் பேசிக்கொண்டிருந்தாள். "ரமாக்கா"(ரமா+அக்கா) அம்மாவின் அன்றைய "கூகிள்". எல்லாக்கேள்விகளுக்கும் அக்காவிடம் பதில் இருப்பதாய் அம்மா நம்பினாள். எங்கள் ஏரியாவில் இருக்கும் எல்லா பெண்மணிகளின் சேலைகள் பற்றியும் அவற்றின் நிறம் முதற்கொண்டு ரமாக்கா ஞாபகம் வைத்திருந்தாள். எல்லா வீட்டுப்பிள்ளைகளின் மதிப்பெண்களும் தெரிந்திருந்தது. பெண்கள் கூட்டத்தின் அரட்டையின் போது அக்கா இது போன்ற புள்ளி விவரங்களை அள்ளித்தெளிப்பாள். இதனாலேயே தெருப்பெண்கள் மத்தியில் அக்காவிற்கு சிறப்பு இடம் அளிக்கப்பட்டிருந்தது.

பள்ளியை நெருங்கும்போது அடிவயிற்றில் ஒரு பயம் உருண்டுகொண்டிருந்தது. காரணமில்லாமல் பொதுவான பயம். தப்பே செய்யவில்லையென்றாலும் போலிஸ் ஸ்டேஷன் செல்கையில் ஏற்படும் உணர்வு. பள்ளியை மனதார வெறுத்தேன். பெரிய மழைகள் பெய்யும் போது பள்ளிக்கு விடுமுறை விடுவார்கள். அடுத்த நாளும் மழை வேண்டி பிரார்த்தனை செய்வேன். பள்ளி கேட்டின் அருகில் வந்த போது "அமுங்குனி" என கூப்பிடும் சத்தம் கேட்டது. ராஜாமணி பாட்டியின் குரல். கேட்காதது போல் உள்ளே போய் விடலாமாவென யோசித்தேன். பிறகு முறைத்துக்கொண்டே அவளருகில் சென்றேன். ராஜாமணிப்பாட்டி பள்ளிக்கு வெளியில் கடை வைத்திருக்கிறாள். கப்பக்கிழங்குகள், சூராம்பழம், தட்டு மிட்டாய்,கலாக்காய்கள்,கண்ணாடி பாட்டில்களில் வண்ண மிட்டாய்கள், மஞ்சள் நிற அப்பளங்கள் என பாட்டியின் கடை பள்ளிக்குழந்தைகளின் கனவுக்கொட்டடையாக திகழ்ந்தது. எனக்கும் பாட்டிக்கும் ஒரு பிசினஸ் டீலிங் இருந்து வந்தது. பாட்டியிடம் கணக்கு வைத்து வாங்கித்தின்று விட்டு ,காசு கொடுக்காமல் பலர் பள்ளியில் சுற்றிகொண்டிருப்பார்கள். அந்த மாணவர்களிடம் சென்று அந்த "வாராக்கடனை" வசூலித்துத்தந்தால், பாட்டி எனக்கு கொஞ்சம் சூராம்பழமும், நெல்லிக்காயும் கொடுப்பாள். 




"மூனு பி செல்வம் முக்கா ரூவா... டி கிளாஸ் சென்றாயன் ரெண்டார்ரூவா ..ம்ம்".

நெற்றியை குறுக்கி யோசித்தாள். ஏற்கனவே சுருக்கமான முகம் இன்னும் சுருக்கமாக தெரிந்தது. எப்போதும் கசங்கிய சேலைகள் தான் கட்டியிருப்பாள். வெள்ளைக்கலரில் பாசி மாலை அணிந்திருப்பாள். குரல் மட்டும் எப்போதும் அரட்டும் தொனியில் கட்டக்குரலாய் இருக்கும். பாட்டியை முறைத்துப்பார்த்தேன்.

"இனிமே அப்டி கூப்ட்டா நா கடைக்கு வர மாட்டேன்.."

பாட்டி சிரித்தாள். அவளுக்கு பற்கள் கூரியதாக, கண்டபடி எளிரில் கிடைக்கிற இடத்திலெல்லாம் முளைத்திருந்தது. அதனாலேயே அவளது சிரிப்பு கொஞ்சம் வசீகரமானதாய் இருக்கும்.

"என்னானு கூப்டேன்.." சிரித்துக்கொண்டே கேட்டாள்.நான் பேசவில்லை.

"அமுங்குனினா..?" . ஆம் என்பது போல் தலையாட்டினேன்.

"சரிடீக்கனி...இதுக்கலாமா கோவிக்கிறது...அந்த மூனாங்கிளாஸ் முண்டப்பயலுக கிட்ட பாட்டிக்கு காசு வாங்கியாடிக்கனி...பாட்டி ரேசன்ல சீமத்தண்ணி வாங்கப்போகணும்..". என சொல்லிக்கொண்டே கன்னத்தை கிள்ளினாள். பாசம் பொங்கினால் இது போல வார்த்தைக்கு வார்த்தை "கனி" போடுவாள். 

தலையாட்டிவிட்டு நடந்து பள்ளிக்குள் போனேன். கொய கொய வென குழந்தைகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். எங்கும் வெள்ளைச்சட்டைகள், ஊதா ட்ரவுசர்கள், மெரூன் பாவாடைகள். வகுப்பை நெருங்க நெருங்க எரிச்சல் அதிகமாகியது. என்னிடத்தில் போய் அமர்ந்தேன். பெஞ்சில் அமருகையில் ட்ரவுசர் கொஞ்சம் மேலேறியது. நிறைய பேர் சிரிப்பதைப்போல தோன்றியது. திரும்பிப் பார்த்து யாரும் சிரிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன். பெண்கள் முந்தானையை சரி செய்வது போல நான் என் ட்ரவுசரை பிடித்துக்கொண்டு அழைந்தேன்.

பக்கத்துக்கிளாஸ் சந்திரிகா டீச்சர் திடீரென உள்ளே நுழைந்தார். "லேய் சத்தம் போடாம உட்கார்ந்திருக்கனும்...இன்னிக்கு உங்க டீச்சர் லீவு..கத்தாம உக்காந்து இங்க்லீஷ் போயத்த படி.. சத்தம் வந்துச்சு ஹெட் மாஸ்டர் ரூமுக்கு அனுப்பிருவேன்.." சொல்லிவிட்டுப்போனார். என் கண்ணுக்கு சந்திரிகா டீச்சர் தேவனின் தூதுவர் போல தெரிந்தார். ஒரே நொடியில் குதூகலமானேன். உலகம் இன்பமயமானதாய் தெரிந்தது. ஜன்னல் வழியாய் கல்லை விட்டு எறிவது, "அண்ணாமலை" படத்தின் வசனங்களை பேசுவது என பொழுது சிறப்பாய் கழிந்து கொண்டு இருந்தது. அருண் ஒரு சின்ன தூக்குச்சட்டியை கையில் பாதுகாப்பாய் வைத்திருந்தான். ஒரு வேளை அதற்குள் "திங்க" எதுவும் இருக்குமோ என்ற பேராசையில் அவன் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். அருண் கருப்பு ஃப்ரேமில் ஒரு கண்ணாடி போட்டிருப்பான். நோட்டுப்புத்தகங்களிலெல்லாம் சாமிப்படங்கள் ஒட்டி வைத்திருப்பான். 

"லே..தூக்குச்சட்டில என்னடா??"

அருண் என்னை ஒரு மாதிரி பார்த்தான். பிறகு சொன்னான்.




"விநாயகருக்கு பால்...இப்போ எல்லா கோயில்லயும் விநாயக சாமி பால் குடிக்கிறாராம்டோய்...நேத்துக்கூட பெத்தாச்சி விநாயகர் கோயில்ல ஒரு சட்டி குடிச்சாராம்.. எங்க மயினி சொல்லிச்சு...ஒரு கரண்டில பால் வச்சாங்களாம் சொர்ர்னு உறிஞ்சிட்டாராம்..அதான் பாலு கொண்டு வந்திருக்கேன்.."

நான் ராமநாராயணனின் துர்கா படத்தையே நாலு தடவை பார்த்தவன். எப்படியாவது கணேசன் பால் குடிப்பதை கண்டுவிட வேண்டுமென ,அன்று சாயங்காலம் அருணின் சைக்கிளில் தொத்திக்கொண்டேன். எல்லாக்கோவில்களும் கூட்டம் கொப்பளித்தது. கோவில்களிலிருந்து "ஜெய் கணேஷா" கோஷம் பலமாய் வந்து கொண்டிருந்தது. ஊர் முழுக்க விநாயகர் ஆக்ரமித்திருந்தார். எல்லாக்கோவில்களிலும் விநாயகர் சிலை இருந்ததால், ஒரு முருகன் கோவிலுக்கு வண்டியை விட்டோம். அங்கு ஒரு மரத்தின் கீழே விநாயகர் ஃப்ரீயாய் இருந்தார். நானும் அருணும் சாமியின் முன்னால் போய் நின்றோம். தூக்குச்சட்டியில் இருந்த பாலை ஒரு ஸ்பூனில் ஊற்றினோம். அருண் ஸ்வாமி சிலையின் தும்பிக்கை அருகே ஸ்பூனை கொண்டு சென்றான். எனக்கு பதட்டம் அதிகமானது. ரெண்டு மூன்று நிமிடமாகியும் பால் ஸ்பூனில் அப்படியே இருந்தது. இரண்டு பெரும் மாறி மாறி அரை மணி நேரம் முயற்சி செய்தோம். சாமி குடித்த பாடில்லை. சோகமாய் கோவிலிலிருந்து கிளம்பினோம். 

"ஏன்டா அருணு..சாமி பால குடிக்கல.."

"வயிறு நொம்பிருக்கும்டா... கருவேல்நாயக்கம்பட்டில குடிச்சிட்டு ஏப்பமே விட்டாராம்.."

"ஆமா பால்ல சீனி போட்டியா?.."

"இல்ல.."

"அட கேனயா....சீனி போடலேனா நானே குடிக்க மாட்டேன்...சாமி எப்டிடா குடிப்பாரு..."

சீனியை வாங்கி பாலில் போட்டு விட்டு ரெண்டு பேரும் மீண்டும் கோவிலை நோக்கி ஓடினோம். 
                      

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
super.. super..

Keep writing.. you are a good entertainer.