டவுசர் காலங்கள் -பகுதி4





எங்கள் ஏரியாவின் இதயத்துடிப்பே பெண்கள் தான், அவர்களின்றி அங்கு அணுவும் அசையாது. பிறகு வீட்டு ஆம்பளைகள் பற்றி சொல்லத்தேவையில்லை. முன்னாடி லயன், நடு லயன், மூணாவது லயன் என மூன்று தெருக்குள்ளும் மொத்தமாய் நாலு நல்லதண்ணி குழாய்கள் உண்டு. அதிகாலையில் தண்ணி வர ஆரம்பிக்கும் போது கொட்டாவி விட்டுக்கொண்டே தலை முடியை கொண்டையிட்டபடி குடத்துடன் வருவார்கள். வரிசை கட்டி நிற்பார்கள். யார் எவ்வளவு குடம் பிடித்தார்கள்? போன்ற கணக்குகள் அத்துப்படியாய் இருக்கும். போன முறை "எக்ஸ்ட்ரா" குடம் பிடித்தவர்கள் அடுத்த முறை இடஒதுக்கீட்டில் பின்னுக்குத்தள்ளப்படுவார்கள். இவர்களின் நீர் மேலாண்மையை எந்தவொரு எம்.பி.ஏவும் புரிந்து கொள்வது கடினம். "நா வெள்ளனே வந்து கொடத்த வச்சிட்டே..மூனாவுது வீட்டுக்காரக்கா மாத்தி வச்சிட்டாங்க.." என கோல்ட் மெடல் தவறவிட்ட வீராங்கனையாய் சீறுவார்கள். எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் "ஹேமாக்கா", "ஜெயந்தியக்கா", "சொக்கநாச்சியக்கா", "ஜெகதீஸ்வரியக்கா" போன்ற சீனியர்கள் களமிறங்கி தர்மத்தை நிலைநாட்டுவார்கள். ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் கொய்யாப்பழம்,கீரை விற்பவர்கள் எவ்வளவு மெதுவாய் கத்தினாலும் இவர்களுக்குக்கேட்டுவிடும்.






மீன் விற்பவர் தெருவிற்குள் உள்ளே வந்தவுடன் ஒவ்வொருவராய் வெளியே வருவார்கள். ஆர்வமாய் வருவதாக காட்டிக்கொள்ளமாட்டார்கள். அது ஒரு யுக்தி.ஒருவர் பின் ஒருவராக வந்து சூழ்ந்து மீனை நோட்டமிடுவார்கள். பின் ஒருவொருக்கொருவர் கண்களாலேயே பார்த்துக்கொண்டு "வொர்த் பீஸா" என உறுதிப்படுத்திக்கொள்வார்கள். மீன்காரர் சொல்லும் விலையை மூன்றால் வகுத்து கொஞ்சம் கருணையை சேர்த்து இவர்கள் ஒரு விலை சொல்வார்கள். மீன்காரர் நிலைகுலைந்து போவார். லாபத்தை குறைத்து இறங்கி வர முயல்வார், அதற்குள் "யண்ணே...சதையே இல்ல..சொங்கியா கெடக்கு..இதுக்கு யான வெல சொல்றீங்க..","ஃபுல்லா முல்லு..சின்ன புள்ளைக எங்கிட்டு திங்க.." "நேத்து மீனா..ஒரே வீச்சமா இருக்கு" என அடுத்தடுத்து தாக்குதல்கள் இறக்குவார்கள்.வேறுவழியில்லாமல் பல நேரங்களில் பேரம் படிந்து விடும். பிற்பாடு ஏதாவது ஒரு வீட்டில் காபி போட்டுக்கொடுத்து அந்த மீன்காரரை கண்கலங்காமல் அனுப்பிவைப்பார்கள். "அடுத்து வாரமும் வாங்கண்ணே" என இவர்கள் வழியனுப்பிவைக்கையில் அவர் பயந்தபடியே தலையாட்டி செல்வார். ஒரு தட்டில் சாம்பல்,கல் உப்பு வைத்து கொண்டு அருகாமனையுடன் உட்கார்ந்து மீனை சுத்தம் செய்துகொண்டே அன்றைய செய்தியை அலசுவார்கள். எத்தனை "புதிய தலைமுறை" வந்தாலும் அந்த நாட்களின் இனிமையை கொண்டு வந்துவிட முடியாது. "ஏங்க்கா..இந்த ராமர்பிள்ளைங்கறாங்களே..அவரு பிள்ளமாரா??" 


சொக்கநாச்சியக்கா வீட்டு வாசலில் போய் நின்றேன். அம்மாவால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தேன். "அக்கா"வுக்கு வயது எழுபதுக்கும் மேலிருக்கும். நானும் சொக்கநாச்சியக்காவை "அக்கா"வென்பேன், எங்கம்மாவும் "அக்கா" வென்பார். இன்னும் சொல்லப்போனால் எங்கள் ஏரியாவுக்கே அவுங்க அக்கா தான். அக்காவுக்கு ரெண்டு கண்களில் ஒரு கண் அளவு சிறியதாய் இருக்கும். கண்ணாடி போட்டிருப்பார். தலையை ஒரு மூன்று ஆங்கிளில் மேலும் கீழும் திருப்பி என்னைப்பார்த்து விட்டு "வாடா தனம் மகனே..என்னா விசேசம்.." என்றார்.

"க்கா நெஞ்சுச்சளியா இருக்காம்..இருமல் வருதாம்..அம்மா உங்கட்ட என்ன சாப்பிடனும்னு கேட்டு வர சொன்னாங்க.."

"உனக்கா..உங்கம்மாளுக்கா.."


"எனக்கு"

பக்கத்தில் வந்து முதுகை தொட்டுப்பார்த்தார். "பாலுல மஞ்சத்தூள் போட்டு...பச்சமுட்ட மஞ்சக்கருவ போட்டு..கொஞ்சூண்டு மிளகு இம்மி போட்டு.." பட்டியல் நீண்டுகொண்டே போனது. எனக்கு அந்த பாழாப்போன பாலை எப்படி குடிப்பது என்ற பயம் அப்போதே தொற்றிக்கொண்டது. அக்கா என்னைப்பார்த்து "இன்னொரு தடவ சொல்லனுமாப்பா.." என்றார்.



"இல்லக்கா..நாபகமிருக்கு..". நமக்கு தேவையில்லாததை அங்கேயே சென்சார் கட் செய்துவிட வேண்டும் என எண்ணிக்கொண்டேன். திடீரென பக்கத்தில் கூச்சல் சத்தம் கேட்டது. ஒயிட் ஹவுஸ் எனப்படும் பெரிய வீட்டை நோக்கி பலர் ஓடிக்கொண்டிருந்தார்கள். நடுலயன் பெண்கள் பவுடரெல்லாம் அடித்தபடி போய்க்கொண்டிருந்தார்கள். சொக்கநாச்சியக்காவுக்கும் ஏதும் புரியவில்லை. கண்களை குறுக்கிக் கூட்டத்தை நோக்கினார்.

"என்னவாம்மா..கூட்டமா எங்கன போறீங்க..மொளப்பாரி ஏதும் போகுதா..."

"க்கா...குஷ்பு வந்துருக்காமுக்கா..ஒயிட் அவுஸ் வீட்ல தான் மதிய சாப்பாடாம்...அம்புட்டு கலராம்.."

"யாருடி இந்த ரசினி படத்துல நடிச்சாலே அவளா..கொஞ்சம் ஊத்தமா இருப்பாளே.." 


"ஆமக்கா" என்ற குரல் தூரத்தில் கேட்டது. நான் என் டவுசரை டைட் செய்து கொண்டேன். ஓடுவதற்கு முன்னால் மானம் காக்க செய்ய வேண்டிய முன்னேற்பாடு. குஷ்புவை பார்க்கப் போறோம் என்கிற தெய்வீக உணர்வு எனக்குள் ஜிவ்வென்று ஏறியது. அதற்குள் சொக்கநாசியக்கா "டேய் குட்டி..போய் கூட்டம் எப்டியிருக்குன்னு பாத்துட்டு வா..அக்கா சீல மாத்திட்டு வரேன்..". "சரிக்கா" வென வண்டியை கிளப்பினேன். குஷ்புவை பார்க்க ஒயிட் ஹவுசை சுற்றி கூட்டம் கூடி விட்டது. அந்த வீட்டின் உரிமையாளர் சினிமா விநியோகஸ்தராய் இருந்தார். தேனியில் சூட்டிங் நடந்தால்  நடிகர்கள் ஒருமுறையாவது அவர் வீட்டுக்கு வந்து விடுவார்கள். கேட்டை அடைத்து விட்டார்கள். பல தன்மானத்தமிழர்களுடன் நானும் கேட்டை பிடித்த படி நின்றிருந்தேன். கிராமத்து சேலை கெட்டிய படி குஷ்பு ஒரு சேரில் உட்கார்ந்திருந்தார்."நாட்டுப்புற பாட்டு" என்கிற பட சூட்டிங். இளைஞர்கள் கத்தினார்கள். பதிலுக்கு குஷ்பு சிரித்தபடி கையாட்டினார்.

யாரையும் உள்ளே விடவேயில்லை. எங்களுக்கு பின்னால் ஒருத்தர் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஏதோ பேசியபடி உள்ளே போக வழி கேட்டார். மக்கள் ஒதுங்கவேயில்லை. "ஏங்க..அரை மணி நேரமா நிக்கறவன்லா கேனயனா ..பின்னாடி போங்க.." என கத்திக்கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரம் கழித்து தான் தெரிந்தது அவரும் அந்த படத்திலும் நடிக்கும் ஒரு நடிகரென்று. அது நடிகர் செல்வா. கூட்டத்தில் ஒரு ஆளு "டேய் அவர தெரியுதா..ஒரு படத்துல கஸ்தூரிக்கு சோடியா வருவார்ல.." என்றார். செல்வா முறைத்துக்கொண்டே உள்ளே போய்விட்டார். எப்படியாவது உள்ளே நுழைந்து குஷ்புவை பக்கத்தில் பார்த்து பிறவிப்பயன் அடைந்து விட மாட்டோமா என ஏங்கிக்கொண்டிருந்தேன். சொக்கநாச்சியக்கா பெண்கள் படையுடன் வந்து கொண்டிருந்தார். எம்.ஜி.ஆரை கண்ட ஏழைக்குழந்தை
போல பக்கத்தில் போய் ஒட்டிக்கொண்டேன். அக்காவுக்கு பெரிய வீட்டில் பெண்கள் பழக்கம் என்பதால் கொஞ்ச நேரத்தில் கேட்டை திறந்தார்கள். பெண்கள் மட்டும் தான் அனுமதிக்கப்பட்டார்கள். சிறுவர் கோட்டாவில் நானும் உள்ளே நுழைந்து விட்டேன். ஏதோ உலக அதிசயத்தை பார்க்கப்போவது போல எனக்கு படபடப்பாய் இருந்தது. கேட்டுக்கு வெளியே நின்றவர்கள் எல்லாம் என்னைப் பொறாமையுடன் பார்ப்பது போலத்தெரிந்தது. அடுத்த நாள் ஸ்கூலில் இந்த குஷ்பு தரிசனத்தை எப்படி நண்பர்களுக்கு விளக்க வேண்டுமென திரைக்கதையெல்லாம் மனதில் ஓடியது.



குஷ்பு ஒரு சோபாவில் அமர்ந்திருந்தார். பக்கத்தில் ஒரு பெரிய சேரில் மனோரமா ஆச்சி உட்கார்ந்து அருகிலிருப்பவருடன் மெதுவாய் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட இருபது பெண்கள் சுற்றி நின்றிருந்தார்கள். எல்லோருக்கும் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி. "கன்னம் ரோஸ் கலருடி" "பூரா பவுடரு..." என ஹஸ்கி வாய்சில் தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்தார்கள். ஹேமாக்கா லேசாய் முன்னே வந்து மனோரமாவை பார்த்து "நேத்துக்கூட டிவில சம்சாரம் அது மின்சாரம் போட்டான்..சிரிச்சுக்கிட்டே இருந்தோம்" என்றார். நிறைய பேர் சிரித்துக்கொண்டே தலையாட்டினார்கள். மனோரமா லேசாய் சிரித்தார்.நன்றி என்பது போல கும்பிட்டார். பக்கத்தில் இருந்தவர்கள் ஆச்சிக்கு தொண்டை கட்டியிருக்கிறது என்றார்கள். "ஆமா..ஒரு சீன பத்துத் தடவைக்கு மேல எடுப்பாங்களாம்ல..கட்டத்தான செய்யும்.." என சொல்லி சிரித்தார்கள். மனோரமா திரும்பவும் எளிமையாய் சிரித்தார். எனக்கு எதிலும் அக்கறையில்லை. குஷ்புவை பார்த்தபடியிருந்தேன்.

பெண்களெல்லாம் குஷ்பூவிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள். நானும் வரிசையில் நின்று வாங்கினேன். ஏதோ ஆங்கிலத்தில் எழுதி கீழே கண்டபடி கிறுக்கி மேலே புள்ளி வைத்து கையில் நோட்டைக்கொடுத்தார். சென்ட் மனம் தூக்கியது. "கமலஹாசன் வீட்டு போன் நம்பர் உங்ககிட்ட இருக்கா என கேக்க வேண்டும்" என நினைத்துக்கொண்டிருந்தேன். பக்கத்தில் போனவுடன் எல்லாம் மறந்துவிட்டது. "ஏக்கா...குஷ்பூவும் நம்மள மாறி தோசை இட்லிலாம் சாப்டுமா.."என பக்கத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த சத்தம் குஷ்புவுக்கு கேட்டிருக்க வேண்டும். "ஓ..எனக்கு அதெல்லாம் ரொம்ப பிடிக்குமே.." என சிரித்துக்கொண்டே சொன்னார். எனக்கு அந்த குரலை கேட்க பேரதிர்ச்சியாய் இருந்தது. கட்டைக்குரலாய் இருந்தது. அதுநாள் வரை "கொண்டையில் தாழம்பூ..நெஞ்சிலே வாழைப்பூ.."வென படங்களில் பாடியதெல்லாம் குஷ்புவென நினைத்துக்கொண்டிருந்தேன். அதே பாடல்களை பிறகு கல்யாணவீடுகளிலும், கச்சேரிகளிலும் பாடுகிறவர்கள் தான் பின்னணிப்பாடகர்கள் என்பது என் அன்றைய நாள் அவதானிப்பு. கொஞ்ச நேரத்தில் அவர்கள் சாப்பிட சென்றார்கள். நாங்களும் நடையை கட்டினோம். குஷ்பூ எல்லாருக்கும் டாட்டா சொன்னார். குழந்தைகளுக்கு "பறக்கும் முத்தம்" கொடுத்தார். நான் சொக்கநாச்சியக்கா பக்கத்தில் போனேன்.

"ஏங்க்கா..கொரல் ஒரு மாதிரி கட்டையா இருந்துச்சுனா என்னத்த குடிச்ச சரியாகும்..."

                                                                                                            ---தொடரலாம்


கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Robert இவ்வாறு கூறியுள்ளார்…
லயன், லயன், சொன்னதும் நான் சிங்கமோன்னு நினைச்சுட்டேன் !!!!நீங்க கலக்குங்க தல....