இரவு ரொம்பவும் அமைதியாக இருந்தது.பன்னிரண்டரை மணி பெரும்பாலும் அப்படித்தான் இருக்கும். தூக்கத்துக்கும் எனக்கும் சில மில்லிமீட்டர்கள் தான் இடைவேளை. கொஞ்சமாய் நெருங்கிக்கொண்டிருந்தேன். சனியன் பிடித்த செல்போன் கதறியது. தூக்கம் மாய மானாய் ஓடிப்போனது. பிடித்த பாடலை சத்தியமாய் ரிங்டோனாய் வைக்கக்கூடாது. பாம்பேஜெய்ஸ்ரீயின் குரல் சந்திரமுகி கதரலாய் எனக்குக் கேட்கிறது.செல்போனின் திரையை பார்த்தேன். பிரவீன் கூப்பிடுறான். கண்டிப்பாய் புலம்பப்போறான். கல்யாணமானவனுங்க போன் நம்பரையெல்லாம் ப்ளாக் பண்ற அப்ளிகேசன் வந்தா நல்லாயிருக்கும்.
" தூங்கிட்டியா.."
" இல்ல... கணபதி ஹோமம் பண்ணிட்டு இருக்கேன். டேய் மணி பன்னெண்டு டா"
" என்னடா கோவிச்சுக்கிட்டியா.."
" செல்போன் வழியா கழுத்த நெரிச்சு கொல்ல முடியாதுங்கற ஒரே காரணத்துனால தான் இன்னும் நீ உயிரோடவே இருக்கிற...."
" கொல்லுடா..நீயும் என்ன கொல்லு...நேத்து அவ......"
வழக்கம் போல் குடும்பச்சண்டை. குடித்திருந்தான். அரைமணி நேரம் அறுத்துக்கொன்றான். உலகத்துலேயே கஷ்டமான வேலைல ஒன்னு புலம்புறவுனுக்கு "ம்" போடுறது தான். ஒருவழியாய் பேச்சு கடைசி கட்டத்தை எட்டியது. "விடுறா ...எப்பயும் நடக்குறது தான....எல்லாம் சரியாகிடும்.." "என்றேன்.
"ம்ம்.. இந்த முட்டக்கன்னிகளே இப்படித்தான்டா...வைக்குறேன்.பாப்போம்டா.... பாய் "
திரும்பவும் படுத்தேன். அவன் கடைசியாய் சொன்ன வார்த்தைகள் என் காதுக்குள் ரீங்காரம் அடித்துக்கொண்டிருந்தது. அவன் சொன்னது வாஸ்தவம் தான்.
முட்டைக்கன்னிகளுக்கு அவன் வாழ்க்கையில் முக்கிய பங்குண்டு. தூக்கம் வராத இரவுகளில் கடந்த காலங்களில் ஒருமுறை நடந்து பார்த்து வருவது அலாதி சுகம். என் நினைவுகள் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அழகாய் அமைந்திருக்கும் தேனிக்கு பறந்தது. ரிவர்ஸ் பட்டனை தட்டி பதினஞ்சு வருஷம் பின்னாடி போனேன்.நானும் பிரவீனும் எங்கள் ஏரியா கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள். பிரவீன் என்னை விட மூன்று வயது பெரியவன். சின்ன வயதிலிருந்தே வாடா போடாவென கூப்பிட்டு பழகிப்போனோம். ஒரே டியூசனில் வேறு படித்தோம்.
பிரவீன் ஆள் பார்க்க பழைய கால நடிகர் கார்த்திக் போல இருப்பான். மாநிறம்,நல்ல உயரம். ட்யூசனை கட்டடித்து கிரிக்கெட் டோர்ணமென்ட் போவது, விளையாடப்போறோம்னு சொல்லிட்டு வீரபாண்டி ஆற்றில் குளிக்கப் போவது, வீட்டுக்கு தெரியாமல் "யமஹா" க்களை ஓட்டி கீழே விழுவது என எனக்கும் பிரவீனுக்கும் கெமிஸ்ட்ரி செட் ஆகிப்போனது. என்னை அவன் வயதுக்கு சரியாய் நடத்துவான், அதனாலேயே அவனை எனக்கு பிடித்துப்போனது. காதலுக்கு மரியாதை படம் வந்து ஓடிக்கொண்டிருந்த சமயம் அது. பிரவீன் நடிகர் விஜய் போல கண்ணாடி போட்டுக்கொண்டான். ஒரு மாதிரி வாயை திறக்காமல் விஜய் போலவே என்னிடம் பேசிக்காட்டுவான். நான் சிரிப்பேன். அன்று டியூசனில் நானும் அவனும் பக்கத்தில் உட்கார்ந்திருந்தோம். அப்பொழுது தான் அவள் உள்ளே வந்து எங்கள் எதிரே அமர்ந்தாள். நீல நிற சுடிதார், ரெட்டை ஜடை,வடிவான தோற்றம்.பிரவீன் அதற்குள் அவளை சாலினியாகவும் தன்னை விஜயாகவும் பாவித்து
கற்பனைக்குள் போய்விட்டான்.
"யாருடா அது..." என் காதை கடித்தான்.
" டெய்லி டியூசன் வந்தா தெரியும். நம்ம இங்க கௌரவ தோற்றம் தான கொடுக்குறோம்.."
பக்கத்து பட்சிகளை விசாரித்ததில் அவள் ஊருக்கு புதுசு. அப்பாவுக்கு ஸ்டேட் பேங்க் வேலை. பேர் வசுந்தரா. பத்தாம் வகுப்பு என தகவல் கிடைத்தது. பிரவீனும் பத்தாவது படித்துக்கொண்டிருந்தான். அன்றிலிருந்து அவன் என்னை விட வேகமாக டியூசன் போக ஆரம்பித்தான். கண்ணாடி முன் அரைமணி நேரம் நின்று தாறுமாறாய் தலைசீவினான். எனக்கு கொஞ்சம் எரிச்சலாய் இருந்தது. போயும் போய் ஒரு பெண்ணுக்காகவா இவ்வளவு மெனக்கெடல். அந்த காலங்களில் பெண்ணை விட எனக்கு கிரிக்கெட் பேட் கவர்ச்சியாய் தெரிந்தது.
"பிரவீன் ரொம்ப ஓவர். போனவாரம் மேட்ச்சுக்கு கூட வரல. அந்த முட்டக்கண்ணி உன் கூட பேசக்கூட மாட்றா.."
" நீ சின்ன பையன் உனக்கு இதெல்லாம் தெரியாது.. அதிகம் பேசாதே.."
ரெண்டு நாள் பேசாமல் இருந்தோம். பிற்பாடு அவனே வந்து பேசினான். அன்று அவன் அவளிடம் பேசப்போவதாகவும், என்னைக்கூட துணைக்கு வரவேண்டும் எனவும் அழைத்தான். பெரியவர்கள் விஷயத்தை தெரிந்த கொள்வதில் இருக்கும் இயற்கையான ஆசை எனக்கும் வந்தது. சரியென்றேன். மாட்டினால் கூட அப்ரூவராகி விடலாம் என முடிவு செய்தேன். ரெண்டு பேரும் சைக்களில் டியூசன் முடிந்ததும் அவளை விரட்டிப்போனோம். எனக்கு பட படவென இருந்தது. முதல் முதலாய் ஒரு காதல் காட்சியை நேரில் பார்க்கப் போகிறேன். பிரவீனும் எதோ முனுமுனுத்துக்கொண்டே வண்டியை ஓட்டினான். வண்டி முட்டக்கன்னியை நெருங்கிவிட்டது. எனக்கே இப்படி படபடனு இருக்கே இந்த காதல் பண்றவைங்கெல்லாம் ஹார்ட் அட்டாக் வந்து செத்துற மாட்டாய்ங்களா என நினைத்துக்கொண்டேன். வண்டி அவள் குறுக்கே போய் நின்றுவிட்டது.
பிரவீன் அவளை நேரே பார்த்து "ஏங்க உங்க ஜாமிட்ரி நோட்ட தரீங்களா...நான் நாளைக்கு தரேன் ப்ளீஸ்..."
அவள் தன் முட்டைக்கண்ணை உருட்டி அவனை ஒருமுறை பார்த்தாள். பிரவீனின் மூஞ்சை எந்த ஆங்கிளில் பார்த்தாலும் படிக்கிற பையன் மாதிரி தெரியமாட்டான். ஆகையால் தரமாட்டாள் என்று தான் நினைத்தேன். ஆனால் நோட்டைக் கொடுத்துவிட்டாள். பிரவீனும் பெருமாள் கோவில் பிரசாதம் வாங்குவதை போல் அதை பவ்யமாய் வாங்கிக்கொண்டான். மூன்றுமுறை தேங்க்ஸ் சொல்லிவிட்டான்.திரும்பவும் வண்டியை கிளப்பினோம்.
"டேய் சோத்து மூட்டை திரும்பிப்பாருடா...இன்னும் பாக்குராளா"
பார்த்தேன். அவள் வெறித்து எங்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
"ஆமாடா..எதோ செயின அத்துட்டு வந்த மாதிரி "ஆ"னு பாக்குறா.."
---- தொடரும்
கருத்துகள்