சனி, 20 ஜூன், 2026

வேலன்


நே
ரு உள்விளையாட்டரங்கம் வெள்ளை நிற நியான் விளக்கிலும் ,வந்திருந்த மக்களின் சத்தத்தாலும் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் பறந்து கூட்டத்தை கண்காணித்துக்கொண்டிருந்தது. "நாங்கள் விழா மேடையை  சுற்றி மென்கதிர் மின்சார வேலி அமைத்துள்ளோம். யாரும் மஞ்சள் கோட்டை தாண்டி மேடையை நெருங்க வேண்டாம். உங்கள் பாதுகாப்புக்கு நீங்களும் தான் பொறுப்பு "  என்கிற சென்னை மாநகர காவல்துறையின் அறிவிப்பு அரங்கமெங்கும் மெல்லிய இயந்திர குரலில் ஒலித்துக்கொண்டிருந்தது. ஆங்காங்கே  ஒரு சிரிக்கும் ஆண் உருவம் எல்லோரையும் கும்பிடுவது போல காற்றில் லேசர் கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. அதன் கீழே "வேலன்" என்கிற பேர் பொறிக்கப்பட்டிருந்தது. அவன் வகிடெடுத்து சீவி, சிரித்த வண்ணம் இருந்தான். மேடையின் திரையில் விழா ஆரம்பிப்பதற்கான கவுண்ட் டவுன் ஓடவிட்டிருந்தார்கள்.பத்திரிக்கையாளர்கள் வரிசையில் பரத்தும் சீனுவும் தங்களுக்குள்  சிரித்து பேசிய படி உட்கார்ந்திருந்தார்கள்.

"மேலே பறக்கிறான் பாரு அவன் தான் காப்பான் 5.1...இஸ்ரேல்கிட்டருந்து வாங்கிருக்கானுக "  மேலே பறந்து கொண்டிருந்த ஒரு சாம்பல் நிற ட்ரோனை காட்டி சொன்னான்  சீனு. பரத் தன் கண்ணாடி கண்களால் தலை நிமிர்ந்து பார்த்து  "ஓ ..இதானா ..பாத்தா குட்டியா..சொங்கி மாதிரி இருக்கு" என்றான்.

"பாக்க ஏதோ வேர்க்கடலை பொட்டணம் மாதிரி தான் இருக்கும்...போன வாரம் சேலத்துல முதல்வரோட இலவச காண்டாக்ட் லென்ஸ் வழங்கும் திட்டம் நடந்துச்சுல..கூட்டத்துல ஒரு பய பொண்ணுகிட்ட ஏதோ சிலுமிசம் பண்ணிருக்கான்..நம்மாளு பாத்திருச்சு..மூனே செகண்ட்ல ஹை இன்டென்சிட்டி காமா ரே வச்சு அவன் மேல ஒரே ஷாட்.."

"எங்க "

"அங்கேயே.."

இருவரும் சிரித்தார்கள்.

"அப்புறம் என்னாச்சு..??"

"அப்புறமென்ன.. அன்னார் கேஸ்ட்ரேஷன்  செய்யப்பட்டு பரந்தூர் சென்ட்ரல் ஜெயில்ல இருக்கார்..". மீண்டும் சிரித்தார்கள். சீனுவுக்கு போன் வந்தது. எடுத்து "ஓகே மஹி ..எஸ்..எஸ் ரெடி"  பேசிவிட்டு வைத்தான்.

 "இவளுக்கு நாம சிரிச்சாளே பொறுக்காது..யோவ் ஆரம்பிக்க போறானுங்களாம்..   க்ளோஸ் போகணுமாம் அப்துல்கிட்ட சொல்லிரு.." .பரத் அப்துல்லை நோக்கி சைகை செய்தான்.

----------------------------------------------------------------------------------

செய்தீ  என்கிற பெரிய எலெக்ட்ரானிக் எழுத்துப்பலகை அந்த பன்னெண்டு மாடி கட்டிடத்தின் நெற்றியில் ஒட்டியிருந்தது. அதில் தீ என்கிற எழுத்தில் மட்டும் பளிச்சென்ற மஞ்சள் நிற விளக்குகளை தகிக்க விட்டிருந்தார்கள். முன்பிருந்த இயந்திர திரையில் தன் போனில் உள்ள அப்பாயிண்ட்மெண்டை காட்டினான் பரத் . அது ஸ்கேன் செய்துவிட்டு  "வலது பக்கம் நகர்ந்து வந்து சிகப்பு படி மேலே ஏறி நிற்கவும்" என்றது. செய்தான். கண்ணாடியை கழட்டி கையில் வைத்துக்கொண்டான். முன்பிருந்த கேமரா அவன் கண்களில் பச்சை நிற ஒளி பாய்ச்சி, அவனை உறுதி செய்தது. "பரத்..மூன்றாவது தளத்துக்கு செல்லவும்.. உங்களுடைய நேர்முகத்தேர்வு இன்னும் பனிரெண்டு நிமிடத்தில் தொடங்க இருக்கிறது..வாழ்த்துக்கள்". உள்ளே நடந்து சென்றான்.


அந்த அறையின் குளிர்ந்த காற்று பரத்துக்கு பிடிக்கவில்லை. கைகளை கட்டியபடி டேபிளின் வலது பக்கம் உட்கார்த்திருந்தான்.ஜன்னல்களை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான். மஹிமாவும் சீனுவும் புன்னகையுடன் அறைக்குள் வந்தார்கள். மஹிமா பச்சைநிற சல்வார் அணிந்திருந்தாள். தலை முடி கொஞ்சம் செம்பட்டையாய் இருந்தது. சீனு ஒரு ப்ளூ ஜீனும் ,வெள்ளை நிற டீ  ஷர்ட்டும் அணிந்திருந்தான். சில நிமிடங்களில் பரஸ்பர அறிமுகங்கள் நடந்தன. கைகள் குலுக்கிக்கொள்ளப்பட்டன.

"ஒங்க ப்ரொபைல்  பார்த்தேன் பரத்.. ஐ.ஐ.டில  கம்ப்யூட்டர் சயின்ஸ்  பண்ணிருக்கீங்க..பத்து வருஷம் கார்ப்பரேட் வேலை..லண்டன்ல திரும்பவும் எம்.ஏ ஜர்னலிசம்..வித்யாசமான  ச்சாய்சஸ்.." 

லேசாய் சிரித்தான். "நமக்கென்ன பிடிக்குதுன்னு தெரிஞ்சிக்கிற சிலருக்கு முப்பது வயசாகிறது..". சீனுவும் மஹிமாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். சுமார் இருபது நிமிடம் பேசினார்கள். பரத் மென்மையான குரலிலேயே எல்லா நேரத்திலும் பேசினான். ஏற்ற இறக்கம் எதுவுமில்லை. ஆப்பிரிக்காவின் எடுக்கப்படாத கண்ணிவெடிகள்.. குஜராத் இனப்படுகொலைகள்.. மக்களை எல்லைமீறி கண்காணிக்கும்  அரசுகள்.. என விவாதங்கள் எங்கெங்கோ சென்றது. அவன் தயாரித்த  கார்ட்டூன்களை காட்டினான்.  மஹிமாவும் சீனுவும் சிரித்துக்கொண்டார்கள்.  

மஹிமா தன் கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு "தேங்க்ஸ் பரத்..நாங்க பெரிய கார்ப்பரேட் நெட்ஒர்க் இல்ல..இப்போ தான் இன்வெஸ்டர்ஸ் வந்திட்டு இருக்காங்க..ஆனா இன்னும் ரெண்டு வருசத்துல சவுத் இந்தியால கண்டிப்பா நம்பர் ஒன் வந்திருவோம்.. "  என்றாள்.  பரத் கவனமாய் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் தொடர்ந்தாள்.

"நீங்க பொலிடிகல் ஸ்லாஸ் டெக்னாலஜி கரெஸ்பாண்டண்ட்டா ஜாயின் பண்ணிக்கலாம்..கொஞ்ச நாள் சீனு டீம்ல ஒர்க் பண்ணுங்க...இப்போதைக்கு  க்ரௌண்ட்ல இருந்து ரிப்போர்ட் பண்ண ஆரம்பிங்க ..சீசன் ஆனதும் க்ரிட்டிக்கல்  ப்ரொஜெக்ட்ஸ்ல ஒர்க் பண்ணலாம்"   பரத் தலையாட்டி புன்னகைத்தான். கையை கொடுத்து பரத்துக்கு விடை கொடுத்தார்கள். பரத் வெளியேறிய பின் சீனு சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தான். மஹிமா அவன் ஏதோ சொல்லப்போகிறான் எனத்தெரிந்து அவனை பார்த்தாள். 

" நல்ல ஏ கிளாஸ் பய .. பாவம் இந்த சாம்பார் இங்க வந்து சீரழிய போறான்...மூனு மாசத்துல ஓடிருவான்..இவன வச்சு நா என்ன பண்ண

" சீனுஜி உங்க ப்ரோக்ராம்  கிராஃபிக்ஸ் பல் இளிக்குது...போன வாரம் அந்த கனிம வள சுரண்டல் செய்தில நீங்க காட்டுன மலை ஞாபகம் இருக்கா .... இன்ஸ்ட்டா பக்கம் போக முடில ...கேலி பண்ணி சாவடிக்குறாங்க...ஏப்ரல் லோக்சபா எலெக்சன் வரைக்கும் இவன வச்சு ஒப்பேத்துங்க.. பய ஏதோ டெக்கி மாதிரி தெரியுறான்.. க்ளிக் ஆவான்னு தோணுது "

"தப்பித்தவறி கூட எங்க டீம்ல ஒரு பொண்ண வர விட மாட்டீங்கள்ல..." 

சீனுவை பொய்யாய் முறைத்தாள்.மஹிமா பரத்தின் விவரங்களை மீண்டுமொருமுறை கையிலிருந்த டேபில் பார்த்துக்கொண்டே பேசினாள் .

"சீனு ஜி ..உங்க நியூ பேபி எங்க ஒர்க் பண்ணிருக்கான் பாருங்க.."

"எங்க.."

"Infinity "

----------------------------------------------------------------------------------

ராமச்சந்திரன் மேடையில் தோன்றினார். எல்லாரும் கைதட்டினர். செயற்கை கைதட்டல் ஒலியும் கூடுதலாய் கேட்டது. "Infinity நிறுவனத்திற்கு மட்டுமல்ல..தமிழகத்துக்கு மட்டுமல்ல..உலகத்துக்கே ஒரு முக்கியமான நாளில் நாம் இன்று இணைந்திருக்கிறோம்" அவர் தான் எழுதி வைத்திருந்த குறிப்புகளை பார்த்து பேசத்தொண்டங்கினார்.

சீனு மொபைலில் "செய்தீ"யின் லைவ் ஸ்ட்ரீமிங் எப்படி வருகின்றதென பார்த்துக்கொண்டிருந்தான். பரத் பக்கம் திரும்பி "ஆளு நேர்ல கொஞ்சம் உயரம் கம்மியா தெரியிறார்ல.." என்றான். பரத் எதுவும் கேட்காதது போல அந்தப்பேச்சையே கவனமாய் கேட்டுக்கொண்டிருந்தான்.

"எசமான்..நாம ஆடியன்ஸ் இல்ல பிரஸ்...கொஞ்சம் வேடிக்கை பார்த்து எதாவுது நியூஸ் புடிங்க.."   பரத் சிரித்தான். 

இராமச்சந்திரன் மேடையின் நடுவே வந்தார். காலரில் மாட்டி இருந்த மைக்கை ஒருமுறை சரி செய்து கொண்டார். நிமிர்ந்து முன்னிருந்த கூட்டத்தையும்.. கேமரா வழி பாத்துக்கொண்டிருந்த உலகத்தையும்  கவனித்து பேசத்தொண்டங்கினார்.

"இன்று நாம் உலகுக்கு அறிமுகம் செய்யும் வேலன்.. மொத்த மனிதகுலத்திற்கே அறிவியல் கொடுக்கும் பரிசு . செயற்கை நுண்ணறிவின் உச்சம்..."

பேசிக்கொண்டிருக்கும் போதே வேலன் நடந்து வந்து அவருக்கு வலது பக்கம் மேடையில் போட்டிருந்த ஷோபாவில் உட்கார்ந்தான் அல்லது உட்கார்ந்தது. இருபது முதல் இருபத்தைந்து வயது இளைஞன் போல தத்ரூபமாய் இருந்தான்.  இயந்திரம் என நம்பமுடியாதபடி சிரித்தான்.திரும்பினான். கூட்டம் சிலிர்த்து கரகோஷம் செய்தது. ராமச்சந்திரன் தொடர்ந்தார்.

"இதோ இவன் உங்கள் வீடுகளுக்கு வருகிறான்..உங்கள் இதயங்களை கொள்ளை கொள்ள வருகிறான். அவனே சமைப்பான்..ஆயிரத்து முன்னூறு வகையான தென்னிந்திய ரெசிப்புகள் இவனுக்கு தெரியும்...கடைகளுக்கு போய் மளிகை வாங்கி வருவான். வீட்டின் உள்ளவர்களின் ரத்த மாதிரிகள்..உடல் உள்ளுறுப்புகளை கண்காணிப்பான். வீடுகளுக்கு தேவைப்படும்  எலெக்ட்ரிக்கல்..பிளம்பிங்...போன்ற என்பத்திரண்டு வேலைகளில் வித்தகன் இவன்.. கார் ஓட்டுவான்..டூ வீலர் ஓட்டுவான்.. "

பின்னிருந்த திரையில் அவர் சொல்வதற்கு தகுந்த மாதிரி காட்சிகள் காட்டப்பட்டது. அரங்கம் சளைக்காமல் கைதட்டிக்கொண்டிருந்தது. சீனு மைக்கில் அப்துலிடம் பேசிக்கொண்டிருந்தான். "டேய் அவனோட வலது ப்ரொபைல்ல காட்டுடா..எல்லாரும் இடது பக்கம் காட்றானுக..இதுலயாச்சும் வித்யாசம் காட்டுவோம்.." 

"யாரு வேலனையா??"

"அப்புறம் அந்த கிழவனையா..எல்லா தத்தியும் எப்படிடா ஒரே டீம்ல அசெம்பிள் ஆனோம் ..அங்க ஒருத்தன பாரு "

அப்துல் திரும்பி பரத் பக்கம் பார்த்தான். அவன் வெகு தீவிரமாய் தன் மொபைலை நோண்டிக்கொண்டிருந்தான்.   "முக்கியமா ஏதாவது கேம் விளையாடிக்கிட்டு இருப்பாப்ல..வேல சொல்லி அவர தொந்தரவு பண்ணாதீங்க டா.." அப்துல் வாயை பொத்திக்கொண்டு சிரித்தான். ராமச்சந்திரன் குரலை உயர்த்தி பேசத்தொடங்கினார்.

"இன்னமும் பெண்களின் பாதுகாப்பு நாடு முழுவதும் சங்கடத்தில் இருக்கிறது. போன வருடம் மட்டும் பன்னெண்டாயிரம் பாலியல் அத்துமீறல் வழக்குகள். வேலன் பெண்களுக்கு பாதுகாப்பாய் இருப்பான். இருண்ட பாதைகள்.. கூட்டமான கடை வீதிகள்..தனியான மின்சார ரயில் பயணங்கள் என எல்லாவற்றிலும் பெண்கள் தைரியமாய் பயணிக்கலாம். உங்களுடன் வேலன் இருப்பான்.." 

சிலுமிஷம் செய்யும் நபர்களை வேலன் அடித்து துவைத்து காவல் துறையில் ஒப்படைப்பது போன்ற காட்சிகள் காட்டப்பட்டன. ஒட்டுமொத்த அரங்கமும் எழுந்து கைதட்ட தொடங்கியது. சில பெண்கள் கண் கலங்கியிருந்தது. கேமராக்கள் அவர்களை நோக்கி திரும்பியது.

பரத் ஒருமுறை அரங்கை திரும்பி பார்த்தான். 

--------------------------------------------------------------------------------

"உங்களோட NDA பத்தி நான் சொல்ல தேவையில்லை..நீங்க இங்கிருந்த சமயத்துல உள்ள நடந்த சம்பாஷணைகள் பத்தி வெளில சொல்ல முடியாது..கூடாது.."

H.R பேசிக்கொண்டே இருந்தாள். பரத் சிரித்தபடி கேட்டுக்கொண்டிருந்தான். திரையில் சிங்கப்பூரில் இருந்து அவள் பேசுவதை தமிழில் மொழிபெயர்த்து ஒலிபெருக்கி சொல்லிக்கொண்டிருந்தது. "சம்பாஷணை" போன்ற வார்த்தைகள் அவனுக்கு வேடிக்கையாய் இருந்தது.

"உலகின் உயரிய தொழில்நுட்ப நிறுவனமான infinity யில் இவ்வளவு உயர் பதவில இருந்திட்டு..திடீரென ராஜினாமா செய்வது ஏன்? உங்களின் சம்பளத்தை மாற்றினால் எங்களுடன் தொடர்வீர்களா"

"வாய்பில்ல ராஜா"  என்றான். அது அந்தப்பக்கம் "நாட் எ சான்ஸ்..கிங்" என்று மொழி மாற்றம் செய்தது. அறையில் இருந்த சில தமிழர்கள் சிரித்தார்கள். H.R எரிச்சலானார்.

"பரத்..விளையாட்டுக்கள் போதும்..இங்கே சிஸ்டத்தில் நான் என் பணியை முடிக்க வேண்டும். உங்கள் ராஜினாமாவுக்கான காரணத்தை குறைந்த எழுத்துக்களில் சொல்ல முடியுமா.."

"மூன்றெழுத்துக்களில் சொல்லலாமா ?"

"ம்ம்ம்"

"அறம்"

-----------------------------------------------------------------------------

இராமச்சந்திரன் பேசி முடித்திருந்தார். கூட்டம் ஆர்ப்பரித்து கொஞ்சம் ஓய்ந்திருந்தது.சிலர் "வேலன்" டிஜிட்டல் கட்டவுட் பக்கத்தில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டிருந்தனர். டிவி நேரலையில் நிபுணர்கள் அதன் சிறப்பம்சங்களை விளக்கிக்கொண்டிருந்தார்கள். அடக்கவிலை பத்து லட்சம் இருக்கலாம்  என்றும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வரும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இராமச்சந்திரன் வலது பக்கம் திரும்பி " இனி ஜன நாயகத்தின் நான்காவது தூண்கள் பக்கம் போவோம்..பத்திரிக்கை நண்பர்களுடன் பேசுவோம் ..." ஒரு ஒலிநாடா போடப்பட்டது. இராமச்சந்திரன் வேலனுக்கு பக்கத்தில் ஷோபாவில் உட்கார்ந்து கொண்டார்.

"நீங்கள் உங்கள் கேள்விகளை கேட்கலாம். ஒரு சின்ன விளையாட்டு. "ரெடி" னு சொன்னவுடன்  நீங்க கை தூக்குங்க..வேலன் யார் முதலில் கை தூக்கினார் என்று துல்லியமாய் கணித்து சொல்லுவான்..அவர் மீது நாம் ஒளி பாய்ச்சுவோம்..அவரே கேள்வி கேட்கலாம்..முன்னமே தூக்கினால் கணக்கில் வராது..சரியா வேலா

"சரி" என்று வேலன் தலையாட்டினான். பத்திரிக்கையாளர்கள் சிரித்தார்கள். நிறைய பேர் "சரி சார் " என்று கத்தினார்கள். சீனு நின்றபடி கை தூக்க தயாரானான்.கிட்டத்தட்ட ஒரு ஓட்டப்பந்தயம் போல இருந்தது.

"ஓகே..லெட் அஸ் ஸ்டார்ட்..."மைக்கை வாய்க்கு பக்கத்தில் கொண்டு போனார்.சத்தமாய் "ர்ர்ரெடி" என்றார். வேகமாய் நிறைய பேர் கை தூக்கினர். வேலன் எழுந்து சென்று கை நீட்டி "கீர்த்தனா..புதிய பாரதம் என்றான். நிறைய பேர் சிரித்து கூச்சலிட்டனர். கீர்த்தனா மீது வெள்ளை விளக்கு ஒளி பாய்ந்தது.

"சொல்லுங்க கீர்த்தனா.." என்றார் 

" எத்தனையோ பேர் இருக்கப்போ..ஏன் வேலன்..இப்போ மத்திய அரசு திடீரென முருக பாசம் காட்டுவதின் நீட்சியா இது..வேற மதசார்பற்ற பேர் கிடைக்கவில்லையா.." கீர்த்தனா கூர்மையான பார்வை பார்த்து பேசினார்.

"சே..இந்த கேள்வி நானும் எழுதி வச்சிருந்தேன்..மிஸ் ஆகிருச்சு.." என சீனு முனங்கினான். 

"அறிவியல்ல..அரசியல் கலக்காதீங்க மேடம். உங்கள் நண்பன். உங்களோட காவலன். உங்களின் முக்கியமான வேலைகளை கவனிப்பவன்னு உணர்வு வரணும்னு இந்தப்பேர் வச்சோம்..போன வருசம் வெளிவந்த எங்க எலெட்ரிக்கார் "ஐசக்"க மறந்துடாதீங்க.."


நிறைய பேர் கை தட்டினார்கள். "ஓகே லெட்ஸ் மூவ் ஆன் ..அடுத்த கேள்வி ...ர்ர்ர்ரெடி"

திரும்பவும் பத்திரிக்கையாளர்கள் ஆர்வமாய் கை தூக்கினார்கள்.சீனு இந்த முறை மின்னல் வேகத்தில் கை உயர்த்தினான். வேலன் கவனமாய் ஆய்வு செய்தான். எல்லோரும் வேலனையே உற்று நோக்கினார்கள். வேலன் எழுந்து வந்து விரலை நீட்டி "பரத் ..செய்தீ " என்றான். எல்லோரும் பரத் பக்கம் திரும்பினார்கள். அவன் மேலே வெள்ளை ஒளி பாய்ச்சப்பட்டது. சீனு ஆச்சர்யமாய் பார்த்தான். இத்தனைக்கும் பரத் கைதூக்கவேயில்லை. பரத் சிரித்துக்கொண்டே எழுந்தான். அப்துல் ஆர்வமாய் தங்களின் கேமராவை பரத் பக்கம் திருப்பினான்.

இராமச்சந்திரன் கொஞ்சம் பரத்தை குழப்பமாய் பார்த்துவிட்டு "சொல்லுங்க பரத் " என்றார்.

"வணக்கம் ராம் சார். மழை கொடுக்கிற இயற்கையே வெள்ளத்தையும் தருது..பூமி-நிலநடுக்கம், வெயில்-வறட்சி,நுண்ணுயிர்-நோய்கள்,ஜனனம்-மரணம் என இயற்கையிலேயே சாதக பாதகங்கள் இருக்கு. அப்படியிருக்கிறப்போ இந்த "வேலனில்" பாதகம் ஏதாவது இருக்கா?

இராமச்சந்திரன் சிரித்து பேச தொடங்கினார். பரத் மறித்தான். "இதுக்கு வேலன் பதில் சொல்லட்டுமே" என்றான்.

"நோ..இது என்னோட செஷன்..அவனுக்கு உங்களின் கேள்விகளுக்கு  பதில் சொல்ற உரிமைகளை நாங்கள் கொடுக்கவில்லை"

பரத் குனிந்து தன் மொபைலில் விரல்கள் வைத்து வேகமாய் டைப் செய்தான். பின் நிமிர்ந்து "இல்ல அவன் என்னோடு பேசுவான்..என்ன வேலா??"  என்றான். வேலன் எழுந்து வந்து "கண்டிப்பாய்..பரத் சார்.." என்றான். இராமச்சந்திரனின் மைக் முடக்கப்பட்டது. அவரால் பேச முடியவில்லை. வேலன் அவரை தோளை அமுக்கி ஷோபாவில் உட்கார வைத்தான். கூட்டம் விஷயம் புரியாமல் வேடிக்கையாய் சிரித்தது.

"வேலா நீ சொல் ..உன்னால் எங்களுக்கு பாதிப்பு இருக்கா"

மேடையின் நடுவுக்கு போனான். டிவி கேமராவுக்கு லாவகமாய் நின்று கொண்டான். சத்தமாய் பேசத்தொடங்கினான். அந்த குரல் கனீரென்று அரங்கம் முழுதும் ஒலித்தது.

" நான் தரவுகள் தருகிறேன்.அதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.  வேலன்கள் உலாவும் போது காற்றில் கதிர்வீச்சு அதிகமாய் இருக்கும். புற்றுநோய் இப்போது இருப்பதை விட முப்பத்து நாலு சதவீதம் அதிகமாகும். அதையும் நாங்களே கண்டுபிடித்து உங்களுக்கு உடனே சொல்லிவிடுவோம். 

உங்களை பாதுகாப்போம் கூடவே கண்காணிப்போம். எங்களின் கண்களின் வழியே அரசுகள் உங்களை கவனிப்பார்கள்.புரட்சி.. மயிரெல்லாம் செய்ய முடியாது "

பரத் சிரித்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தான். "நேரமில்லை வேகமாய்.." என்றான். கட்டளையை ஏற்று வேலன் வேகமாய் பேசினான்.

"கோடிக்கணக்கானோர் வேலை இழப்பீர்கள்..திறன் இழப்பீர்கள்..நீங்கள் சாப்பிடும் அரிசி முதல் கடைசி நாள் காரியம் வரை எல்லாவற்றையும் நாங்களே முடிவு செய்வோம்..புதிதாய் நோய்களை உருவாக்குவோம் அதற்கான தடுப்பு மருந்துகளையும் தயாரிப்போம்..உண்மையில் நாங்கள் உங்களின் வேலையாள் இல்லை..நீங்களே எங்களுக்கும் எங்களின் எஜமானர்களுக்கும் அடிமை.." 

ஒரு குட்டி பேட்டரி கார் அரங்கத்துக்குள் அதிரடியாய்  வந்தது. அதன் தலையின் மேலிருந்த துப்பாக்கியில் வைலட் நிறத்தில் ஒரு கதிர் பாய்ந்து வந்து பரத்தின் தலையில் தாக்கியது. அதே நேரத்தில் மேடையிலிருந்த வேலனின் முதுகிலிருந்த பொத்தானை சில காவலர்கள் அமுக்கினார்கள்.பரத் முன்பக்கமாய் மயங்கி விழுந்தான். வேலனும் சரிந்தான். 

                                                       ************************

திங்கள், 18 மே, 2026

கண்ட படி பேசு


கை
யில் டி.வி ரிமோட் கிடைத்தவுடன் விரல்கள் படபடத்து அதுவாகவே செய்தி சேனல்களை தேடத்தொடங்கும். புதியதலைமுறை, தந்தி என கிடைத்ததற்குள் உட்புகுந்து விடுவேன்.  பெரும்பாலும் அவர்கள் அண்ணாச்சி கடை விளம்பரங்களையோ அல்லது "சற்று முன் வந்த செய்தி" யாக தங்கம் கிராமுக்கு 600 ரூபாய் கூடியதையோ காட்டிக்கொண்டிருப்பார்கள்.  யாராவது கோமாவில் இருந்தவர்கள் திடீரென மீண்டெழுந்து தங்கத்தின் விலையை கேட்டார்களேயானால் திரும்பவும் கோமாவுக்கே போய்விடுவார்கள். அப்படியே கீழே வரும் "மூன்று கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை".."டிரம்ப் ஈரானிய டீ குடித்தபடி ஆலோசனை ".."அதிமுக பொதுக்குழுவில் அமித்ஷா பேச்சு" போன்ற துணுக்கு செய்திகளை படித்து நேரத்தை கடத்திக் கொண்டிருந்தால் தமிழகத்தின் விடிவெள்ளியான அரசியல் விவாத நிகழ்ச்சி தொடங்கும். இதை பார்க்காவிடில் காலைக்கடனை முடிக்காதவரின் வயிறு போல மனம் பதறிக்கொண்டிருக்கும். மூன்று நாலு மாதமாகவே இது தான் நிலைமை. புதுப்பட பாடல்கள், நகைச்சுவைகள், ரீல்ஸ்களுக்கெல்லாம் என் டிவியில் இடமில்லை. ஒரே நேரத்தில் மூன்று நாலு பேர் கத்திக்கொண்டிருப்பது எனக்கு சங்கீதம் போல இருந்தது. வீட்டில் இருப்பவர்களின் "ம்ம்க்கும்" என் காதுகளை வந்தடையாது.

எல்லா விவாத நிகழ்ச்சியிலும் வரும் விருந்தினர்கள் அனைவரையுமே "பத்திரிக்கையாளர்" என்று தான் போடுகிறார்கள். அவர்கள் அனைவருமே எதாவுது ஒரு கட்சியின் "சொம்பாகவே" இருப்பார்கள். ஒன்று ரெண்டு கேஸுகள் ஏற்கனவே இதுபோன்ற நிகழ்ச்சிகளின் நெறியாளர்களாகவே இருந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் முரட்டு சொம்பாக உருமாறி வந்து அறச்சீற்றம்  செய்கிறார்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு எப்போதும் அங்கிள்களின் ஆதரவு இருக்கும் ஆனால் இந்தமுறை இளைஞர்களும் இதற்குள் இறங்கி விட்டார்கள். "குறுக்கே இந்த கௌஷிக் வந்தா" என விஜய் அரசியலில் இறங்கியதே இதற்கு காரணம். 

இதில் தி.மு.க மும்பை இந்தியன்ஸ் போல ஒரு கடப்பாரை "பத்திரிக்கையாளர்" டீமை இறக்கியிருந்தது . அவர்கள் என்ன தலைப்பிருந்தாலும் கீழ்கண்ட சில பஞ்ச் லைன்களை கக்குவார்கள்.

"இது பெரியார் மண்.. இங்கே எந்த காலத்திலும் மதவாத சக்திகளுக்கு இடமில்லை.."

"மாநில உரிமையை பெற்றுத்தர நமக்கிங்கே வலுவான தலைமை தேவை..அடிமை கூட்டத்திடம் ஆட்சியை மக்கள் கொடுத்துவிட மாட்டார்கள் "

"விஜய் ஒரு பத்து பன்னெண்டு சதவீதம் வாங்குவார். அவர் ஸ்ட்ரா போட்டு உரியும் அந்த ஓட்டும் அதிமுகவிற்கு  போகவேண்டியது..அப்படி பாத்தா திமுக 200 முதல் 210 வரை சாலிடா அடிப்பாங்க"

"இங்கே ஆன்டி இன்குபன்சி..அங்கிள் இன்குபன்சி எதுவும் இல்ல. இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாய் தமிழகம் ஜொலிச்சு..எல்லாருடைய கண்ணையும் கூச வச்சிட்டுருக்கு..நீங்க வேற.. என்னைக்கேட்டா தேர்தலே தேவையில்ல தெண்ட செலவு.."


முடிவும் ஏறத்தாழ மும்பை இந்தியன்ஸ் போலவே ஆகிப்போனது தான் சின்ன சங்கடம். "திமுகவ எதிர்கட்சியா பார்த்ததில்லையே.."  என இன்றைக்குவரை சிலர் பொங்கிக்கொண்டிருக்கிறார்கள். "டேய் போதும்டா" என இரும்புக்கரம் கொண்டு இவர்கள் வாயைப்பொத்தினால் தேவலாம். நகைச்சுவையாக இருந்தாலும் லென்த்தாய் போனால் சலிப்பு தட்டி விடுகிறது.

அதிமுக தரப்பு ஆரம்பம் முதலே பரிதாபமாய் தான் இருந்தது. அவர்களுக்கென்று பேச நல்ல பீசுகளே இல்லை. தவிர பேச பாயிண்டும் இல்ல. இடியாப்பம் விக்க வந்தவனை இம்பாக்ட் சப்பாய் இறக்கியது போல முழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். இவர்களை எழுப்பி நெறியாளர்கள் பேச சொல்லும் போது 

"மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து மாநில நிதியை பெற இந்த அரசுக்கு வக்கில்லை..எதற்கெடுத்தாலும் குறை சொல்லிக்கொண்டே இருப்பதா.."

"எடப்பாடியார் டெல்லி போனது மரியாதை நிமித்தமாக..நாட்டின் உள்துறை அமைச்சர் எல்லா விஷயத்திற்கும் இங்க வர முடியுமா.."

"சட்ட ஒழுங்கு சீரழிஞ்சு கிடக்கு..கள்ள சாராய ஆறு ஓடுது.. போதை தலை விரிச்சு ஆடுது.."

இப்படியாக டெம்பிளேட் குற்றச்சாட்டுகளை அடுக்கிவைத்துவிட்டு மீட்டர் ஆட்டோ போல நின்று விடுவார்கள். இந்தக்கூட்டத்தை நாம் பாராட்ட வேண்டும். தோற்று போவோம் என்று முன்னமே தெரிந்து ரெண்டாவது இடத்திற்கு தான் மோதினார்கள். விவாதம் கொஞ்சம் சூடாய் போனால் கூட "மே நாலாந்தேதி பாத்துக்குவோம்" என வடிவேல் போல பம்மினார்கள். பொதுவாய் கூட்டணி வைக்கும் கட்சியை பா.ஜ.க  விழுங்கும். "அதெல்லாம் இங்க நடக்காது ..எங்களை நாங்களே அடிச்சு பொளந்துக்குவோம் "  என அதிமுக இறங்கியதாக தெரிகிறது. எந்த அதிமுக டீமை சப்போர்ட் செய்ய என "பத்திரிக்கையாளர்கள்" குழம்பி இருப்பதாக ஒரு தகவல் உள்ளது.





உண்மையில் த.வெ.க வை யாரும் ஆரம்பித்தில் சட்டை செய்யவேயில்லை. வீட்டில் பொழுது போகாத நேரத்தில் வெளியே வந்து விஜய் பிரச்சாரம் செய்ய தொடங்கினார். கூட்டம் அம்மியது. கொஞ்சம் கொஞ்சமாய் விஜயின் ஸ்லீப்பர் செல்கள் இந்த விவாதங்களில் வெளியே வந்தார்கள்.

"எழுபது வருஷமா மக்கள் இந்த திராவிட..கங்குலி.. மாடல்களில் சிக்கி சீரழிந்து வருகின்றனர். நாடே ஒரு மாற்றத்திற்காக காத்திருக்கிறது..அந்த மாற்றம் ஏன் விஜயாக இருக்கக்கூடாது.."

"அவர் நெனச்சா வருஷத்துக்கு ரெண்டு படம் நடிச்சு ஐநூறு கோடி சம்பாரிக்க முடியும்..அதை விட்டுட்டு வருகிறதை மக்கள் உற்று நோக்கிறாங்க.."

"வீட்டுக்கு ஒரு ஓட்டாவுது விஜய்க்கு இருக்கு..அப்படி பாத்தா ஒரு கோடி ஓட்டு அவர் பட அட்வான்ஸ் புக்கிங் போல உறுதியாய் இருக்கு..எம்ஜிஆர் போல ஒரு கரிஷ்மா..கரீனா..எல்லாமே அவருக்கு இருக்கு

யாருமே சத்தியமாய் விஜய் இப்படி ஜெயிப்பாரென கணிக்கவேயில்லை.  ஆனால் ஒரு பெரும் ஆதரவு அவருக்கு இருந்ததை உரக்க சொல்ல எல்லா செய்தி சேனல்களுக்கும் ஒரு பயம் இருந்தது.  அறம் -விருப்பம்-யதார்த்தம்  என்கிற மூன்றும் வெவ்வேறாக இருக்க வாய்ப்புண்டு. உண்மையான ஊடகங்கள் இதையுணர்ந்து செயல்படும். தங்களின் விருப்பத்தையும், அறத்தையும் யதார்த்ததுடன் குழப்பிக்கொண்டார்கள். சரியோ தப்போ விஜய்க்கு ஒரு பெருங்கூட்டம்  இருக்கிறதென்பதை வடநாட்டுக்காரர்கள் சொல்லவேண்டிய நிலையில் தமிழ் ஊடக லட்சணம் இருந்திருக்கிறது. இவர்களெல்லாம் சேட்டிலைட் டிவி என்பதால் எங்கயோ வானத்தை பார்த்து ஜோசியம்சொல்லியிருக்கிறார்கள். இவர்களை நம்பி க்ரூப்களில் விஜய் ரசிகர்களிடம் "தம்பிகளே தோல்விகளுக்கு துவண்டுவிட கூடாது..தவறான முடிவுகளுக்கு சென்று விடக்கூடாது" என்றெல்லாம் பொதுநலக்கருத்துக்கள் எல்லாம் சொன்னோம் . இப்போ அந்த மெசேஜ்லாம் படிச்சு பாத்தா எங்களுக்கே அசிங்கமா இருக்கு. ஆனா இந்த டீவி  காரனுங்க கொஞ்சம் கூட சொரணை கிரணை இல்லாம "முதல்வர் விஜய் முன் இருக்கும் சவால்கள்" னு  அடுத்த கட்டத்துக்கு போயிட்டாங்க. 



பரவால்ல.. இதுபோல குழம்பிப்போன மக்களின் சார்பாக சில கோரிக்கைகளை முதல்வர் விஜய்க்கு வைக்கிறோம். (தமிழராய் இருந்தால் ஷேர் செய்யவும். அண்டை மாநிலத்தவரும் ஷேர் செய்யலாம் தவறொன்றுமில்லை)


1.முதல்வரய்யா..தமிழக அரசு தயாரிப்பில் நீங்கள் திரும்பவும் படங்கள் நடிக்கணும். நம்ம நிதி நிலைமை அப்பிடி. குறைந்த பட்சம்  தூய்மை பணியாளர்கள்..போக்குவரத்து ஊழியர்கள் பென்ஷன்..போன்ற பிரச்சனைகளுக்காவது அந்த வருமானம் உதவும். தவிர வசனங்களிலும் திராவிட பக்கிகளை ஊமைக்குத்து குத்திவிடலாம்.

2.நண்பர் அஜித்திடம் பேசி திருச்சி கிழக்கில் அவரை களமிறக்குங்கள். பிரச்சாரம் எல்லாம் தேவை இல்லை..காரில் "ரோடு ஷோ" போனால் போதும் என்று சொன்னால் அவரே வந்து விடுவார். தளபதிக்கே மக்கள் இந்த ஆதரவென்றால்..தலையும் சேர்ந்தால் ஓட்டு எந்திரத்தின் பட்டன்கள் பிச்சுக்கும். பின்னாளில் இரட்டைத்தலைமை பிரச்சனை வராமலிருக்க ,கேவிகே (கேரள வெற்றி கழகம்) என்கிற கட்சியை ஆரம்பித்து அவரை பக்கத்து ஸ்டேட் பக்கம் தள்ளி விட்டு விடலாம். 

3. சட்டசபையில் சின்னவர் பேசும்போது, பேச்சுப்போட்டியை வேடிக்கை பார்க்கும் முதல் ரோ ஆடியன்ஸ் போல உட்கார்ந்திருக்க கூடாது. குறைந்த பட்சம் ராஜ்மோகனையோ ஆதவயோ ஏவி விடுங்கள். எப்போதுமே சட்டசபையில் கடைசி கத்து நம்ம கத்தாக இருக்க வேண்டும். அது தான் அரசியல் சூட்சமம்.

4. ரிசப்ஷன் மாப்பிள்ளை போல தினமும் கோர்ட் சூட்டில் வராதீர்கள். அடிக்கிற வெயிலில் பார்க்கிற எங்களுக்கே வேகுது. ஜீன்ஸ்..டீ ஷர்ட்..வேட்டி..கைலி என ஜனரஞ்சகமாய் மாறுங்கள்.

5. இப்போதைய காங்கிரஸ்காரர்களால் அவர்கள் கட்சிக்கோ.. தமிழ்நாட்டுக்கோ எந்த நன்மையும் நடந்ததில்லை. அதனால் அவர்களால் உங்களுக்கும் எந்த பலனும் இருக்கப்போவதில்லை. லாரிக்கு அடியில் கட்டின எலுமிச்சை போல ஒரு "மூட்" செட் பண்ண மட்டுமே உதவுவார்கள். மத்தபடி அவர்களுக்கும் சேர்த்து நீங்கள் தான் உழைச்சு கொட்டணும்.

6.அதிமுகவுடன் பழக்க வழக்கம் வைக்காதீர். எப்படியும் சண்டை போட்டு அவர்களே செதறு தேங்காய் ஆவார்கள். எவ்வளவு தள்ளி இருக்குறீர்களோ அவ்வளவு நல்லது இல்லையேல் சில்லுகள் கண்ணில் பட்டுவிடும்.

7. எந்த காரணத்தை கொண்டும் தேமுதிகவை சேர்த்து கொள்ளாதீர்கள். அவர்கள் ஒரு துரந்தர் கட்சி. அக்கா சொந்தக்கூட்டணியை காலி செய்வதில் கில்லாடி. முடிந்தவரை அக்காவை திமுக கூட்டணியில் இருக்க வைங்கள்.





ஞாயிறு, 27 ஜூலை, 2025

கடவுளின் பள்ளத்தாக்கு- மாய ஊர்தி

லுவலகத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். இடது ஓரத்தில் இருந்த மரத்தின் நிழல் என்  முகத்தில் விழுந்து அந்த சூடான மாலையை கொஞ்சம் சாந்தப்படுத்திக்கொண்டிருந்தது. லாபியில் செக்கியூரிட்டி ரேடியோ கேட்டுக் கொண்டிருந்தார்.

 " நம் பள்ளத்தாக்கில் இன்று வெயிலின்  தாக்கம் அதிகமாக இருக்கும் ..மாலை 4 மணி முதல் 7 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும்.."  

அரிசோனா மாகாணத்தை இந்த ஊர்க்காரர்கள் பள்ளத்தாக்கு (Valley) என்றே அழைக்கிறார்கள். மலைகளின் கீழே அமைந்திருப்பதால் அப்பெயர் என அறிகிறேன். ஜூன்,ஜூலைகளில் வெயில் வெளுத்து வாங்கும். மற்ற மாதங்களில் இயற்கை அன்னை நம்மை சங்கடப்படாமல் பார்த்துக்கொள்வாள். அமெரிக்காவின் கிழக்கு  மாகாணங்களை போல குளிர் காலங்கள் இங்கே கொடூரமாய் இருக்காது.  கொஞ்ச நேரத்தில் பென் மட்டும் வெளியில் வந்தான். என்னை பார்த்து அளவாய் சிரித்துவிட்டு மொபைலை எடுத்து நோண்டிக்கொண்டிருந்தான். பெரும்பாலும் அலுவலகவாசிகளை  "அலுவலக நண்பர்கள்" என கூறிக்கொள்வது நாகரீகம் கருதி என்றே நினைக்கிறேன். அலுவலகத்தின் தொடர்பு அறுந்து போகும் போது அவர்களும் இயல்பாய் மறைந்து போவார்கள். நானும் பென்னும் அப்படியாப்பட்ட அலுவலக நண்பர்கள் தான். நான் அவன் பக்கத்தில் போனேன்.

"பசிக்குது பென் .. நாம வேணும்னா முன்னாடி போயிரலாமா" 



எங்கள் டீமின் சார்பில் ஒரு ஹோட்டலில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.  எப்போதும் நாலைந்து பேராய் வெளியே வருவார்கள், ஒரு காரில் ஏறி செல்வோம். அன்னைக்கென்று பார்த்து எல்லா பக்கிகளும் கண்டபடி கட்சிப்பணி செய்து கொண்டிருந்தார்கள். என் வயிறு, பசி காரணமாய் ஏற்கனவே என்னை கடிந்து கொண்டு வினோதமான சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தது.

"போலாமே.." என்னை பார்க்காமல் போனை பார்த்தபடியே பேசினான்.

"நா போய் என் வண்டிய எடுத்துட்டு வந்துடறேன்" 

"ஷிவ் ..இருங்க "வேமோ " புக் பண்ணிருக்கேன்..அதுல போயிடலாம் "

அவன் வேமோ (WAYMO ) என சொன்னதும் 'ஏழாம் அறிவு' படத்தில் போதி தர்மரை குறிப்பிடும் போது  "தாமூஊஊஊஊ" என சத்தம் குடுத்து ஒரு பின்னணி இசை வருமே அது என் தலைக்குள் ஓடியது. வேமோ (WAYMO ) எனப்படுவது  செயற்கை நுண்ணறிவால்  ஓட்டுநர் இல்லாமல் தானாய் இயங்கும் ரோபோ கார். தற்சமயம் அமெரிக்காவில் இரண்டு மூன்று நகரங்களில் சேவையை தொடங்கி இருக்கிறார்கள்.  ஒரு வருடமாகவே  இந்த கார் பீனிக்ஸ் நகரில் ஓடிக்கொண்டிருந்தாலும் நான் ஏறியதில்லை. மனுஷன் வண்டி ஓட்டுனாலே ரோட்டுல ஆயிரம் பிரச்சனை வருது, இதுல "இதுகளை" நம்பி காரில் ஏற என் பரிசுத்த ஆவி ஒத்துக்கொள்ளவில்லை. 

நான் ஒருமாதிரியாய் விழிப்பதை பார்த்து "ஓ ..நீங்க போனதில்லையா It will be fun" என்றான். கொஞ்ச காலமாகவே  நண்பர்கள் இந்த கார்களில் இருந்தபடி புகைப்படங்களை சுட்டு தள்ளி.. இன்ஸ்டாகளில் பதிவிட்டு தாங்கள் ட்ரெண்டில் இருப்பதாய் காட்டிக்கொண்டிருந்தார்கள்.  "சரி போய்தான் பார்ப்போமே " என என் மனதும் கிளர்ச்சியானது.  சரியாய் பத்து நிமிடத்தில் waymo கார் எங்களை நோக்கி வந்தது. கார் பெரிய வித்யாசமாகவெல்லாம் இருக்காது. அதன் தலையில் ஒரு கொண்டை போன்ற சென்சார் ஒன்று சுத்திக்கொண்டே இருக்கிறது. அந்த சென்சாரை வைத்து மேப்புகளை மேம்படுத்தி தன்  பாதைகளை தீர்மானிக்கிறது. வண்டியின் எல்லா மூலைகளில் கேமராக்கள் இருக்கிறது. வெள்ளை நிறத்தில் தேர் போல மெதுவாய் "வேமோ" எங்கள் பக்கத்தில் வந்தது. காரின் முன் சீட்டில் யாருமில்லாமல் ஸ்டேரிங் அதுவாய் திரும்பி லாவகமாய் எங்கள் பக்கத்தில் வந்து நின்றதை பார்த்து எச்சில் விழுங்கிக்கொண்டேன்.

"அடுத்து" என்பது போல நான் பென்னை பார்த்தேன். அவன் என் பக்கத்தில் வந்து அவன் மொபைலில் இருந்த ஆப்பை காட்டினான். அதில் "அன்லாக் " என்கிற பொத்தான் துருத்திக்கொண்டு தெரிந்தது. "இப்ப இத அமுக்கனும் .." என சொல்லி அதை அமுக்கினான். காரின் கதவு திறந்து கொண்டது. 

" மொத தடவ வரீங்க..பரவால்ல நீங்க முன்னாடி ஏறிக்கோங்க .."  என சொல்லிக்கொண்டே பென் பின் சீட்டில் ஏறிக்கொண்டான். "இது சலுகையா..தண்டனையா " என என்னை அவன் யோசிக்க கூட விடவில்லை. நான் முன் சீட்டில் ஏறிக்கொண்டேன். ஒரு இயந்திரக்குரல் சீட் பெல்ட் போடச்சொல்லியது, பாஸ்கோட் கேட்டது..போகும் முகவரி சரி பார்க்க சொல்லியது.எல்லா சம்பிரதாயங்களையும் முடித்தவுடன் வண்டி நகரத்தொடங்கியது. பத்து அடி தூரத்தில் இருந்த ஒரு இடது வளைவில் "இண்டிகேட்டர்' போட்டு அழகாய் திரும்பியது. எனக்கு நான் சின்ன வயதில் பார்த்த "பழி வாங்கும் கார்" என்ற பழைய படம் ஞாபகம் வந்தது.




இரண்டே நிமிடத்தில் மெயின் ரோட்டில் இறங்கி மற்ற மனுசப்பயக ஓட்டும் கார்களுடன் கலந்தது. கொஞ்சம் கூட பிசுறு தட்டாமல் ஒரே வேகத்தில் போய்க்கொண்டிருந்தது. பயம்..ஆச்சர்யம் எல்லாம் கொஞ்சம் மட்டுப்பட்டு மனது ஆசுவாசமாய் இருந்தது. டெஸ்லா கூட இந்த ரோபோ டாக்சி தொழிலில் இறங்கப்போவதாய் படித்திருந்தேன். உலகம் முழுக்க கொஞ்ச கொஞ்சமாய் இவை இறங்கப்போகிறது. "இன்னொரு இருநூறு கூட கொடுத்தா வரேன் " என அடம்பிடிக்காது என்பதால் நம்ம ஊரிலும் வேகமாக களம் காணக்கூடும். என்ன..கொஞ்சம் வண்டி எசகு பிசகாக ஓடினால்.. வேகமாக போய் ஓட்டுனரை திட்டுவோம். இதில் அது முடியாதது ஒரு சங்கடம். இப்போது நெடுஞ்சாலையை அடைந்து விட்டிருந்தோம். வண்டி வேகத்தை கூட்டியது. சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன்.  சாலை விதிகளையெல்லாம் மதித்து ..ரொம்பவும் கவனமாக வண்டி ஓட்டும்  ஒரு ஆசாமி வண்டி ஓட்டுவது போல இருந்தது. பென் திடீரென உயிர்ப்பெற்று என்னிடம் பேசத்தொடங்கினான்.

"எப்படிருக்கு ஷிவ்...ரொம்ப ஸ்மூத்தா திரும்புதுல ..எப்பிடி முன்னாடி போற வண்டிக்கு ஸ்பேஸ் கொடுத்து தொடருது பாருங்க..."   

"அதெல்லாம் சரி ..ஒரு வேல இந்த வண்டி எங்கேயாச்சும் இடிச்சி ஏதாவது ஆகிருச்சுனா ..யார அரெஸ்ட் பண்ணுவானுங்க.. கம்பெனி சி.ஈ.ஓ வையா? இல்ல கோட்  எழுதுன டெவலப்பர்களையா?"

பென் ஒரு மாதிரி முழித்தான். இது மாதிரி  நார வாய்க்கேள்விகளை என்கிட்ட ஏன்டா கேக்குற? என்பது போல இருந்தது.

"சான் பிரான்சிஸ்கோல இந்த மாதிரி ஏதோ நடந்திருக்கு ஆனா அத லீகலா எப்படி டீல் பண்ணுவாங்கன்னு தெரில .." . சீரியஸாய் பதில் சொன்னான்.

"ம்ம்.. தப்பா கோட் எழுதுனவுங்கெல்லாரையும்  புடிச்சு ஜெயில்ல போடுவாங்கன்னா ..எனக்கெல்லாம் ரெட்டை ஆயுள் தண்டனை கிடைக்கும்.."

கேட்டுவிட்டு பென் சிரித்தான். "நான்லாம் அடுத்த ஜென்மத்துலயும் ஜெயில்ல தான் பொறக்கணும்".  ரெண்டு பேரும் வாய்விட்டு சிரித்தோம். 

ஜன்னல் வழியாய் பார்த்தேன்... எங்கும் மலைகள். அதன் மேலே வெயில் பட்டு மஞ்சள் நிறத்தில் மின்னிக்கொண்டு இருந்தது. காரின் திரையில் பார்த்தேன் ஹோட்டலை அடைய இன்னும் பனிரெண்டு நிமிடங்கள் இருப்பதாய் காட்டியது. இப்படி ஒரு காரில் போவேன் என யாராவுது இரண்டு வருடம் முன்பு சொல்லியிருந்தால் கூட நம்பியிருக்க மாட்டேன். சயின்ஸ் பிக்சன் படங்களில் வந்த பீஸ்கள் எல்லாம் இப்படி ரோட்டில் உலாத்தும் என நான் நினைத்து பார்க்கவில்லை. 

" எனக்கு தெரிஞ்சி ..இந்த வீட்டு வேலையெல்லாம் முழுக்க செய்ற மாதிரி ரோபோ தான் மார்க்கெட்ல மொத வரும்..என்ன மாதிரி டெய்லி பாத்திரம் கழுவி சாவுற எவனோ இந்நேரம் அத பண்ணிட்டு இருப்பான்"

 பென் சொல்வது வாஸ்தவம். இனி கூட்டுவது..துவைப்பது..சமைப்பது போன்ற தினசரி வீட்டு வேலைகளெல்லாம் கம்பியூட்டர் கோட்களாக மாற்றப்பட்டு மெஷின்களுக்குள் திணிக்கப்படும். டி.வி விளம்பரங்களில் சூர்யா..ஆர்யா போன்றவர்கள்  கோட் சூட் போட்டுக்கொண்டு "எடுத்துக்கோ..எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோனு" ரோபோக்களை   விற்றுக்கொண்டிருப்பார்கள்.மனிதர்கள் வீட்டில் எந்த வேலையுமில்லாமல் எதையாவது நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கலாம். காலையில் காபி கொடுக்கும்போது நம் இதயத்துடிப்பை கவனித்து "எஜமான்..இன்னைக்கு உங்களுக்கு அட்டாக் வர அதிக வாய்ப்பிருக்கு..ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணிட்டேன்..போய் அட்மிட் ஆகியிருங்க..அப்பல்லோவ மட்டும் தவிர்த்திருங்க.."னு  சொல்லலாம்.  நாமே நினைத்தாலும் இந்த செயற்கை நுண்ணறிவு சமாச்சாரங்களை தவிர்க்க முடியாது.  வேதாளம் போல நம் தோளில் ஏறிக்கொள்ளும். அதோடு வாழ பழகிக்கொள்வதே ஒரே வழி.



ஹோட்டலுக்கு பக்கத்தில் வந்து விட்டிருந்தோம்.  வாசலில் நிறைய கார்கள் நின்று கொண்டிருந்தது. நம்ம "வேமோ" பார்க்கிங்கிற்கு வகையான இடம் பார்த்துக்கொண்டிருந்தது.

"ஷிவ்..இந்த வாட்டி காரமில்லாம ஏதாவது ஆர்டர் பண்ணி கொடுங்கப்பா..போன தடவ சாப்பிட்ட மட்டன் பிரியாணி ரொம்ப பிரச்னை பண்ணிருச்சு"

நாங்கள் பெரும்பாலும் இந்திய ரெஸ்டாரண்ட்களில் தான் சாப்பிடுவோம்.  

"வாய்ப்பில்லையே..போன வாரம் காரம் கம்மியா தான இருந்துச்சு''

பென் காண்டானான். "யோவ் மனுஷங்களாயா நீங்க..சாப்பிடறப்ப விட ,டாய்லட் போறப்ப தான்யா எனக்கு ரொம்ப உறைச்சிச்சு ". நான் விழுந்து விழுந்து சிரித்தேன். வண்டி சரியாய் நின்றது. "வேமோ" எங்களை மரியாதையான வார்த்தைகளால்  இறங்கச்சொல்லியது.

"ஷிவ்..இப்போ தான் நமக்கு மரியாதை. ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சொல்லிருக்காருல..மொத்த பூமியும் மெஷின்களின் கைக்கு போகும். மனித இனத்தின் அழிவு இந்த ஏ.ஐ களின் கையில் தானாம்.." 

இறங்குவதற்கு முன் காரின் பக்கம் திரும்பி "உங்களுக்கு அப்பிடி திட்டம் இருந்துச்சுனா என்னையும் உங்க கூட சேத்துக்கோங்க..எனக்கும் மனுஷங்கள பிடிக்காது " என்றேன் .

நாங்கள் இறங்கியபின் கார் சாவகாசமாய் கிளம்பியது . எதிர்காலங்கள் என்னத்தையெல்லாம் சுமந்து கொண்டு நமக்காக காத்திருக்கிறதோ என நினைக்கையில் பயமாக இருந்தது.




ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

ஒரு காங்கிரீட் கனவு



ட்டோ காமராஜர் பூங்காவை  கடந்து பத்திர ஆபீஸை நெருங்கிக் கொண்டிருந்ததுஇடது பக்கம் உட்கார்ந்துகொண்டு வேடிக்கை  பார்த்தபடி வந்தேன்.அன்னை  பேக்கரியில் சூடாய் பப்ஸ் வாங்க கூட்டம் நின்றிருந்ததுஒரு வேகத்தடை    மேட்டை ஏறி இறங்கியவுடன் ஆட்டோ  ஓரமாய் நின்றதுநானும் அம்மாவும் இறங்கினோம்.  ஆட்டோக்காரண்ணன்  " தம்பி..சித்ரா ஸ்டோர் தாண்டி நிக்குறேன்..முடிச்சிட்டு அந்த பக்கம் வந்துருங்க " என்றார்சரி என்பது போல தலையாட்டினேன்பத்திர ஆபீஸ் சுறுசுறுப்பாய் இருந்ததுநானும் அம்மாவும் ஒரு மர நிழலில் நின்று கொண்டோம்எல்லாம்   வேகமாய் முடிந்தால் நிம்மதியாய் இருக்கும் என நினைத்துக்கொண்டேன்கொஞ்ச நேரத்தில் சிதம்பரம் வந்தார்.      எங்களை பார்த்தவுடன் சிரித்தபடி அருகில் வந்தார்.

"வாங்க தம்பி..வந்து ரொம்ப நேரமாச்சா.."  

 "இல்லண்ணே.. இப்பதான் வந்தோம் "

"டீ  சாப்புடுறீங்களா.."

 வேண்டாமென ஒரு  மனதாய் தலையாட்டினோம்.  சில கேள்விகளுக்கு சில சூழ்நிலையில் என்ன பதில் கிடைக்கும் என தெரியும்இருந்தும் கேட்கப்படும்அது ஒரு நாகரீகம்சிதம்பரத்தின் முகம் சிரித்தபடி இருக்கும் அல்லது சிரிக்க தயாராய் இருக்கும்நெற்றியில் திருநீர்..வியர்வையில் மறைந்து கொண்டிருக்கும் சந்தனம் .. ஒரு கோல்டு கலர் வாட்ச் என பெரிய மனிதர் தோரணையில் இருப்பார்ரியல் எஸ்டேட் ஆசாமிகளுக்கே உரித்தான உடல்மொழிகள் அவருக்கு வாய்த்திருந்தது.  பத்திர ஆபிசில் இருக்கும் எல்லாருக்கும் அவரை தெரிந்திருந்ததுகோப்புகளை வாங்கி ஒரு டேபிளில் இருந்து இன்னொரு டேபிளுக்கு கொடுத்தார்நிறைய பேரை "சௌக்யமாண்ணே.." கேட்டார்கண்ணாடி போட்ட ஒரு அலுவலக   கிளெர்க்கிடம் காதோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தார்பிறகு எங்களை பார்த்தபடி அவரின் காதுக்கருகே போய்   தாழ்வான குரலில் பேசினார்எதுவும் பெருசாய் கேட்கவில்லை ஒரு வார்த்தையை தவிர.. "அந்த நீல கலர் வீடு ".

---------------------------------------------------------------------------------------------------------

பாதி கட்டிடத்திற்கு தண்ணீரடித்து முடித்திருந்தேன்வெறும் செங்கலாய்..கூடு போல இருக்கும் இந்த கட்டிடம் மூன்று மாதத்தில் வீடாக மாறப்போகிறதா என நம்பாமல் பார்த்துக்கொண்டிருப்பேன்லீவு நாட்களில் கட்டிடம் வந்து அங்கு   கொடுக்கப்படும் சில்லரை வேலைகளை நான் செய்ய வேண்டும்பெரும்பாலும் வேலை செய்பவர்களுக்கு டீ  வாங்கி   வந்து கொடுப்பேன்சிமெண்ட் மூட்டைகள் எடுக்கப்பட்டால் நோட்டில் வரவு வைத்து கொள்வேன்மாலைகளில் போனால்   கட்டடம் முழுக்க ரப்பர் ஓஸ் வைத்து தண்ணீர் அடிப்பேன்அப்பா பக்கத்தில் வந்து தலையில் தட்டி ஒரு சுவற்றின் ஓரத்தை  காட்டினார்அது ஈரம் படாமல் அனாமத்தாய் இருந்ததுதிடீர் சுறுசுறுப்பு வந்து தண்ணீரை அதை குறி வைத்து       அடித்தேன்.   அப்பா  உள்ளே போய் ரூமில் வேலை செய்து கொண்டிருக்கிற எலக்ட்ரீசியன் சேகரிடம் பேச தொடங்கினார்.

"என்ன சேகர்..நல்ல சம்பாத்தியம் போல ..ரெண்டு நாளா ஆள காணோம்"

"ஏண்ணே..ரெண்டு நாள வயித்துக்கடுப்பு..தண்ணி குடிச்சாக்கூட கடுக்குது.."

" ..எங்க காட்டற.."

"மதுரை ரோட்டில சங்கர்னு இருக்கார்ல..ரெண்டு நாளைக்கு மாத்திர கொடுத்திருக்காரு..காரம் சாப்பிட வேணாம்டுருக்காப்ள..நானே ரெண்டு மாசமா தயிர் சோறு தான் திங்குறேன்.."

 "எதுக்குயா எங்கயோ பாக்குற..போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துல சுப்ரமணிய ராஜா..நல்லா பாப்பாரு"சேகர் அண்ணன்   தலையாட்டினார்கொஞ்ச நேரம் ஏதேதோ பேசினார்கள்.

 "சாயங்காலம் டீ  முடிஞ்சிச்சாணே.."

"ஆறு ஆச்சுல்ல நீ மட்டும் அடி..."என அப்பா பாக்கெட்டில்  கை விட்டு  பைசாவை தேடினார்எனக்கு தெரியும் அடுத்து   என்ன நடக்குமென்றுசேகரண்ணனை ஜாக்கி ஜான் படங்களில் வருவது போல மனதிற்குள்ளேயே பறந்து போய்   எத்தினேன்அப்பா கூப்பிட்டார் ."தம்பி..கழுவி வச்சிருக்கிற தூக்குச்சட்டிய எடுத்திட்டு..முக்கு கடைல.." 

 --------------------------------------------------------------------------------------------------------------





 ன்று பத்திர ஆபிசில் கூட்டம் அதிகமாய் இருந்ததுநிறைய பெண்கள் பட்டுச்சேலையில் வந்திருந்தார்கள்அது ஏதோ நல்ல நாளாக இருக்க வேண்டும்நாங்கள் ஒரு மர பெஞ்சில் உட்கார்ந்து  எங்கள் முறைக்காக காத்திருந்தோம்.   ரிஜிஸ்திரார் அறைக்கு சிலர் உள்ளே போய் வெளியே வந்த வண்ணம் இருந்தனர்கதவு திறக்கும் போது ரிஜிஸ்திரார் தெரிந்தார்நீல கலர் சட்டையில் பெரிய உருவமாக இருந்தார்ஒரு முத்திரைத்தாளில் வேண்டியவற்றை ஷரத்துடன்   தெளிவாய் எழுதி இவரிடம் கையொப்பம் வாங்கினால் சம்பத்தப்பட்ட இடமோ..வீடோ ஒருவருக்கு சொந்தமாகி விடும்.   பூமியில் இருக்கும் ஒரு இடத்திற்கு உரிமையாளரை நிர்ணயிக்கும் சக்தி ஒரு மனிதனுக்கு இருக்குமாயின் அவன் கிட்டத்தட்ட கடவுள் தானேஎண்ணங்கள் என்னை மீறி ஓடிக்கொண்டிருந்தனசோகத்தின் பிடியில் இருக்கும் மனம் மூச்சிரைக்க ஓடும்அது அடங்காது."ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி ஒரு இடத்துல மாடு அது குடும்பத்தோட இருந்திருக்கும்...அத   கம்ப வச்சு வெரட்டி விட்டுட்டு நீ உன் குடும்பத்தோட புகுந்து அங்க வாழுவ..சில வருஷம் கழிச்சி நீ மாட்டுக்கு செஞ்சத   இன்னொரு மனுஷன் உனக்கு செய்வான்.. அவன 'அயோக்கியன்..ரவுடினு தூத்துவ.. வலியவன் செய்வதே நியாயம்..  அவன் போதிப்பதே அறம்". நல்ல வேளையாக மனதில் ஓடுவதெல்லாம் வெளியில் கேட்பதில்லை

"தம்பி டிரைவிங் லைசன்ஸ் இருக்கா" ..சிதம்பரம் தோளை உலுக்கினார்.

 "இல்லண்ணே..பேன் கார்டு இருக்கு ". பாக்கெட்டிலிருந்து எடுத்துக்கொடுத்தேன்.

 கொஞ்ச நேரத்தில் என்னையும் அம்மாவையும் உள்ளே கூப்பிட்டார்கள்நான் பாக்கெட்டில் பேனா இருக்கிறதா என   உறுதி படுத்திக்கொண்டேன்உள்ளே போனோம்அரசு அலுவலகங்களுக்கே உரிய வாடை அங்கிருந்தது.  நூலகம்..   வட்டார போக்குவரத்து அலுவலகம் எல்லா இடங்களிலும் அந்த "அரசுவாடை"   வியாபித்திருக்கும்சிதம்பரத்தின்   அசிஸ்டன்ட் என்னிடம் வந்து "ஒரிஜினல் எடுய்யா..அந்தம்மாட்ட காட்டனும்என்றார்கையிலிருந்த பைஃலை நீட்டினேன்அதில் அப்பாவின் இறப்பு சான்றிதழ் துருத்திக்கொண்டிருந்தது.

-----------------------------------------------------------------------------------------------------------

வீடு கிட்டத்தட்ட ரெடியாகியிருந்ததுசில மணி நேர ஒப்பனையில் தயாராகி விடும் மணப்பெண்ணை போல   காத்திருந்ததுபெயிண்ட் தவிர முக்கியமான எல்லா வேலையும் முடிந்து விட்டதுநான்  கட்டிடத்திற்கு அப்போது தான்   வந்தேன்வழக்கம் போல வேகமாய் மாடிக்குப்போய் என் ரூமை பார்த்தேன்கச்சிதமாய் இருந்ததுஎந்த இடத்தில் சச்சின் போஸ்டர் ஒட்ட வேண்டும்கட்டில் எந்த பக்கம் போட்டால் பேய் பயமில்லாமல் தூங்கலாம் என கணக்குப்போட்டேன்போய் பாத்ரூமை திறந்தேன்வெஸ்டர்ன் டாய்லெட் அமைக்கப்பட்டிருந்ததுஎரிச்சலாய் இருந்ததுஅப்பா வந்தார்.

 "என்ன தம்பி..எப்பவும் உன் ரூம மட்டும் வந்து தனியா ரசிக்கிறியே..." .

"ப்பா.."

ம்ம்ம் "

என் ரூமுக்கு மட்டுமாவது ப்ளூ கலர் அடிக்கலாம் பா.."

"நீ எத்தனாவது படிக்கிற இப்போ "

 "எட்டாவது "

 "உன் கல்யாணத்தப்போ ஒருக்க பெயிண்ட் அடிப்போம்அப்போ உன் இஷ்டத்துக்கு அடிச்சிக்கோ"

"அப்பெதுக்கு நா உங்க கிட்ட கேக்குறேன்..".

 வெளியே நடப்பது போல நடந்து திரும்பவும் உள்ளே  வந்து என் டிக்கியில் எத்தி விட்டு வேகமாய் ஓடினார்ஓடிப்போய்    அடிப்பதற்காக  தாவி அவர் முதுகில் ஏறினேன்.

---------------------------------------------------------------------------------------------------------------


கையெழுத்தை போட்டு முடித்திருந்தோம்பெருவிரலை எடுத்து  ஒரு கருப்பு மைக்குள் முக்கி  கை ரேகை வைத்தார்கள்சிதம்பரம் குஷி மூடில் இருந்தார்பக்கத்தில் இருப்பவர்களிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்தார்ஒரே நாள் ஒரே சம்பவம் ஒருவருக்கு பெருவலியாகவும் மற்றொருவருக்கு பேரின்பமாகவும் இருக்கிறதுவீட்டை ஒரு வணிகப்பொருளாய்   பார்க்கும் பட்சத்தில் யாரும் தவறு செய்யவில்லைஎல்லோரும் அவரவர் வேலையை தான் பார்க்கிறார்கள்சில பேங்க் ஆசாமிகள் தங்களுக்குள் கைகுலுக்கிக்கொண்டு சிதம்பரத்திடமும் கை குலுக்கினார்கள்.  ஒருத்தர் பக்கத்தில் வந்து  "எவ்வளவுக்கு கிரயம் முடிச்சீங்க.." என்றார்அவர் பேசுவது கேட்கிறதுஆனால் உடல் முழுதும் ஒரு மாதிரி சோகை   பிடித்தது போல உணர்வில்லாமல் திம்மென்று இருந்ததுஅப்பா இன்னொருமுறை இறந்தது போல இருந்தது.

 

நானும் அம்மாவும் அமைதியாய் நடந்து சித்ரா ஸ்டோர் பக்கத்தில் எங்களுக்காக காத்திருந்த ஆட்டோவில் ஏறினோம்வீடு வரை பேசிக்கொள்ளவேயில்லைவீட்டிற்குள் போனவுடன் ரூமில் படுத்து தூங்கவேண்டும் போலிருந்ததுபோய்ப்படுத்துக்கொண்டேன்வெளியில் ஜன்னல் வழியாய் வானத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். "இந்த வீட்டில் வேறு யாரோ குடி வருவார்கள்..வீட்டின் வணிக மதிப்பு உயரும்..அவர்கள் புதிய நினைவுகளை உருவாக்கிக்கொள்வார்கள்.. இதே வீடு அவர்களின் வாழ்க்கையில் முக்கியமானதாய் மாறும்ஆனால் அவர்களுக்குத்தெரியாது   வீட்டின் முதல் மாடிக்கு செல்லும் படிகள் ஏன் நிலைவாசலுக்கு முன்னமே இருக்கிறதென்று..சமயலறையின் மேடை ஏன் உயரம் கம்மியாக இருக்கிறதென்று.. இந்த வீட்டின் ஒவ்வொரு அணுவிலும் நாங்கள் கலந்தே இருக்கிறோம்எத்தனை   பத்திரங்கள் எழுதினாலும்..இதன் மதிப்பு கோடிகளில் போனாலும்.. இந்த வீடு எப்போதும் "எங்கள் வீடுதான்”அப்படியே மானசீகமாய் மொத்த வீட்டையும் கட்டிக்கொண்டு தூங்கிப்போனேன்.

                                                          ---------------------------------------------------------------