ஆட்டோ காமராஜர் பூங்காவை கடந்து பத்திர ஆபீஸை நெருங்கிக் கொண்டிருந்தது. இடது பக்கம் உட்கார்ந்துகொண்டு வேடிக்கை பார்த்தபடி வந்தேன்.அன்னை பேக்கரியில் சூடாய் பப்ஸ் வாங்க கூட்டம் நின்றிருந்தது. ஒரு வேகத்தடை மேட்டை ஏறி இறங்கியவுடன் ஆட்டோ ஓரமாய் நின்றது. நானும் அம்மாவும் இறங்கினோம். ஆட்டோக்காரண்ணன் " தம்பி..சித்ரா ஸ்டோர் தாண்டி நிக்குறேன்..முடிச்சிட்டு அந்த பக்கம் வந்துருங்க " என்றார். சரி என்பது போல தலையாட்டினேன். பத்திர ஆபீஸ் சுறுசுறுப்பாய் இருந்தது. நானும் அம்மாவும் ஒரு மர நிழலில் நின்று கொண்டோம். எல்லாம் வேகமாய் முடிந்தால் நிம்மதியாய் இருக்கும் என நினைத்துக்கொண்டேன். கொஞ்ச நேரத்தில் சிதம்பரம் வந்தார். எங்களை பார்த்தவுடன் சிரித்தபடி அருகில் வந்தார்.
"வாங்க தம்பி..வந்து ரொம்ப நேரமாச்சா.."
"இல்லண்ணே.. இப்பதான் வந்தோம் "
"டீ சாப்புடுறீங்களா.."
வேண்டாமென ஒரு மனதாய் தலையாட்டினோம். சில கேள்விகளுக்கு சில சூழ்நிலையில் என்ன பதில் கிடைக்கும் என தெரியும். இருந்தும் கேட்கப்படும். அது ஒரு நாகரீகம். சிதம்பரத்தின் முகம் சிரித்தபடி இருக்கும் அல்லது சிரிக்க தயாராய் இருக்கும். நெற்றியில் திருநீர்..வியர்வையில் மறைந்து கொண்டிருக்கும் சந்தனம் .. ஒரு கோல்டு கலர் வாட்ச் என பெரிய மனிதர் தோரணையில் இருப்பார். ரியல் எஸ்டேட் ஆசாமிகளுக்கே உரித்தான உடல்மொழிகள் அவருக்கு வாய்த்திருந்தது. பத்திர ஆபிசில் இருக்கும் எல்லாருக்கும் அவரை தெரிந்திருந்தது. கோப்புகளை வாங்கி ஒரு டேபிளில் இருந்து இன்னொரு டேபிளுக்கு கொடுத்தார். நிறைய பேரை "சௌக்யமாண்ணே.." கேட்டார். கண்ணாடி போட்ட ஒரு அலுவலக கிளெர்க்கிடம் காதோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தார். பிறகு எங்களை பார்த்தபடி அவரின் காதுக்கருகே போய் தாழ்வான குரலில் பேசினார். எதுவும் பெருசாய் கேட்கவில்லை ஒரு வார்த்தையை தவிர.. "அந்த நீல கலர் வீடு ".
------------------------------
பாதி கட்டிடத்திற்கு தண்ணீரடித்து முடித்திருந்தேன். வெறும் செங்கலாய்..கூடு போல இருக்கும் இந்த கட்டிடம் மூன்று மாதத்தில் வீடாக மாறப்போகிறதா என நம்பாமல் பார்த்துக்கொண்டிருப்பேன். லீவு நாட்களில் கட்டிடம் வந்து அங்கு கொடுக்கப்படும் சில்லரை வேலைகளை நான் செய்ய வேண்டும். பெரும்பாலும் வேலை செய்பவர்களுக்கு டீ வாங்கி வந்து கொடுப்பேன். சிமெண்ட் மூட்டைகள் எடுக்கப்பட்டால் நோட்டில் வரவு வைத்து கொள்வேன். மாலைகளில் போனால் கட்டடம் முழுக்க ரப்பர் ஓஸ் வைத்து தண்ணீர் அடிப்பேன். அப்பா பக்கத்தில் வந்து தலையில் தட்டி ஒரு சுவற்றின் ஓரத்தை காட்டினார். அது ஈரம் படாமல் அனாமத்தாய் இருந்தது. திடீர் சுறுசுறுப்பு வந்து தண்ணீரை அதை குறி வைத்து அடித்தேன். அப்பா உள்ளே போய் ரூமில் வேலை செய்து கொண்டிருக்கிற எலக்ட்ரீசியன் சேகரிடம் பேச தொடங்கினார்.
"என்ன சேகர்..நல்ல சம்பாத்தியம் போல ..ரெண்டு நாளா ஆள காணோம்"
"ஏண்ணே..ரெண்டு நாள வயித்துக்கடுப்பு..தண்ணி குடிச்சாக்கூட கடுக்குது.."
"ஓ ..எங்க காட்டற.."
"மதுரை ரோட்டில சங்கர்னு இருக்கார்ல..ரெண்டு நாளைக்கு மாத்திர கொடுத்திருக்காரு..காரம் சாப்பிட வேணாம்டுருக்காப்ள..நானே ரெண்டு மாசமா தயிர் சோறு தான் திங்குறேன்.."
"எதுக்குயா எங்கயோ பாக்குற..போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துல சுப்ரமணிய ராஜா..நல்லா பாப்பாரு". சேகர் அண்ணன் தலையாட்டினார். கொஞ்ச நேரம் ஏதேதோ பேசினார்கள்.
"சாயங்காலம் டீ முடிஞ்சிச்சாணே.."
"ஆறு ஆச்சுல்ல நீ மட்டும் அடி..."என அப்பா பாக்கெட்டில் கை விட்டு பைசாவை தேடினார். எனக்கு தெரியும் அடுத்து என்ன நடக்குமென்று. சேகரண்ணனை ஜாக்கி ஜான் படங்களில் வருவது போல மனதிற்குள்ளேயே பறந்து போய் எத்தினேன். அப்பா கூப்பிட்டார் ."தம்பி..கழுவி வச்சிருக்கிற தூக்குச்சட்டிய எடுத்திட்டு..முக்கு கடைல.."
------------------------------
அன்று பத்திர ஆபிசில் கூட்டம் அதிகமாய் இருந்தது. நிறைய பெண்கள் பட்டுச்சேலையில் வந்திருந்தார்கள். அது ஏதோ நல்ல நாளாக இருக்க வேண்டும். நாங்கள் ஒரு மர பெஞ்சில் உட்கார்ந்து எங்கள் முறைக்காக காத்திருந்தோம். ரிஜிஸ்திரார் அறைக்கு சிலர் உள்ளே போய் வெளியே வந்த வண்ணம் இருந்தனர். கதவு திறக்கும் போது ரிஜிஸ்திரார் தெரிந்தார். நீல கலர் சட்டையில் பெரிய உருவமாக இருந்தார். ஒரு முத்திரைத்தாளில் வேண்டியவற்றை ஷரத்துடன் தெளிவாய் எழுதி இவரிடம் கையொப்பம் வாங்கினால் சம்பத்தப்பட்ட இடமோ..வீடோ ஒருவருக்கு சொந்தமாகி விடும். பூமியில் இருக்கும் ஒரு இடத்திற்கு உரிமையாளரை நிர்ணயிக்கும் சக்தி ஒரு மனிதனுக்கு இருக்குமாயின் அவன் கிட்டத்தட்ட கடவுள் தானே. எண்ணங்கள் என்னை மீறி ஓடிக்கொண்டிருந்தன. சோகத்தின் பிடியில் இருக்கும் மனம் மூச்சிரைக்க ஓடும். அது அடங்காது."ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி ஒரு இடத்துல மாடு அது குடும்பத்தோட இருந்திருக்கும்...அத கம்ப வச்சு வெரட்டி விட்டுட்டு நீ உன் குடும்பத்தோட புகுந்து அங்க வாழுவ..சில வருஷம் கழிச்சி நீ மாட்டுக்கு செஞ்சத இன்னொரு மனுஷன் உனக்கு செய்வான்.. அவன 'அயோக்கியன்..ரவுடி' னு தூத்துவ.. வலியவன் செய்வதே நியாயம்.. அவன் போதிப்பதே அறம்". நல்ல வேளையாக மனதில் ஓடுவதெல்லாம் வெளியில் கேட்பதில்லை.
"தம்பி டிரைவிங் லைசன்ஸ் இருக்கா" ..சிதம்பரம் தோளை உலுக்கினார்.
"இல்லண்ணே..பேன் கார்டு இருக்கு ". பாக்கெட்டிலிருந்து எடுத்துக்கொடுத்தேன்.
கொஞ்ச நேரத்தில் என்னையும் அம்மாவையும் உள்ளே கூப்பிட்டார்கள். நான் பாக்கெட்டில் பேனா இருக்கிறதா என உறுதி படுத்திக்கொண்டேன். உள்ளே போனோம். அரசு அலுவலகங்களுக்கே உரிய வாடை அங்கிருந்தது. நூலகம்.. வட்டார போக்குவரத்து அலுவலகம் எல்லா இடங்களிலும் அந்த "அரசுவாடை" வியாபித்திருக்கும். சிதம்பரத்தின் அசிஸ்டன்ட் என்னிடம் வந்து "ஒரிஜினல் எடுய்யா..அந்தம்மாட்ட காட்டனும்" என்றார். கையிலிருந்த பைஃலை நீட்டினேன். அதில் அப்பாவின் இறப்பு சான்றிதழ் துருத்திக்கொண்டிருந்தது.
------------------------------
வீடு கிட்டத்தட்ட ரெடியாகியிருந்தது. சில மணி நேர ஒப்பனையில் தயாராகி விடும் மணப்பெண்ணை போல காத்திருந்தது. பெயிண்ட் தவிர முக்கியமான எல்லா வேலையும் முடிந்து விட்டது. நான் கட்டிடத்திற்கு அப்போது தான் வந்தேன். வழக்கம் போல வேகமாய் மாடிக்குப்போய் என் ரூமை பார்த்தேன். கச்சிதமாய் இருந்தது. எந்த இடத்தில் சச்சின் போஸ்டர் ஒட்ட வேண்டும். கட்டில் எந்த பக்கம் போட்டால் பேய் பயமில்லாமல் தூங்கலாம் என கணக்குப்போட்டேன். போய் பாத்ரூமை திறந்தேன். வெஸ்டர்ன் டாய்லெட் அமைக்கப்பட்டிருந்தது. எரிச்சலாய் இருந்தது. அப்பா வந்தார்.
"என்ன தம்பி..எப்பவும் உன் ரூம மட்டும் வந்து தனியா ரசிக்கிறியே..." .
"ப்பா.."
" ம்ம்ம் "
" என் ரூமுக்கு மட்டுமாவது ப்ளூ கலர் அடிக்கலாம் பா.."
"நீ எத்தனாவது படிக்கிற இப்போ "
"எட்டாவது "
"உன் கல்யாணத்தப்போ ஒருக்க பெயிண்ட் அடிப்போம். அப்போ உன் இஷ்டத்துக்கு அடிச்சிக்கோ"
"அப்பெதுக்கு நா உங்க கிட்ட கேக்குறேன்..".
வெளியே நடப்பது போல நடந்து திரும்பவும் உள்ளே வந்து என் டிக்கியில் எத்தி விட்டு வேகமாய் ஓடினார். ஓடிப்போய் அடிப்பதற்காக தாவி அவர் முதுகில் ஏறினேன்.
------------------------------
கையெழுத்தை போட்டு முடித்திருந்தோம். பெருவிரலை எடுத்து ஒரு கருப்பு மைக்குள் முக்கி கை ரேகை வைத்தார்கள். சிதம்பரம் குஷி மூடில் இருந்தார். பக்கத்தில் இருப்பவர்களிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்தார். ஒரே நாள் ஒரே சம்பவம் ஒருவருக்கு பெருவலியாகவும் மற்றொருவருக்கு பேரின்பமாகவும் இருக்கிறது. வீட்டை ஒரு வணிகப்பொருளாய் பார்க்கும் பட்சத்தில் யாரும் தவறு செய்யவில்லை. எல்லோரும் அவரவர் வேலையை தான் பார்க்கிறார்கள். சில பேங்க் ஆசாமிகள் தங்களுக்குள் கைகுலுக்கிக்கொண்டு சிதம்பரத்திடமும் கை குலுக்கினார்கள். ஒருத்தர் பக்கத்தில் வந்து "எவ்வளவுக்கு கிரயம் முடிச்சீங்க.." என்றார். அவர் பேசுவது கேட்கிறது. ஆனால் உடல் முழுதும் ஒரு மாதிரி சோகை பிடித்தது போல உணர்வில்லாமல் திம்மென்று இருந்தது. அப்பா இன்னொருமுறை இறந்தது போல இருந்தது.
நானும் அம்மாவும் அமைதியாய் நடந்து சித்ரா ஸ்டோர் பக்கத்தில் எங்களுக்காக காத்திருந்த ஆட்டோவில் ஏறினோம். வீடு வரை பேசிக்கொள்ளவேயில்லை. வீட்டிற்குள் போனவுடன் ரூமில் படுத்து தூங்கவேண்டும் போலிருந்தது. போய்ப்படுத்துக்கொண்டேன். வெளியில் ஜன்னல் வழியாய் வானத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். "இந்த வீட்டில் வேறு யாரோ குடி வருவார்கள்..வீட்டின் வணிக மதிப்பு உயரும்..அவர்கள் புதிய நினைவுகளை உருவாக்கிக்கொள்வார்கள்.. இதே வீடு அவர்களின் வாழ்க்கையில் முக்கியமானதாய் மாறும். ஆனால் அவர்களுக்குத்தெரியாது வீட்டின் முதல் மாடிக்கு செல்லும் படிகள் ஏன் நிலைவாசலுக்கு முன்னமே இருக்கிறதென்று..சமயலறையின் மேடை ஏன் உயரம் கம்மியாக இருக்கிறதென்று.. இந்த வீட்டின் ஒவ்வொரு அணுவிலும் நாங்கள் கலந்தே இருக்கிறோம். எத்தனை பத்திரங்கள் எழுதினாலும்..இதன் மதிப்பு கோடிகளில் போனாலும்.. இந்த வீடு எப்போதும் "எங்கள் வீடு" தான்”. அப்படியே மானசீகமாய் மொத்த வீட்டையும் கட்டிக்கொண்டு தூங்கிப்போனேன்.
கருத்துகள்