Sunday, December 14, 2014

லிங்கா - விமர்சனம்

 

லிங்கா பார்க்கவில்லையென்றால் ஆதார் அட்டை கிடையாது என்ற செய்தி வேறு வந்து கொண்டிருந்தது. "காட் தி டிக்கெட்ஸ்" என டிக்கெட்டுகளுடன் வெற்றிப்பெருமித ஃபேஸ் புக் போட்டோக்கள் எனக்குள் வெறியை கிளப்பின. படத்தை பார்த்தே தீருவது என்று முடிவு செய்தேன்.சனிக்கிழமைகளில் தனியாய் படத்திற்குப்போனால்,வீட்டிலிருப்பவர்கள் வரும் வாரத்தில் "உப்புமா,கோதுமைதோசை" என தாக்குதல் நடத்துவார்கள் என்பதால் குடும்ப சகிதம் போவதென ஒரு மனதாய் தீர்மானம் நிறைவேற்றினோம். குரோம்பேட்டை வெற்றித் தியேட்டரில் மக்கள் கூட்டம் கொய கொயவென இருந்தது. தலைவனின் தரிசனத்தை காண அத்துனை மக்களும் தேவுடு காத்துக்கொண்டிருந்தனர். எல்லோரும் தலைப்பாக்கட்டி விளம்பரத்தில் வரும் சரத்குமார் அண்ணாச்சி போல குஷியுடன் காணப்பட்டனர். ஒரு நபர் "சிட்டில வீக்கென்ட் டிக்கெட் கிடையாது.. நம்ம பசங்கெல்லாம் வேன் எடுத்திட்டு செங்கல்பட்டு போறானுங்கோ.." என போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்.


"சூப்பர் ஸ்டார் ரஜினி" என திரையில் வந்ததும், திரையரங்கமே அதிர்ந்தது. சில ரசிக சிகாமணிகள் அடி வயிற்றிலிருந்து அதிக டெசிபல்களில் ஊளையிட்டு தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர். ரஜினி பட பாரம்பரியத்திற்கு உட்பட்டு சிலபல பில்டப்புகள் தரப்பட்டு "சூப்பர் ஸ்டார்" தோன்றினார். முந்தைய வரி இங்கே திரும்பவும் காப்பி & பேஸ்ட். வெள்ளைக்கார புள்ளைகளுடன் தலைவர் முதல் பாட்டுக்கு டான்ஸ் ஆடினார். எங்கே கீழே விழுந்து விடுவாரோ என கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தது. எவ்வளவு மேக்கப் போட்டாலும் வயது துறுத்திக்கொண்டு தெரிவதை தடுக்க முடியவில்லை. கே.எஸ்.ரவிக்குமாருக்கு  சூப்பர் ஸ்டார் மேல என்ன கோபமோ தெரியவில்லை, படத்தை அணை கட்டி அடித்திருக்கிறார். தலைவரின் கழுத்தைப்போல கதையையும் கடைசி வரை நமக்குக்காட்டவில்லை. படத்தின் எல்லாக்காட்சியிலும் ஒரு துண்டைப் போட்டு கழுத்தை மறைத்திருக்கிறார்கள். வயதை மறைக்க ஏன் இவ்வளவு மெனக்கெடல்? வயதுக்கேற்ற கதை தயார் செய்வது இதை விட எளிது என்று தான் தோன்றுகிறது. இந்த விசயத்தில் தலைவர், அமிதாப்பை இப்போதும் காப்பியடிக்கலாம்.அனுஷ்காவும் இல்லையென்றால் கே.எஸ்.ஆர்  வீட்டின் முன் நிறைய பேர் உண்ணாவிரதம் இருந்திருப்பார்கள்.  டான்ஸ் ஆடுவது, தலைவரை பார்த்து ஜொள்ளு விடுவது, வில்லனிடம் பிடி படுவது,கடைசியில் விடுபடுவது என ஹீரோயின் டியூட்டிகளை திறம்பட செய்திருக்கிறார். சந்தானம் வழக்கமான நண்பேன்டா வகையறா காமெடிகளை போட்டு இண்டர்வெல்லுக்காக ஏங்க வைக்கிறார். பென்னி குவிக் கதையை ரஜினியை வைத்து பின்னியிருக்கிறார்கள். சூப்பர்ஸ்டார் படங்களுக்கு யாரும் உலக சினிமா எதிர்பார்ப்புகளுடன் வருவதில்லை தான் , அதற்காக இப்படியா தமிழ் ரசிகர்களை அசிங்கப்படுத்துவது?? அதுவும் அந்த கொடூரமான க்ளைமேக்ஸ் காட்சி யூடுயூப்களில் ஹிட் அடிக்கப்போகிறது. பவர்ஸ்டார்களுக்கும் பாலகிரிஷ்ணாக்களுக்கும் சூப்பர் ஸ்டார் விட்ட பகிரங்க சவால் அந்த காட்சி. ஏ.ஆர்.ரகுமான் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது இடது கையில் இசை அமைத்திருப்பார் போல, டைட்டில் தவிர எங்குமே அவரைக் காணோம்.

ப்ளாஷ்பேக் காட்சிகள் கொஞ்சம் பரவாயில்லை. கலெக்டர் கம் மகராஜா ரஜினி ஊருக்கு டேம் கட்ட போராடுகிறார். வருகிற பிரச்சனையெல்லாம் பன்ச் டயலாக் பேசியே சமாளிக்கிறார்.சோனாக்சி கிராமத்துத் தமிழ்ப்பொண்ணாம். ப்ளாஷ்பேக் என்பதாலோ எழுபது எண்பதுகளில் வந்திருக்க வேண்டிய கதையை காட்டியிருக்கிறார்கள். இயற்பியல் விதிகளை இக்கட்டில் தள்ளும் சூப்பர்ஸ்டார் சண்டைக்காட்சிகள் தமிழ்நாட்டுக்கு புதிதல்ல என்றாலும், அந்த க்ளைமேக்ஸ் பைக் காட்சியையும் பலூன் சண்டை காட்சியையும் தமிழன் ஜீரணிக்க நிறைய நாட்கள் ஆகும். தலைவர் இந்தப் படத்திலும் ஊருக்கு சொத்தெழுதி வைக்கிறார். ஹீரோயின்கள் "கட்டியே தீருவேன்" என ஒற்றைக்காலில் நிற்கிறார்கள். அல்லக்கைகள் அரசியல் பூடக வசனங்கள் பேசுகிறார்கள். "இவர மாதிரி உண்டா" என குணச்சித்திரங்கள் படமுழுக்க குமுறுகிறார்கள். அடி வாங்கியவர்கள் எல்லாம் அந்திரத்தில் பறந்து கிளைமேக்ஸில் தான் கீழே விழுகிறார்கள். கேட்டால் கமர்சியல் படம் என்பார்கள். அதுக்காக மூளையெல்லாம் மூலைல வச்சிட்டு வந்திரனுமா?? சூது கவ்வும் விஜய் சேதுபதி, ஜிகர்தண்டா சிம்ஹா கேரக்டர்களையெல்லாம் ரஜினியை வைத்து யோசித்துப்பாருங்கள். உண்மையிலேயே தியேட்டர்கள் அலறும். தலைவா "நா யானே இல்லே குதிரே" னு பொசுக்குனு லிங்கா மாதிரி இன்னொரு படம் நடிச்சு விட்ராதீங்க... நாடு தாங்காது. பொறுமையா "ப்ளான்" பண்ணி பண்ணுங்க. 

"எம்பொண்ணு வயசுள்ள பொண்ணுங்களோட டூயட் ஆட வைப்பது கடவுள் எனக்குக் கொடுத்த தண்டனை" னு தலைவரு சொல்லிருக்காரு. இப்படி  டூயட் ஆடியே ஆகணும்னு அவர யாரு மிரட்டுறாங்கன்னு தெரியல...உண்மையிலேயே அந்த காட்சிகளை பார்க்க வைத்து கடவுள் நமக்குத்தான் தண்டனை கொடுத்திருக்கிறார்.. ஆக இந்த முறை கே.எஸ் ரவிக்குமார் "கத்து கிட்ட மொத்த வித்தையையும்" இறக்கியிருக்கிறார்.


7 comments:

Sasikumar Rajaram said...

Sema sema, enjoyed thoroughly Siva.. I am getting inspired..

Anonymous said...

very bold and realistic review.யாருக்கும் பயப்படாமல்,மனதில் பட்ட யதார்த்தமான விஷயங்களை பட்டவர்த்தனமாக பதிவு செய்து உள்ளீர்கள்.

Lusty Leo said...

"உப்புமா,கோதுமைதோசை" என தாக்குதல் நடத்துவார்கள்.. adhanaala dhan naan theater pakkam poradhae illa.

Anonymous said...

Very good review. I still can't understand why these people celebrate this type of garbage movie.

Anonymous said...

அருமையான விமர்சனம்...உள்ளதை உள்ளபடியே...ஊடக கவர்களும் உசுப்பேத்தி..உசுப்பேத்தி..ரஜினி ரசிகர்களை போலவே..படம் பார்ப்பவர்களை எல்லாம் மூளையற்ற ஜென்மாக கருதி படம் எடுப்பது வேதனையாக இருக்கிறது...

arul said...

anney ungalukka.. neenga ethai ethir paarththu poonengaa..

http://faarouk.blogspot.com/2014/12/my-question-to-linga-critics.html

neenga vimarsanam paanunganu yaaruney sonna..ennamo ponganney

Anonymous said...

Olaga cinema paakkura moolai ullavan, neeyellam rajini padam paakkanum, vimarsanam pannanumnu yaaru kaettukkittaa? rajini paranthula lagic yenga irukkum.
Kathai itunthalum, illattiyum nee yellam korai sollavae padathukku poara aalu.