காது -மூக்கு- தொண்டை மற்றும் கடவுள்

                            காது -மூக்கு- தொண்டை மற்றும் கடவுள் 
                                           நவம்பர் 2010 -

உமா சங்கர் - M.B.B.S  M.S - ENT Surgeon   என எழுதப்பட்ட போர்டை அத்துடன் அம்பதாவது முறையாக புதிதாக பார்ப்பது போல பார்த்தேன். மருத்துவருக்கு காத்திருக்கும்  வேளையில் பெரிதாய் வேறெதுவும் செய்ய முடியாது. கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டிருந்தது.சிலர் புலம்பியபடி உட்கார்ந்திருந்தனர். ஒரு பெரியவர் தலையை உயர்த்தி டிவியில் ஓடிக்கொண்டிருந்த சீரியலை அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தார்.  அவரின் இரண்டு காதிலும் கட்டுப்போடப்பட்டிருந்தது. திரும்பி ஒரு முறை ரிசப்சனிஸ்ட்டை பார்த்தேன். அவள் கண்ணுக்கு நான் தெரிந்தது போலில்லை.  டாக்டரின் அறைக்கதவை பார்த்தேன். எந்த சலனமும் இல்லை. கடைசியாய் டாக்டரை பார்க்க உள்ளே போனவர்கள் ,வெளியே வராமல் அடம்பிடித்துக் கொண்டிருந்தார்கள். ராணுவத்தை வரவழைத்துத்தான் இவர்களை வெளியேற்ற வேண்டும் போல என எண்ணிக்கொண்டேன் . சில நிமிடத்தில் இறைவனின் கிருபையால் அந்த சின்னப்பெண்ணும், மஞ்ச டீஷர்ட் அப்பாவும் வெளியே வந்தார்கள்.  அந்தப்பெண் தலையை ஒருச்சாய்த்து.. காதை வலது கையால் மூடிய படி வந்தாள். உள்ளே டாக்டரின் ரூமில் இருந்து ஒரு பெல் சத்தம் கேட்டது. மொத்தக்கூட்டமும் கழுத்தை திருப்பி ரிசப்சனிஸ்ட்டை பார்த்தோம். அவள் கணினித்திரையை உற்று நோக்கிவிட்டு  "மிஸ்டர்.சிவாராஜ்" என்று கூவினாள். ஆங்கிலத்தில் எழுதியிருந்த பேரை ரெண்டாய் பிரித்து மனதிற்குள் படித்து..அப்பிடியே கூப்பிட்டிருப்பாள். எனக்கு பரவாயில்லை. இப்போதைக்கு டாக்டரை பார்க்க கெட்ட வார்த்தை சொல்லி கூப்பிட்டாலும் போக தயாராயிருந்தேன். பரவசமாய் என் பேக்குகள் சகிதம் உள்ளே நுழைந்தேன்.

அறையில் குளிர் கொஞ்சம் அதிகமாய் இருந்தது. சங்கர் சார் வாஷ் பேசினில் கையை கழுவிக்கொண்டிருந்தார். அறையின் சுவர்களில் மூக்கு..காதின் படங்கள் வரைந்து பாகங்கள் குறிக்கப்பட்டருந்தது. எனக்கு பத்தாவது பயாலஜி புத்தகம் நியாபகம் வந்தது. அந்த அறையே  ஏதோ கார்ப்பரேட் ஆஃபிஸ் போல இருந்தது. டாக்டர் லேசாய் சிரித்தபடியே தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தார். 

"குட் ஈவினிங் சார்.."

"குட் ஈவினிங்"

சைனஸ் பிரச்சனைகள் எனக்கு உச்சத்தில் இருந்தது. மூச்சு விடவே சிரமப்பட்டுக்கொண்டிருந்தேன்.மார்க்கெட்டில் இருந்த எல்லா "Nasal Spray " களும் எப்போதும் என் வசம் இருக்கும். பார்த்த டாக்டர்கள் எல்லோரும் ஆப்பரேஷன் பண்ணிவிடுவது நல்லது என்றனர். கொஞ்ச நாள் போகட்டும் என தள்ளிப்போட்டுக்கிட்டே வந்து நகரவே முடியாத முட்டுச்சந்தில்  மாட்டிக்கொண்டேன். இரவில் சுவாசிக்க கஷ்டப்பட்டு எழுந்து உட்கார்ந்து கொள்வேன். கையில் வைத்திருந்த எம்.ஆர்.ஐ ஸ்கேன்..முந்தைய மருத்துவ பரிவர்த்தனைகள்.. எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு சங்கர் சாரிடம் விளக்கினேன்.

 எம்.ஆர்.ஐ ஸ்கேனை உற்று நோக்கிக்கொண்டே நான் பேசுவதை கேட்டு  தலையாட்டிக்கொண்டிருந்தார். சிலருக்கு கண்ணாடி முகத்தில் ஒரு அங்கம் போலவே பொருந்திப்போகும். அவர் அந்த ரகம். சில வினாடிகளில் பக்கத்தில் இருந்த ஒரு இரும்பு கொக்கி போன்ற ஒரு சாதனத்தை எடுத்தார். தலையில் குட்டி வெள்ளை லைட் இருக்கிற பெல்ட்டை அணிந்தார். ஒரு சீனியர்  சைனஸ் நோயாளியான எனக்கு அவர் என் மூக்கைத்தான் பரிசோதனைக்காக பார்க்கப்போகிறார் என புரிந்தது. பக்கத்தில் போய் லாவகமாய் தலையை பல ஆங்கிள்களில் திருப்பிக்காட்டினேன். சில வினாடிகள் மௌனத்தில் கடந்தது. அவர் பேச தொடங்கினார். 

"ரொம்ப சிவியரா இருக்கு..ஆரம்ப ஸ்டேஜ்லயே வந்திருந்தீங்கன்னா .. மெடிகேஷன்லயே ட்ரை பண்ணிருக்கலாம்..இப்போ சர்ஜரிய  தவிர வேற ஆப்சன் இல்ல.." 

உண்மையில் நானும் சர்ஜரிக்கு ஒத்துக்கொள்ளும் மனநிலையில் தான் வந்திருந்தேன். அந்த காலங்களில் என்னுடைய  மூக்கின்  எம்.ஆர்.ஐ ஸ்கேனை பார்த்த டாக்டர்கள் எல்லோருமே பாட்ஷாவை பார்த்த பாம்பே போலீஸ் போல பதறுவார்கள். ஆனால் சங்கர் சார் பயமுறுத்தாமல் பேசினார்.   என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது பற்றி விளக்கினார்.


"இது ரொம்ப மைனர் சர்ஜரி..ரெண்டு நாளுல வீட்டுக்கு போயிரலாம்..மூனு நாளைக்கப்புறம் வேலைக்கு போக ஆரம்பிச்சிடலாம்.." 

முதலில் சுவாசப்பாதையில் வளர்ந்திருக்கிற ஃபங்கஸ்கள் அகற்றப்படும். காலங்காலமாய் மூக்கை ஒரு மாதிரி அட்ஜஸ்ட் செய்து சுவாசித்து மூக்கின் நடுவில் இருக்கிற எலும்பு வளைந்திருக்கும். அதுவும் சுவாசிக்க சிக்கல் ஏற்படுத்தும்.  அதை சரி செய்ய இரண்டு மூக்கிற்குள்ளும் ரெண்டு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ராடுகள் அந்த எலும்புடன் வைத்து கட்டப்படும். ஆப்பரேசன் முடிந்து மூன்று நாட்கள் கழித்து தான் அது எடுக்கப்படும். அதுவரை வாய்வழி தான்  சுவாசிக்க வேண்டும். ஏதோ திகில் படத்தின் திரைக்கதை போல இருந்தது.

ஏற்கனவே இணையத்தில் அந்த ராடு சமாச்சாரத்தையும், மூன்றாவது நாள் கட்டு பிரிப்பதையும் பற்றி படித்திருந்தேன். முன்னமே ஆப்பரேசன் செய்துகொண்டிருந்த சக சைனஸியன்ஸ் அதைப்பற்றி எழுதியிருந்தனர். சிலர் உலகத்தின் கொடுமையான வலி அது தான் என்றும்..சிலர் கட்டுப்பிரிக்கும் போது வலி தாங்க முடியாமல் கதறியதாகவும்  சொல்லியிருந்தனர். கிளம்பும்போது டாக்டரிடம் அது பற்றி கேட்டேன். அவர் என் தோளில் கை வைத்து  "நாம ரெண்டு மாசமா தூங்க முடியல..கண்டபடி தும்மல்.. ஒரு உயிரினத்தோட அடிப்படை தேவை சுவாசம்..இங்கே அதுக்கே கஷ்டம்..ஒரு வேல வலிச்சாலும் அந்த அஞ்சு நிமிஷத்த பொறுத்திக்கிறதுல தப்பில்ல ".  நான் பீதியில் தலையாட்டினேன்.

"Trust Me. you are in safe hands"

வெளியே வந்தேன். பின்னாலயே வந்த நர்ஸ் சில மாத்திரைகள் கொடுத்து விட்டு..எப்போது வந்து அட்மிட் ஆக வேண்டும் என்பது குறித்து சொன்னார்.

"பதினொன்னு சனி காலைல ஏழு மணிக்கு வந்து அட்மிட் ஆகிருங்க..அதுக்கு முதல் நாளே வந்து இன்சூரன்ஸ் formality முடிச்சிருங்க.."  

 "சரி மேடம் "

"மறந்திராதீங்க காலைல வெறும் வயித்துல வரணும்"

"அப்போ சட்ட பனியன் போடக்கூடாதா " என மூளை கேட்க  நினைத்ததை  கேட்காமல் கட்டுப்படுத்தி இன்னொரு "சரி மேடம்" போட்டேன் .

-------------------------------------------------------------------------------------------------------------------------

ண்களை பாதிக்கு மேல் திறக்க முடியவில்லை. தொண்டை வறண்டு போய் தண்ணீருக்கு ஏங்கியது. ஒரு முக்கால் மயக்க நிலையில் இருந்தேன். கைகளிலிருந்தும் நெஞ்சிலிருந்தும் சில ட்யூப்கள் சினிமா படங்களில் காட்டுவது போல  ஒரு திரையில்  இணைக்கப்பட்டிருந்தது. கால்வாசி முழித்திருந்த மூளையும் எதிர்மறை எண்ணங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆபரேசன் எசகுபிசகாகி நான் சாவை நோக்கி போய்க்கொண்டிருப்பதாய் எண்ணிக்கொண்டேன். 

"தண்ணீ.. "

"தம்பி இப்போ தண்ணி குடிச்சா வாந்தி வந்திரும்..ஒரு மணி நேரம் ஆகட்டும்."

அந்த ஆண் குரல் ஒரு சலிப்புடன் சொல்லியது. எனக்கு யாரோ தலையணை வைத்து என் தலையை அமுக்குவது போல இருந்தது.கொஞ்சம் கவனிக்கும் போது தான் தெரிந்தது ,என் மூக்கு ராடு வைத்து முழுமையாய் அடைக்கப்பட்டிருந்தது. அதனால் வாய் வழியாய் சுவாசித்துக் கொண்டிருந்தேன்.  படுத்துக்கொண்டே முழுவதும் வாய் வழியே சுவாசிப்பது பெரும் ரணமாய் இருந்தது. மராத்தான் ஓடுவது போல களைத்துக்கொண்டிருந்தேன். வாழ்க்கையில் இது போன்ற கஷ்டமான நேரங்களையெல்லாம்  டீவியில் படங்கள் பார்க்கும் போது ஓட்டிவிட்டு பார்ப்பது போல ஓட்டிவிட்டால் நன்றாக இருக்குமென்று தோன்றியது.

"தம்பி..தலைய தூக்குன மாறி வைக்கணுமா "        

லேசாய் தலையாட்டினேன். நீல கலர் சட்டை போட்ட அட்டெண்டர் அருகில் வந்தார். கட்டிலுக்கு பக்கத்தில் குனிந்து எதையோ சுற்றினார். தலை வைத்திருந்த கட்டில் பகுதி ஒரு அடிக்கு தூக்கியது. கொஞ்சம் பரவலாம் என்றிருந்தது. ஆபரேஷன் முடிந்தவுடன் சில மணிநேரங்கள் ஐ.சி.யூ வில்  கண்காணிப்புக்காக வைத்திருப்பார்களாம். திரும்பி அந்த இடத்தை நோட்டம் விட்டேன். நிறைய பேர் டிசைன் டிசைனாக கட்டுப்போடப்பட்டு ஒவ்வொரு மாதிரி படுத்திருந்தனர். 

பக்கத்தில் வயிற்றில் கட்டுப்போட்டிருந்த பெரியவர்  "என்ன கண்ணா..ஏதும் ஆக்சிடெண்ட்டா"  என்றார். 

இல்லை என்பது போல குறுக்காய் தலையாட்டினேன். அதற்குள் அங்கே அட்டெண்டர் வந்தார். கையிலிருந்த ஒரு பிளாஸ்டிக்  கப்பை அந்த பெரியவருக்கு கொடுத்தார். அது வெஜிடபிள் ஸூப் என அவர்கள் பேசுவதில் தெரிந்தது.

"டே..இவ்ருக்கு என்னடா.."

அட்டெண்டர் என்னுடைய கட்டிலுக்கு பக்கத்திலிருந்த ஃப்பைலை பார்த்துவிட்டு "சைனஸ் ஆபரேசன் ஜி". பெரியவர் பேசும் தோரணையில் அவர் அந்த ஐ.சி.யூ வின் சீனியர் என்பது புரிந்தது.

"தம்பி..இப்போ தான ஆபரேஷன் முடிஞ்சுருக்கு... கொஞ்சம் கேரா இருக்கும்.. அரை அவர்ல சரியாகிடும். தண்ணி தவிக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. இப்போ குடிச்சா வாந்தி வந்திரும்..அனஸ்தீசியா உள்ள போயிருக்குள்ளே.."  

தலையாட்டினேன். பெரியவர் கொஞ்ச நேரம் நிறைய மருத்துவ விஷயங்களை ஒரு பட்டிமன்ற பேச்சாளர் போல பேசிக்கொண்டிருந்தார். நானும் அட்டெண்டரும் அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தோம். "இவரோட ஆபரேசனை இவரே பண்ணிக்கிட்டிருப்பாரோ" என சந்தேகிக்கும் அளவுக்கு பேசினார்.  அட்டெண்டர் பெரியவரை "போதும் ஜி..டாக்டர் வந்தா திட்டுவாங்க"  என சாந்தப்படுத்தினார்.

கொஞ்ச நேரத்தில் ஷங்கர் சார் வந்தார். பக்கத்து சீட் பெரியவர் ஒருக்கழித்து படுத்துக்கொண்டு எங்களை ஆர்வமாய் பார்த்தார்.  ட்ரெயினில் பக்கத்து சீட்காரர்களை வேடிக்கை  பார்ப்பது போல இருந்தது. எனக்கு இப்போது ரூமில் பனிமூட்டம் குறைந்திருந்தது. ஷங்கர் சார் தெளிவாய் தெரிந்தார்.

"என்ன சிவராஜ்...இன்னும்  தூக்கமா இருக்கா.."

"இப்போ பரவால்ல.."

"எல்லாம் முடிஞ்சது.. ரெண்டு மணி நேரம் ஆச்சு.. அவளோ fungus சதை ..ஒரு குட்டி பிளாஸ்டிக் டப்பா நொம்பிடுச்சு..எப்பிடிய்யா இத்தனை நாள் மூச்சுவிட்டுக்கிட்டு வாழ்ந்த.."  

இதுக்கு கேவலப்படுவதா..பெருமைப்படுவதா என்று யோசிக்காமல் பொத்தாம் பொதுவாய் சிரித்தேன்.

"சார் தண்ணி தவிக்குது.."

"கொஞ்ச நேரம் பொறுத்துக்கோங்க.."

"ஆபரேஷன்ல தப்பிச்ச பேஷண்ட் ,தாகத்துல செத்துட்டான்னு ந்யூஸ் வந்தா ஆஸ்பத்திரிக்கு தான் கெட்ட பேராகும் "  

ஷங்கர் சார் குனிந்து லேசாய் சிரித்தார்.

"மூக்குல இத அடைச்சிருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு சார்..படுக்கவே முடில "

"பொறுத்துக்கோ ..இட் ஐஸ் ஒர்த் இட் ..எட்டு மணிக்கு உன்னோட வார்டுக்கு போயிடலாம் "  

சொல்லிவிட்டு என் பதிலுக்கு காத்திராமல் வெளியே கிளம்பினார். பெரியவர்  என்னைப்பார்த்து "தம்பி வெளி வார்டுக்கு போனேனா..குமுதம் கிமுதம் கெடச்சா..இந்த அட்டெண்டர்கிட்ட கொடுத்துவிடு

தலையாட்டினேன்.

------------------------------------------------------------------------------------------------------------------------


உமா சங்கர் - M.B.B.S  M.S - ENT Surgeon   என எழுதப்பட்ட போர்டை திரும்பவும் வெறித்துப்பார்த்து உட்கார்ந்திருந்தேன். மூக்கை மறைத்து மாஸ்க் போட்டிருந்தேன். மூக்கில் ராக்கெட் விட்டது போல ரெண்டு துவாரத்திலும் ராடு சொருகப்பட்டிருந்ததால் பொது மக்களை பயமுறுத்த வேண்டாம் என மாஸ்க் போட்டு மறைத்திருந்தேன். ஆபரேசன் முடிந்து மூன்று நாளாகியிருந்தது. இப்போது மூக்கில் சொருகப்பட்டுள்ள கொசுறுகளை அகற்ற வேண்டும். இணையவாசிகளின் கருத்தின் படி மூக்கில் இருந்து அவற்றை அகற்றும் போது "நாம் நரகத்தின் வாசலை தொட்டு" விடுவோமாம். சிலர் "மூளைக்குள் தேள் கொட்டுவது போல இருக்கும்" என்றனர். இணையம் இல்லாத போது வாழ்க்கை நிம்மதியாக இருந்தது. தகவல்கள் சில நேரங்களில் வரம். பல நேரங்களில் சாபம்.

நர்ஸ் பழக்கமாகியிருந்தார். சினேகமாய் சிரித்தார். 

"இன்னும் பத்து நிமிஷம் தான்..ரெண்டு பேருக்கு அப்புறம் நீங்க தான் " 

"ரொம்ப கொடூரமா இருக்குமா "

"அவளோ இருக்காது..ஆனா போன மாசம் இந்த மாதிரி எடுக்குறப்போ ஒரு பொண்ணு மயங்கிட்டா..அதுனால தான் டாக்டர் கடைசி அப்பாயிண்ட்மெண்ட் போட சொன்னாரு .."

"இந்தத் தகவல் இந்த நேரத்துல எனக்கு ரொம்ப உபயோகமா இருந்துச்சு ..நன்றிங்க.."

சிரித்தார். கொஞ்ச நேரத்தில் உள்ளே போனோம்.ஷங்கர் சார் க்ளோவ் போட்டுட்டு தயாராய் இருந்தார். "வாங்க சிவராஜ் .. லெட்ஸ் கெட் திஸ் டன் ".பயம்  தான் நமக்குள் இருக்கும் வலிமையை அடையாளம் காட்டுகிறது. தயாரானேன். 

"ம்ம்..வேமா சட்டைய கழட்டிட்டு பெட்ல படுங்க " 

எதுக்கு சட்டைய கழட்டனும்கிற கேள்வியெல்லாம் எழாமல் சொன்னதை செய்தேன். டாக்டர் கட்டிங் பிளேயர் போன்ற ஒன்றுடன் பக்கத்தில் வந்தார். சினிமா படங்களில் கடைசி கட்டங்களில் வில்லன்கள் கொடூர ஆயுதங்களுடன் வருவார்களே..அது போல இருந்தது. அடுத்த ஒரு மூன்று நிமிடங்கள் கொடூரமாய் இருந்தது. யாரோ மூக்கு வழியாய் கை விட்டு , "ஆஃ ப் ஸ்பின்னர்கள் பந்தை சுற்றுவது போல " மூளையை சுற்றுவது போல இருந்தது.

 டாக்டர் இடையிடையே "பல்ல கடிக்காதீங்க..தம் கட்டாதீங்க " என்றார். "நானா எதுவும் பண்ணல..அதுவா நடக்குது சார்" என அவருக்கு சொல்ல நினைத்தேன். அந்த மூன்று நிமிடம் ,மூன்று செமஸ்ட்டர்கள் போல ரணமாய் ,மெதுவாய் போய்க்கொண்டிருந்தது.

"முடிஞ்சது..மெதுவா எந்திரிங்க.." எழுந்தேன். மூக்கிலிருந்து ரத்தம் பொத பொதவென நெஞ்சில் வழிந்தது. நர்ஸ் கையிலிருந்த பஞ்சில் துடைத்தார். நமது ரத்தமாகவே இருந்தாலும்  பார்க்கும் போது  பயமாகவே இருக்கிறது. "இது நார்மல் தான் பேனிக் ஆகாதீங்க" என்றார். கொஞ்ச நேரத்தில் அடுத்து ஒரு வாரத்துக்கு என்னென்ன சாப்பிட வேண்டும் என விளக்கினார். கேட்டுக்கொண்டேன்.


"எதுவும் தேவைன்னா என்னோட official நம்பருக்கு கால் அல்லது ஸ்.ம்.ஸ் அனுப்புங்க"

"சரி சார் "

வீட்டுக்கு கிளம்பினேன். ரெண்டு நாள் கழித்து அவருடைய எண்ணிலிருந்து "ஹொவ் ஆர் யூ ?" என குறுஞ்செய்தி வந்தது. 


 "நீளாத இரவில் 

    அடர்த்தியான உறக்கத்தில்  

           தும்மலில்லா காலையில் 

                  தினமும் காண்கிறேன்  கடவுளை" னு பதில் அனுப்பினேன். சிரிக்கும் சுமைலி அனுப்பினார்.

கருத்துகள்