தமிழ் புத்தக பரிந்துரைகள்

 "நிகழ்காலத்திலேயே இருக்க பழகுங்கள்.கடந்த கால சுமையையோ..எதிர்கால பயத்தையோ தூக்கி சுமக்காதீர்கள்" என்பார்கள் அறிஞர்கள். என்னைப்பொறுத்த வரை நல்ல புத்தகங்களை கையிலெடுத்துக்கொண்டால் மூன்று காலங்களிருந்தும் விடுபட்டு  விடலாம். உலகியல் இன்ப துன்பங்களிருந்து ஜகா வாங்கி, அந்தந்த புத்தகங்கள் உருவாக்கிக்கொடுக்கும் நான்காம் உலகத்தில் நிம்மதியாய் திரியலாம். தமிழ் நாவல்களை வரிசைப்படுத்தவோ,விமர்சிக்கவோ எனக்கு அருகதை இல்லை. நான் வாசித்தவற்றில் எனக்கு பிடித்தவற்றை இங்கு கொடுத்துள்ளேன். உங்களுக்கும் இது பயன்படலாம். 



காவல் கோட்டம் (சு.வெங்கடேசன் ): சாகித்ய அகாடெமி ஜெயித்தது என்பதால் தான் இந்த நாவலை வாங்கினேன் . நாம் படித்த எந்த வரலாற்று புத்தகங்களும் சொல்லாத மதுரையின் வரலாற்றை இது பேசுகிறது . கிட்டத்தட்ட  ஆயிரம் பக்கங்கள்.குற்றப்பரம்பரை பற்றி,தாதுப்பஞ்சம் பற்றி..முல்லை பெரியார் அணை உருவானது பற்றி..என எல்லா தென்தமிழக  வரலாறு பற்றியும் சு.வெ அலசுகிறார்.புனைவு போல வரலாற்று உண்மையின் மேலே ஏறி நடப்பது இந்த நாவலின் சிறப்பு. இந்தப்புத்தகத்தின் பல பகுதிகள் பள்ளி/கல்லூரி பாடத்திட்டத்தில்  சேர்க்கப்படவேண்டியது. இதற்குள்ளிருந்து பத்து தரமான தமிழ்ப்படங்கள் எடுக்கலாம். வசந்த பாலன் முயற்சித்தார்(அரவான்). நான் சு.வெ வின் "வேள்பாரி " இரண்டாம் தொகுதி படிக்கவில்லை. படித்தவரை என் அளவீட்டில்  வேள்பாரியை விட காவல் கோட்டம் ஒரு இன்ச் மேலே நிற்கிறது.

உப பாண்டவம் (எஸ்.ராமகிருஷ்ணன் ): நமக்கு மகாபாரதம் தெரியும் என்ற எண்ணம் இருந்தால் அது மேல் தீயை கொளுத்துகிறார் எஸ்.ரா. கிளைக்கதைகள் மட்டுமே மகா பாரதத்தில்  ஆயிரக்கணக்கில் இருக்கிறது . நிறைய பயணங்கள்..ஆராய்ச்சிகள் செய்து..இந்தக்கதைகளையெல்லாம் தன்  பாணியில் நமக்கு சொல்கிறார். ஒரே பாரதம் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரி கொண்டாடப்படுகிறது .தமிழகத்தில் கர்ணனுக்கு  நாம் எக்ஸ்டராவாய் பூப்போட்டால்  ..கேரளத்தில் பீமனுக்கு கொஞ்சம் கூடுதலாய் மாஸ் காட்டுகிறார்கள் என்கிறார் எஸ்.ரா. மகாபாரதம் பிடிப்பவர்கள் கண்டிப்பாய் படிக்கவும்.

கள்ளிக்காட்டு இதிகாசம் (வைரமுத்து ) : இந்த புத்தகம் ஒருவேளை ஆங்கிலத்தில் வந்திருந்தால் டைட்டானிக் போல படங்கள் எடுத்திருப்பார்கள் .வைரமுத்து  அவர்களின் நாவலின் சிறப்பே உரைநடை எழுத்துக்களும் பல நேரங்களில் கவிதை போல உங்களை உருக்கும். நாவல் முடியும் போது உங்களுக்கு தொண்டை அடைக்கவில்லை என்றால் நான் ஆயிரம் பொற்காசுகள் பரிசளிக்கிறேன். ஒவ்வொரு முறை வைகை அணை போகையிலும் அதன் நீரோட்டத்தை பார்க்கையில் கள்ளிக்காட்டு இதிகாசம் ஞாபகம் வரும். "இந்த நீர் அதன் வழித்தடங்களில் ஏற்படுத்திய சோகங்களை கடலில் சென்றாவது கரைக்குமாக!!" என எண்ணிக்கொள்வேன். வடுகபட்டியாரின் "கருவாச்சி காவியம்","தண்ணீர் தேசம்" போன்றவையும் இதயத்துக்கு நெருக்கமாயினும்  "கள்ளிக்காட்டு இதிகாசம் " உள்ளுக்குள்ளயே சென்று உசுரை வாங்கி விடுகிறது .(உவமையாய் சொன்னேன்.   ஆரோக்கியத்துக்கு பங்கமில்லை )



ஆடுஜீவிதம்(பென்யமின் /எஸ்.ராமன் ) : பிரிதிவிராஜ் நடிக்க இந்நாவல் படமாய் வந்துவிட்டது தான். விருதுகளெல்லாம் வெல்லப்போகிறது தான். இந்த வருடத்தின் சிறந்த படம் தான். ஆனால் நாவலுக்கும் படத்திற்கும் ஆன வித்தியாசம்...  பாத்ரூம் ஷவருக்கும் ,குற்றால அருவிக்குமான  வித்தியாசம். பென்யமினின் இந்தப்புத்தகம்  வளைகுடா நாடுகளில் நடக்கும் உழைப்பு சுரண்டலை பட்டவர்த்தனப்படுத்துகிறது. பாலைவன மணல் காட்டில் நடக்கும் கொடூரங்களை பென்யமின்  சிலநேரங்களில் நகைச்சுவையுடன் விளக்கும்போது நமக்குள் சிரிப்பும் வலியும் ஒரே நேரத்தில் உருவாகி சங்கடப்படுத்துகிறது. மொழிப்பெயர்ப்பு நாவல்களில் இருக்கும் அந்நியத் தன்மை இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார் இராமன்.

டார்த்தீனியம் (ஜெயமோகன்): இது ஜெயமோகனின் குறுநாவல்கள் தொகுப்பில் வரும் ஒரு நாவல். எழுத்தாளர் முத்துலிங்கத்தி்டம் "தமிழில் உலகத்தரமான படைப்புக்களை கொடுத்தவர் யாரென நினைக்கிறீர்கள்" என விகடன் பேட்டியில் கேட்டார்கள். அவர் சொன்ன பெயர் "ஜெயமோகன்". கூடவே "நோபல் பரிசுக்கும் அவர் தகுதியானவர்" என்றார். ஏழாம் உலகம், யானை டாக்டர், உலோகம் போன்ற நாவல்கள் மூலம் நமக்கு ஜே.மோ வின் உலகங்கள்   பழக்கப்பட்டாலும்   டார்த்தீனியம் உருவாக்கும் கருப்பு உலகம் மனதிற்குள் கலக்கத்தை ஏற்படுத்தும். தனிப்பட்ட முறையில் இதைப்படித்து முடிக்க எனக்கு நிறைய தைரியம் தேவைப்பட்டது. ஜே.மோவே சொல்வது போல "ஒரு நல்ல படைப்பு. படிப்பவரின் புரிதல்களை ஆட்டம் காண வைக்கும்.. அச்சுறுத்தும்..." உங்களுக்கு தைரியம் இருக்கும் பட்சத்தில் மட்டும் ஜே.மோவை படியுங்கள். அதிலும் இந்நாவல் நம் மூளையில் துப்பாக்கிச்சூடு நடத்தும்.



அறம் (ஜெயமோகன்): ஒரே ஜெயமோகன் புராணமாய் போகிடுமோ என்ற பயம் வந்தாலும் இந்த சிறுகதை  தொகுப்பை ஒதுக்கி வைத்து விட்டு நகர முடியாது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். வாழ்க்கை பல நேரங்களில் மனிதர்களின் அறத்தை சோதித்துக்கொண்டே இருக்கும். வெகு சிலராலேயே அந்த சோதனைகளை வைராக்கியமாய்  கடக்க முடியும்.இதில்  வரும் "சோற்று கணக்கு", "வணங்கான்" கதைகள் நாம் கொண்டாடப்பட வேண்டியவை . ரொம்பவும்  பிடித்த யாருக்காவது  பரிசு கொடுக்க வேண்டுமென்றால்  இந்தப்புத்தகத்தை கொடுக்கலாம். ஒவ்வொரு தமிழனும்...இல்லையில்லை மனிதனும் படித்தே ஆக வேண்டிய புத்தகம்.



ஆ (சுஜாதா) :  தமிழ் இலக்கிய உலகம் சுஜாதாவை பெரிதாய் பெருமைப் படுத்தியதில்லை. அவரை "லைட் ரீடிங்" வகையில் சேர்த்து ஒதுக்கி விடுவார்கள். படிக்கும் போது எங்காவது சிரிப்பு வந்தால் அது இலக்கியம் இல்லை என்கிற மாயை இங்கே உண்டு. சுஜாதாவின் " .."  எனக்கு மிகவும் பிடித்த நாவல். எடுத்தால் கீழே வைக்க முடியாது. அறிவியலுக்குள்ளும்.. அமானுஷியங்களுக்குள்ளும் ...வண்டியை மாற்றி மாற்றி விட்டு கலக்கியிருப்பார். தலைவனின் "ஸ்ரீரங்கத்து தேவதைகள் ".. "ரத்தம் நிறம் சிகப்பு" ரெண்டும் எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்தவை . மனதில் எப்பேர்ப்பட்ட கவலை இருந்தாலும் சுஜாதாவை படித்தால் ரெண்டே வரிகளில் உற்சாகத்தை கொண்டுவந்து  விடுவார் 

மோகமுள் (தி.ஜா ) :  அக்ரஹாரம்..சங்கீதம்..கும்பகோணம்..என்றவுடன் எகிறி இந்த நாவல் பக்கம் போகாமலிருந்தேன். சில நண்பர்கள் "படித்துப்பார்..தி ஜா ..ஏமாத்த மாட்டார்"னு துண்டை போட்டு தாண்டினார்கள். வாய்ப்புக்கொடுத்தேன். என்னை வாரி அனைத்துக்கொண்டது. அவர் பார்த்த வாழ்வியலை கண்ணியமாய் அழகாய் சொல்லியிருக்கிறார். மயிலிறகு போல காதல் ..ஆங்காங்கே சங்கீதம் என மழையில் போகும் பேருந்து பயணம் போல சுகமாய் நாவல் நகரும்.   



ஒரு புளியமரத்தின் கதை (சுந்தர ராமசாமி): சும்மாவெல்லாம் கம்பு சுத்த விரும்பவில்லை. இந்நாவலை எல்லோராலும் படிக்க முடியாது. நான் வாங்கிவைத்து ஆறு மாதம் கழித்து தான் படித்தேன்."நா இப்படி தா எழுதுவேன்..படிச்சா படி..இல்லாட்டி போ "   என ஒவ்வொரு பக்கத்திலும் சு.ரா சொல்வது போல இருக்கும். கதையின் நாயகன் "புளியமரம் " பற்றிய குறிப்புகளை  பக்கங்களை விரயம் செய்து விளக்குவார். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அந்த புளியமரம் நமக்குள் படர்ந்து விடும். அதற்கப்புறம் தான் ஏன் இந்த ஆளை எல்லாரும் சிலாகிக்கிறார்கள்  என அறிவோம். அது மூன்றாவது பக்கத்திலோ அல்லது முப்பதாவது பக்கத்திலோ நிகழலாம் .பொறுமை முக்கியம்.

சில நேரங்களில் சில மனிதர்கள் (ஜெயகாந்தன் ): தமிழ் கிளாசிக். அன்றைய காலகட்டத்தில் இப்படி ஒரு நாவலை எழுத ஜெ.கே வால் மட்டுமே முடியும். மனிதன் எந்நேரமும் ஒரு தராசுடனே அலைகிறான். யார் கிடைத்தாலும் அவன் தராசுகளில் அளந்து தீர்ப்பு கொடுத்துக்கொண்டே திரிகிறான். "மயிரே போச்சு" போங்கடா என  தன் பாதையில் பயணிக்கும் கங்காவின் கதை தான் இந்நாவல். பக்கங்களெங்கும் ஜெ.கே உங்களுடன் பேசிக்கொண்டே இருப்பது போல இருக்கும். 

இதுக்கு மேல் எழுதி போரடிக்க விரும்பவில்லை. புத்தகங்களை கொண்டாடுவோம்!!!!


 





 







 


கருத்துகள்