அலுவலகத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். இடது ஓரத்தில் இருந்த மரத்தின் நிழல் என் முகத்தில் விழுந்து அந்த சூடான மாலையை கொஞ்சம் சாந்தப்படுத்திக்கொண்டிருந்தது. லாபியில் செக்கியூரிட்டி ரேடியோ கேட்டுக் கொண்டிருந்தார்.
" நம் பள்ளத்தாக்கில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் ..மாலை 4 மணி முதல் 7 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும்.."
அரிசோனா மாகாணத்தை இந்த ஊர்க்காரர்கள் பள்ளத்தாக்கு (Valley) என்றே அழைக்கிறார்கள். மலைகளின் கீழே அமைந்திருப்பதால் அப்பெயர் என அறிகிறேன். ஜூன்,ஜூலைகளில் வெயில் வெளுத்து வாங்கும். மற்ற மாதங்களில் இயற்கை அன்னை நம்மை சங்கடப்படாமல் பார்த்துக்கொள்வாள். அமெரிக்காவின் கிழக்கு மாகாணங்களை போல குளிர் காலங்கள் இங்கே கொடூரமாய் இருக்காது. கொஞ்ச நேரத்தில் பென் மட்டும் வெளியில் வந்தான். என்னை பார்த்து அளவாய் சிரித்துவிட்டு மொபைலை எடுத்து நோண்டிக்கொண்டிருந்தான். பெரும்பாலும் அலுவலகவாசிகளை "அலுவலக நண்பர்கள்" என கூறிக்கொள்வது நாகரீகம் கருதி என்றே நினைக்கிறேன். அலுவலகத்தின் தொடர்பு அறுந்து போகும் போது அவர்களும் இயல்பாய் மறைந்து போவார்கள். நானும் பென்னும் அப்படியாப்பட்ட அலுவலக நண்பர்கள் தான். நான் அவன் பக்கத்தில் போனேன்.
"பசிக்குது பென் .. நாம வேணும்னா முன்னாடி போயிரலாமா"
எங்கள் டீமின் சார்பில் ஒரு ஹோட்டலில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். எப்போதும் நாலைந்து பேராய் வெளியே வருவார்கள், ஒரு காரில் ஏறி செல்வோம். அன்னைக்கென்று பார்த்து எல்லா பக்கிகளும் கண்டபடி கட்சிப்பணி செய்து கொண்டிருந்தார்கள். என் வயிறு, பசி காரணமாய் ஏற்கனவே என்னை கடிந்து கொண்டு வினோதமான சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தது.
"போலாமே.." என்னை பார்க்காமல் போனை பார்த்தபடியே பேசினான்.
"நா போய் என் வண்டிய எடுத்துட்டு வந்துடறேன்"
"ஷிவ் ..இருங்க "வேமோ " புக் பண்ணிருக்கேன்..அதுல போயிடலாம் "
அவன் வேமோ (WAYMO ) என சொன்னதும் 'ஏழாம் அறிவு' படத்தில் போதி தர்மரை குறிப்பிடும் போது "தாமூஊஊஊஊ" என சத்தம் குடுத்து ஒரு பின்னணி இசை வருமே அது என் தலைக்குள் ஓடியது. வேமோ (WAYMO ) எனப்படுவது செயற்கை நுண்ணறிவால் ஓட்டுநர் இல்லாமல் தானாய் இயங்கும் ரோபோ கார். தற்சமயம் அமெரிக்காவில் இரண்டு மூன்று நகரங்களில் சேவையை தொடங்கி இருக்கிறார்கள். ஒரு வருடமாகவே இந்த கார் பீனிக்ஸ் நகரில் ஓடிக்கொண்டிருந்தாலும் நான் ஏறியதில்லை. மனுஷன் வண்டி ஓட்டுனாலே ரோட்டுல ஆயிரம் பிரச்சனை வருது, இதுல "இதுகளை" நம்பி காரில் ஏற என் பரிசுத்த ஆவி ஒத்துக்கொள்ளவில்லை.
நான் ஒருமாதிரியாய் விழிப்பதை பார்த்து "ஓ ..நீங்க போனதில்லையா It will be fun" என்றான். கொஞ்ச காலமாகவே நண்பர்கள் இந்த கார்களில் இருந்தபடி புகைப்படங்களை சுட்டு தள்ளி.. இன்ஸ்டாகளில் பதிவிட்டு தாங்கள் ட்ரெண்டில் இருப்பதாய் காட்டிக்கொண்டிருந்தார்கள். "சரி போய்தான் பார்ப்போமே " என என் மனதும் கிளர்ச்சியானது. சரியாய் பத்து நிமிடத்தில் waymo கார் எங்களை நோக்கி வந்தது. கார் பெரிய வித்யாசமாகவெல்லாம் இருக்காது. அதன் தலையில் ஒரு கொண்டை போன்ற சென்சார் ஒன்று சுத்திக்கொண்டே இருக்கிறது. அந்த சென்சாரை வைத்து மேப்புகளை மேம்படுத்தி தன் பாதைகளை தீர்மானிக்கிறது. வண்டியின் எல்லா மூலைகளில் கேமராக்கள் இருக்கிறது. வெள்ளை நிறத்தில் தேர் போல மெதுவாய் "வேமோ" எங்கள் பக்கத்தில் வந்தது. காரின் முன் சீட்டில் யாருமில்லாமல் ஸ்டேரிங் அதுவாய் திரும்பி லாவகமாய் எங்கள் பக்கத்தில் வந்து நின்றதை பார்த்து எச்சில் விழுங்கிக்கொண்டேன்.
"அடுத்து" என்பது போல நான் பென்னை பார்த்தேன். அவன் என் பக்கத்தில் வந்து அவன் மொபைலில் இருந்த ஆப்பை காட்டினான். அதில் "அன்லாக் " என்கிற பொத்தான் துருத்திக்கொண்டு தெரிந்தது. "இப்ப இத அமுக்கனும் .." என சொல்லி அதை அமுக்கினான். காரின் கதவு திறந்து கொண்டது.
" மொத தடவ வரீங்க..பரவால்ல நீங்க முன்னாடி ஏறிக்கோங்க .." என சொல்லிக்கொண்டே பென் பின் சீட்டில் ஏறிக்கொண்டான். "இது சலுகையா..தண்டனையா " என என்னை அவன் யோசிக்க கூட விடவில்லை. நான் முன் சீட்டில் ஏறிக்கொண்டேன். ஒரு இயந்திரக்குரல் சீட் பெல்ட் போடச்சொல்லியது, பாஸ்கோட் கேட்டது..போகும் முகவரி சரி பார்க்க சொல்லியது.எல்லா சம்பிரதாயங்களையும் முடித்தவுடன் வண்டி நகரத்தொடங்கியது. பத்து அடி தூரத்தில் இருந்த ஒரு இடது வளைவில் "இண்டிகேட்டர்' போட்டு அழகாய் திரும்பியது. எனக்கு நான் சின்ன வயதில் பார்த்த "பழி வாங்கும் கார்" என்ற பழைய படம் ஞாபகம் வந்தது.
இரண்டே நிமிடத்தில் மெயின் ரோட்டில் இறங்கி மற்ற மனுசப்பயக ஓட்டும் கார்களுடன் கலந்தது. கொஞ்சம் கூட பிசுறு தட்டாமல் ஒரே வேகத்தில் போய்க்கொண்டிருந்தது. பயம்..ஆச்சர்யம் எல்லாம் கொஞ்சம் மட்டுப்பட்டு மனது ஆசுவாசமாய் இருந்தது. டெஸ்லா கூட இந்த ரோபோ டாக்சி தொழிலில் இறங்கப்போவதாய் படித்திருந்தேன். உலகம் முழுக்க கொஞ்ச கொஞ்சமாய் இவை இறங்கப்போகிறது. "இன்னொரு இருநூறு கூட கொடுத்தா வரேன் " என அடம்பிடிக்காது என்பதால் நம்ம ஊரிலும் வேகமாக களம் காணக்கூடும். என்ன..கொஞ்சம் வண்டி எசகு பிசகாக ஓடினால்.. வேகமாக போய் ஓட்டுனரை திட்டுவோம். இதில் அது முடியாதது ஒரு சங்கடம். இப்போது நெடுஞ்சாலையை அடைந்து விட்டிருந்தோம். வண்டி வேகத்தை கூட்டியது. சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன். சாலை விதிகளையெல்லாம் மதித்து ..ரொம்பவும் கவனமாக வண்டி ஓட்டும் ஒரு ஆசாமி வண்டி ஓட்டுவது போல இருந்தது. பென் திடீரென உயிர்ப்பெற்று என்னிடம் பேசத்தொடங்கினான்.
"எப்படிருக்கு ஷிவ்...ரொம்ப ஸ்மூத்தா திரும்புதுல ..எப்பிடி முன்னாடி போற வண்டிக்கு ஸ்பேஸ் கொடுத்து தொடருது பாருங்க..."
"அதெல்லாம் சரி ..ஒரு வேல இந்த வண்டி எங்கேயாச்சும் இடிச்சி ஏதாவது ஆகிருச்சுனா ..யார அரெஸ்ட் பண்ணுவானுங்க.. கம்பெனி சி.ஈ.ஓ வையா? இல்ல கோட் எழுதுன டெவலப்பர்களையா?"
பென் ஒரு மாதிரி முழித்தான். இது மாதிரி நார வாய்க்கேள்விகளை என்கிட்ட ஏன்டா கேக்குற? என்பது போல இருந்தது.
"சான் பிரான்சிஸ்கோல இந்த மாதிரி ஏதோ நடந்திருக்கு ஆனா அத லீகலா எப்படி டீல் பண்ணுவாங்கன்னு தெரில .." . சீரியஸாய் பதில் சொன்னான்.
"ம்ம்.. தப்பா கோட் எழுதுனவுங்கெல்லாரையும் புடிச்சு ஜெயில்ல போடுவாங்கன்னா ..எனக்கெல்லாம் ரெட்டை ஆயுள் தண்டனை கிடைக்கும்.."
கேட்டுவிட்டு பென் சிரித்தான். "நான்லாம் அடுத்த ஜென்மத்துலயும் ஜெயில்ல தான் பொறக்கணும்". ரெண்டு பேரும் வாய்விட்டு சிரித்தோம்.
ஜன்னல் வழியாய் பார்த்தேன்... எங்கும் மலைகள். அதன் மேலே வெயில் பட்டு மஞ்சள் நிறத்தில் மின்னிக்கொண்டு இருந்தது. காரின் திரையில் பார்த்தேன் ஹோட்டலை அடைய இன்னும் பனிரெண்டு நிமிடங்கள் இருப்பதாய் காட்டியது. இப்படி ஒரு காரில் போவேன் என யாராவுது இரண்டு வருடம் முன்பு சொல்லியிருந்தால் கூட நம்பியிருக்க மாட்டேன். சயின்ஸ் பிக்சன் படங்களில் வந்த பீஸ்கள் எல்லாம் இப்படி ரோட்டில் உலாத்தும் என நான் நினைத்து பார்க்கவில்லை.
" எனக்கு தெரிஞ்சி ..இந்த வீட்டு வேலையெல்லாம் முழுக்க செய்ற மாதிரி ரோபோ தான் மார்க்கெட்ல மொத வரும்..என்ன மாதிரி டெய்லி பாத்திரம் கழுவி சாவுற எவனோ இந்நேரம் அத பண்ணிட்டு இருப்பான்"
பென் சொல்வது வாஸ்தவம். இனி கூட்டுவது..துவைப்பது..சமைப்பது போன்ற தினசரி வீட்டு வேலைகளெல்லாம் கம்பியூட்டர் கோட்களாக மாற்றப்பட்டு மெஷின்களுக்குள் திணிக்கப்படும். டி.வி விளம்பரங்களில் சூர்யா..ஆர்யா போன்றவர்கள் கோட் சூட் போட்டுக்கொண்டு "எடுத்துக்கோ..எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோனு" ரோபோக்களை விற்றுக்கொண்டிருப்பார்கள்.மனிதர்கள் வீட்டில் எந்த வேலையுமில்லாமல் எதையாவது நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கலாம். காலையில் காபி கொடுக்கும்போது நம் இதயத்துடிப்பை கவனித்து "எஜமான்..இன்னைக்கு உங்களுக்கு அட்டாக் வர அதிக வாய்ப்பிருக்கு..ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணிட்டேன்..போய் அட்மிட் ஆகியிருங்க..அப்பல்லோவ மட்டும் தவிர்த்திருங்க.."னு சொல்லலாம். நாமே நினைத்தாலும் இந்த செயற்கை நுண்ணறிவு சமாச்சாரங்களை தவிர்க்க முடியாது. வேதாளம் போல நம் தோளில் ஏறிக்கொள்ளும். அதோடு வாழ பழகிக்கொள்வதே ஒரே வழி.
ஹோட்டலுக்கு பக்கத்தில் வந்து விட்டிருந்தோம். வாசலில் நிறைய கார்கள் நின்று கொண்டிருந்தது. நம்ம "வேமோ" பார்க்கிங்கிற்கு வகையான இடம் பார்த்துக்கொண்டிருந்தது.
"ஷிவ்..இந்த வாட்டி காரமில்லாம ஏதாவது ஆர்டர் பண்ணி கொடுங்கப்பா..போன தடவ சாப்பிட்ட மட்டன் பிரியாணி ரொம்ப பிரச்னை பண்ணிருச்சு"
நாங்கள் பெரும்பாலும் இந்திய ரெஸ்டாரண்ட்களில் தான் சாப்பிடுவோம்.
"வாய்ப்பில்லையே..போன வாரம் காரம் கம்மியா தான இருந்துச்சு''
பென் காண்டானான். "யோவ் மனுஷங்களாயா நீங்க..சாப்பிடறப்ப விட ,டாய்லட் போறப்ப தான்யா எனக்கு ரொம்ப உறைச்சிச்சு ". நான் விழுந்து விழுந்து சிரித்தேன். வண்டி சரியாய் நின்றது. "வேமோ" எங்களை மரியாதையான வார்த்தைகளால் இறங்கச்சொல்லியது.
"ஷிவ்..இப்போ தான் நமக்கு மரியாதை. ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சொல்லிருக்காருல..மொத்த பூமியும் மெஷின்களின் கைக்கு போகும். மனித இனத்தின் அழிவு இந்த ஏ.ஐ களின் கையில் தானாம்.."
இறங்குவதற்கு முன் காரின் பக்கம் திரும்பி "உங்களுக்கு அப்பிடி திட்டம் இருந்துச்சுனா என்னையும் உங்க கூட சேத்துக்கோங்க..எனக்கும் மனுஷங்கள பிடிக்காது " என்றேன் .
நாங்கள் இறங்கியபின் கார் சாவகாசமாய் கிளம்பியது . எதிர்காலங்கள் என்னத்தையெல்லாம் சுமந்து கொண்டு நமக்காக காத்திருக்கிறதோ என நினைக்கையில் பயமாக இருந்தது.
கருத்துகள்