அங்கிளாகிய நான்...

 

                         அங்கிளாகிய நான்... 




மின்னலே படத்தின் பாடலை கேட்டுக்கொண்டிருந்த போது  அந்த  இளைஞன் "இது என்ன பாட்டு ஜி..எதாவது தமிழ் ஆல்பமா"  எனக்கேட்ட  நொடியிலோ..  

எங்காவது இணையத்தில்  "புரிஞ்சவன் பிஸ்தா" என்று பகிரப்படும் மீம்ஸ்களை திரும்ப திரும்ப படித்தும்  புரியாமல் தலையை சொரியும் போதோ... 

இளைஞர்கள் தங்களுக்குள் ( " ப்ரோ.. அடுத்த வாரத்துலருந்து ஒன்னா  DP மாத்தி தளபதி பர்த்டேவுக்கு வைப் பண்றோம்")   பேசிக்கொண்டிருப்பதை கேட்டு தலை சூடாகி அவர்களை அண்டர்டேக்கர் போல அலேக்காக கழுத்தைப்பிடித்து தூக்கி கீழே போடவேண்டும் என மனம் துடிக்கும் போதோ..

இப்படி  ஏதோ ஒரு தருணத்தில் தான்.. நான் அங்கிள் ஆகி விட்டதை உணர்ந்தேன். கலெக்டர்  ஆவது..எம்.எல்.ஏ ஆவது  போன்றே அங்கிள் ஆவதும், நிறைய சமுதாய பொறுப்பைக்கொண்ட  பதவி. அதை செவ்வனே செய்ய வேண்டும் என்கிற வைராக்கியம் எனக்குள் உருவாகியிருந்தது.  ஒரு அங்கிளின் தலையாய கடமை  அறிவுரை சொல்லி இளைய தலைமுறையை தாளிப்பது தான்.  இதையெல்லாம்  அவர்கள் கேட்பார்களா...இதெல்லாம் நாம் பின்பற்றினோமா..என்பது பற்றியெல்லாம் எள்ளளவும்   தயக்கம் கொள்ளக்கூடாது.  

அன்புள்ள 2.கே. கிட்ஸ்களே,  அங்கிளாகிய நான் என் அறிவுரை ஆயுதம் ஏந்தி ,உங்கள் அறியாமை பேயை அழிக்க  வந்திருக்கிறேன். படித்து பயன்பெறுங்கள்.


1.   "வாழ்க்கைங்கிறது என்னன்னா .."   போன்ற ஸ்டேட்டஸ் மெசேஜ்கள் போடாதீர்கள். நீங்கள் டயபரில் இருந்த போதிலிருந்தே வாழ்க்கையுடன் வாள்ச்சண்டை செய்து வரும் பல டைகர் முத்துவேல் பாண்டியன்களுக்கே இன்னும் அது பிடிபடவில்லை. கொஞ்சம் பொறுத்தருளுங்கள். வாழ்க்கை உங்களுடன் முதல் ரவுண்டு தான் ஆடியிருக்கிறது. உங்கள் புரிதல்கள் மாறக்கூடும்.   உடனே "காதல்னா என்னன்னா.." "நட்புன்னா என்னன்னா"  னு  இறங்கிவிடாதீர்கள். மேற்படி சமாச்சாரம் அதற்கும் பொருந்தும்.  

2. மகிழ்ச்சியாய் இருங்கள். இன்றைய தேதியில் மிகப்பெரிய மன அழுத்தம் மாணவர்களுக்கே கொடுக்கப்படுகிறது. சந்தோசமாய் இருப்பது தேச துரோகம் போல நமக்குள் விதைக்கப்பட்டுவிட்டது. "ஒன்றிரண்டு மதிப்பெண்கள் முன்னே பின்னே  வந்தால் ஒரு மண்ணும் ஆகி விடாது" .நீங்கள் டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கும் படத்தை நாங்கள் பார்த்துவிட்டு வந்து கொண்டிருக்கிறோம்.  மதிப்பெண்கள் கிட்டத்தட்ட பணம் போலத்தான், சந்தோசத்தை தொலைத்து அதை வாங்கத்தேவையில்லை. இயங்க முடியாத கடைசி நாட்களில் சத்தியமாய்  மார்க் சீட் நம் கண் முன் வராது.  என்றோ நண்பர்களுடன் விளையாடிய சாயங்கால நேரத்து கிரிக்கெட் நியாபகம் வரும்.(அறத்துடன் மகிழ்ச்சியாய் இருப்பது அவசியம். வேண்டாமென்று சொல்லிய பெண்ணை விரட்டுவது மகிழ்ச்சி லிஸ்ட்டில் சேர்த்துக்கொள்ளப்படாது).

3. காதல் இந்நேரம் உங்கள் ஏரியாவுக்குள் நுழைந்திருக்கும். குறைந்த பட்சம் பக்கத்து தெருவிற்காவது வந்திருக்கும். கடவுளே இறங்கி வந்து உங்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தாலும் நீங்கள் கேட்கப்போவதில்லை. நானும் முயற்சி செய்யப்போவதில்லை. ஒன்று சிந்திக்க முடியும் ..இல்லை காதல் செய்ய முடியும்..ரெண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. ஆகையால் முடிந்தவரை முயன்று குறைந்த பட்ச கிறுக்குத்தனங்கள் செய்யுங்கள். வயதான பின் கண்ணாடி முன் நின்று எச்சில் துப்பும் அளவு செய்துவிடாதீர்கள். எங்கள்  கண்ணாடியெல்லாம் இன்னும் உலர்ந்த பாடில்லை.

4. தற்சமயம் இந்த சமூக வலைத்தளங்கள் மூலமாய் ஒரு இணை உலகம் உருவாகியிருப்பது போல தெரிகிறது. நிறைய பேர் உலகத்தில் கோமாவிலும்   இணை உலகத்தில்  உயிர்ப்புடனும்  இருக்கிறார்கள்.  உங்களுக்கு சுமைலிகளும் லைக்குகளும் போடுபவர்கள் எந்தக்காலத்திலும்  வீட்டில் உங்களை திட்டிக்கொண்டே "விக்ஸ்" தேச்சு விடுபவர்களுக்கு மேலானவர்களாகி விடமாட்டார்கள்.

5.  தினமும் உடற்பயிற்சி செய்வது..நீச்சல் கற்றுக்கொள்வது..டிரைவிங் பழகுதல்.. நல்ல உணவு பழக்க வழக்கங்கள்... தெரியாத மனிதர்களுடன் கருத்துப் பரிமாறுதல்..போன்றவையெல்லாம் "அவ்வளவு முக்கியமில்லை" என்பது போல இந்த உலகம் கற்பிக்கும். நம்பி விடாதீர்கள். சொல்லப்போனால் படிப்பு,வேலை, பணம் எல்லாவற்றையும் விட இவை முக்கியமானவை. 

6. உங்களுக்கென்று சில அரசியல் கருத்துக்கள் இருக்கும். அதை எந்நேரமும் ஒளிபரப்பு செய்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. சமையலில் எப்படி "உப்பு -தேவையான அளவு" என்று சொல்கிறார்களோ அது போல பொது வெளியிலும் "அரசியல் -தேவையான அளவு" பேசுங்கள். மடையருடன் வாக்குவாதம் மன நிம்மதிக்கு பங்கம் விளைவிக்கும். ராகுல் டிராவிட் போல தலைக்கு மேலே பேட்டை தூக்கி பந்தை விட்டு விடுங்கள் ..கீப்பரும் ..பௌலரும் ..விளையாடி சாவட்டும்.

7. பக்கத்து வீட்டுக்காரர்கள்..கூட வேலை பார்ப்பவர்கள்..நண்பர்கள்... சொந்தக்காரர்கள்.. இவர்களெல்லாம் செய்வதை நாமும் செய்தாகி விட வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் ஆப்பிள் போன் வாங்கலாம்... சிங்கப்பூர் சுற்றுலா  செல்லலாம்..வீடு கட்டலாம். அது அவர்கள் பாடு. உங்கள் குரலுக்கு எது வருமோ அதை பாடுங்கள். நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை அடுத்த வரை வைத்து தீர்மானிக்காதீர்கள். 

8. புத்தகங்கள் படிப்பதென்பது அளப்பெரிய அனுபவங்கள் கொடுக்கும். வெப்சீரிஸ்கள் லோக்கல் கபாலி என்றால் புத்தகங்கள் கே.ஜி.ஃப் ராக்கி பாய் போல.. மாஸாய்  நேரம் போகும். வாசிப்பு கிட்டத்தட்ட தியானம் போல. மனிதர்களின் தேவை குறைந்து போகும். பல உலகியல் துன்பங்களிலிருந்து  இவை இம்மியூனிட்டி  கொடுக்கும். 

9. பைக்கில் வீலிங் செய்வது...பஸ் படிகளில் தொங்கிக்கொண்டு பயணிப்பது..அபாயகரமாய் செல்ஃபி எடுப்பதெல்லாம் கெத்து என்று நினைத்து சுத்தாதீர்கள். இப்படி கெத்து காட்டிய பலர்..செத்துக் காட்டியிருக்கிறார்கள்  என்பதை மறவாதீர். பாதுகாப்பாய் வாழ்வதென்பது அப்படியொன்றும் அவமானகரமான செயல் அல்ல.

10. எங்களை போல யாராவது சொந்தக்கார அங்கிள்கள் அறிவுரை பொழியும் போது , மூஞ்சை சீரியஸாய் வைத்துக்கொண்டு கேட்டுக்கொள்வது போல நடிங்கள் . பாவம் ..அவர் உங்களிடம் பேசவில்லை. உங்கள் வயதிருக்கும் அவரின் ஓல்ட் வெர்சனிடம் மானசீகமாய் பேசிக்கொண்டிருப்பார். அது ஒரு ஆற்றாமை. தவிர "கவனிப்பது போல நடிப்பது" என்பது கல்யாணத்துக்கு அப்புறமும் உதவும் மிக முக்கியமான ஆற்றல்.

 

ஏதோ முடித்துவிட்டேன் என்று பெரு மூச்சு விடாதீர்கள். அநீதி எப்போதெல்லாம் தலை தூக்கிறதோ அப்போதெல்லாம் திரும்பவும் வருவேன்.       

கருத்துகள்

POOPA இவ்வாறு கூறியுள்ளார்…
கசக்கிட்டீங்க..