சில சம்பவங்கள் : THE COLLEGE ( Chapter: ஒரு பூங்காற்றும்.. சில இலைகளும்.. )

 



திகாலை வேளையின் குளிர்ந்த காற்று முகத்தில் அடித்துக் கொண்டிருந்தது. study hourல் ஜன்னல் வழியாக வயக்காடுகளையும், இரயில்களையும் வேடிக்கை பார்ப்பது சுகானுபவம். திரும்பி ஹாலை பார்த்தேன். எனக்கு வலது பக்கத்தில் குணா ,சாய்ந்த கோபுரம் போல ஒருக்கழித்து படுத்திருந்தான். புத்தகம் ஒன்று கடனுக்கு அவனருகில் கிடந்தது. சூப்பர்வைசர் வார்டன் ஹாலுக்கு வரும்போது லாவகமாய் அவனது காலைத்தட்டுவேன். அவன் சுவடில்லாமல் எழுந்து புத்தகத்தை எடுத்து அடுத்த பக்கத்தை திருப்புவான். இப்படி தூங்கும் எல்லா பன்னாடைகளுக்கும் பக்கத்தில்  ஒரு "ஆபத்துதவி" ஸ்டடி ஹாலில் இருப்பான். அன்றைக்கு வார்டன் முத்தையா தன் இருக்கையில் உட்காராமல் அடிக்கடி  "ரவுண்ட்ஸ்" வந்து பீதியை கிளப்பிக்கொண்டிருந்தார். 

" இந்த முத்தையாவுக்கு என்னாவாம்..நடந்த மணியமாவே இருக்கான்.. இவனுக்கு பெரிய மிலிட்ரில கர்னலா இருக்கோம்னு நெனப்பு.."

குணா அலுத்துக்கொண்டு மூன்றாவது தடவையாக நிமிர்ந்து உட்கார்ந்தான். அதிகாலை எழுதல்,மூன்று முறை பிரார்த்தனை, மூச்சைப்பிடிக்கும் கட்டுப்பாடுகள் என எல்லோருமே "எப்போடா டிகிரிய முடிப்போம்" மனநிலையில் தான் இருந்தோம்.  இருந்தும் நண்பர்கள் சூழ கழிந்த அந்த கடினமான நாட்கள் எப்போதும் கொண்டாட்டமாகவே கழிந்து கொண்டிருந்தது. எதிர்காலம் குறித்த பயங்கள் என்னை அரித்துக்கொண்டிருக்க, குருகுல வழிக்கல்விமுறை உருவாக்கும் தினச்சூழல்கள் எனக்கு ஆசுவாசத்தை கொடுத்தது. தினமும் புது புது கதாப்பாத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். அத்தனை கண்காணிப்புகளுக்கு மத்தியிலும் "யாசர் அராஃபட் " என்கிற பெயரில் கடிதத்தின் மூலம் காதலை தொடர்ந்து கொண்டிருந்த ஒருவன். புகையிலை, குட்கா,பீடி போன்றவற்றை ஒரு வேப்ப மரத்தில்  துளையிட்டு வைத்துவிட்டு.. தேவையானவர்கள் கேஷியரிடம் காசை கொடுத்துவிட்டு அங்கு போய் எடுத்துக்கொள்ளலாம் என தங்களுக்கான அறத்துடன் இயங்கிய போதை கேங். கிரிக்கெட் வாக்குவாதத்தில் "இன்னைக்கு இந்தியா தோத்தா..நா மொட்டையடிச்சுக்குறேன்" ன்னு சொல்லி அன்றைக்கு சாய்ங்காலமே மொட்டைத்தலையுடன் வந்த வாக்குத்தவறாத ஒருத்தன். எனக்கு ஒவ்வொரு நாளும் ஒரு சினிமா போலவே போய்க்கொண்டிருந்தது. 

இன்னும் study hour முடிய ஐந்து நிமிடம் இருந்தது. அதற்குள்ளாகவே முத்தையா எங்கள் தளத்திலிருந்து  கிளம்பிக்கொண்டிருந்தார். எனக்கு வலது பக்கத்தில் நஜிமுதீன் உட்கார்ந்திருந்தான். மொத்தக்கல்லூரியிலேயே  இரண்டு மூன்று இஸ்லாமியர்கள் தான் இருந்தார்கள். தினமும் இந்துத்துவாவை சுவாசிக்கும் கல்லூரியில் அவர்களும் ஏன் இருந்தார்கள் என எனக்கு விளங்கவில்லை. எப்போதாவது "சுவாமிஜிக்கள்" மத நல்லிணக்கம் பேசும் போது  அவர்களுக்கு நஜுமுதீன்கள் தேவைப்படுவார்கள். நான் நஜுமுதீனை தோளில் இடித்தேன்.

"என்னப்பா..'

"பூங்காற்றிலேயா..ப்ளீஸ்யா"

நஜீம் எனப்படும் நஜுமுதீன் செம்மையாக பாடுவான். அவன் "கண்ணே கலைமானே"  பாடினால் நமக்கு கண்கள் கலங்கிவிடும். எனக்கு தனிப்பட்ட விருப்பம், உயிரே படத்தில் வரும் "பூங்காற்றிலே"  பாட்டு. 

"இல்லங்க..தொண்ட சரியில்ல.."

நல்லா பாடுகிறவர்கள் பெரும்பாலும் இதை சொல்லுவார்கள். நாம தான் அவர்களை தாஜா செய்து பாட வைக்கவேண்டும்.

"சும்மா பாடுய்யா..உன் ஆளுட்ட பாடுறப்ப கரெக்ட்டா பாடிக்கோ..என்ன வருதோ எங்களுக்கு போதும்.." 

அவன் எதுவும் சொல்லவில்லை. அப்படியென்றால் பாடப்போகிறானென அர்த்தம். குணா எழுந்து உட்கார்ந்தான். பக்கத்திலிருக்கும் பட்சிகளும் நெருங்கி வந்து உட்கார்ந்துகொண்டார்கள்.கண்ணை மூடிக்கொண்டு பாடத்தொடங்கினான். " இதயம் கருகும் வாசம் வருகிறதே .."  என  அவன் குரலை ஒரு தொனியில் இறக்கி பாடுகையில் உன்னி மேனனை ஓவர் டேக் செய்ததாய் தோன்றியது . குணா என் பக்கத்தில் வந்து "லவ் பண்ணுவானோ..இல்லேன்னா இப்பிடி பாட முடியுமா.." என்றான். நஜீம் மிகப்பெரிய பாடகனாய் வருவான் என எல்லோரும் நினைத்தோம். இப்போது எங்கிருக்கான்..என்ன செய்து கொண்டிருக்கிறானென தெரியவில்லை. மீண்டுமொருமுறை அவனிடமிருந்து "பூங்காற்றிலே" கேட்கவேண்டுமென மனம் ஏங்கித் தவிக்கிறது.

-----------------------------------------------------------------------------------------------------------------------

ல்லூரியில் திங்கட்கிழமையும், புதன்கிழமையும் இரவு சாப்பாட்டுக்கு ரசிகர்கள் அதிகம். சப்பாத்தி மற்றும் தால். மூன்று சப்பாத்தி கொடுப்பார்கள். அதற்கு அளவில்லாத தால்..தக்காளி வெங்காயம் போட்டு தாளித்த தால். முதலில் சப்பாத்தியை சின்ன சின்னதாய் பிய்த்து தட்டில் போட்டுக்கொள்வோம். அதற்குப்பின் தட்டு முழுக்க தால் ஊற்றப்படும். சிலர் ,இதற்கு மேல் ஒரு சொட்டு ஊற்றினாலும் தால் வழிந்துவிடும் என்கிறளவுக்கு வாங்குவார்கள். தால் நன்றாக குழைந்து குடிக்கும் கணிசத்தில் இருக்கும். சப்பாத்தியும் தாலும் ஊற்றப்பட்டு மணியடிக்க காத்திருந்தோம். சாப்பாடு தட்டில் போடப்பட்ட பிறகு மணியடிக்க காத்திருக்கும் நொடிகள் நீளமானவை.

"மணியடிங்களேன்டா"  .குணா சத்தம் வராமல் கத்தினான்.  எல்லோருக்கும் பரிமாறப்பட்டுவிட்டதா என உறுதி செய்துகொண்டு ஒரு வார்டன் மெஸ் ஹாலின் நடுவில் வைக்கப்பட்டிருக்கும் மணியை அடித்தார். ஆயிரம் பேரும் ஒரு குரலில் பாடத்தொடங்கினோம்.

"ஓம் பிரம்மார்ப்பணம் ..பிரம்ம ஹவிர்.. பிரமாக்ணவ்.. பிரம்மணாஹுதம்..   ப்ரம்மைவ  தேன கந்தரவ்யம்..பிரம்ம கர்ம சமாதினா..ஹரி ஓம் தட்க்ஷித்.."


பாடல் பாடி முடித்த வினாடியில் தட்டில் பாய்ந்தோம். சிலர் தட்டை தூக்கி தாலை குடிக்கத்தொடங்கியிருந்தார்கள். நான் சாப்பிடத்தொடங்கியபோது பக்கத்தில் குணா இடுப்பை சுரண்டினான். திரும்பிப்பார்த்தேன். கையில் இரண்டு சப்பாத்தி வைத்திருந்தான்.

"இந்தாடா..வேமா வாங்கு" என்றான். கல்லூரியில் இது போல பிளாக்கில் சப்பாத்தி கிடைப்பது அரிது. அது பெட்ரோல் போல கிடைப்பதற்கரிய பொக்கிஷம்.அப்படியாப்பட்ட பொருள் நம் தட்டுக்கு தானா வருகிறதென்றால் இதிலேதோ உள்ளடி வேலை இருக்கிறதென்று மூளை உசாரானது.

"ஏதிது.."

"டே சும்பக் வேணும்னா வாங்கு..இல்ல நானே திண்டுக்கிறேன்"

நானவனை சந்தேகமாய் பார்த்தேன். அவன் பின்னால் ரோவை திரும்பிப்பார்த்தான். நானும் திரும்பிப்பார்த்தேன். கவட்டையன் உட்கார்ந்திருந்தான். என்னைப்பார்த்ததும் சிரித்தான். எனக்கு விஷயம் புரிந்து போனது. எங்களுக்கு சீனியர் அவன். மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்தான் .அவனின் உண்மையான பெயர் எனக்கு நியாபகத்தில் இல்லை. கல்லூரி முழுவதும் நிறைய பேர் பட்டப்பெயர்களிலேயே  அறியப்பட்டார்கள். குணாவிற்கு கபடி தோஸ்த்து அவன். அவனுக்கு பழைய இங்கிலிஷ் பேப்பரில் அரியர் இருந்தது. குணாவின் மூலமாய் அதற்கு முந்தைய வாரம் அவன் என்னிடம் வந்தான். அவர்களின் திட்டப்படி ஹால் டிக்கெட்டில் அவனின் போட்டோவுக்கு பதில் என் போட்டோ மாற்றப்பட்டு அவனுக்கு பதிலாய் நான் ஆங்கிலப்பரிட்சை எழுத வேண்டும். அந்த மொத்த பிளானை என்னிடம் விளக்க முற்பட்டான்.அதற்குள் நான் "ணே..நானே ஆயிரம் கஷ்டத்துல  இங்க படிக்க வந்திருக்கேன்..ஏழரைய இழுத்து விட்றாதீங்க ப்ளீஸ் " என்றேன். உண்மையில் ஆடிப்போனேன். என்னை பிறகு அவன் எதுவும் வற்புறுத்தவில்லை. "இத பத்தி வெளில பேசாத தம்பி .." என தோளில் சினேகிதமாய் தட்டிவிட்டு சென்றான்.

"லேய் குணா..நா அவ்வளவு சொல்லியும் திரும்பவும் இழுத்து விடுறியா " 

 குணா செய்வது எனக்கு அதீத கோபத்தை ஏற்படுத்தியது. அந்த சிரிக்கும் வாயை சுடச்சுட தால்  நிரம்பிய தட்டால் அடித்தால் என்ன எனத்தோண்றியது. பசி அதிகம் இருந்த படியால் அந்த முடிவை கைவிட்டேன்.எதுவும் பேசாமல் சாப்பிடத்தொடங்கினேன்.

"நீ தப்பா புரிஞ்சிகிட்ட..இப்போ விஷயம் வேற .." 

 நான் எதுவும் கேட்காதது போல சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.

"நீயொரு பயந்தொளினு அவய்ங்க புரிஞ்சிக்கிட்டாய்ங்க..இப்போ ஃபர்ஸ்ட் இயர்ல வேறொருத்தன ரெடி பண்ணிட்டாங்க. ராத்திரி தான் எல்லாம் பைனல் ஆச்சு..நீ ஒரேயொரு ஹெல்ப் பண்ணனும் "

 "ஒரு மயிறு ஹெல்ப்பும் பண்ண முடியாது.."

"என்னனாச்சும் கேளுடா வெண்ண .."

குணாவை நினைக்கையில் சில நேரங்களில் பாவமாகவும் இருக்கும். அவனுக்கே ஊர்ப்பட்ட அரியர்கள் இருக்கையில் யாருக்காகவோ இந்த கிரிமினல் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான். அவன் நட்புக்காக எந்த எல்லைக்கும் போவான். நான் கேட்கிற வரை விடமாட்டான்னு தோன்றியது.  "செரி..சொல்லு கேப்போம்" என்றேன்.

"இங்கிலிஷ் நான் டீட்டைல்  பேப்பர்..பரிச்ச எழுதுற பையன் இப்போ தான்  படிச்சிட்டு இருக்கான்..மூனு  ஸ்டோரி படிச்சிட்டான். லாஸ்ட் லீஃப் கதைய மட்டும் யாராச்சும் படிச்சிட்டு ஒரு தடவ சுருக்கமா தமிழ்ல சொன்னா போதும் பாத்துக்குறேன்றான்..நீ படிச்சிட்டு அவனுக்கு கதைச்சுருக்கத்த சொன்னா போதும்..வேறெதுவும் பண்ண வேண்டாம்..ஒனக்கு ஒரு பிரச்சனை வராது..மதர் ப்ராமிஸ்"

நானெதுவும் சொல்லாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். 

"கவட்டையன் இந்த தடவ எல்லா அரியரையும் கிளியர் பண்ணியாகனும் டா .. பாவப்பட்ட  பேஃமிலி. டிகிரி முடிச்சான்னா கபடி கோட்டால யூனிவர்சிட்டில பி. ஜி கிடைச்சிரும்..இல்ல ரயில்வேல அப்பிளை பண்ணலாம்"   

"அப்போ மிச்சமிருக்க பன்னென்டு அரியர, அந்த கஷ்டப்பட்ட ஃபேமிலில இருந்து ஆயா வந்து எழுதுமா.."

மேற்கொண்டு எதுவும் பேசாமல் குனிந்து சாப்பிடத்துவங்கினான். நான் பெரிய ஷேக்ஸ்ப்பியர் என்பதற்காக என்னிடம் அவர்கள் வரவில்லை. விஷயம் வெளியே தெரியாமல் இருக்க அவர்களுக்கு நம்பிக்கையான ஆட்கள் தேவைப்பட்டார்கள். இதை நண்பனுக்காக செய்வதா..வேண்டாமா என உள்ளுக்குள் மனம் சோக டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தது.

"சரி படிச்சிட்டு சொல்றேன்..எப்போ சொல்லனுமாம் " 

"நைட்டு ஒன்பதுக்கு ...ஃபுட் பால்  கிரவுண்ட் பக்கத்துல இருக்கிற ரெண்டாவது தென்னைமரம் ..அங்க வந்திரு "

"ரெண்டாவது தென்ன மரமா ..வந்து ஏதாவது கோட் வேர்டு சொல்லனுமா "

குணா லேசாய்  சிரித்தான்.


--------------------------------------------------------------------------------------------------------------

ற்கனவே முதலாமாண்டு படித்த  ஓ.ஹென்றியின் Last Leaf  கதை எனக்கு நியாபகம் இருந்தது. மீண்டுமொருமுறை புத்தகத்தை எடுத்து வாசித்தேன். கேரக்டரின் பெயர்களை இரண்டு மூன்று முறை படித்துக்கொண்டேன்.கதை இவ்வாறு போகிறது.


"ஸூவும் ஜான்சியும்  தோழிகள். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் வாஷிங்க்டன் மாகாணத்தில் உள்ள கிரீன்விச் கிராமத்தில் ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தார்கள். ஓவியமும் வறுமையும் இவர்களது நட்பை இன்னும் பலப்படுத்தியிருந்தது. அவர்களிருந்த கட்டிடத்தில் இன்னொரு தளத்தில் பெஹர்மென் என்கிற பெரியவர் தங்கி இருந்தார். அவரும் இவர்களை போல ஓவியத்துறையில் சாதிக்க வேண்டுமென பல ஆண்டுகளுக்கு முன் அங்கு வந்தவர். எதுவும் முடியாமல் ஓவியர்களுக்கு மாடலாய் வேலை செய்து கொண்டிருந்தார். அவரை எல்லோரும் வாழ்க்கையில் தோல்வியடைந்தவராய் பார்த்தார்கள். "நீயும் பெஹர்மென் மாதிரி ஆயிருவ பாத்துக்கோ" என்பது ஓவியர்கள் மத்தியில் பேசிக்கொள்ளும் சொலவடையாக இருந்தது."

"ஒரு மோசமான குளிர் காலத்தில் நிமோனியா காய்ச்சல்  க்ரீன்விச்சில் பரவிக்கொண்டிருந்தது. அந்த கொடூர காய்ச்சல் ஜான்சியையும் தாக்கியது.  நாளுக்கு நாள் நிலைமை மோசமாகியது. வீட்டுக்கு வந்த டாக்டர்  ஸூவிடம் தயங்கி பேசினார் ."ஜான்சி மனதை விட்டுவிட்டாள். எப்படியும் தான் இறந்து விடுவோம் என நம்புகிறாள். மனது விட்டவர்களை எந்த மருந்தும் காப்பாற்றாது " என்கிறார்.  ஜன்னலின் ஓரம் படுக்கையில் படுத்துக்கிடந்த ஜான்சியிடம் ஸூ போய் ஆறுதல் சொன்னாள். அவள் தான் சாகும் தருவாயில் இருப்பதாய் நம்பினாள். ஜன்னலின் வெளியே பனி விழுந்து கொண்டிருந்தது. காற்றும் வீசிக்கொண்டிருந்தது. எதிர்த்தாப்பில்  இருந்த ஒரு மரத்தின்  இலைகள் விழுந்து கொண்டிருந்தது . ஜான்சி "இந்த மரத்தின் கடைசி இலை விழுகும் போது ..நானும் இந்த பூமியில் இருந்து உதிர்ந்து போவேன்" என்றாள் . திரும்ப திரும்ப அதையே சொல்லிக்கொண்டு அந்த மரத்தின் மிச்ச இலைகளை எண்ணிக்கொண்டிருந்தாள் . அவள் பேசுவதை பெஹர்மென் கேட்டுக்கொண்டிருந்தார் ."

" ஜான்சி இரவில்  திரும்பவும் முழித்து பார்த்த போது  கடைசி  இலை  தொக்கிக்கொண்டு இருந்தது. மிச்ச இரவு முழுவதும் அதையே பார்ததுக்கொண்டு இருந்தாள் . விழாமல் அது தொங்கிக்கொண்டே இருந்தது. காலையில் எழுந்ததும் ஜான்சி புது உத்வேகம் கொண்டாள். தானும் அந்த இலை போல போராட வேண்டும் என எண்ணினாள். இரண்டொரு நாளில் அவள் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது . எழுந்து நடமாட தயாராகிக்கொண்டிருந்தாள் . ஸு சோகமாய் இருந்தாள் . ஜான்ஸி என்னவென்று விசாரித்த போது தான்  உண்மை தெரிந்தது . அந்த இரவில் ஜான்சி தூங்கும்போது  மரத்தின் எல்லா இலையும் உதிர்ந்துவிட்டதாகவும், பெஹெர்மென் தான் ஒரு இலையை பக்கத்து கட்டிடத்தில் வரைந்து அது மரத்தில் தொங்குவது போல தெரிய செய்தார்  என்றும் சொன்னாள். ஏற்கனவே காய்ச்சலில் இருந்த பெரியவர் குளிரில் நீண்ட நேரம் உட்கார்ந்து வரைந்ததால் மேலும் உடல் நிலை மோசமாகி இன்று இறந்து போனார்  என்றாள் . ஜான்சி துக்கம் தாளாமல் அழத்துடங்கினாள் "


நான் நேரத்துக்கு அந்த தென்னைமர கூட்டத்திற்கு போயிருந்தேன். கவட்டையன்,குணா மற்றும் அந்த முதலாமாண்டு பட்சி உட்கார்ந்திருந்தனர். பட்சிக்கு அது செய்யும் வேலையின் தீவிரம் தெரிந்தது போலில்லை. ஏதோ பிளட் டொனேஷன் செய்வது போல பெருமையாய் உட்கார்ந்திருந்தான். முழுக்கதையையும் சொன்னேன். குறிப்பு எடுத்துக்கொண்டான். கடைசி பிரார்த்தனைக்கு மணி அடித்தார்கள்.எல்லோரும் எழுந்து நடக்கத் தொடங்கினோம். கவட்டையனும்,குணாவும் முன்னால் நடந்தார்கள். நானும் பட்சியும் பத்தடி கேப்பில் பின்னால் நடந்து வந்தோம்.

"கதை புரிஞ்சது தான தம்பி "

"நல்லா சொன்னீங்க..பக்கானே "

"அதாவது சில நேரம் உதவி வாங்குனவங்க பொழச்சுக்குவாங்க..உதவி செஞ்சவுங்க  செத்திருவாங்க.." 

அவன் என்னையே ஒரு மாதிரியாய் பார்த்தான். நான் அவனை பார்க்காமல் வேகமாய் நடக்கத்தொடங்கினேன்.

------------------------------------------------------------------------------------------------------------------

அடுத்த நாள் அந்த முதலாமாண்டு மாணவனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அந்த ஆங்கில  பரீட்சை எழுத முடியாமல் போனதற்கும்.. எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை இன்றளவும்  நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.  

                                                                                                                  


கருத்துகள்