பா....




தாய்ப்பால்
தவிர ஒரு தந்தையின் பால் அன்பின் அடையாளங்கள் அனைத்தும் இருக்கத்தான்செய்கிறது.விளையாட்டுக்காரர்,பாசக்காரர், புரிந்துகொள்ளாதவர்,இரக்கமானவர் என நாம் வளரும் ஒவ்வொரு வயதிலும் அப்பா ஒவ்வொரு மாதிரி தெரிகிறார். கண்டிப்பாய் அவரின் நல்ல/கெட்ட குணங்கள் நம்மையுமறியாமல் நமக்குள் செலுத்தப்படுகிறது.

எனக்கு அப்போது பன்னிரண்டு வயதிருக்கும், வீட்டில் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் கார சார மான விவாதம் போய்கொண்டிருந்தது. கோபத்தின் உச்சியில் அம்மா ,"இப்படி இருமறுதுக்கு பதிலா அந்த சிகரெட்ட நிப்பாட்டினால் தான் என்ன??" என குரலை உயர்த்திக்கேட்க ,வீட்டில் திடீரென மௌனம் குடி கொண்டது.நான்,தம்பி தங்கைகள் எல்லாம் வீட்டுப்பாடங்களை நிறுத்தி அப்பாவையே பார்க்க...அம்மா கூட கொஞ்சம் அவசர பட்டு விட்டோமோ என்கிற ரீதியில் முழிக்க... அப்பா யதார்த்தமாய் சட்டை பையிலுருந்த சிகரெட்டை எடுத்து பக்கத்திலிருந்த மேஜையில் செங்குத்தாக வைத்துப்பார்த்து விட்டு ," நிப்பாட்டி தான் பாக்குறேன் நிக்க மாட்டேங்குது!!' என சலனமே இல்லாமல் சொன்னார். நாங்கள் எல்லாரும் அடக்கவே முடியாத பெருஞ்சிரிப்பு சிரித்தோம். சிரிப்பை அடக்க முயற்சி செய்து தோற்ற அம்மா கூட எங்கள் சிரிப்பு ஜோதியில் ஐக்கியமானாங்க.இப்படி தான் எந்த கட்டத்திலேயும் சமயோஜிதத்தை பயன்படுத்துவது அவருக்கு இலகு.



அதிகாலை மூன்று மணிக்கு என்னையும் எழுப்பி அவரும் எழுந்து world cup football பார்ப்பது, ' வாங்கடா படத்திற்கு போவோம்' என எங்களை அழைத்து சனிக்கிழமை சாயங்காலங்களை செலவிடுவது, "வீட்லயே உட்காந்து என்ன முட்டையா போடுறே?? வெளிய போய் சுத்திட்டு வாயேன்டா!! அப்பத்தான் உலகந்தெரியும்" என அடிக்கடி என்னை சொல்வது.. இவ்வாறு அப்பாவின் செயல்கள் பல இலக்கணங்களை வழக்கொழித்தது. மூக்கடச்சான், கரட்டாண்டி,கரிமேடு என வீட்டில் எல்லோரையும் ஒரு பட்டப்பெயர் வைத்தே அழைப்பார். நாங்களும் அப்பாவை எப்படியாவுது கலாய்க்க அவருக்கு பட்டப்பெயர்கள் வைப்போம், அது எதையும் நிலைக்க விடாமல் தப்பி விடுவார். அப்பாவை Tension ஆக்க நானும் தம்பியும் கடைசியாக ஒரு வழி கண்டுபிடித்தோம். அப்பா எங்களை கலாய்த்தால்,நாங்கள் தமிழ் சினிமா வில்லன்கள் போல் சும்மா 'தே மே' என நின்றிருக்கும் தங்கைகளை நறுக்கென தலையில் கொட்டு வைப்போம். தங்கைகள் வீரிட்டு அழுவதை தாங்க முடியாம அப்பா 'Tension' ஆகிருவார். அவருக்குத்தான் பெண்பிள்ளைகள் உயிராச்சே .... 'டேய்!!' என அப்பா அடி வயித்திலிருந்து கத்த.. நானும் தம்பியும் வீட்டின் boundary நோக்கி பறக்க ஆரம்பிப்போம். பெரும்பாலும் தம்பி மாட்டிக்கொண்டு அப்பாவிடம் தர்மடி வாங்குவான். அப்பாவிற்கு சூர்ய கிரகணம் போல எப்பவாவுது தான் கோபம் வரும், அப்போது சிக்கினால் சுட்டெரித்து விடுவார். பெரும்பாலும் அப்பாவின் கோபத்தின் அளவை கணிக்க வீட்டில் தம்பி தான் எங்களுக்கு கருவியாய் பயன் படுவான்.



நான் இரண்டாம் வகுப்பு படிக்கிற நேரம் அது,அம்மா 'Conceive' ஆகி இருந்தாங்க. ஏற்கனவே நானும்,தம்பியும் இருப்பதால் பெண் குழந்தை தான் வேணுமென கோயில் கோயிலாக மனு போட்டுக்கொண்டிருந்தார்கள். எப்போதுமில்லாமல் அப்பா பக்தி பழமாகி இருந்தார். ஒரு வேளை தம்பிபாப்பாவாக இருந்தால் கடவுள்களை கோபித்துக்கொண்டு மதம் மாறிவிடுவாரோ என்று கூட நான் நினைத்ததுண்டு. கடைசியாய் ஆபரேஷன் தியேட்டரிலிருந்து" பெண் குழந்தை.. இல்லையில்லை இரட்டை பெண் குழந்தைகள்" என செய்தி வந்ததும்,அப்பா கிட்டத்தட்ட கத்தியே விட்டாராம்.தெருவில் இருப்பவர் எல்லோருக்கும் அப்பா அன்று இனிப்புகள் கொடுத்தார். எப்போதுமே 'shuttled' ஆக இருப்பவரை முதல் முதலாய் அன்று தான் அவ்வளவு உணர்ச்சிமயமாய் பார்த்தேன். தங்கைகள் மேல் கொஞ்சம் பொறாமையாய் கூட இருந்தது.

அப்பாவுக்கு ஒரு பொழுதுபோக்கு உண்டு. வீட்டில் ஹாலில் அமர்ந்துகொண்டு நாளிதழ் படித்துக்கொண்டிருப்பார். திடீரென எழுந்து வாசலைப்பார்த்து "வாங்க வாங்க" எனச்சொல்லுவார். வீட்டின் உள்-அறையில் இருக்கும் நாங்களும், அடுப்பங்கறையில் இருக்கும் அம்மாவும் யாரோ விருந்தினர்கள் வருகிறார்களோ என நினைத்து வேகமாக ஹாலுக்கு வருவோம்.அங்கே அப்பா ஒன்றுமே தெரியாதவர் போல நாளிதழ் புரட்டிக்கொண்டிருப்பார். நாங்களும் "பல்ப்" வாங்கியதை காட்டிக்கொள்ளாமல் எதார்த்தமாய் திரும்பி செல்வோம். அம்மா மட்டும் கையிலிருக்கும் தோசைக்கரண்டியால் அப்பாவின் கையில் ரெண்டு தட்டு தட்டுவதுண்டு. பிறகு ஒருமுறை உண்மையிலேயே உறவினர்கள் ஒரு நாள் இரவு வர ,அப்பா "வாங்க வாங்க" என வழக்கம் போல் சொல்ல , அம்மா அடுப்பறையில் இருந்து கொண்டே " என்னை ஏமாத்த முடியாது இந்நேரம் எந்த லூசாவுது வருமா??" என சத்தம் போட்டுச்சொன்னாங்க. வந்தவர்கள் விழிக்க,அம்மா பதறி போயி விளக்க... அன்று வீடே லொள்ளு சபாவானது.

நாட்கள் எவ்வளவோ ஓடிவிட்டன. அப்பாவென சொன்னதும் இப்படி இதயம் தித்திக்க எத்தனையோ நினைவுகள் வந்து போகும். மேலே சொன்னவை அனைத்தும் கடந்த நவம்பர் 26- அப்பாவின் பத்தாவுது நினைவுதினத்தில் எழுதியவை. தம் தந்தையை பற்றி எல்லோர்க்கும் இப்படி பசுமையான பல நினைவுகள் உள்ளிருக்கும். அவற்றையெல்லாம் உங்களுக்கு உகந்த மொழியில் ஒரு காகிதத்தில் எழுதி உங்கள் தந்தையிடமே கொடுத்து பாருங்களேன்.கண்டிப்பாய் அவர் கண்கள் ஈரமாகலாம்."இதெல்லாம் யதார்த்தமா?? , பாசமெல்லாம் உள்ளுக்குள்ளே இருக்கு!!!" என கேட்கும் அறிவாளிகளுக்கு ஒன்று சொல்கிறேன். 'நாம் தனிமை படுத்த படுகிறோம்,நம்மிடம் பேச யாரு மில்லை' என்ற உணர்வு 90 சதவீத வயதானவர்களுக்கு உண்டு என உளவியல் சொல்லுகிறது. இந்த கடிதம் அவர்களது சங்கடங்களை களைந்து சந்தோசம் தரலாம். பதிலுக்கு அவர் உங்கள் உச்சி முகர்ந்து நெற்றியில் முத்தம் கூட தரலாம்!!! அது சரி அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!!!!


உன் வித்தில் விளைந்து
விருட்சம் ஆனோம்!!!!
உன் அன்பிற்கு எப்போதும்
அடிமையானோம்!!!!
என் வாழ்வின் முதல் பக்கம் நீ
என் பேரின் வலப்பக்கம் நீ
எனக்குள் எப்போதும் நீ(ர்)!!!!!!!
இப்படிக்கு
சிவராஜ்காமராஜ்.














கருத்துகள்

Arun Rama Balan.G இவ்வாறு கூறியுள்ளார்…
Cool Buddy...