ப...த.. நி.. ச...


“Music and rhythm find their way into the secret places of the soul”
- பிளாடோ


நம் தமிழ்கூறும் நல்லுலகம் தமிழை விட ஆங்கிலம் நன்கு அறியும் என்பதால் மேலே குறிப்பிட்டுள்ள கிரேக்க பேரறிஞர் பிளாட்டோவின் வரிகளை தமிழ்படுத்த தேவையில்லை. இசை நம் ஆன்மாவில் கலக்கும் அரு மருந்து என்று சொன்னால் மிகையில்லை தான். அது சரி காதை தவிர இசை கேட்க வேறெந்த மூலதனமும் உனக்கில்லையே ?? நீயென்ன இசைக்கட்டுரை எழுத போகிறாய் என சிலர் வழக்காடலாம். இது வெறும் தமிழ் திரையிசை பற்றிய பதிவு என்பதால் உங்கள் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.'யார் இளையராஜா??' என தமிழகத்தில் ஒருவர் கேட்ப்பாராயின், அவர் கடந்த 40 வருட காலம் எங்கோ 'கோமா' வில் இருந்திருக்கிறார் என்றே நாம் முடிவு கொள்ளலாம். ' நானும் இளைய ராஜாவின் ரசிகன் தானோ' என உங்களுக்கே உங்கள் மீது சந்தேகம் வருமாயின் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுய பரிசோதனை தேர்வை முயன்று பாருங்கள்...
  • மௌன ராகம் படத்தில் வரும் 'மன்றம் வந்த தென்றலுக்கு' பாடலின் ஆரம்பத்தில் எஸ்.பி.பி 'ஆ....' வென மெல்லிய குரலில் ஆரம்பிக்கையிலேயே உங்கள் தொலைக்காட்சியின் அல்லது வானொலியின் ஒலியை உயர்த்த முயற்சிக்கிறீர்களா??
  • 'சங்கீத மேகம்' பாடல் முதல் பட பாடல்களில் மோகன் தானே பாடியது போல் தலையை ஆட்டிக்கொண்டு பாடுகையில் நீங்களும் தலையாட்டி ரசிக்கிறீர்களா??
  • 'ஜனனி ஜனனி' என இளைய ராஜா தன் வெண்கலகுரலை காற்றில் பரப்புகையில் நீங்கள் மெய்ச்சிலுர்க்குறீர்களா??
மேலே சொன்னவற்றில் ஏதேனும் ஒன்றுக்காவுது ஆம் எனச்சொன்னீர்கள்என்றால் நீங்கள் ராஜாவின் இசை வெள்ளத்தில் கொஞ்சமாவுது குளித்துதிளைத்திருக்குறீர்கள் என்று அர்த்தம். எங்கோ பண்ணைப்புரத்திலிருந்து வந்துபார்ப்பனர்கள் மட்டுமே ஆள முடியுமென்று நினைத்துக்கொண்டிருந்தஇசையுலகில் சிம்மாசனமிட்டு அமர்ந்த ராஜாவை பாராட்டவில்லையென்றால்இசை தேவி நம்மை ஈட்டியில் குத்தினாலும் ஆச்சர்யமில்லை.
போட்டிக்கு யாருமில்லாததால் ஏன் இளையராஜா கூட ' ராஜா..எப்போதும் நான்இங்கு ராஜா' , 'ராகங்கள் தாளங்கள் கூட ராஜா உன் பேர் சொல்லும்' (வளையோசை பாடல்) என பாடல்களிலேயே 'பஞ்ச்' வைத்தார். அந்தகாலங்களில் ராஜா இசை சாம்ராஜ்யம் நடத்திய படங்களில் பாடல்களின் நடுவேராஜாவின் புகைப்படத்தை காண்பித்து பெருமைப்படுத்துவார்களாம். பாடல்களுடன் ராஜா முடித்துக்கொள்வதில்லை, பின்னணி இசையிலும் படத்தைதாங்கிப்பிடிப்பார். நாயகன் படத்தின் உச்சக்காட்சியில் அந்த சிறு குழந்தைகமலிடம் ,'நீங்க நல்லவரா?? கெட்டவரா?? என கேட்கையில் ராஜாவின் பின்னணிஇசையால் கமலுக்கு முன்பே நமக்கு அழுகை முட்டிக்கோண்டு வரும். பெரும்பாலான நேரங்களில் கருவிகளை விட நம் உணர்வுகளையே மீட்டினார்
ராஜா.


நாம் அடுத்து இரு பத்திகளை இசைப்புயலுக்கு ஒதுக்குவோம். பிளஸ் 2 வில்முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கூட என் கடின உழைப்பால் வென்றேன்என சொல்லிக்கொண்டிருக்க, இரண்டு 'Oscar' களை கையில் ஏந்திக்கொண்டு ' எல்லாப்புகழும் இறைவனுக்கே!!!' என சரணடைந்த ஏ.ஆர்.ரகுமானை தமிழனெனசொல்வதில் நாமும் பெருமை கொள்ளலாம். ரோஜாவில் அறிமுகமாகிஅதிலேயே தேசிய விருதும் வென்றவர். தொழில் நுட்ப ரீதியிலும் தமிழிசையைஉலகத்தரத்துக்கு கொண்டுபோனவர் ரகுமான்.ஆரம்ப காலங்களில், சாத்திரியசங்கீத வாசம் இவர் இசையில் துளியும் இல்லை என்றவர்களுக்கு 'என்னவளே' பாடல்(படம்:காதலன்) கொடுத்து சாந்தி படுத்தினார். கிட்டத்தட்டஇப்போதிருக்கும் பல முன்னணி பாடகர்கள் இவரால் அறிமுகபடுத்தப்பட்டவர்களே. இரவு நேரங்களிலே இசைக்கோர்ப்பு செய்வது இவரின்இயல்பு,இது இசை உலகில் சலசலப்பை ஏற்படுத்தினாலும் பிற்பாடு புரிந்துகொள்ளப்பட்டது. ரகுமானின் 'தாய் மண்ணே வணக்கம்' பாடல் எந்தஇந்தியனாலும் மறக்க முடியாது. இவரின் பெயரை வைத்துக்கொண்டு ஒருபடத்தை உலகின் எந்த மூலையிலும் வியாபாரம் செய்ய முடிகிறது. என் பதின்மவயதுகளில் ரகுமானின் பெயரை பச்சைகுத்திக்கொள்ளலாமா?? என்றுயோசிக்கும் அளவிற்கு ரகுமானின் அபிமானியாய் இருந்தேன்.
ஒரு பத்தி விரயமானாலும் பரவாயில்லை என இந்த பாடலை பற்றி சொல்லுவதுஎனக்கு தலையாய கடமையாய் படுகிறது. மின்சார கனவு படத்தில் வரும்வெண்ணிலவே..வெண்ணிலவே ' பாடல். இன்னும் இந்த பாடல்தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் அணுகுண்டே போட்டாலும் ஆணிஅடித்தது போல் அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பேன். பிரபுதேவாவின் நடனம், கஜோலின் கண்கள் , மிதமான ஒளிப்பதிவு என ரகுமானின் தங்கமான இசை மேல்ஏகப்பட்ட வைரக்கற்கள். அதுவும் 'எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன்யாரு...' என ஹரிஹரன் ஒரு இழுஇழுப்பாரே பார்க்கணும், அந்த இடத்தில் நான்எப்போதும் சொக்கிப்போவேன்.பிரபுதேவா பாடு என்பது போல் செய்கைசெய்தவுடன் கஜோல் பாடுவது (i mean வாயசைப்பது),
உணர்ச்சிகளை முகத்தில் காட்டிக்கொண்டே நடனமாடுவது என இருவரும்படத்தில் நடித்ததை விட இந்த பாடலில் நடித்தது அதிகம் என நினைக்கிறேன். தமிழ் சினிமா வரலாற்றில் மறக்கமுடியாத டூயட்களில் இதுவும் ஒன்றாகும். நறுமுகையே...(இருவர்), உயிரே...(பாம்பே),என் மேல் விழுந்த மழைத்துளியே..(மே மாதம்), பூங்காற்றிலே...(உயிரே), பச்சைக்கிளிகள் (இந்தியன்) போன்ற பாடல்கள் மூலம் இசைப்புயல் நமக்கு வசந்தத்தையும் வீசுவதுண்டு.

இது தான் எனக்கு எப்போவோ தெரியுமே என அலுத்துக்கொள்ளாதீர்கள். இனிமே தான் ஆட்டமே ஆரம்பமாகிறது. மேலே நினைவுகூறப்பட்ட இசை ஜாம்பவான்கள் கூட ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம் எந்த பாடல் மக்கள் மத்தியில் வெற்றிபெறும் என்பதே!!! இவர்களின் எத்தனையோ சிறப்பான பாடல்களுக்கு பாராட்டுக்கிடைக்காமல் போயிருக்கிறது. எந்த இசை நம்மை மயக்கும் என்பது நாமே அறியாததே....கீழே நான் கொடுத்துள்ள சில பாடல்கள் கிட்டத்தட்ட இந்த ரகம் தான். இவை படம் வந்த போதே மாபெரும் வெற்றி பெரும் என நம்பியிருந்தேன். ஆனால் இவை சுவடே தெரியாமல் காணாமல் போனது கொடுமை தான்.

i) உயிரிலே..எனது உயிரிலே(படம்:வேட்டையாடு..விளையாடு ...) : இந்த பாடல் இந்த படத்தில் இருக்கிறதா என்றே பலருக்கு தெரியாது. மிக மெதுவான பாடல். மொட்டை மாடியில் நட்சத்திரத்தை ரசிப்போருக்கு இந்தபாட்டு பார்சல். ஒளியோடு ரசித்தால் கண்களுக்கும் ரம்யம் தருவார் ரவி வர்மன். ஸ்ரீநிவாஸ், மகாலக்ஷ்மி ஐயர் பாடியது.

'
ii) மாலை நேரம் (ஆயிரத்தில் ஒருவன்) : இப்பாடல் ஓரளவு மக்கள் மத்தியில் பிரபலமானாலும், கிடைக்க வேண்டிய நியாமான பாராட்டு கிடைக்கவில்லை என்பேன். ஆண்ட்ரியாவின் அற்புத குரலில் வெளிவந்த சமீபத்திய பாடல் இது. இந்த பாடலை ஒரு வேளை 'Head Set' இல் கேட்டீர்களென்றால் காது கொஞ்ச நேரத்தில் பிசுபிசுக்கும். தேன் குரல் அது!!!! கொஞ்சம் மிகைப்படுத்த படுவது போல் தோன்றினாலும் ஒரு முறையாயினும் இப்பாடலை கேட்டவர்களுக்கு இந்த உண்மை புரியும்.

iii) ஒரு நாளில்...(புதுப்பேட்டை): யுவனுக்கு பாடத்தெரியுமா என கேட்பவர்கள் இந்த பாடலை கேட்டால் வட்டமாக வாய்பிளப்பார்கள். படத்தின் கதையே இந்த பாடலில் சொல்லப்பட்டிருக்கும். இந்த பாடல் படத்தில் வைக்கப்படவில்லை. இது படத்திற்கு இழப்போ இல்லையோ?? இசைக்கு பேரிழப்பே... முடிந்தால் தரவிறக்கி (அதாங்க Download) கேட்டுப்பாருங்கள்.

iv) முழு மதி உனது முகமாகும்..(ஜோதா அக்பர் (தமிழ்)): ஜோதா அக்பர் திரைப்படம் தமிழில் வெளியானது பலருக்கு தெரிவதில்லை. ஒரு முறை கேட்டவுடனேயே பாத்ரூமில் அடிக்கடி இந்த பாடலை முணுமுணுப்பீர்கள். மிகமிக சிறந்த பாடல். இளைஞர்கள் இந்த பாடலை தவிர்ப்பது நலம், ஏனெனில் இப்பாடல் நமக்கு காது வழியே காதலை புகுத்தும். இந்தப்பாடல் கணவர்கள் ஸ்பெஷல் ....அதுவும் திரையில் ஐஸ்வர்யா ராயும்,ஹ்ரித்திக் ரோஷனுக்கும் உள்ள 'chemistry' (வார்த்தை உபயம்:விஜய் t.v) இருக்கிறதே ..அடப்போங்க..எனக்கு வெக்கமா இருக்கு...

v) உன் சிரிப்பினில்(பச்சை கிளி முத்துச்சரம்): மயங்க வைக்கும் பாடல்...படம் வந்த புதிதில் பாடல் எதாவுது தொலைக்காட்சியில் வராதா என பார்த்துக்கொண்டிருப்பேன்...யாரோ உங்கள் காதில் ரகசியம் சொல்வது போல் போகும்...பாடலின் பின்னே வரும் 'டக் டக்..' என வரும் பீட்,பாயசத்தில் கிடக்கும் முந்திரிபருப்பு....முடிந்தால் கேட்டு இன்புறுங்கள்!!!!

இது ஒரு தனி மனித விருப்பு/வெறுப்பு சார்ந்த கட்டுரையாக தெரிந்தாலும், இதன் உள்நோக்கம் இசை மீதான நம் ஆர்வத்தை தூண்டுவதே.நல்ல இசையை ரசிப்பது ஒரு குழந்தையை கொஞ்சுவதற்கு சமமானதே. நம் உணர்வுகளை முடிவு செய்யும் மாபெரும் சக்தி இசைக்கு உண்டு.

பொதுவாய் தேவா காப்பி அடிக்கிறார் என்று ஒரு கருத்து உண்டு நாம் அவரின் பாடல் வரிகளையே காப்பி அடித்து இந்த கட்டுரையை முடிப்போம்...
இசையோடு வாழ்ந்தோம்..
இசையோடு வாழ்வோம்...
இசையாவோம்!!!!!!!!!!!!!!!!!!கருத்துகள்