PEG 1

தினமும் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம்,உரையாடுகிறோம் அதில் மிகச்சிலரே நம்மில் பதிகிறார்கள். நம்மால் மறக்க முடியாதவர்களாக மாறிப்போய்கிறார்கள். உண்மையாய்ச்சொன்னால் ஒவ்வொரு மனிதனும் ஒரு அதிசயமே!. இவ்வாறு சித்தாந்தங்கள் பேசிக்கொண்டே சென்றால் கொட்டாவி வரும் அபாயம் இருப்பதால் நேரே விஷயத்துக்கு செல்வோம்.

சில தினங்களுக்கு முன் ஒரு தமிழ்குடும்பம், ஹோட்டலின் இரண்டாம் தளத்தில் குடிவந்தது. அவர்கள் முகத்திலேயே திருக்குறள் தெரிந்ததால், பார்த்தவுடன் நானே வலியச்சென்று 'நீங்கள் தமிழ்நாட்டவரா??' என ஆங்கிலத்தில் கேட்டேன். அவர்களும் புன்முறுவல் பூத்து 'ஆமா..நீங்க??' என என்னையும் நலம் விசாரித்தார்கள். கணவன்,மனைவி, இரண்டு குழந்தைகள். கணவர் பிரசாத் வழக்கம்போல் கணினியை உருட்டுகிறவர்.மனைவி பிரியா ,கணவரை திட்டுவதுடன் வீட்டு வேலைகளையும் கவனத்திக்கொள்ளும் வழக்கமான இல்லத்தரசி. ஐந்து வயது பெண்குழந்தை மற்றும் இரண்டு வயது கைசூப்பும் தம்பிபாப்பா ஒன்றும் இருந்தது.அந்த குட்டிப்பெண் என்னை பார்த்தவுடன் 'ஹாய்..அங்கிள்' என்றாள். மீசையை 'trim' செய்ய வேண்டும் என மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.
அந்த குட்டிப்பெண்ணுக்கு முட்டைகண்கள்,சுருட்டை முடி, கிள்ளவேண்டும் என உறுத்தும் அளவு கன்னம்.,அலுவலகத்துக்கு நேரம் ஆனதால் அவர்களிடம் உத்தரவு வாங்கிகொண்டு கிளம்பினேன்.இந்த சம்பவங்களை பிற்பாடு மறந்தே போயினேன்.

சனிக்கிழமை இரவு ஒன்பது மணி சுமார்க்கு என் அறை தொலை பேசி முழுவீச்சில் அலறியது. எடுத்தேன்.

'ஹாய் சிவா..நான் தான் பிரசாத் பேசுறேன் ' என்றது அந்த ஆண் குரல். என் பாழாய்ப்போன நினைவுகளில் தொலைந்து போன அந்த பெயரை ஒருவாறு நினைவூட்டி ,'சொல்லுங்க சார் என்ன விஷயம் ..' என்றேன்.

' ஒண்ணுமில்ல... Drink பண்ணலாம்னு பாத்தா... புஜ்லு தூங்க மாட்டுரா...குழந்தை முன்னாடி குடிக்கிறது என் wife க்கு பிடிக்காது...if you dont mind.. நா உங்க ரூம்க்கு வரலாமா இப்போ..' என சங்கடமாய் கேட்டார்.

'ஒன்னும் பிரிச்சனை இல்லை...நீங்க இங்க தாராளமா வரலாம்' என்றேன்.சொந்த காசில் சூனியம் வைக்கிறோமோ என்கிற பயம் எனக்குள் வந்தாலும், அப்படி எதுவும் இல்லை என என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன்.
ஒரு அரை டிரவுசர் ,டி ஷர்ட் சகிதம் வந்து சேர்ந்தார் பிரசாத். அவருக்கு சின்ன முன் வழுக்கை,உறுத்தாத தொப்பை,மாநிறம், ஓரமாய் ஒரு சிங்கப்பல்..இதற்குமேல் ஆண்களை வர்ணிப்பதில் எனக்கு உடன் பாடில்லை.கையில் இருந்த பாட்டிலின் முதுகில் 'jim Beam' என எழுதி இருந்தது. சர்வ சந்தோசமாய் அறைக்கு உள்ளே வந்தார். தரையிலேயே உட்காந்து இரண்டு கிளாஸ்களை கீழே வைத்தார்.

'சார் உங்களுக்கு மட்டும் ஊத்துங்க நான் குடிக்கிறதில்லை...' என சொன்னேன். 'இந்தியாவில் சுனாமி..10 ஆயிரம் பேர் பலி' போன்ற செய்திக்கு கொடுக்க வேண்டிய அதிர்ச்சியான reaction ஐ அப்போது கொடுத்தார். 'என்ன சொல்றீங்க சிவா...உங்கள நம்பி வந்துட்டேன்...இன்னைக்கு night fulla உட்காந்து இந்த விஷ்கி பாட்டிலை முடிச்சிரலாம்னு பாத்தேன்...இன்னைக்கு ஏதும் விரதம் கிரதமா ??' .

'அப்டிலாம் ஒன்னும் இல்ல சார்..பொதுவாவே நான் குடிக்க மாட்டேன்.. கூல்டிரிங், ஸ்நாக்ஸ் எல்லாம் எடுத்துக்கிறேன்.கவலைய விடுங்க நைட் full ஆ....... நா உங்களுக்கு கம்பெனி தரேன்' என அவரை சமாதான படுத்தினேன். அந்த பாட்டிலை கோழி கழுத்தை திருகுவது போல் திருகி ,glass ஐ பாதி நிரப்பினார். பிற்பாடு கோக்கை கொஞ்சமாய் கலக்கினார். Style ஆக அருந்த ஆரம்பித்தார் .நான் கடலைகளை கொறிக்க தொடங்கினேன்.

'ஆமா சிவா..நீங்க ஏன் குடிக்கிறதில்ல... '

' நா குடிக்க மாட்டேன்...னு சொன்னதும் உங்க மூஞ்சில ஒரு ஆச்சர்யம் தெரிஞ்சது பாருங்க..அது எனக்கு ரொம்ப சந்தோசத்த தருது..அந்த ஆச்சர்யம் என்னைக்கு எனக்கு 'Bore' அடிக்குதோ அன்னைக்கு நானும் களத்தில இறங்கிடுவேன் ..மத்தபடி நா பெரிய நல்லகுடி நாணயமெல்லாம் இல்லேங்க..' என என் விளக்க உரை முடித்தேன்.

'இது வரைக்கும் ஏன் குடிக்கலேங்கிறதுக்கு இவ்வளவு கேவலமான விளக்கத்த சத்தியமா நா கேட்டதே இல்ல பாஸ்...' என பிரசாத் பதில் உரை அல்லது பதிலடி கொடுத்தார். லேசாய் சிரிப்பு வந்தாலும் எனக்கு கொஞ்சம் ரத்தம் சூடாகத்தான் செய்தது. மது, மனிதன் நினைப்பதை சொல்ல வைக்கிறது!!!. பேச்சை மாற்றி உங்களோடது காதல் கல்யாணமா சார் என தேவையில்லாமல் அந்நேரம் கேட்டுத்தொலைந்தேன்.

' காதல்னு ஒன்னு இல்லவே இல்ல சிவா... அடிப்படையிலேயே ஒரு ஆணுக்கு ஒரு பெண் தேவ..பெண்ணுக்கு ஆண் தேவ...உடலோட அமைப்பு அப்டி. இது நாய் நரிக்கும் பொருந்தும். ஆதி மனுஷன் பெண்ணை விரட்டி மிருகம் மாதிரி உறவு கொண்டான். அவன் ஒன்னும் முரளி மாறி ரோஸ் வச்சிக்கிட்டு அலையல.அப்புறம் மொழி,நாகரிகம்,கண்டுபிடிப்புகளெல்லாம் வந்துட்டதால காதல், கழுத னு நாமலே பேரு வச்சுகிட்டோம். ஆயுத எழுத்து படத்துல நம்ம சுஜாதா சொல்றது மாறி இது Androgen,Estrogen னு ஹாரமோனோட வேல..XXXXXXX,YYYYYYYY அவ்வளவு தான்.

அவர் கடைசியில் சுஜாதாவின் பெயரை சொன்னது கொஞ்சம் சந்தோசத்தை கொடுத்தாலும் ,எனக்கென்னவோ இவர் 'நான் புத்திசாலி' என காட்ட முற்படுகிறார் என்றே பட்டது. கொஞ்சம் சிரித்துக்கொண்டே நான் ' அப்போ அண்ணன்தம்பி, அப்பாம்மா மேல வர்ற அன்புக்கெல்லாம் தனி ஹார்மோன் இருக்கா... எல்லாத்தையும் ஜீன் லயே எழுதி வைக்க அதென்ன நூறுபக்க நோட்டா சார்??உடலியலை தாண்டி உலகியல்னு ஒன்னு இருக்குங்க. எல்லாத்துக்கும் பதில் அறிவியல் புஸ்தகத்துல கெடச்சுராது...' என கொஞ்சம் காரமாய் முடித்தேன்.

ரெண்டு மூணு ஐஸ் கட்டிகளை போட்டு இன்னும் கொஞ்சம் விஸ்கி ஊற்றினார்.'' என்னோட intention காதல்ங்கறது ஒரு உணர்ச்சி ...அத சொல்ல நெனச்சேன்..அவ்வளவு தான் ..மத்தபடி
ஒன்னும் இல்ல''... ரொம்ப இயல்பா அந்த சூட்டை அவராகவே தணித்தார்...

'எனக்கும் எல்லாத்தையும் உணர்வுபூர்மா அணுகுவதில் உடன்பாடில்லை தான்.ஆனா அறிவுபூர்வமா மட்டும் சிந்திக்குரதுல எப்பயும் ஆபத்து இருக்கு. i always listen to my heart rather than my brain...' என்றேன்.

' ஆமா கேக்கவே இல்லையே!!!!! உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...' ன்னார்

' இன்னும் ஒரு தடவ கூட ஆகல சார்...'

'ஹஹஅஹஹா.....' என சிரித்தார். அத்தனை பெரிய சத்தத்தை நான் அப்போ எதிர் பார்க்கவே இல்ல. குடித்துவிட்டால் போதும் மனிதன் கில்லினாலே அழுவான்,கிச்சு கிச்சு என்றாலே சிரித்து விடுவான்.உணர்ச்சியை ஒழித்து வைக்க முடியாதவர்கள் அவர்கள். கொஞ்ச நேரத்தில் ரெண்டு கால்களையும் சம்மணம் போட்டு அமர்ந்து அவராகவே ஆரம்பித்தார்.

' அப்போ சின்ன பையன் தான் நீயும்...உன்கிட்ட கொஞ்சம் இத பத்தி பேசியே ஆகணும்... எனக்கு வயசு முப்பத்து எட்டு , U.S வந்து 2 வருஷம் ஆகுது. அங்க சென்னைல இருந்தப்போ நண்பர்களோட சேந்து ஒரு தொண்டு நிறுவனம் நடத்தினோம்.'Suicide' முயற்சி பண்ணினவுங்கள சந்திச்சு அவுங்களுக்கு இலவசமா 'Counseling' கொடுப்பேன். நா பாத்ததுல 75 சதவீதம் இந்த காதல் கோஷ்டிகள் தான். அதுவும் எல்லாமே ஆண்கள் தான். எத்தனையோ பேரு இப்போ ரொம்ப நல்ல நிலைமைல இருக்காங்க.சில பேரு அவுங்க பசங்களுக்கு ப்ர்சாத்துனு பேர் கூட வச்சிருக்காங்க.ஆனா சில பேர் திரும்பவும் முயற்சிபண்ணி செத்தே போய்ட்டானுங்க...இன்னமும் நல்லா ஞாபகம் இருக்கு. ராஜேஷ்னு அவன் பேரு, மருந்த குடிச்சு சாக முயற்சி பண்ணி காப்பாத்திட்டாங்க..
நான் போய் அவன் கிட்ட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தேன். 21 வயசு தான் அவனுக்கு இருக்கும். என்ன பேசுனாலும் அவ்வளவு அழகா ரசிக்கிறான்,சிரிக்கிறான். இனிமே அந்த மடத்தனத்தை யோசிச்சு கூட பாக்கமாட்டேன் சார்னு சொன்னான். நா சொன்ன 'மெக்ஸிகோ சலவைக்காரி' ஜோக்குக்கு எப்புடி சிரிச்சான் தெரியுமா....

ஆனா ஒரு வாரம் கழிச்சு மண்ணெண்ணைய ஊத்திகிட்டு செத்து போய்ட்டான்...ஒரு லெட்டர் எழுதி வச்சிருந்தான்.. 'அவள மறக்க முடில... மன்னிச்சிருங்க பிரசாத் சார்'. இந்த மாறி பல சாவ பாத்துட்டேன்.இதாவுது பரவா இல்ல...ஒரு சின்ன பையன் 'ஸ்பெர்ம்' leakage பத்தி விவரம் தெரியாம....எங்கயோ 'சொப்பன ஸ்கலிதம்' னா என்கிட்டே வாங்கனு சொல்ற ஒரு டுபாக்கூர் டாக்டர் கிட்ட போய்ட்டான்..அந்த **********************(கெட்டவார்த்தை) அத ஆண்மை குறைவுனு சொல்லி இவனை பயமுறித்திட்டான்..இந்த பய பாவம் தற்கொலை பண்ணி செத்தே போய்ட்டான் தெரியுமா...வீட்டுக்கு ஒத்த பையன்...இன்னமும் அவுங்க அப்பா கதுறுனது மறக்க முடில... பதினெட்டு வயசு பையனுக்கு அவன் உடம்ப பத்தி விவரம் தெரில...இன்னமும் நாம கலாச்சாரம், வெங்காயம்னு சொல்லிக்கிட்டு ' செக்ஸ் கல்வி' னு சொன்னாலே ,வேண்டாம்னு கொடி தூக்குறோம்.' பேசி முடித்துவிட்டு மேலும் கீழும் மூச்சு வாங்கினார்.

வாய் பிளந்த படி அமர்ந்திருந்தேன். ஏனோ எனக்கு எதுவும் பேச தோணவே இல்லை. என்னை மிரள வைக்கும் எத்தனையோ விசயங்கள் அவர் வசம் இருந்தது. அந்த இரவு இன்னும் தொடர்ந்தது.

--------தொடரும்


கருத்துகள்