
நேற்று மாலை பொழுதுபோகலையேனு மாடிப்பக்கம் போனேன். லேசான தூறல்,குளிரிந்த காற்று, வானம் கொஞ்சம் உறுமிக்கொண்டு வேறு இருந்தது..அப்போது தான் மேலே அதை பார்த்தேன்.முதலில் பறவை என்று தான் நினைத்தேன். தாழ்வாக கீழே என்னை நோக்கி பறந்து வரவும் தான் காகிதம் என்று தெரிந்ததது. கையில் அந்த காகிதம் வந்து அகஸ்மாத்தாய் படர்ந்தது. அக்கம்பக்கம் பார்த்தேன் யாரும் இருப்பதாய் தெரியவில்லை. அது ஒரு கடிதம். படிக்க ஆரம்பித்தேன்.
அன்புள்ள தமிழர்க்கு,
வணக்கம். நலமாய் உள்ளீரா?? தமிழ் செம்மொழியானதை ஒட்டி மகிழ்ச்சியில் திளைத்து போயிருப்பீர்கள். அதுவும் செம்மொழி மாநாடெல்லாம் நடத்தி முடித்து ,ஒரு வார விடுப்பெல்லாம் பெற்று கொஞ்சம் களைத்தும் போயிருப்பீர்கள்.பக்கத்து தீவில் இதே செம்மொழியை பேசுவோர் கருவறுக்க பட்டார்களே?? எனக்கேட்டால் ,'அரசியல் பேசாதீர்' என்பீர்கள். உங்களை பொருத்தவரை செய்திதாள்களில் பிணக்குவியல்களை பார்த்து 'உச்' கொட்டுவதே உச்சகட்ட மனிதாபிமானம். பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்... உங்களுக்கு நித்யானந்தரை திட்டவும்,நயன்தாராவின் காதலை பற்றி பேசவுமே நேரம் சரியாய் இருக்கிறது. அதுவம் உங்க நேரமின்மை காரணமாக ஒட்டுச்சாவடிக்கு உங்களை வரவைக்க கட்சிகள் கூட 'ஆயிரங்களை' தள்ள வேண்டியிருக்கிறது.

தெருவில் காய்கறிகாரனிடம் உயிரைக்கொடுத்து பேரம் பேசுவீர்கள். ஆனால் 'Multiplex'களில் ஒரு சமோசாவை நூறு ரூபாய்க்கு பெருமையாய் வாங்கி சாப்பிடுவீர்கள். பாரதியார் பாடல்களை பரீட்சைகளில் மதிப்பெண் பெறவும்,மேடைகளில் பேசும்போதும் உபயோகப்படுத்துவீர்கள்.வள்ளுவருக்கு சிலை வைப்பீர்கள். குஷ்புவுக்கு கோயிலே கட்டுவீர்கள். தமிழில் 'ழ'கரத்தை தப்பாக உச்சரித்து பெருமையாய் சிரிப்பீர்கள்,எவராவுது ஆங்கிலத்தில் is,was களில் சொதப்பினால் 'பட்டிக்காட்டான்' என்று கேலி பேசுவீர்கள். இந்தியா ஒலிம்பிக்கில் ஆப்பு வாங்குவதை பார்த்து கோபப்படுவீர்கள்.ஆனால் உங்கள் பிள்ளைகளை 'விளையாட போன காலை உடைச்சிருவேன்' னு அதட்டுவீர்கள்.உங்கள் வீட்டுக்குழாய்களில் தண்ணீர் வரலேனாலும் எல்லாம் இந்த 'I.T'னால் தான் என குறைப்பட்டுக்கொல்வீர்கள்.தெருவிளக்கு நின்று போனால் கூட போய் புகார் செய்யமாட்டீர்கள்,ஆனால் தி.மு.க வும் அ.தி.மு.க வும் நாட்டை சீரழித்து விட்டதாக வாய் கிழிய பேசுவீர்கள். கடவுளே உங்கள் தொகுதியில் போட்டியிட்டாலும் உங்க ஜாதிக்காரருக்குத்தான் தான் ஓட்டுபோடுவீர்கள்.
'சுறா'களையும்,'அசல்'களையும் கேலி செய்து குறுஞ்செய்திகளும்,மின்னஞ்சல்களும் அனுப்புவீர்கள். 'அப்போ ஏம்பா 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'அன்பே சிவம்' லாம் ஓடல' னு கேட்டா பதில் சொல்ல மாட்டீர்கள். சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் நடந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 'Vuvuzela' என்ற வாத்திய கருவி காதுகளுக்கு எரிச்சல் தருவதாய் உலகமே கொக்கரித்தது.அது எங்கள் பாரம்பரியம் அதை தடை செய்ய முடியாது என ஆப்பிரிக்கர்கள் உறுதியாய் நின்றார்கள். கடைசியில் உலகம் முழுக்க அந்த வாத்தியம் பிரபலமானது தனிக்கதை. ஆனால் நீங்களோ உங்களின் வேட்டி,சேலை,மண் குவளைகள்,சிலம்பாட்டம்,நாட்டுப்புற பாட்டுக்கள்,சிற்பங்கள் என எல்லாத்திற்கும் இறுதி அஞ்சலி செலுத்தி நிறைய நாட்கள் ஆகிறது.
உங்கள் பிள்ளைகளை அடுத்த வீட்டு பிள்ளைகளுடன் ஒப்பிட்டு கொண்டே இருப்பீர்கள். இளநீர் உங்கள் தொண்டைகளில் இறங்குவதில்லை,கோக்களும் பெப்சிகளும் பெருமை பொங்க பருகுவீர்கள். பொழுது போகாத போது யாருக்காவுது 'டாக்டர்' பட்டம் கொடுப்பீர்கள்.கண்ணகி சிலையை வைத்து கபடி விளையாடுவீர்கள். யார் 'எதுகை.மோனையில்' பேசினாலும் கை தட்டுவீர்கள். உங்களில் பாதி பேருக்கு தமிழ்த்தாய் வாழ்த்தே தெரியாது.வந்தாரை வாழ வைப்பீர்கள்,இங்கேயே இருப்பவர்களுக்கு ஆப்பு வைப்பீர்கள். யாராவுது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பட்சத்திலாவுது புறநானூற்றையும்,தொல்காப்பியத்தையும் படித்து உங்கள் வரலாற்றையும்,பண்பாட்டையும் தெரிந்து கொள்ளுங்கள்.
கடிதம் படித்து முடித்தவுடன் எனக்கு கோபம் தலைக்கேறியது.நரம்பு புடைத்தது.கண்கள் சிவந்தது. இருப்பினும் அந்த நேரத்தில் 'தமிழகத்தின் செல்ல குரலுக்கான தேடல்' தொலைகாட்சியில் நடந்து கொண்டிருந்ததால் வீட்டை நோக்கி ஓடினேன்.
கருத்துகள்
பலருக்கு பிடிக்கிறது உனக்கு பிடிக்க மாட்டிங்குது... யாருமே கண்டுக்காத பதிவ அருமைனு சொல்ற...குழப்புறயே டா...
சுட்டதுக்கு மன்னிக்கவும். உண்மையோட ஒரே பிரச்சினை இதான்.
பட்டியலிட்டுள்ள குறைகளில், நீங்கள் முயற்சி செய்து தீர்வு காண பார்த்தீர்கள? வலை பதிவத்தில் இந்த மாதரி எழுதுவதற்கு நிறைய இருக்கின்றன. உங்களை போன்ற சிந்தனை உள்ளவர்களை சேர்த்து கொண்டு ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சி செய்தீர்களா?
உங்களை தப்பு சொல்வதாக நினைகாதீர்கள். இந்த நாட்டில் சில பிரச்சனைகளை கேள்வி கேட்டால் உயிருக்கே ஆபத்து வந்து விடும் நிலை வந்து விட்டது. கூட்டு முயற்சியாக இருந்தால் ஒரு அளவு முடியும்.
நியாயமான கேள்வி. இந்த கட்டுரை என்னையும் குறி வைத்தே எழுதப்பட்டது. இதில் உள்ள பல முரண்பாடுகளை நான் களைந்து விட்டேன். ஒரு விழிப்புணர்வு கட்டுரையை சிலகாலம் முன் படித்தது என்னுள் சில மாற்றங்களை உண்டு பண்ணியது. அதை போன்று ஒரு அற்ப ஆசையே இந்த கட்டுரை. மற்றபடி ஊருக்கு உபதேசம் செய்வதில் எனக்கும் உடன்பாடில்லை. மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்!!!
மதம்மாற்றம் செய்ய தில்லுமுல்லு மொள்ளமாரித்தனம்.
வாரிரா
http://marumlogam.blogspot.com/2010/08/blog-post.html