கவித... கவித...

ஒரு மொழியின் ஆளுமை பெரும்பாலும் கவிதைகளில் தான் வெளிக்கொணரும். அதுவும் அடி,தொடை,அணி,பா போன்றவை பற்றியெல்லாம் கவலைப்படாத புதுக்கவிதைகள் அழகுப்பெண்கள் போல. ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி ரசிக்கிறார்கள். எல்லா சாலைகளும் ரோமை அடைகின்றன என்று சொல்வது போல கிட்டத்தட்ட எல்லா கவிதைகளும் காதலுக்காகவே எழுதப்படுகின்றன.அதுவும் காதலியின் கிட்னி தவிர அனைத்தையும் வர்ணிப்பார்கள். நிலவு,வானம்,மேகம்,மின்னல்,பூ,தென்றல் என பெனாத்துவார்கள். ஆனால் சிலவற்றை ரசிக்காமலும் இருக்க முடியாது. எதோ நண்பனின் நோட்டில் படித்ததாய் ஞாபகம்.

ஆம் நிலவு மேடு பள்ளமானது தான்
என்னவள் முகத்தில் முகப்பருக்கள்!!!!

கண்டிப்பாய் இதை சம்பந்தப்பட்ட பெண் கேட்டிருந்தால் வெட்கப்பட்டிருப்பாள். கவிதை தரும் போதையில் இடையிடையே நானும் எழுத முயலுவேன். பன்னிரண்டாம் வகுப்பில் எழுதியதாய் ஞாபகம்.பொதுத்தேர்வில் மட்டமான மதிப்பெண் எடுத்ததால் ஒளித்து வைக்கும்படி ஆகியது.உரைநடையை உடைத்து எழுதி கவிதையாக்குவது இன்னொரு சூத்திரம்.

ஒருமுறை சொன்னதை மறுமுறை சொன்னால்
கவிதையாம்!!!
ஒரு முறை பார்த்தவுடன் மீண்டும் உன்னை பார்க்கத் தோன்றுதே
நீயும் கவிதை தானோ!!!

மறக்காமல் ஆச்சர்யகுறி போட்டு விடுதல் உத்தமம்.இல்லையேல் ஒரு கூட்டம் இதை கவிதை இல்லை என நம்ப மறுக்கும். ஆனால் மெல்லிய சோகங்களையும், தின நிகழ்வுகளையும் கவிதையில் சொல்லுகையில் அந்த பதிவு அழகாகிறது. கிட்டத்தட்ட நாலைந்து வருடங்களுக்கு முன்னாடி எதோ வார இதழில் படித்தது. ஹைக்கூ வகையிரா. இவ்வளவு குறைவான வார்த்தைகளில் வறுமையை பதிவு செய்ய வாய்ப்பே இல்லை.

வயிறு நிறைந்திருக்கிறது
மூன்று நாளாய் பட்டினி
ஏழை கர்ப்பிணி!!!


எதுகை மோனை தேவை இல்லாமல் அந்த நொடியின் வீரியத்தை பதிவு செய்யும் வல்லமை கவிதைகளுக்கு உண்டு. இதுவும் சில ஆண்டுகளுக்கு முன் எதோ வார இதழில் படித்தாய் ஞாபகம். ஒரு சோகமான நெடும்பயணத்தை இப்படி விவரிக்கிறார்.


அப்பாவின் மரணத்திற்கு ஊருக்கு செல்கிறான்.
பேருந்தில் முழுநீள நகைச்சுவை படம்!!!

இந்த கவிதையின் கனம் அதிகம். பூச்சில்லாத வார்த்தைகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது.யாராவுது பேனாக்காரர்கள் இதைவைத்து சிறுகதையோ,குறுநாவலோ எழுதி விட முடியும். எளிமையான விவரனை. இந்த கவிதையின் அழகே அந்த 'முழு நீள' என்ற வார்த்தையில் ஒளிந்திருப்பதாய் படுகிறது. அது இல்லாமல் கவிதை படிக்கிற போது அந்த அடர்த்தி இல்லாமல் போவதாய் தோன்றுகிறது. கீழே உள்ள கவிதை ரெண்டு மூன்று வாரங்களுக்கு முன் ஆனந்த விகடனில் படித்தது.அழகான நகைச்சுவை ,கொஞ்சம் எதார்த்தம் கலந்து எழுதி இருக்கிறார். படித்தவுடன் கண்டிப்பாய் 'அட' என மூளைக்குள் ஒரு சத்தம் கேட்கும்.

'இருப்பதிலேயே நல்ல புகைப்படத்தை
பெண் வீட்டிற்கு அனுப்பினேன்.
அவர்கள் வந்ததிலேயே நல்லதை
தேர்வு செய்திருப்பார்கள் போல
பதிலில்லை!!!'
இதோ இந்த பதிவை எழுதிகொண்டிருக்கும் இந்நேரம் பெங்களூரில் மழை பெய்து கொண்டிருக்கிறது. எதிர் வீட்டு வாண்டுப்பெண் பால்கனியில் நின்றபடி நனைந்து கொண்டிருக்கிறாள். அவள் அம்மாவின் 'கத்தல்கள்' அவள் காதில் விழவில்லை. ரொம்ப நேரமாய் ஒரு 'சப்பை' கவிதையுடனாவுது முடித்துவிடலாம் என எண்ணி இல்லாத மூளையை கசக்கி கொண்டிருந்தேன். கடைசியில் தோன்றிவிட்டது.

'அவளை நனைத்து விட்டு
இன்னும் அழகாகிறது
மழை!!!'
கருத்துகள்

Ramesh இவ்வாறு கூறியுள்ளார்…
மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் பதிவு..வாழ்த்துக்கள்...

நீங்கள் எழுதியது குழந்தையைப் பார்த்துத்தான் என்றாலும்..அதைப்படிப்பவர்கள் அதையும் காதலிக்கானதாய்தான் நினைப்பார்கள்..அதுதான் கவிதையின் சிறப்பு...

முடிந்தால் இதையும் படியுங்கள்...

http://rameshspot.blogspot.com/2010/08/blog-post_06.html
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ரமேஷ்...

//நீங்கள் எழுதியது குழந்தையைப் பார்த்துத்தான் என்றாலும்..அதைப்படிப்பவர்கள் அதையும் காதலிக்கானதாய்தான் நினைப்பார்கள்..அதுதான் கவிதையின் சிறப்பு..//

ரொம்பச்சரி
தினேஷ்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
வயிறு நிறைந்திருக்கிறது
மூன்று நாளாய் பட்டினி
ஏழை கர்ப்பிணி!!
நல்ல வரிகள் ஆசை என்பது அளவிட முடியாததுதான் ஆசைகள் ஆயிரம் இருப்பின் அடக்கி ஆள கற்றுகொல்வோமெனில்.............

http://marumlogam.blogspot.com
எஸ்.கே இவ்வாறு கூறியுள்ளார்…
கவிதைகள் மிக நன்றாக உள்ளன!
சிவராம்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல இருக்கு ஜி...
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
kavignargalukku manjappai seruppadi...

காதலியின் கிட்னி தவிர அனைத்தையும் வர்ணிப்பார்கள்.

hats off thalivaa..!
;-)
Anisha Yunus இவ்வாறு கூறியுள்ளார்…
அந்த கடைசி கவிதை சிறு குழந்தையை குறிப்பிட்டதனாலேயே இன்னும் அழகாய் தோன்றுகிறது. :)