என்னத்த எழுத??ஒரு வலைத்தளம் ஆரம்பித்து தொடர்ச்சியாய் விடாமல் எழுதுவது என்பது மக்கள் டிவியை அரைமணிநேரம் உட்கார்ந்து பார்ப்பதை விட கடினமானது. ஆரம்பிச்ச நாளுல இருந்தே அப்படி என்னதான் எழுதுறதுனு மூளைல ஒரே புகைச்சல். சரி அக்கம்பக்கத்துல Blog எழுதுறவுங்க என்ன எழுதுறாங்கன்னு பார்த்தா நமக்கு ஒரு க்ளு கிடைக்குமேனு ஒரு நோட்டம் விட்டேன். சில பேரு புது படம் வந்தவுடனே அதுக்கு ஒரு விமர்சனத்த போடுறாங்க. படம் பாத்துக்கிட்டு இருக்கிறப்பவே "Interval" கேப்புல விமர்சனம் போடும் விட்டலாச்சாரியார்கள் கூட உண்டு. அதில் "திரைக்கதை சரியில்ல..", "நடிகை நடிகர்கள் தேர்வு கச்சிதம்..", "ஒளிப்பதிவு அருமை..."னு ஆனந்த விகடன் பாதிப்புகள் அதிகமாய் இருக்கிறது. வேறு சிலர் ஆங்கில படத்துக்கு விமர்சனம் எழுதுகிறேன் என்று வெள்ளைக்காரன் பிஸ் அடிச்சாக்கூட "அவுங்கள மாதிரி மூச்சா அடிக்க ஆள் இல்லைங்க"னு புலம்புகிறார்கள்.

இப்படி அடுத்தவுங்கள லொட்டை சொல்றது ரொம்ப எளிது.ஆனா எழுதிப்பார்த்தா தான் அதில் டவுசரை கிழிக்கும் சமாச்சாரங்கள் இருப்பது தெரியும். ரொம்ப நாளைக்கு முன்னாடி இல்லாத மூளையை இறுக்கிக் கசக்கி ஒரு பதிவு எழுதினேன். எல்லோருக்கும் அதை மின்னஞ்சல் வேறு செய்தேன். அனுப்பிய பத்தே நிமிடத்தில் ஒரு தோழியிடம் இருந்து பதில் வந்தது. சந்தோசமாய் திறந்து படித்துப்பார்த்தால் ,"டேய் லூசு ..உனக்கு வேற வேலையே இல்லையா.. " என்று என் தன்மானத்தின் மேல் தடியடி நடத்தப்பட்டிருந்தது. "எப்படிங்க பொறுமையா உட்கார்ந்து எழுதிறீங்க" ,"ஆபிஸ்ல "பெஞ்ச்ல" இருக்கீங்களா", "தூக்கத்துல எழுதுற வியாதி ஏதும் இருக்கா??' னு ஏகப்பட்ட ஏவுகணைகள் வந்து தாக்கும். ஒரு பயலும் நம்ம எழுதியது பற்றி பேச மாட்டார்கள். ஆங்காங்கே ஆலங்கட்டி மழை போல எப்போதாவது நல்ல விமர்சனங்கள் வரும். ஒரு எழுத்தாளனுக்கும் ,வலைத்தளத்தில் எழுதுபவனுக்கும் உள்ள வித்யாசம் என்பது சச்சினுக்கும் ,தெருவில் கிரிக்கெட் விளையாடும் சிறுவனுக்கும் உள்ள தூரத்துக்கு சமமானது.இந்த யதார்த்தை புரிந்து கொண்டு எழுதுதல் நலம். ஏதோ படத்தில் மம்மூட்டி சொல்வது போல சில நேரங்களில் "உப்மா" கூட நல்லா இருக்கும்.முதல் முதலில் மின்னல் என்ற கவிதை எழுதினேன். என்னை தவிர ஒரு பத்து பேர் அதை படித்திருப்பார்களா என்பது சந்தேகம். இருந்தும் அவ்வப்போது எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.எழுதுவது கலவி போல. யாரும் பாராட்டுவதற்கு செய்வதில்லை. புத்தகங்கள் படிக்கிற போது அந்த கதா பாத்திரங்கள்,சம்பவங்கள் நம் முன் வாழ்ந்து கொண்டே இருக்கும். நல்ல எழுத்து நம்மை அந்த உலகில் பயணிக்க வைக்கும்.ஜெயமோகன் சொல்வது போல ஒரு எழுத்தாளன் நிஜத்தைப்போல ஒரு நிழலான வரலாற்றை உருவாக்குகிறான். நானும் வாழ்நாளுக்குள் நல்லோர் மெச்சும் ஒரு சிறுகதை எழுதிவிட வேண்டும் என்று எத்தனித்துக்கொண்டே இருக்கிறேன், ஆண்குழந்தை வேண்டி அடுத்தடுத்து பெண்குழந்தைகள் பெற்றெடுக்கும் பெற்றோர் போல.சரி வாழ்க்கையில் தான் தினமும் சமாளிப்புகள் செய்கிறோமே...எழுத்திலாவது முரண்டு பிடித்து சுயத்தை காப்போம் என எப்போதும் முயல்கிறேன். படிப்பதே பத்து பேர் அதில் என்ன பகுமானம் என்றெல்லாம் கேலி செய்தாலும் பரவாயில்லை என.


Cyanide கண்டுபிடித்தவர் அதை உண்டு பார்த்துவிட்டு அதை விவரித்து எழுதி விட்டு இறந்ததாய் சொல்லுவார்கள். ஒரு சிகரெட்டை வாங்கி ஒரு முறை புகைத்து பார்த்து அந்த அனுபவத்தை ஒரு பதிவாய் எழுதலாமா என யோசித்தேன்.ம்ஹூம்...ஏற்கனவே எனக்கு அறிவுரை சொல்ல தனியாய் ஒரு கழகமே ஆரம்பித்திருக்கிறார்கள். இதுவேற வேண்டாம் என விட்டு விட்டேன். பிறகு ஆர்வக்கோளாறில் வெண்பா பற்றி படித்து "ஈற்றடி சிறுத்து இருக்கும்" என ஒரு பதிவு தயார் செய்து ,சரி தப்பு பார்க்காமல் நாலஞ்சு வெண்பா அடித்து விட்டேன். பதிவேற்றும் அளவு அந்தப்பதிவுக்கு தகுதியில்லாமல் அது தூங்கிகொண்டிருக்கிறது.இலங்கைப்பிரச்சனையின் வரலாற்றை படித்து உணர்ச்சிமயமாய் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. போதிய அறிவு இல்லாமல் பதிவு எழுதுவது குறைகுடம் குத்தாட்டம் போடுவது போல. ஆகையால் வாசித்தலை அதிகப்படுத்தி இருக்கிறேன்.


கொஞ்ச நாள் முன்னாடி சென்னையில் இருந்த போது பக்கத்து வீட்டு சிறுவன் ஓடி வந்தான்.

"அங்கிள் நீங்க தமிழுல ப்ளாக்லாம் எழுதுவீங்கன்னு உங்க பிரெண்ட்ஸ் சொன்னாங்க... அப்டியா"

இத்தன நாளா நம்ம பெருமைய நாமளே தெரியாம இருந்திருக்கோம் என மனதில் நினைத்துக்கொண்டு "ஆமா ...அதுக்கென்ன..." என்றேன்.

" அது ஒண்ணுமில்ல...எங்க கிளாஸ் மிஸ் தமிழ் மிஸ்... எனக்கு லீவ் லெட்டர் தமிழுல எழுதித்தாங்களேன் ப்ளீஸ்...."
கருத்துகள்

Raju இவ்வாறு கூறியுள்ளார்…
ஆதி காலந்தொட்டே, காலங்காலமாக‌ மனித மூளையின் அடுக்குகளில் படிமங்களாகச் சிதறிப் பரவிப் படிந்திருக்கும் சுய எள்ளல் துணுக்குகளை, குஞ்சுக்காக கூடொன்றைக் கட்டும் தாய்ப் பறவையின் தீவிர முனைப்பை ஒத்ததொரு முனைப்பில் திரட்டோ திரட்டோவென திரட்டி ஒரு அழியாக் காவியம் படைத்துள்ளீர்கள்!

பகுமானக் கோழி பறந்து கொண்டே முட்டையிடுவதைப் போல, சிலர் எழுதத்தான் செய்கிறார்கள். என்ன செய்ய..?
:-)
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
யோவ் ராஜூ தைரியமிருந்தா தமிழுல திட்டுய்யா!!!!!
angel இவ்வாறு கூறியுள்ளார்…
hmmmm
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
I want to read your Katturai on Ilangaith thamilargal.. prepare and publish..