இரத்த பூமி (பகுதி 1)

                                                          
                                                                                                      


சினிமாக்களில் பார்ப்பது போல கல்லூரிகள் நிஜத்தில் இல்லை தான். ஆனால் இந்தக்கல்லூரி நெறிகெட்டுத்தெரியும் சமுதாயத்தால் நினைத்துக்கூட பார்க்க முடியாத கல்லூரி. ராமகிருஷ்ண மடத்தால் நடத்தப்படுகிறது.மாணவர்கள் எல்லோரும் கண்டிப்பாக விடுதியில் தங்கிவிட வேண்டும் (Residential). தினமும் காலையில் 4.45க்கு எழுதல். 5.30 மணிமுதல் Study hour.பிற்பாடு கட்டாய உடற்பயிற்சி. தினமும் மூன்று வேளை கூட்டுப்பிரார்த்தனை. நாடே மறந்துபோன கைக்குத்தல் அரிசியில் தான் சாப்பாடு. திங்கள்,புதன்,சனி களில் வெள்ளை வேஷ்டி சட்டை தான் அணிய வேண்டும்.காலில் செருப்பு அணிதல் கூடாது. இவ்வாறு 'wassup...yo' என அலைவோரை சுளுக்கெடுப்பதற்காகவே ஏகப்பட்ட விதிவகைகள் அந்த கல்லூரியில் உண்டு.இன்றளவும் சோழவந்தானில் இயங்கி வரும் அந்த கல்வி நிலையத்தின் பெயர் விவேகானந்தா கல்லூரி. மதுரை ஏரியாக்களில் சேட்டை செய்யும் பிள்ளைகளை "ஒழுங்கா இருக்கியா..இல்ல சாமியார் காலேஜ்ல சேத்து விடவா" என பெற்றோர்கள் கொலை மிரட்டல் விடுப்பார்கள். ஆக இது ஒரு ஆண்கள் கல்லூரி என்பதை தனியாக வேற சொல்லத்தேவை இல்லை.

சும்பக் அந்தக்கல்லூரியில் ஒரு வருடத்தை தள்ளி இருந்தான். கங்காவும் அவனும் மெஸ் ஹாலில் உட்கார்ந்து மால்ட் குடித்துக்கொண்டிருந்தார்கள். மால்ட் என்பது ஒரு மாதிரியான தானியச்சாறு. விடுதியில் டீ,காபி கிடையாது.அதைத்தான் கொடுப்பார்கள்.கங்கா மாடு ஊரத்தண்ணியை உறிஞ்சி குடிக்கும் காட்சியை ஞாபகப்படுத்தும் வண்ணம் குடித்துகொண்டு இருந்தான்.கொஞ்சம் ஒல்லியாய்,கண்ணாடி அணிந்து இருப்பான். ஒரே வேட்டியை ஒரு வாரம் கட்டுவதை தவிர அவனிடம் வேறு கெட்ட பழக்கங்கள் கிடையாது.பாத்ரூம் போகும் நேரங்கள் தவிர மற்ற நேரமெல்லாம் சும்பக்கும் கங்காவும் ஒன்றாகவே சுற்றுவார்கள்.சும்பக்கின் உண்மையான பெயர் வேற ஏதோ ஒன்று.ஆனால்அவன் அடிக்கடி உபயோகப்படுத்தும் ஒரு கெட்ட வார்த்தையின் முதல் பகுதி அவனுக்கு காலப்போக்கில் பெயராகிப்போனது.திடீரென மெஸ்ஸில் முதலாமாண்டு மாணவர்கள் மத்தியில் ஒரே சலசலப்பு. சில சீனியர் விஷமிகள் "மால்ட் குடித்தால் ஆண்மைக்குறைவு ஏற்பட்டுவிடும்" என முதலாமாண்டு மாணவர்கள் மத்தியில் வதந்தியை பரப்பியுள்ளனர். உச்சியெடுத்து தலை சீவிய ஒரு முதலாமாண்டு சின்னபையன் கங்கா அருகில் வந்து அமர்ந்தான்.

"அண்ணா..மால்ட் குடிச்சா அப்டி ஆயிருமாண்ணா...அதான் சாமிஜிலாம் குடிக்குறாங்களாமே..."

கங்கா டம்ளரை வைத்துவிட்டு அவன் காதருகே சென்று, "அதெல்லாம் சும்மாடா.. இவன்லாம் ஒருவருஷமா குடிக்குறான்...போன மாசம் இவன்பொண்டாட்டி ஒரே பிரசவத்துல பத்துப்பிள்ளை பெத்தா தெரியுமா... " என சும்பக்கை காட்டி சொன்னான். 

"விளையாடாதீங்கண்ணா..."

"ஆமா இவரு எங்க மாமா பொண்ணு..விளையாடுறோம்...ஆளைப்பாரு..ஹார்லிக்ஸ் விளம்பரத்துல வர பப்பா மாறி இருந்திட்டு ஒனக்கு இந்தக்கேள்வி தேவையா??.." என்றான் கங்கா. இருவரும் கொஞ்ச நேரமாய்  சத்தமாய் சிரித்தார்கள். அந்த முதலாமாண்டு பச்சி முறைத்துக்கொண்டே பறந்தது. கொஞ்ச நேரத்தில் சும்பக் கங்காவிடம்," டேய் வென்று..சாயங்காலம் அஞ்சு மணிக்கு நம்ம கோவைக்கு ஹாஸ்டல் office ரூம்ல Enquiry தெரியும்ல..என்னாச்சுன்னு பாப்போம்.." என சொன்னான். இருவரும் எழுந்து Office ரூம் நோக்கி நடந்தனர். பிரகாஷ் இவர்களுடன் ஒன்றாக சேர்ந்து இரண்டாமாண்டு Physics படிக்கும் மற்றொரு மனிதருள் மாணிக்கம். கோயம்பத்தூரில் இருந்து வந்து படித்ததால் அவனை எல்லாருமே கோவை என செல்லமாக கூப்பிடுவார்கள். சாயங்காலம் பிரார்த்தனைக்கூடத்தில் எல்லோரும் இறைவனை துதித்துக்கொண்டிருக்க இந்த கோவை மட்டும் சிம்ரன் ஏடாகூடமாய் குனிந்ததை அட்டைப்படமாய்கொண்ட ஆனந்தவிகடன் புத்தகத்தை ஒளித்து வைத்து படித்துகொண்டிருந்தான். அதை லாவகமாக "கருத்து" காளிமுத்து என்னும் வார்டன் பிடித்து விட்டார். அதற்காகத்தான் சாயங்காலம் கோவைக்கு விசாரணை. ஆபீஸ் ரூம் வெளியிலே நாரையன்,கருவாயன்,பூச்சி எல்லோரும் நின்றிருந்தனர். 

விடுதியில் Remark நோட் எனப்படும் ஒரு புத்தகம் இருந்தது. எல்லா மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய தகவல் புத்தகம் அது. ஏதேனும் குற்றம் செய்தால் அந்தப்புத்தகத்தில் அது பதிவேற்றப்படும். மாணவர்களின் நடத்தையை கண்காணிக்க காலங்காலமாய் விவேகானந்தா கல்லூரியில் பயன்படுத்தும் முறை. " வாடா தம்பி.." என கருத்துக்காளிமுத்து கோவையை அருகில் அழைத்தார். கோவையின் remark புத்தகத்தின் பக்கம் திறக்கப்பட்டது. கோவை சினிமா நடிகர் ராஜ்கிரண் போல் விரைப்பாய் நின்றிருந்தான். தூக்கு மேடையில் பகத்சிங்குக்கு இருந்த அதே பெருமிதம் அவன் முகத்தில் இருந்தது. "வாட்டர் டேங்க்கில் ஏறி குளித்தான். கிச்சனுக்கு வெளியே சிறுநீர் கழித்தான். மாணவர்களுக்கு பீடி சப்ளை செய்தான். டாய்லெட்டில் தவறான படங்கள் வரைந்தான்.." என தேதி வாரியாக Remark நோட் 
கோவையின் வரலாற்றை சொல்லியது. எல்லாத்தையும் படிச்சு முடிச்சிட்டு காளிமுத்து கோவையிடம் "ஓ அது நீ தானா " என்றார். பின்பு ரகசிய விசாரணை என்பதால் கதவுகள் மூடப்பட்டது.

"ஏன்டா இந்த தடவ டிஸ்மிஸ் பண்ணிருவாய்ங்கனு பேசிக்கிறாங்க.. அவ்ளோதானா..' என்றான் கருவாயன்.

"டேய் இது சப்ப மேட்டரு...ஸ்ரீதரு மண்டைய உடைச்சப்பவே தப்பிச்சிட்டான்..' என்றான் சும்பக்.கதவு திறந்தது. கோவை சோகமான முகத்துடன் அவன் அறைக்கு நடந்தான். மொத்த நண்பர் கூட்டமமும் அவன் பின்னால் வந்தது. "டேய் என்னாச்சுடா..." என சும்பக் தான் முதலில் கேட்டான்.கோவை நகத்தை கடித்துக்கொண்டே 'அப்பாவை கூட்டிட்டு வரச் சொல்லிட்டாய்ங்க டா.." என்றான். 

"அடிங்கோ&*&*....நா என்னமோ ஏதோனு பயந்துட்டேன்..இதென்ன ஒனக்கு புதுசாடா வெளக்கெண்ண..." என நாரையன் சொல்ல எல்லோரும் சிரித்தார்கள். கோவை அவன் பெட்டியில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினான். எல்லோரும் குழப்பமாய் பார்க்க, கங்கா அதை வாங்கி சத்தமாய் படித்தான்.

"அன்புள்ள பிரகாசுக்கு...

அப்பா எழுதிக்கொள்வது.நாங்கள் அனைவரும் இங்கு நலம். உன்னுடைய கடிதம் கிடைத்தது. பரீட்சைக்கு Fees கட்ட வேண்டும் என பணம் கேட்டிருந்தாய். இந்த செமஸ்டர்க்கு மட்டும் இதுவரை நாம் ஆறு முறை Fees கட்டிவிட்டோம் என்பதை உனக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன். இது வரை நாம் Fees கட்டிய பணத்தையெல்லாம் சேர்த்து வைத்திருந்தால், நாம் ஒரு unversityயே கட்டியிருக்கலாம் என்பதையும் நீ அறிவாய். நாம் சரியாகத்தானே மெஸ் பில் கட்டுகிறோம் அவர்கள் ஏன் சாப்பாட்டில் உப்பு போடுவதில்லை??...போன வருடத்தில் மட்டும் உன்னோட கல்லூரியில் என்னை ஏழு தடவை அழைத்திருந்தார்கள்.என் அலுவலக நண்பர்கள் கூட 'பேசாம மதுரை to கோயம்பத்தூர் பஸ் பாஸ் எடுத்திருங்களேன்' என கேலி செய்தார்கள். உனக்கு ஏழரைச்சனி மார்கழியுடன் முடிந்து விட்டது என தங்கராசண்ணன் சொன்னார். அதனால் தானோ என்னவோ இந்த வருடத்தில் உன் கல்லூரியில் இருந்து ஏதும் அழைப்பு வரவில்லை.இது தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்."

சிரித்தால் கோவையின் வாயில் சூடான வார்த்தைகள் வந்துவிடும் என்பதற்காக எல்லோரும் முட்டிக்கொண்டு நின்ற சிரிப்பை அடக்கிக்கொண்டார்கள். நாரையன் கோவையை தோள் தொட்டு "ஜோசியம் பொய்யின்னு நிருபிக்க நீயும் எவ்வளவு போராடுற..??"என்றான்.  எல்லாம் ஆர்ப்பாட்டமாய் சிரிக்க ஆரம்பிக்க,நாரையனின் மர்ம தேசத்தில் கோவை Football ஆடினான்.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                -                                                                                                                                                                ---தொடரும் 
கருத்துகள்

ARUN RAMA BALAN இவ்வாறு கூறியுள்ளார்…
Nice da.. Samiyar college!!!
Madhavan Srinivasagopalan இவ்வாறு கூறியுள்ளார்…
அசத்தல் ஆரம்பம்..
மேற்கொண்டு நடத்துங்க..
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
Thanks arun..

Thanks madhavan sir...
arya இவ்வாறு கூறியுள்ளார்…
Good one Siva sorry Sivan :-)

keep it up.. !!!!
veeraa18 இவ்வாறு கூறியுள்ளார்…
nan college ke ponna feeling
Selvam இவ்வாறு கூறியுள்ளார்…
Mappley, Kalakkareenga... marakkama 2nd part ezhuthunga...