இரத்த பூமி (பகுதி 2)


                                 

அடுத்த நாள் கோவையின் அப்பா ஊரில் இருந்து வந்தார். அலுவலகத்தில் வார்டன்களை சந்தித்தார். சில பாதிக்கப்பட்ட வார்டன்கள் பழைய கதைகளை விளக்கிக்கொண்டிருந்தார்கள். கோவை கையை கட்டிஅமைதியாய் நின்று கொண்டான். இது போன்ற விசாரணை நாட்களில் எப்போதும் தலைக்கு எண்ணெய் வைத்து உச்சியெல்லாம் எடுத்து சீவி விடுவான். எல்லாம் முடிந்து "பிரகாஷ் ஒரு வாரம் வெள்ள உடுப்பு போட்டு "punishment serving" செஞ்சிருப்பா.." என ஒழுங்கு முறை கமிட்டி முடிவு செய்தது. மூன்று வேளைகளும் மெஸ்ஸில் முதல் Batchஇல் சாப்பிடுவோருக்கு வெள்ளை உடை அணிந்து சாப்பாடு பரிமாற வேண்டும். அதுவே தண்டனை. போகும் போது கோவையின் அப்பா எதுவும் பேசாமல் ஐந்நூறு ரூபா பணத்தை எடுத்து ,"இந்தாப்பா..அந்த ஜென்மத்துக்கு கொடுத்துரு.." என நாரையனிடம் கொடுத்து விட்டுப்போனார்.


எல்லோரும் "ElectriCity" கிளாஸ் முடிந்து, நடந்து தமிழ் வகுப்புக்கு போய்க்கொண்டிருந்தார்கள். "நா..என்னென்னமோ எதிர் பாத்தேன் கடைசி சப்புன்னு போயிருச்சுடா சும்பக்" என்றான் பூச்சி.

"ஏன்...அவன அம்மணமா ஓட விடுவாய்ங்கன்னு பாத்தியா"

"இல்லடா போயும் போயும் "Punishment Serving" போட்டு கோவைய அசிங்க படுத்துறாய்ங்க...அதும் அவனோட அப்பா என்னடான்னா நாரையன்லாம் ஒரு நல்லவன்னு அவய்ங்கிட்ட காச கொடுக்கிறாரு..."

"போன தடவ நாரையனோட அப்பா வந்தப்ப நம்ம கோவைகிட்ட தான காச கொடுத்தாரு..உலகம் வட்டம் தான் போல பூச்சி.."

எல்லாத்தையும் கேட்டுக்கிட்டே வந்த நாரையன் முறைத்தான்.இவர்கள் அனைவரும் Bsc Physics படிக்கிறார்கள்.கல்லூரியில் ஒவ்வொரு  Departmentக்கும் ஒரு அடைமொழி உண்டு. "Golden" chemistry, "Excellent" mathematics என ஆளாளுக்கு ஒரு பெயர் வைத்துக்கொள்வார்கள். Physicsல்  படித்த முன்னோர்கள் எந்நேரமும் படித்துக்கொண்டே திரிந்ததாலும்,அதிகம் பேசாததாலும் அவர்களை  கல்லூரியில் எப்போதும் "Psycho" physics என்று கேலி செய்வார்கள்.அந்த களங்கத்தை துடைக்க கோவை,நாரையன் போன்ற பெருந்தலைவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.பத்துமுறை பல் தேய்த்துவிட்டு பேசினாலும் அவன் வாய் நாறும் என்பதால் அவன் நாரையன். இருளுக்கும் அவனுக்கும் இரண்டு வித்யாசம் கண்டுபிடிப்பதே அரிது என்பதால் அவன் கருவாயன். நாலடியில் குழந்தை போல் இருப்பதால் அவன் பூச்சி. கிட்டத்தட்ட எல்லாருக்குமே ஒரு புனைப்பெயர் உண்டு. வார்டன்களுக்கும் ஆடுவெட்டி,நாய்க்கொல்லி,விடாதுகருப்பு என பல பெயர்கள் புழக்கத்தில் இருந்தன.

கங்கா,சும்பக்,கருவாயன் முதல் வரிசையிலும் மற்றவர்கள் எல்லோரும் பின்வரிசையிலும் அமர்ந்து கொண்டார்கள். தமிழ் வகுப்பு ஆரம்பமானது. நெற்றியில் சந்தனத்துடன் வந்திருந்தார் தங்கவேலு அய்யா. எப்போதும் உச்சஸ்தாயில் தான் பேசுவார். வகுப்பை தொடக்கினார்.


"தம்பிகளா..வர்ற மூனாம் தேதி நம்ம "Prayer Hall"ல அந்தர்யோகம் நிகழ்ச்சி இருக்கு.எல்லாரும் மறக்காம கலந்துக்கணும்...சுவாமி ஸ்ரீமத் பரமானந்த மகாராஜ் உங்களோட ஆன்மிக கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லுவாங்க. சுவாமிஜியோட அருளுரை கேக்க கொடுத்து வச்சிருக்கனும்....உங்களுக்கு எதாவுது ஆன்மிகக்கேள்விகள் இருந்துச்சுனா இப்பவே ஒரு பேப்பர்ல எழுதி கொடுங்க."

                                                                                                                         

                                                              


மாணவர்கள் பெரிதாய் உற்சாகம் அடைந்ததாய் தெரியவில்லை. சில பேர் கேள்விகளை எழுதிக்கொடுத்தார்கள்.அய்யா வந்த கேள்விதாள்களை இடது ,வலது பக்கமாய் அடுக்கிக்கொண்டார்.திடீரென ஜெகதீசன் கொடுத்த கேள்வியை படித்த அய்யா உற்சாகமானார். 

"டேய் தம்பிகளா.. இந்த கேள்விய கேளுங்கடா...நம்ம ஜகதீசன் கேட்டிருக்கான். இதுக்குப்பின்னாடி அத்வைதம்,த்வைதம் லாம் இருக்கு..ஆனா கேள்வி வேடிக்கையா இருக்கும்..."ஜகதீசன் பெருமையாய் முன்னாடி நின்றிருந்தான்.

அய்யா தொடர்ந்தார். "சுவாமிஜி.. கோடி நமஸ்காரங்கள்.பிள்ளையாரோ கனமானவர். எலியோ சின்ன உயிரினம். எலி எப்படி பிள்ளையாரின் வாகனமாக 
முடியும்??...". கூட்டம் கொல்லென சிரித்தது.

"தம்பிகளா கேள்வி வேடிக்கையா இருக்கும்..இதுக்கு பின்னாடி இந்துமதத்தின் உருவவழிபாட்டு சித்தாந்தங்கள் இருக்கு.." என்றார் அய்யா. கருவாயன் சும்பக் காதில் "டேய் மாப்புள நாமளும் ஒரு கேள்வி எழுதி கொடுக்கணும்டா.." என்றான்.

பின்னாடி இருந்து நாரையன் "முருகனோட மூனாவுது பொண்டாட்டி எங்க இருக்குன்னு கேளு" என்றான் மெதுவாக.

"டேய் நாரையா..வெளாட்டு மயிரா பேசாத ...அவரு உன் சூ%&ல சூலாயுதத்த எறக்க போறாரு.. ஜென்மத்துக்கும் அரியர கிளியர் பண்ண மாட்ட.." .கருவாயன் காட்டமானான்.

சும்பக் கொஞ்சம் யோசித்து விட்டு பேப்பரில் எழுதினான். "சுவாமிஜி... கருணையே கடவுள் என்கிறோம். அன்பே சிவம் என்கிறோம். ஆனால் ஆடுகோழிகளை வெட்டுகிறோம்.அலகு குத்துகிறோம்.தீ மிதிக்கிறோம். நம்மை வருத்தி இறைவனை அடைவதை விட ,நம்மை உயர்த்தி இறைவனை அடையலாமே???" கருவாயன் படித்து பார்த்து விட்டு "மாப்ள சூப்பர்...நா எம்பேர போட்டு கொடுத்திர வா" என்றான். சும்பக் தலையாட்டினான். 

அய்யா படித்து பார்த்தார்.அவர் கண்ணெல்லாம் சிவந்து விட்டது.தாளை இரண்டாக கிழித்தார். "ஏன் ..வேற எந்த மதத்துலயும் இந்த மாதிரி நம்பிக்கை இல்லயா ..அங்க போய் கேளு.............கேளு.... கேக்க மாட்ட..ஏன்னா அவன் கூட்டமா சேர்ந்து விரட்டுவான்...நாம தான இளிச்சவாயங்க...அதான் இங்க வந்து வாலாட்டுற.." கருவாயன் தலை குனிந்து நின்ருந்தான். 

"அதுக்கு நாங்கேட்ட கேள்விய கேட்ருந்தாகூட அந்தாளு இவ்வளவு கோவிச்சிருக்க மாட்டார்" என்று முனு முனுத்தான் நாரையன். "போய் உக்காருடே.." என கருவாயனை அனுப்பினார். எல்லொரும் அமைதியாய் இருந்தார்கள். அய்யா முகம் மூர்க்கமாய் இருந்தது. அதற்கு மேல் வேற எதையும் பேசாமல் புத்தகத்தை எடுத்து செய்யுள் பகுதியை நடத்த ஆரம்பித்தார்.

பாடம் ஆரம்பமானவுடன் அய்யா வழக்கம்போல் பேச ஆரம்பித்தார். ஊடே சித்தர்களை பற்றி பேச்சு போய்,சித்த மருத்துவம் பற்றி விளக்கிக்கொண்டிருந்தார். 

"அதுல அளப்பெரிய விசயங்கள் இருக்குடா. ஏன் நம்ம மாட்டுச்சாணம் இருக்கே அது பெரிய மருந்துடா...எல்லா புண்களுக்கும் போடலாம். நெற்றிப்புண்...கைல வர்ற கைப்புண், தலைல வர்ற புண்..."என அய்யா சொல்லிக்கொண்டிருக்கயிலையே சும்பக் குனிந்து "அய்யா வாய்புண்ணுக்கு என்னய்யா செய்றது.." என்றான். மொத்த வகுப்பும் சிரித்தார்கள்.கருவாயன் எதோ வாழைப்பழ நகைச்சுவை பார்த்தவன் போல பயங்கரமாய் சிரித்தான்.அய்யா மீண்டும் காளியானார்.கண்கள் சிவந்தது.சிரித்துக்கொண்டிருந்த கருவாயனை பார்த்ததும் அய்யா கோபம் ஆறாக பெருகியது. சொன்னது அவனாகத்தான் இருக்குமென நினைத்து கையில் இருந்த மர "Duster"ஐ வைத்து கருவாயனை மொத்தி எடுத்தார். 

"அய்யா நா சொல்...." என கருவாயன் வாயை திறக்கையில். "வாய மூடு .." என அய்யா சொல்லி சொல்லி அடித்தார்.அந்த ஆக்சன் சீன் ஒரு நிமிடம் தொடர்ந்தது. அடித்து முடித்து விட்டு அய்யா மூச்சு வாங்கினார். கருவாயனுக்கு மூஞ்சு ஆங்காங்கே வீங்கி இருந்தது அப்பட்டமாய் தெரிந்தது.வகுப்பு முடிந்து அய்யா வெளியேறினார். கருவாயன் கோபத்தை அடக்க முடியாமல் "டேய் சும்பக்கூ& யானே..." என  கத்திக்கொண்டு சும்பக்கை விரட்டினான். இருவரும் மைதானத்தில் ஓடினார்கள்.


                                                                                                                   
                                           இப்படியாக இவர்கள் வாழ்க்கை ஓடியது. காலம் கண்டபடி சுத்த ஓவ்வொரு வரும் ஒவ்வொரு திசைகளில் கிடக்கிறார்கள். எட்டு வருடங்கள் ஓடி விட்டது.கடந்த மே மாதம் கங்காவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது. கருவாயனை தவிர எல்லோரும் வந்திருந்தார்கள்.அவன் மும்பையில் இருந்ததால் வர முடியவில்லை. கோவை தற்சமயம் ஒரு புகழ்பெற்ற ஆங்கில பத்திரிக்கையில் நல்ல பதவியில் இருக்கிறான். திருமணமாகி இரண்டு ஆண்டு ஆகிறது. நாரையன் வாத்தியாராக உள்ளான். "நீ எங்களுக்காகவா படிக்குற..." "ஒழுக்கம் தான் ரொம்ப முக்கியம்" போன்ற வசனங்களை மாணவர் மத்தியில் அடிப்பதாய் கேள்வி. இது தவிர ஒரு குழந்தையின் தகப்பன் என்கிற கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். பூச்சி சென்னையில் வேலை பார்க்கிறான். நிறைய வளர்ந்து விட்டான். கொஞ்சம் மீசையும் வளர்ந்து 
விட்டது. "என்ன பூச்சி..வயசுக்கு வந்துட்டியா " என கேலி செய்தார்கள். சும்பக்கும் பெரிதாய் மாறவில்லை. அவனும் கங்காபோல  கணினியை தட்டுகிறான். பொழுது போகாத நேரங்களில் ப்ளாக் எழுதுகிறானாம்.

இதோ அடுத்தடுத்த நண்பர்களின் கல்யாண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். பழைய அரட்டையை மீண்டும் அடிப்பார்கள்.கதைகள் பேசுவார்கள்.கடந்த காலங்கள் எப்போதும் அழகானதாகவே இருக்கிறது.அடுத்த முறை சந்திக்கையில் கருவாயனிடம் போன் பேசும் அந்தப்பெண் யாரென விசாரிக்க வேண்டும் என முடிவாயிருக்கிறது.                                                                                                                 (தற்சமயம் முற்றுகிறது)கருத்துகள்