கிரிக்கெட் தெரிந்தது போல காட்டிக்கொள்ள முத்தான முப்பது வழிகள்




இந்தியா சுதந்திரம் அடைந்த போது இவ்வளவு கொண்டாடினோமோ தெரியாது ஆனால் இந்த முறை உலகக்கோப்பை வென்ற போது மொத்த இந்தியாவும் ஆனந்த கூத்தாடி மகிழ்ந்தது.பள்ளியில்,கல்லூரிகளில்,வேலையிடங்களில்,தொலைப்பேசி உரையாடல்களில் என எப்போதும் கிரிக்கெட், விவாதத்துக்குள் நுழைந்துவிடும்.நம் நாட்டைப்பொருத்தவரை நமக்கு உயிர்வாழ ஆக்சிஜனுடன் கொஞ்சம் கிரிக்கெட்டும் வேண்டும். இந்த சூழலில் கிரிக்கெட் நடப்பு தெரியாமல் இருக்கும் சிலர் படும் பாடு இருக்கிறதே.. அது சொல்லி மாளாது... போன மாதம் இந்திய,மேற்கிந்திய தீவுகள்க்கு இடையிலான உலககோப்பை கிரிக்கெட் போட்டியை நண்பரின் வீட்டில் பார்த்துக்கொண்டிருந்தோம். 260 ஸ்கோரை மேற்கிந்திய தீவுகள் சேஸ் செய்வார்களா என்று நானும் நண்பரும் அலசி ஆராய்ந்து கொண்டு இருந்தோம். திடீரென விவாதத்துக்குள் புகுந்த நண்பரின் மனைவி "லாராவ அவுட் ஆக்கிட்டா முடிஞ்சது..." என்றார். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். கிரிக்கெட் தெரியாதவர்கள்,பிடிக்காதவர்கள் ஆகியோரை "யாரு பெத்த பிள்ளையோ" என்று பரிதாபமாய் பார்க்கும் நிலை தான் உள்ளது. அந்த அபாக்கியவான்களுக்கு தான் இந்த கட்டுரை.

யாராவுது கூட்டமாக நின்று பழைய கிரிக்கெட் போட்டிகளை பற்றி பேசிகொண்டு இருந்தால் நடுவில் புகுந்து , "World Cupல சச்சின் அடிச்ச அந்த சிக்சர் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிக்குதுங்க..Chanceless" என அடித்து விடுங்கள். எந்த World Cup, எந்த சிக்சர் என்றெல்லாம் சொல்லத்தேவையில்லை. நீங்கள் சொல்லி முடித்தவுடன் எதோ ஒரு மொக்கைச்சாமி "ஆமாங்க" என சொல்லிவிட்டு "அக்தர் பால்ல அங்க அடிச்சார்,கேடிக் பால்ல இங்க அடிச்சார்"னு வரலாற்றை பிரிச்சு பேன் பார்ப்பான்.இடையிடையே மண்டையை ஆட்டிக்கொண்டே எதோ ஏற்கனவே தெரிந்த விஷயத்தை கேட்பது போல அசால்டாய் கேட்டுக்கொண்டே இருங்கள். அப்டியே "பெங்களுர்ல அடிச்ச செஞ்சுரி தான் அவரோட Best" என எதாவுது ஒரு ஊர் பெயரை சொல்லி ஒரு பிட்டை போடுங்கள். அந்த ஆள் எல்லா ஊர்லயும் செஞ்சுரி அடிச்சு வச்சிருக்கிறார். ஆகையால் மேற்படி பார்ட்டிகள் எதோ ஒன்றை எடுத்து அரை மணிநேரம் பேசி முடிப்பார்கள். அப்புறம் தோனியை "மஹி" என்றும் ஷேவாக்கை "வீரு" என்றும், காம்பீரை "கெளதம்" என்றும் ஏதோ உங்க மாமா பையனை சொல்வதைப்போல் செல்லமாய் குறிப்பிடுங்கள்.



அப்புறம் கூட்டமாய் எல்லோரும் உட்கார்ந்து டிவியில் போட்டிகளை பார்த்துக்கொண்டிருக்கும்போது ,"அந்த "Deep square Leg" ல நிக்குறது யாருப்பா...ஓட்டைய விட்டுக்கிட்டே இருக்கான்" என ஒரு போடு போடுங்கள். கொஞ்ச நேரம் பதிலே வராது. ஏன்னா இந்தியாவில் கிரிக்கெட் பார்க்கும் தொண்ணூறு சதவீதம் பேருக்கு 'Fielding Position'களின் பெயர் தெரியாது. நம்ம தோனியே கூட "எப்பா ...போய் சோத்தாங்கைப்பக்கம் நில்லுப்பா" என்று பீல்டர்களை சொல்லுவதாய் கேள்வி. ஆகையால் உங்கள் இமேஜ் எக்குத்தப்பாய் எகிறும். ராகுல் டிராவிடும், லக்ஷ்மனும் எந்த ஷாட் அடித்தாலும் "வாவ்..சூப்பர்...இது ஷாட்..." என உச்சுக்கொட்டுங்கள்.அதிலும் அம்பயரை குறிவைத்து நேராய் அடிக்கும் ஷாட்களுக்கு எழுந்து நின்று கைதட்டி விடுங்கள். இந்த T20 வந்து கிரிக்கெட்டையே குலைச்சிருச்சு...குதறிருச்சு என புலம்பித்தள்ளுங்கள்.உங்களை பாரம்பரிய கிரிக்கெட் ரசிகர் என நினைத்துக்கொள்வார்கள்.

இந்தியா எத்தனை ரன் எடுத்தாலும் 'இன்னும் ஒரு பத்து ரன் ஈசியா எடுத்திருக்கலாம்' என சொல்லுங்கள். அப்புறம் குறிப்பாய் முக்கியமான வெளிநாட்டு வீரர்களின் பெயரை தெரிந்து கொள்ளுதல் அவசியம்.பிரேமானந்தா போல முடி வைத்துக்கொண்டு சைடு வாக்கில் மாங்கா அடிப்பது போல பந்து வீசுபவர் பேர் மலிங்கா. பெயரை நன்றாக படித்துக்கொள்ளுங்கள்.நீங்க பாட்டுக்கு மகாலிங்கம் என்று சொல்லி விடாதீர்கள். பேட்டை காஜா பீடியை பிடிப்பது போல அசால்டாய் பிடித்துக்கொண்டு கருப்பன சாமியாய் நின்று வெளுத்துக்கட்டுபவர் பெயர் கெயில். மேட்ச் முடிஞ்சவுடன் ஓட்டமாய் ஓடி வந்து ஒரு வெள்ளைக்கார புள்ளைக்கு கிஸ் அடிப்பவர் பெயர் வார்னே. பேட் பிடிக்க வந்தவுடனே தலைக்கு மேலே நூறு மீட்டருக்கு தூக்கி அடிச்சு அவுட் ஆகிட்டு போற பாய்க்கு பேர் அப்ரிதி. எந்நேரமும் சிவிங்கியை மென்னுகிட்டே எல்லாருகூடயும் சண்டை கட்டுபவர் பேர் பாண்டிங் (பாண்டி அல்ல)


யாராவுது ஆஷஸ் பாத்தியா என்று கேட்டால்,ஆஷ் ட்ரேயை நோக்கி ஓடாதீர்கள்.அது ஒரு கிரிக்கெட் தொடர். "இல்ல மச்சி..போன தடவ மாதிரி இல்ல" என கூசாமல் சொல்லுங்கள். எந்த ஆஷஸ் தொடரும் அதுக்கு முந்துன தடவை போல இருந்ததில்லை. ஆஷிஸ் நெஹ்ரா,ஸ்ரீசாந்த் போன்றோரில் யாராவுது அணியில் இருந்தால் 'இவய்ங்கள ஏன் தான் சேக்குராங்களோ'னு கோபமாய் கத்துங்கள். அவர்களை பெற்றவர்களை தவிர இந்தியாவில் யாருக்கும் அவர்களை பிடிப்பதில்லை.அதனால் உங்களுக்கு ஆதரவு ஓட்டுக்கள் அதிகமாய் விழுகும். ஐ.சி.சி....பி.சி.சி.ஐ....,ஐ.பி.ல்,.....போன்ற keyword களை ஞாபகமாய் வைத்துக்கொள்ளுங்கள் பின்னாடி உபயோகமாய் இருக்கும்.


மேற்கூறிய எல்லாம் செய்தும் பாச்சா பலிக்கவில்லை, விடாமல் கிரிக்கெட் அரக்கர்கள் ரத்தம் குடிக்கிறார்கள் என்றால் நமக்கு இருக்கவே இருக்கிறது பிரம்மாஸ்திரம் அதை சொல்லி ஆட்டையை முடியுங்கள். " Fraud பசங்கப்பா...எல்லாம் மேட்ச் பிக்சிங் ..ஸ்பாட் பிக்சிங் ....ச்சீ இத பாக்குறதுக்கு........"

கருத்துகள்

Madhavan Srinivasagopalan இவ்வாறு கூறியுள்ளார்…
ஹா.. ஹா.... இன்றைய நிலைக்கேற்ப சொல்லப் பட்ட கருத்துக்கள்.
ஹாஸ்யமாக இருந்தாலும்.. சொல்லிய செய்திகள் அனைத்தும் மிகவும் சரியே..
Gangaram இவ்வாறு கூறியுள்ளார்…
//நம் நாட்டைப்பொருத்தவரை நமக்கு உயிர்வாழ ஆக்சிஜனுடன் கொஞ்சம் கிரிக்கெட்டும் வேண்டும்.//

Migachariyana karuthu... yengayo padicha madhiri irundhalum..nalla thaan flowa pooguthu.
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
Thanks mathavan.

Thanks Ganga.
ARUN RAMA BALAN இவ்வாறு கூறியுள்ளார்…
Classic shot..

சே!!! பழக்க தோஷம்..

Classic Post..