ஹாஸ்யம்





யம் பேரு ராமச்சந்திரன். நல்லா கவனமா கேட்டுக்கிட்டீயளா... 'ச்' பேருக்கு ஊடாப்ல வரணும். பாதிப்பய சந்திப்பெழயோடதா பேசுதாம். கேட்டா நா கம்ப்யூட்டர் வேல பாக்கோம் முழுத்தும் இங்கிலிஷ்ல தேன் பேசணும்பான்.இந்த அகராதி புடிச்சதுகளெல்லாம் எழுவது,எம்பதுல வேலயில்லாம நாண்டுகிட்டு செத்தானுவளே அப்போ பொறந்திருக்கணும். நான்லா தூத்துக்குடி நாச்சியப்பன் ஹைஸ்கூல்ல வேல பாக்கேல முப்பது ரூபாதா ச்சம்பளம். அருள படிக்க வைய்க்கேளே எவ்ளோ கஷ்டம்.. ஷ்..சொல்ல மறந்துட்டனே இப்போ நா உயிரோட இல்ல. போன வாரம்கூட தினமலர்ல மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலினு எம்படத்தோட வெளம்பரம் குடுத்திருந்தாங்களே... "அன்னாரது பிரிவில் வாடும்"னு அன்னம்,அருளு,மாப்ள பேரெல்லாம் கூட போட்டிருந்தாவளே. இந்தப் பொடுசுக ஜீவா,யாழினி பேரும் கூட இருந்துச்சு. மூணு வருசமும் மறக்காம பண்றா அருளு.ஒத்தைக்கு ஒரு புள்ளங்கிறதுனால எனக்கு அவனா உசுரு.அவளுக்கும் அப்டித்தான். சாகுறது அப்டிலாம் ஒன்னும் கஷ்டமான விஷயமில்ல. என்னெல்லாம் மூச்சுத்தெனறுதுனு திருநவேலி அப்பல்லோல சேத்தப்போ மெரண்டு தே போனேன்.

அவிய ஆஸ்பத்ரில பேசுறதும் பயமா தா இருக்கும்.ஒரு செவ்வாக்கெலம காலைல முதுகுல ஒரு ஜிவ்வுன வலி. யாரோ ஐச தூக்கி வக்கிற மாறி இருக்கு.அது அப்பிடியே அந்தாள மேல தல வரைக்கும் போகுது. திருப்பவும் கீழ கால் வரைக்கும் வருது. பேச வாய் வர மாடிங்குது. அன்னம் தூங்கிட்டுக் கெடக்கா. நானு "அடியே பொசமுட்டி எந்திரிடி...நீ அருந்தாளியாக போறே ,உசுரு போகுதுடீ..ஒன்ன ஒரு தடவ பாத்துக்கிடுதேன்.."னு கத்த நெனைக்கேன்.முடில. கை,கால் அசைக்க வர மாட்டேன்னுது.அப்புறம் பொசுக்குனு எதுலையோ குதிச்ச மாதிரி இருந்துச்சு.இந்த ஆறு,குளத்துளயெல்லாம் குதிச்சோனே ஒரு 
மாதிரி தண்ணிக்குள்ள கம்முன்னு இருக்கும்ல அப்டிஇருந்துச்சு.இப்டியா சொகமா தான் எங்கதை முடிஞ்சது. அப்புறம் எல்லாங்காலைல அழுதாவ. அருளு ஏங்கி ஏங்கி அழுவேல எனக்கே பாவமா இருக்கு. அப்பா நல்லாதாம்ல இருக்கேன் சொல்ல ஆசையா இருக்கு.முடியாதே. இந்த கடைசி பத்து வருசத்த நெனச்சு பாக்கேன். எவ்வளவு சீக்கிரமா போயிருச்சு..

                                           


அருளு மாப்ளைக்கு பாங்குல மாத்தலாகி திருநவேலி போயிட்டா. இந்த ஜீவா பயல பாக்காம ச்சங்கடமா போச்சு. தாத்தா தாத்தானு கழுத்துல தொங்கிட்டே கெடப்பான்,இப்டி விட்டுட்டு போயிட்டானேனு இருக்கும். ரெண்டு நாளுக்கு ஒரு தரம் போன்ல பேசிட்டு இருப்பான். அப்புறம் அதுவும் கொறஞ்சு போச்சு.பெறவு யாழு பொறந்தா.ஜீவா "இங்கிலீஷ் மீடியம் படிக்கேன்னு" பெருமையா சொல்லுவான். "சோசியல் சயன்ஸ் நா சொல்லித்தரேம்" டா ம்பேன். சிரிப்பான். அந்தப்பைய சிரிக்கைல கன்னத்துல எடது பக்கம் குழி விழுகுமே..அத பாக்கவே ஆச ஆசயா இருக்கும். அவன் ச்சின்னப் புள்ளைய இருக்கேள அதுக்காகவே அவன் அக்கிள்ள "கிச்சனம்" செய்வேன். சின்னவ யாழுவும் பிடிக்கும் தான். இந்த ஜீவா பய மேல தான் ஒட்டுதல் சாஸ்தி. அப்புறம் வருஷத்துக்கு ஒரு தடவ இதுக முழுப்பரிச்சை லீவுக்கு தான் தூத்துக்குடி வருவாய. அந்த ஒரு மாசமும் அவளவு சந்தோசமா திரிவேன். வீடே ஒரே சத்தகாடா கெடக்கும். நா காலைல டீ கடைக்குக் கூட போறதில்லே.இந்த ஜீவா பய பாதி நேரம் இந்த வீடியோ கேம்ஸ் வெளாண்டுக்கிட்டே கெடப்பான். வளர வளர என்கூட அதிகமா பேச மாட்டிங்குதான். முன்னம்லா அவுகம்மா ஏசுனா எம்ட தான் ஓடி வருவான்.

ஒருக்க அருளு வீட்டுக்கு போயிருந்தப்போ கவனிக்கேன். இந்த ஜீவா பய அவுக சித்தப்பா கால் பின்னாலே சுத்துதான். அந்தாளே அந்த அறவேக்காட்டு பய என்ன சொன்னாலும் சிரிக்கான். "இப்டித்தான் ஒரு வாத்தியார் இருந்தார்..", "இப்டித்தான் ஒரு வக்கீல் இருந்தார்.." னு என்னென்னமோ சொல்லுதான். இந்த ரெண்டு கழுதைகளுக்கும் ஒரே சிரிப்பு.

 "எலே பத்தாப்பு படிக்கவனே..இங்காடே..உங்கூட்டு ஆளுவ கூட தா பேசுவியா..கெளவய்ங்க கூட பேச மாட்டியோ.." ங்கேன். வந்து நின்னு கிட்டு என்ன பாக்கான். மொகரைல கொஞ்சமா பருவெல்லாம் வந்திருக்கு.இந்த பொடுசு யாழுவ தூக்கி ,'ஏம்டி தாத்தா கூட பேச மாட்டியோ' ங்கேன். அவ "போ தாத்தா நீ ஒரே போர்.எப்ப பாரு சயின்ஸ் கேள்வியா கேட்டுக்கிட்டு கெடப்ப..எங்க சேகர் சித்தப்பா எவளோ ஜாலி தெரிமா..எந்நேரமும் எங்களுக்கு ஜோக் சொல்லிட்டே இருப்பாங்க"ன்னுதா. அவெ சொன்னதெல்லாம் சொல்லி சிரிக்காவ ஜீவாவும் இவளும். எனக்கு கெடந்து எரிச்சலா கெடக்கு. இதுகள பாக்க அவளவு தூர போயிருக்கேன்..என்கூட மூஞ்சொடுத்து பேச மாட்டிங்கிறாவ...

ஊரு வந்து சேந்ததும் மனசுக்கு ரொம்ப சங்கடமா கெடந்துச்சு. இதுக இந்த மே க்கு ஊருக்கு வரேலே நாமளும் சிரிக்க சிரிக்க பேசனும்னு வைராக்கியம் வந்துச்சு. நாம்லா பேசுதோம்னா ஆறுமுகநேரி பக்கம் அஞ்சூறு ஒக்காந்து சிரிக்க கேட்டுட்டு இருப்பாய.ஒருக்க எங்கூரு பக்கம் ஒரு பெரியவர் போலி விப்பாரு. அவரு சத்தம் போட்டு "போலி..போலி..." கத்திட்டு வர ,நான் "இவரு தாம்ல உண்மையச்சொல்லி விக்காரு" ஞ்சொன்னேன் பாக்கனும். கூட இருந்த பயகெல்லாம் அப்டி ஒரே சிரிப்பு.ஆனா இப்ப இருக்குறதுகளுக்கு நம்ம பேசுதது பிடிக்க மாடிங்குது போலுக்க.. "சித்திரமும் கைப் பழக்கம்" னுவாய.லைப்ரரில போயி சிரிப்பு புத்தோமா எடுக்க ஆரம்பிச்சேன்.அங்க அங்க எழுதி வச்சிக்கிடுதுவேன். டீவில கூட சிரிப்பு நிகழ்ச்சிலாம் பாக்க ஆரம்பிச்சேன்.அன்னத்துக்கு கூட ஒரே ஆச்சிரியம். ஓரமா சிரிச்சுக்கிடுதா.கழுத..அப்டி ஒரு நா ராத்திரி தான் மூச்சு தெனரல் வந்துச்சு. அதத்தான் முன்னமே சொன்னனே..ஆஸ்பத்திரிக்கு போயி ..போய் ச்சேந்தென்னு...



ஆஸ்பத்திரில இருந்து வீட்டுக்கு தூக்கிட்டு வந்துட்டாக,ஜீவாவும் குட்டியும் கூட அழுவுதாவ. சாவுற வீட்ல ஏம்ல அழுவுறாகனு இப்பல புரியுது.செத்தவனுக்கு புரிய வைக்க போலுக்க. பெறவு எல்லா முடிஞ்சு போச்சு. ஜீவா என்னோட ரூமுக்கு போயி நோட்டிண்டு கெடந்தான்.கைல அவனுக்கு அந்த பேப்பர் ஆப்டிருச்சு.எடுத்து படிக்கான்.

தொண்டர் 1: தலைவர் ஏன் ஞ்சோகமா இருக்காருல ...

(கொஞ்சம் இடைவெளி விட்டு)

தொண்டர் 2: அவரு கட்சி மாறுனத விளையாட்டுச்செய்திகள்ள சொல்லிட்டாவளாம்...


படிச்சிட்டு அவனுக்கு கண்ணெல்லாம் கலங்கிருச்சு. ஆனா அப்றம் சிரிக்கான். நல்லா சிரிக்கான்.கன்னத்துல குழி தெரிய சிரிக்கான். ரொம்ப சந்தோசமா இருந்துச்சு தெரியுமா...

கருத்துகள்

ARUN RAMA BALAN இவ்வாறு கூறியுள்ளார்…
Nice Article da..
Heart Touching..
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
really nice