காலையிலிருந்து மூனாவது காபி. எரிச்சல் குறைந்த பாடில்லை. அவனுடைய அந்த சிரிச்ச மூஞ்சி அடிக்கடி நினைவுக்கு வந்து என் கடுப்பில் இன்னும் காரம் சேர்க்கிறது. அவன..அவன கண்டாலே எனக்கு பிடிக்காது. அவனுக்கும் அப்பிடித்தான். அவனை நான் நாயை பாக்குற மாதிரி பார்ப்பேன். அவன் என்னை நாய்க்கழிவை பாக்குற மாதிரி பார்ப்பான். ரொம்ப திமிர் பிடிச்ச பய.ஆளு பாக்க ஏதோ சல்மான்கான் பட வில்லன் மாதிரி இருப்பான். சொந்த ஊரு விழுப்புரம்னு நினைக்குறேன். கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், அவன் கொஞ்சம் அழகான ஆளு தான்கிறத ஒத்துக்கிற வேண்டியிருக்கு. எல்லாமே அன்னைக்கு தான் ஆரம்பிச்சுது. ஆபிஸ்ல அன்னைக்கு ஒரு பார்ட்டி. எல்லாரும் ஒரே குஷி மூட்ல இருந்தாங்க. நான் வழக்கம்போல மூஞ்சிய உம்முன்னு வச்சிக்கிட்டு "எப்படா..சாப்பாடு போடுவாய்ங்க" மனநிலைல இருந்தேன்.
இந்தப்பய என்னோட பக்கத்தில வந்தான். தூரத்தில் இருந்து நிறைய கண்களும்,பெண்களும் என்னையே பார்ப்பது தெரிந்தது. "பாஸ்..உங்களுக்கு பிளட் கேன்சரா..." என்று ரொம்ப சீரியசான முகபாவத்தோட கேட்டான். நான் குழப்பத்தில் "வாட்??" என்றேன். அப்புறம் என் தோளில் கைவைத்து "அப்போ...கிட்னி பெயிலியரா..." என்றான். நான் அவன் கையையெடுத்து விட்டு "என்ன சொல்ற" என்றேன். அவன் உடனே சிரித்த படி சத்தமாய் "இல்லேல்ல...அப்புறமெதுக்கு பாஸ், எப்போ பாத்தாலும் எமர்ஜென்சி வார்ட்ல இருகிற மாதிரி சோகமா இருக்கீங்க..கொஞ்சம் கலகலன்னு இருக்கலாம்ல" என சொன்னான். மொத்தக்கூட்டமும் என்னை பார்த்து சிரித்தது. அதுவும் சில பெண்கள் வயிற்றை பிடித்துக்கொண்டெல்லாம் சிரித்தார்கள். அவனின் சில நண்பர்கள் "விக்கெட்" எடுத்தவுடன் கை தட்டுவது போல அவனிடம் கை தட்டிக்கொண்டார்கள். பருத்திவீரன் க்ளைமாக்ஸ் பிரியாமணியாய் உணர்ந்தேன். என் மொத்த கோபமும் அந்த வெண்ணை மேல் திரும்பியது. மனதிற்குள் சத்தமாய் சொல்லிக்கொண்டேன்.
1-0
தர்மயுத்தம் அன்று முதல் ஆரம்பமானது.அவனை பதிலுக்கு பழிவாங்க துடித்துக்கொண்டிருந்தேன். ஆனால் உல்டாவாய் அவன் என்னை எப்போதாவுது பார்க்கும் போதெல்லாம் "ஹே.. ஐ.சி.யு.." என கூப்பிட்டுக்கொண்டிருந்தான். அவனது அடிப்பொடிகளெல்லாம் என்னை கடந்து போகையில் கொல்லென சிரித்தது. சொன்னால் அசிங்கம் அவனை எப்படியாவுது பழிதீர்க்கவேண்டுமேன சாமியை கூட தீவிரமாய் கும்பிட பார்த்தேன். பாரதத்தில் சொல்வது போல் பழி தீர்த்தல் ஒரு உன்னத உணர்ச்சி. நான் அந்த நிமிடத்திற்காக காத்திருந்தேன். கும்பிட்ட தெய்வம் என்னை கை விடவில்லை. அடுத்த ரெண்டாவுது மாதத்தில் ஆபிசில் "ரங்கோலி" கோலப்போட்டி வந்தது. பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் போட்டி. ஒரு குழு மெகா கோலம் ஒன்றை போட்டுக்கொண்டிருந்தது. நாங்கள் ஒரு மொத்தக்கூட்டம் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அந்த நேரம் பார்த்து நம்ம பய வந்தான். "வாவ்..சூப்பர் ..." என்றான். எனக்கு அன்று என்னுடைய நாள் என புரிந்துபோனது.பய மேலும் பேச்சை தொடர்ந்தான். "நானும் இதுல Participate பண்ண முடியுமா.." என ஆர்வமாய் கேட்டான். நான் உடனே "கண்டிப்பாய் பண்ணலாம்.." என்றேன். அவன் பரபரப்புடன் "அதுக்கு நான் என்ன செய்யணும்.." என்றான். நான் ஒரு வினாடி இடைவெளி விட்டு அவன் கண்ணை பார்த்து "ஒரு ஆப்பரேசன் செய்யணும்" என்றேன். கூட்டம் கொடூரமாய் சிரித்தது. அவனுக்கு விசயம் புரிந்து போய் முகம் சுருங்கிப்போனது. சிலர் அவனை நோக்கி கை நீட்டி சிரித்தார்கள். எனக்கு பழிதீர்த்த சந்தோசம். அவன் முகம் ரோஸ் கலரானது.
1-1
அதற்கப்புறம் அவன் என்னை முறைத்து பார்க்க ஆரம்பித்தான். அவனது உதவியால் மறந்து போன பழைய தமிழ் கெட்டவார்த்தைகளை Renewal செய்து கொண்டேன். அவன் என்னை அட்டாக் செய்ய காத்திருப்பான் என்பதால் ரொம்ப ஜாக்கிரதையாய் இருந்தேன்.கூட்டங்களை தவிர்க்க ஆரம்பித்தேன். அந்தப்பையளும் வெறிகொண்ட வேங்கையாய் காத்திருந்தான் என்பது அன்று தான் தெரிந்தது. அன்னைக்கு சரியான மழை. வீட்டுக்கு போகும் நேரம் பார்த்து மழை பவர்ப்ளே விளையாடியது. சரி ஆபிஸ் வாசலில் இருந்து மெயின் ரோடுக்கு ஓடிப்போய் ஆட்டோவில் ஏறிவிடலாம் என ஐன்ஸ்டீன் போல கணக்குப்போட்டேன். அந்த மழையில் ஓடும்போது கால் வழுக்கி கீழே விழுந்தேன். கால்,கை,நெத்தி என எனக்கு கொஞ்சம் சேதாரம் அதிகம் தான். இறைவனால் அனுப்பப்பட்ட சில தேவ தூதர்கள் வந்து என்னை காப்பாற்றினார்கள். “பாத்து வரக்கூடாதாங்க..” என சிலர் வருத்தம் கொண்டார்கள். “ஆமாடா..எனக்கு மழைல அங்கபிரதட்சணம் செய்யணும்னு வேண்டுதல்” னு சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை. ஆனால் அந்த நிமிடம் உலகம் எவ்வளவு அன்பானது என புரிந்து கொண்டேன்.உதவியவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினேன். நானும் இது போல் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என அந்த ரண வேதனையிலும் கோல் செட் பண்ணினேன்.
மறுநாள் காலை அலுவலகம் வந்தேன். மெயில் செக் பண்ணிய போது தான் அந்த அதிர்ச்சி. “நீச்சல் வீரன்” என்ற தலைப்பில் நான் விழுந்த காட்சி புகைப்படங்கள் இருந்தது. இலவச வேட்டி சட்டை போல் எல்லாருக்கும் அந்த மெயில் அனுப்பப்பட்டிருந்தது. உதவி செய்த எந்த நாயோ தான் இந்த நாச வேலையை செய்திருக்கிறது. அதுவும் ஒரு போட்டோவில் எங்கெங்கே அடிபட்டிருக்கிறது என வட்டம் போட்டு காட்டப்பட்டுள்ளது. அந்த க்ரூப் மெயிலில் சிலர் ,”ஸ்னோல சரிக்கிட்டு போற மாதிரி போறாருப்பா..” ,”சிங்கம்டா ..”,“பாடிய எப்போ எடுக்குறாங்க...”,“மூஞ்சில என்னப்பா தக்காளி சட்னி...” போன்ற கமெண்ட்கள் வந்து என் எரிகிற புண்ணில் எரிச்சலை கிளப்பின. மெயில் அனுப்பியவன் வேற யார். அவனே தான்.
2 -1
நான் எவ்வளவு வெறியாய் இருந்திருப்பேன் என இந்த இடத்தில் விலாவாரியாய் சொல்லத்தேவையில்லை. ரெண்டுநாள் இஞ்சி ஜூஸ் குடிச்ச தனுஷ் போல சுத்திக்கொண்டிருந்தேன். எவனாவுது எங்காவது சிரித்துக்கொண்டிருந்தால் நம்மள நெனச்சுத் தான் சிரிக்குறானோ என நினைத்துக்கொண்டேன். மனிதவெடிகுண்டுகள் எப்படி உருவாகிறார்கள் என்பது புரிந்தது. இந்த முறை நான் கொடுக்கிற தாக்குதலில் அவன் நிலை குலைந்து போக வேண்டும் என உக்கிரமாய் சிந்தித்தேன். என் அரைவேக்காட்டு மூளையில் ஏதும் ஐடியாக்கள் உதிக்கக்காணோம். அன்று டீம் மீட்டிங். டீம்மில் உள்ள எண்பது பேரும் அந்த பெரும் அறையில் கூடினோம். மீட்டிங் ஆரம்பிக்க கொஞ்ச நேரம் ஆகும் போல் இருந்தது. அதுவரை வந்து சேராத நபர்களை போன் செய்து அழையுங்கள் என்றார்கள். நம்ம பயலுக்கு போன் செய்தால் என்னவென்று எனக்கு தலையில் கொம்பு முளைத்தது. நண்பனின் மொபைலில் இருந்து அவனுக்கு கால் செய்தேன். போன் ஸ்பீக்கரில் இருந்தது.
"ஹலோ..."
"ஹலோ"
"சார் நாங்க சிட்டி பேங்க்ல இருந்து பேசறோம். உங்களுக்கு நாங்க பதினஞ்சாயிரம் வரைக்கும் பெர்சனல் லோன் தரலாம்னு முடிவு பண்ணிருக்கோம். இனிமேலாச்சும் கிழிஞ்ச ஜீன்ஸ் போடாதீங்க சார் "
"ஹெல்லோ...யாரு நீங்க ..தேவையில்லாமா லூசு மாதிரி................"
"சார்..மிச்சம் இருக்குற பணத்துல ஜட்டி,பனியன் வாங்கிகோங்க. மறக்காம அந்த பில்லுல உங்க தாசில்தார்கிட்ட அட்டெஸ்ட் வாங்கி எங்க ஹெட் ஆபீஸ்க்கு கொரியர் பண்ணிருங்க..."
"மரியாதைய யார் பேசுறதுனு சொல்லுங்க... நான் கால ரெகார்ட் பண்றேன்... அப்டியே சைபர் கிரைம்ல கொடுக்க போறேன்.."
"ஆமா..இவரு பெரிய இளையராசா..ரெகார்டிங் பண்றாரு...நம்ம கூர்க்காவ பாத்தாலே கக்கா போவ...நீ சைபர் கிரைம் போறியா.."
" இவ் ...இவ்ளோ தான் உங்களுக்கு லிமிட்டு சொல்லிட்டேன்..."
"மச்சி ஏர்டெல்லுக்கு மாறு அன் லிமிடெட் டாக் டைம்...ஒவ்வொரு பிரெண்டும் தேவ மச்சான்..."
"எனக்கு வேல இருக்கு வெளாடாதீங்க...யாருன்னு சொல்லுங்க..."
"டீம் மீட்டிங் கூட அட்டென்ட் பண்ண முடியாத அளவுக்கு அப்டி என்ன புடுங்கிற வேல.. Googleஐ க்ளோஸ் பண்ணிட்டு மீட்டிங் ஹாலுக்கு வா தம்பி "
கேட்டுக்கொண்டிருந்த எல்லோரும் சிரித்தார்கள். ஒருவர் படுகிற அவமானம் அடுத்தவர் சிரிக்கிற சிரிப்பிலே அளக்கப் படுகிறது போல. ஏதோ சாதித்த சந்தோசம் என் தலையில் வந்து ஏறியது. அவன் மீட்டிங் ஹாலுக்கு வந்து சேர்ந்ததும் சிரிப்பு சத்தம் அதிகமானது. அவன் விளையாட்டாய் எடுத்துக்கொண்டது போல் சிரித்தான்.
2-2
அன்று சாயங்காலம் அவனுடைய சீட்டுக்கு போனேன். சிரித்தேன். "டேய்..இன்னும் முடியல..உன்ன அழ வைக்குறேன் பாரு " என்றேன். அவன் அசால்டாய் "ஏன்..வந்து வெங்காயம் உரிப்பியோ.." ன்னான்.
நல்லவேளை அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் இது கணக்கில் வரவில்லை. அவனே பிற்பாடு கடுப்பில் "நீ என்ன பெரிய அப்பாடக்கரா.." என சொல்லிக்கொண்டே என் சட்டையை பிடித்தான். நானும் "நீ பெரிய அண்டர்டேக்கரா டா" என சொல்லி அவன் சட்டையை பிடித்தேன். ரெண்டு பேர் முகமும் அருகருகே. அவன் மேல் கொஞ்சம் சிகரெட் வாடை கூட அடித்தது. அவன் குபீரென சிரிக்க ஆரம்பித்தான். சட்டையை விட்டு விட்டு அழகாய் சிரித்தான். நானும் சிரித்தேன். சிரிப்பு அடங்க கொஞ்ச நேரம் ஆனது.
கருத்துகள்
ச்சே! என்ன தத்துவம்! அசால்ட்டா சொல்லிடீங்களே பாஸ்!
http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html
எந்த பிரச்சனையும் ஒரு சிரிப்பில் தீர்க்கலாம், குறைக்கலாம்.
நண்பன்.
பிரசாந்தும் கரணும் நடிச்சுருப்பாய்ங்கே! உவ்வ்வேக் கூட மொக்கையா காமெடி
பண்ணுவாரே என்ன படம் அது..?
நண்பேன்டா சதீஷ்..
யோவ் ராஜூ..எதுனா ஹாலிவுட் படமா சொல்லுய்யா...ரொம்ப அசிங்கபடுத்திற...
சிரிப்பு எத்தனை பெரிய பிரச்சினையையும் தீர்த்து வைக்கும் என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
Second revenge, when you call him from meeting room, made me crazy laughing animal in my cubicle.. people hereby came to my place and asked me what happened.. it measures your humorous writing.. Keep rocking.. all the best.. write more and make me laugh forever..
Priya