குவாண்ட்டம் - (ஆல்பா குவாண்ட்டம்) - (பகுதி-2)








காலம் எப்போதும் நம் கவலைகளையும்,சந்தோசங்களையும் தின்று செரித்துக்கொண்டு நிகழ்காலத்துக்கு நம்மை இழுத்துக்கொண்டு ஓடும். மாதங்கள் ஓடியது. இப்போதெல்லாம் நான் அழுவதில்லை. நிம்மியின் ஆடைகளை கட்டிக்கொண்டு இரவு தூங்குவதில்லை. ரெண்டு நாளுக்கு ஒருமுறை ஷேவ் செய்து கொள்கிறேன். தப்பு தப்பாய் தமிழில் கவிதைகள் எழுத முயற்சி செய்கிறேன். பெரிய கஷ்டங்களை கடந்து வந்தவர்கள் எல்லாம் வாழ்க்கையின் சித்தாந்தங்கள் தனக்கு பிடிபட்டு விட்டதாய் நினைத்துக்கொள்கிறார்கள். அதற்கு நானும் விதிவிலக்கல்ல.அதன் பின் அருணிடம் அதிகம் பேசவில்லை,அந்த நாள் வரை. என் செல்பேசி பாடியது. எடுத்தேன்.




"மிஸ்டர் ரவி சௌக்கியமா.... இந்திய பிரதமருக்கப்றம் நீ தான் ரொம்ப பிசி போல.."


"டேய் குண்டா மிதி வாங்கப்போற..நீ தான் ஊர் சுத்திட்டே இருக்கிற ..என்ன கண்டுக்கில.."

"மும்பைல இருக்கேண்டா... ஆல்பால எனக்கு இங்க ஒரு பெரிய ரிசார்ச் போய்ட்டு இருக்கு..நான் தான் சென்ட்டர் ஹெட்....ரொம்ப டைட் ..பேசாம கெளம்பி வாயேன்...கோவா போய் ஜாலியா தண்ணியடிச்சிகிட்டு வெள்ளக்காரிகள கரெக்ட் பண்ணுவோம்"


"வெள்ளகாரவங்களா..."


"ஓ..நீ அந்த கோஷ்டியா..காண்டம கூட கதர்ல செய்யணும்னு சொல்லிக்கிட்டு அலைவாங்களே..."


"ஹஹஹா..சரிடா...லீவ பாத்திட்டு யோசிச்சி சொல்றேன்.."




அடுத்த சனிக்கிழமை கிளம்பி மும்பை போனேன். அருணுக்கு சந்தோசம் தாங்கலை. ரெண்டு பேரும் சேர்ந்து கண்டபடி ஊர் சுற்றினோம். எல்லா சாலைகளும் ரோமையே அடைகின்றன என்பது போல கடைசியில் நாங்கள் "ஓல்ட் மாங்க்"கை அடைந்தோம். நாளை உலகம் அழியப்போகிறது என்பது போல குடித்தோம். அருண் கண்கலங்கி என்னையே பார்த்தான். கொஞ்ச நேரத்தில் "எல்லாம் போச்சுடா ரவி " என்றான். நான் எதுவும் பேசாமல் அவனையே பார்த்தேன். அவனே திரும்பவும் பேசினான். "என்னோட லட்சியத்த, எதிர்காலத்த அழிச்சிட்டானுங்கடா...".

 
"அருண் என்னாச்சுடா...லவ் பெய்லியிரா..."



"மயிரு... இது வேறட.... என்னோட ரிசேர்ச்ல சொத்தை இருக்காம்...கான்சர் வந்திருமாம்.... நோபல் பரிசே வாங்க வேண்டிய கண்டுபிடிப்புடா..."



"என்னடா சொல்ற.."




" அது "குவாண்டம் ஜிப்" ரிசெர்ச்...எந்தப் பொருளையும் ப்ரோட்டான(Proton) விட சிரிசா ஆக்க முடியும். திரும்பவும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்."



"எதையுமா.."



"ஆமா..மனுசனக்கூட.."



"டேய்...நீ புத்திசாலி தான்..அதுக்காக என்னைய கேனயன் ஆக்காத...விட்டலாச்சார்யா படத்த விட மோசமாயிருக்கேடா..."





"கொபெர்நிகஸ் "பூமீ தான்டா சூரியன சுத்துதுனு" சொன்னப்போ சிரிச்சாங்க..அடிச்சாங்க...இன்னைக்கு நீ அன்றாடம் உபயோகப்படுத்திற அறிவியல் பொருட்கள் எல்லாம் ஒரு காலத்தில கோமாளித்தனம்னு
ஒதுக்கப்பட்ட சிந்தனைகள் தான். உலகம் இவ்வளவு சுருங்கிப் போனதுக்கு அறிவியல் சிந்தனை விரிஞ்சது தான்டா காரணம். உண்மையா ஆச்சர்யம் தான் அறிவியலோட தாய்மொழி. ஒண்ணுமில்ல ஒரு முப்பது வருசத்துக்கு முன்னாடி க்ளோனிங் பத்தி பேசிருந்தேன்னா உன்ன சங்கிலிய போட்டு கட்டி வச்சிருப்பாங்க.."




"சரிடா ஒத்துக்கிறேன்..எப்டிடா இது சாத்தியம்.."



"குவாண்டம் கம்ப்யூட்டிங்.."




"அதுல"


"நீங்க சீரோவையும் ,ஒன்னையும்(0,1) வச்சிக்கிட்டு பைனரில சூப்பர் கம்ப்யூட்டரே பில்ட் பண்ணுவீங்க...இது குவாண்டம்டா...மொத்தம் முப்பத்திரண்டு பார்டிக்கள் இருக்கு..யோசிச்சுப்பார்..அதோட வேகத்தையும் வீரியத்தையும்...அதாவுது ஒரு மனுசனோட மொத்த விவரத்தையும் ரொம்ப ஈசியா சேமிச்சு வச்சு அதை திரும்பவும் உபயோகிக்க முடியும்"



"அதாவுது ஒரு மனுஷன மாதிரி இன்னொருத்தன உருவாக்கிறது..அப்படி பார்த்தாலும் அது காப்பி தான.."




"இல்ல..அதில்ல...காஸ்மிக் கதிரையும், சோமா பார்ட்டிகள்ள இருந்து வெளிவரும் ஸோமா கதிரையும் பாயும் போது அணுக்கள் சுருங்கும். மனிதனோட திசுக்கள் சுருங்கும். எந்த அளவுனா 2.4 * (10 ^ -50)m சைசுக்கு.. எவ்வளவு சிரிசுனு புரியுதா.."




"டேய் அவ்வளவு சிரிசா...எதாவுது கருவில தான பாக்கவே முடியும்..வாய்ப்பேயில்ல..."




"இருக்கு..அதத்தானே நான் இங்க ஏழு வருஷம் பண்ணிட்டு இருக்கேன்...ஆல்பால இருந்து இதுக்கு அப்ரூவல் வேற இருந்தது...நேத்து கடைசி நேரத்துல அகர்வால்னு ஒரு கெளட்டு சயன்டிஸ்ட் திரும்பவும்
வந்து "உடல் பழைய நிலைக்கு வர்றப்போ செல்களுக்கு நடுவுல ரத்தம் உறைஞ்சு இருப்பதாகவும்...ஒரு வகை கேன்சர்" இதுனு சொல்லி கெடுத்துட்டான்..என்னோட மொத்த உழைப்பும் வீணா போச்சு..இத்தனைக்கும் அது ஆயிரத்துல எவனோ ஒருத்தனுக்குத்தான் நடக்கும்..பிச்சைகாரப் பசங்க..நீங்க அப்டியே கை சூப்பிட்டே இருங்கடா பாஸ்டர்ட்ஸ்..நான் போறேன்..போறேன்"




"ரிசைன் பண்ணப்போறியா.."

 
"நேத்து எல்லாபேரையும் அசிங்கமா திட்டிட்டேன்...அகர்வால தேவி&* பயலேனு திட்டிட்டேன்...கெழவன் மெரண்டுட்டான்..இன்னைக்கு எப்படியும் டிசிபிலனரி கூட்டம் போட்டு..என்னை தூக்கிருவாங்க..அதுக்குள்ள நா போயிருவேன்.."

"எங்கடா"


"எஸ் 12...அன்னைக்கு சொன்னனே அடுத்த பிரபஞ்சம்,இன்னொரு பூமீ... அங்க இப்போத்தான் 2002 வது வருஷம். நம்மளவிட இருவது வருஷம் பின்னாடி இருக்காங்க. நம்மளோட ரீசன்ட்டான கண்டுபிடிப்பெல்லாம் டாகுமென்ட் பண்ணிட்டேன். அதை அங்க போய் நானே கண்டுபிடிப்பதை போல் நடிப்பேன். அப்ரமென்ன..பேரு,புகழ்...நான் தான் அங்க ஐன்ஸ்டீன்,நியூட்டன்...எல்லோரும் கொண்டாடுவாங்க..."


அருண் வெறி வந்தவன் மாதிரி கண்ணை மூடிக்கொண்டு பேசினான். எனக்கு அடிச்ச போதை எல்லாம் இறங்கியது. "அது சரி..அது இங்க இருந்து எவ்வளவு தூரம்..""ரொம்ப தூரம் தான்.. 10^10^118 meters...ஒளி வேகத்துல போனாலும் பல நூற்றாண்டு ஆகும்..."



"அப்றம்.."



"எஸ்-20 ல இருந்து ஒருத்தன் இங்க வந்து ரொம்ப சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்கான்.."

"என்னடா எஸ்20யா ..குழப்புரே..."



 
" இன்னொரு பூமி..அவுங்க நம்மள விட அம்பது வருஷம் முன்னாடி இருக்காங்க..அங்க ஜீ(Z) கதிர்கள்னு ஒன்னு கண்டுபிடிச்சி இருக்காங்க..அது ஒளிய விட இருநூறு மடங்கு வேகமா போகும்..அது மூலமா தான் அந்த முல்லர் இங்க வந்தான். இன்னைக்கு பாரு அவன நவீன அறிவியலின் தந்தைங்கிறீங்க...போன தடவ ஜெர்மனி போனப்போ என்கிட்ட உளறிட்டான்..நான் அந்த ஜீ கதிர்கள் பத்தின நோட்ஸ சுட்டுட்டேன்...ஐ காட் மை ப்ளேன்..."


" வாட்..ஜேம்ஸ் முல்லரா...அடக்கடவுளே...ஸோ நீயும் அவன் ஸ்டைல்ல எஸ்12 போய் அங்க பெரியாளாகப் போற...சரி எப்போ"



"இன்னைக்கு நைட் கெளம்புறேன். அதான் உன்னை கடைசியா பாத்துடலாம்னு வர சொன்னேன்..."நான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென அந்த ஆசை வந்தது. "டேய் நிம்மி அங்க இருப்பாள்ளடா.."




"டேய் லூசு திரும்பவும் சொல்றேன். அவ அங்க பிறந்திருக்கலாம்..இல்லாமலும் இருக்கலாம்...இங்க நடந்த எல்லா நிகழ்வுகளும் அங்க நடந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.."



"ஒரு வாய்ப்பு இருக்குல....அது போதும் டா... நானும் வரேண்டா ..."




அவன் குழப்பமாய் என்னைப் பார்த்தான். நான் அவன் காலில் விழுந்தேன்.









---குவாண்டம் இன்னும் விரியும்

கருத்துகள்

ARUN RAMA BALAN இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான தொடர்ச்சி.. Keep it Up da.. :-)
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
nice
SATHISH இவ்வாறு கூறியுள்ளார்…
ennayum koottitu poda thambi..