குவாண்ட்டம் (ஆச்சர்ய குவாண்ட்டம்) (பகுதி 3)





அருண் என்னை பாவமாய் பார்த்தான். அவனால் என்னிடம் முடியாதென்று சொல்ல முடியாது. எனக்குத்தெரியும். என் தோளில் கை வைத்து " புரிஞ்சிக்கோ ரவி... அவ அங்க இருக்க வாய்ப்பு ரொம்ப குறைவுடா.....உனக்கு எப்டி புரிய வைக்குறதுனே தெரிலடா" நொந்து போய் சொன்னான்.

"ஒரு பெர்சென்ட் வாய்ப்பு இருக்குமா...அது போதும்டா... போட்டோவுக்கு மாலை போடுறதுக்கு அது எவ்வளவோ மேல்..."




"டேய் ரம்மில ஒரு தடவ வந்த பதிமூனு கார்ட்ஸ்...அதே பதிமூனு கார்ட்ஸும் திரும்பவும் அதே ஆளுக்கே வர எவ்வளவு வாய்ப்பு இருக்கோ..அவ்வளவு தான்டா இருக்கு...கொஞ்சம் யோசிச்சுபாரு.கோடிக்கான உயிரணுல நீ தான் அம்மாவோட கருமுட்டைல போய் வளர்ந்தே...கொஞ்சம் மாறியிருந்தா வேற யாரோ பிறந்திருப்பாங்க...அந்த மாதிரி அங்க அவ ஒரு வேள பிறக்காமலே போயிருக்கலாம்.அவ இல்லேனா அப்றம் திரும்பவும் வந்து அங்க அழுதுவடிஞ்சு என் பொழப்பப்பக் கெடுப்ப. திரும்பி வர்றதுக்கு நாம ஒன்னும் திருப்பதி ட்ரிப் போல டா கண்ணா...இது திரும்பவே முடியாத நீண்ட பயணம்.."

அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் விடாமல் தொடர்ந்தான்.

"டேய் அங்க என்னவேனா நடந்திருக்கலாம். மரபணுகோளாறுல தான் மனுசனே பொறந்தான். அங்க இருக்கவனுக்கு நெத்தில ஆணுறுப்பு இருக்கலாம்."

 எனக்கு குழப்பமே இல்லை. அறிவியல் என் நம்பிக்கையை நையாண்டி செய்யலாம், ஆனால் நான் தீர்க்கமாய் நின்றேன். அருண் என் பக்கத்தில் வந்தான்.

"அங்க அவ இல்லேனா..என் பேச்சக் கேக்கணும்....சோக மியூசிக் வாசிக்காம என்னோட வந்திடனும்...முக்கியமா வேறேதும் வெளிய உளறக்கூடாது.." 

"தேங்க்ஸ் டா"

எனக்கு சந்தோசத்தில் கண்ணில் நீர் கொட்டியது. அன்று இரவே இருவரும் லேப்க்கு போனோம். அந்த மிகப்பெரிய கட்டிடத்தின் நெற்றியில் ஆல்பாவின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. எனக்கு உள்ளே அனுமதி இல்லை என்பதால் வரவேற்பறையில் அமர்ந்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் ஒரு பெண் வந்தாள். "ஐ'ம் ரூபா..நீங்க தான ரவி..வாங்க உள்ள போலாம் அருண் கூப்பிடுறார்..". அவளுடன் நடந்தேன்.மேக்ஸி வாசனை அவள் மீது தூக்கலாய் வந்தது. ஒரு முக்கால் ஸ்கேர்ட்டும், சட்டையும் அணிந்திருந்தாள். அருண் உள்ளே மைக்ரோஸ்கோப்பில் பார்த்துக்கொண்டிருந்தான். என்னைப்பார்த்ததும் "டேய் டிரெஸ்ஸை கழட்டு...நேராகுது...நெறையா டீட்டைளிங் பதியனும்..." என்றான்.நிறைய டெஸ்ட்கள் எடுத்தார்கள். கணினியில் என்னென்னமோ செய்தார்கள். வேகமாய் செயல்பட்டார்கள்.விமானத்தில் பயணிக்க போகும் சின்ன குழந்தை மனநிலையில் இருந்தேன். நான்கு மணி நேரம் ஓடிப்போனது.

"அந்த பொண்ணும் வராலாடா..உன் அசிஸ்டன்டா" என்றேன். ஆம் என்பதாய் தலையசைத்தான். "சரி ரவி...எல்லாம் ரெடியாகிடும்.... நம்மள அன்ஜிப் பண்றப்போ அதாவுது மீண்டும் பழைய நிலைக்கு வரப்போ மரபணுல சின்னதா சேஞ்சஸ் பண்ணலாம். நரைச்சமுடி,தொப்பை,உடல் கொழுப்பு,டையபடீஸ் இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் சரிபண்ணிடலாம். நம்ம ரூபா கூடா கொஞ்சம் பெரிய மார் வேணும்னு கேட்டா.." என சொல்லிவிட்டு அருண் ரூபாவை பார்த்து சிரித்தான். அவளும் சிரித்தபடி அவன் மீது டேபிள் பொம்மையை தூக்கி எறிந்தாள்.

சரியாய் காலை அஞ்சு மணிக்கு என்னையும் ரூபாவையும் ஒரு ராட்சஸ மிஷின் பக்கத்தில் நிறுத்தினான். எனக்கு ரொம்பவும் படபடப்பாய் இருந்தது.ரூபா சிரித்துக்கொண்டே நின்றாள். அருணை பார்த்து ரெடி என்றாள். அருண் ஒரு பட்டனை தட்டிவிட்டு அவனும் வந்து சேர்ந்து கொண்டான். எங்கள் மீது மஞ்சள் நிறத்தில் ஒரு கதிர் பட்டது. எனக்கு லேசாய் ஒன்னுக்கு வருவது போல் இருந்தது.சொன்னால் அருண் கடுப்பாவான் என்பதால் சொல்லவில்லை.சுருக்கென இருந்தது,வலியெல்லாம் இல்லை. சிறிது நேரத்தில் மூவரும் ஒரு அறைக்குள் இருந்தோம். ரூபாவும்,அருணும் சந்தோசத்தில் குதித்தார்கள்.ரூபா "வீ டிட் இட்" என கத்திகொண்டு அருணை கட்டிப்பிடித்தாள். 

"ப்ரஸ்ஸர்..டெம்ப்ரேச்சர் செக் பண்ணு..ஆறு நிமிஷத்துல கெளம்பணும்" என்றான். அவளும் வேலையில் மூழ்கினாள். சிறுது நேரத்தில் அந்த அறை நகர்வதுபோல் இருந்தது. அருண் கணினியவே வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தான். "சூப்பெர்ப்..கெளம்பியாச்சு...எஸ் 12 வீ ஆர் கமிங்.." ரூபா மீண்டும் ஒருமுறை அவனை கட்டிப்பிடித்தாள். அருண் என்னை பார்த்து "என்னடா" என்றான்.



"இல்ல நானும் பேசாம சயிண்டிஸ்ட் ஆகியிருக்கலாம்..". என்றேன். சிரித்தான். உடல் பரிசோதனையை மீண்டும் செய்தார்கள். சந்தோசப்பட்டுக்கொண்டார்கள். எனக்கு எதுவும் வேலையில்லை. படங்கள் பார்த்தேன். ஜன்னல் வழியே நட்சத்திரங்களை வெறித்தேன்.நாட்கள் ஓடியது. ஆறுமாத பயணமென முன்னாலே சொல்லியிருந்தான். எப்படியும் போன கொஞ்சகாலத்தில் அருண் பெரியாளாகி விடுவான்.அந்த கொடுக்கும் அவனை ஒட்டிக்கிட்டே வளர்ந்திருவா. நான் நிம்மியை தேட வேண்டும். மலைப்பாய் இருந்தது.

அந்த நாள் கடைசியாய் வந்தது. எஸ் 12 தூரமாய் தெரிந்தது. பூமி மாதிரியே இருந்தது. நெருங்க நெருங்க எனக்கு பதட்டம் அதிகமானது. அருண் இறங்கவேண்டிய இடத்தையும்,செயல் பட வேண்டிய முறை பற்றியும் விளக்கிக்கொண்டிருந்தான். எனக்கு இளையராஜாவின் காதல் பாட்டுக்கள் கேட்டுக்கொண்டே இருந்தது.ஒரு பெரிய மலையின் ஓரத்தில் இறங்கினோம்.

"டேய் செல்லம்..சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சிக்கோ சரியா பத்து மணி நேரம் கழிச்சி இங்க வந்து சேருவோம்..அப்றம் பேசிப்போம்". இருவரும் ஊர் சுற்றினோம். எல்லோரும் வித்யாசமான தமிழில் பேசினார்கள். புரிந்துகொள்ள கஷ்டமாய் இருந்தது. எங்கு பார்த்தாலும் புதிதுபுதிதாய் பிரபலங்கள். புதிய முகங்கள், வித்யாசமான சாலைகள்,விசித்திரமான சட்டங்கள். மீண்டும் எல்லோரும் சந்தித்தோம்.

அருணும்,ரூபாவும் அவர்கள் திட்டம் பற்றி பேசினார்கள். அடிக்கடி ஊருக்குள் போனோம். பதினைந்து நாட்கள் ஓடியது.ஆர்யநகர்ல எதோ அரசியல் பிரச்சனை என்றான். நம் சென்னை தான் ஆர்யநகராம்.நான் மட்டும் ஒரு நாள் ஊருக்குள் போனேன். அந்த நாள் காலையில் ரூபா இங்கு எல்லோருடைய விபரங்களும் கணினியில் அரசு சேமித்திருக்கிறது என்றாள். 

அந்த நாள் தான் எஸ் 12ல் கடவுள் இருக்கிறான் என என்னை நம்பவைத்தது. ஒரு தரகரின் வழியாய் என் கையிலிருந்த நிம்மியின் போட்டோவை கொடுத்து தேடினேன். கணினியின் திரையில் என் எதிர்காலம் தெரிந்தது. நிம்மி சிரித்தபடி நின்றிருந்தாள். துள்ளிக்குதித்தேன். பக்கத்தில் இருந்தவர்கள் "லூசு" என திட்டும் அளவு கத்தினேன். மீண்டும் ஒருமுறை அவள் முகவரியை சொல்லிக்கொண்டேன்.

"15, முல்லை தெரு, ஆனந்தபாளையம், ஆர்யநகர்"





சொல்லவே தேவையில்லை அடுத்த இரண்டாவது மணிநேரத்தில் நான் அங்கே இருந்தேன். மீண்டும் அவளை பார்த்த அந்த நொடியை என்னால் மறக்க முடியாது. கண்ணைமூடி கோவிலில் சாமி கும்பிட்டுக்கொண்டிருக்கும் போது கண்ணை திறக்கையில் கடவுள் அருகே வந்து நம்மை கட்டிப்பிடித்தால் எப்டி இருக்கும் அப்டி இருந்துச்சு. சின்ன நெத்தி, சீரான மூக்கு, ஸ்ட்ராபெர்ரி உதடு என்னோட அதே நிம்மி. ஒரே வருத்தம் இங்க அவள எல்லாம் சுஜானு கூப்பிடுறாங்க. அவளை விரட்ட தொடங்கினேன். என்னை பார்த்து பயந்தாள். நிம்மி என்னை பார்த்து பயந்து ஓடுவது உண்மையில் எனக்கு வேடிக்கையாய் இருந்தது. கடிதம் எழுதினேன்,கல்லூரிக்கு வெளியில் காவல் காத்தேன்,அவள் அண்ணனிடம் அடி வாங்கினேன். ஆறு மாதம் இப்படியே ஓடியது. இதற்கிடையில் ஒரு வேலையிலும் சேர்ந்துவிட்டேன். அருணும்,ரூபாவும் அதற்குள் டீவியில் எல்லாம் பேட்டிகள் கொடுக்குமளவு வளர்ந்து போனார்கள்.


நிம்மி இந்த சிஜோயா 12ம் தேதி..அதாவது உங்க ஜனவரி 12ம் தேதி... "மீ டூ" சொன்னா..அடிக்கடி ரயில் நிலையத்தில தான் ரகசியமா சந்திச்சிக்கிட்டோம். செத்துப்போன பொண்டாட்டி கூட திரும்பவும் வாழ்ற சந்தோசம் எவனுக்கு கிடைக்கும். ஒரு நாள் என்னை பார்த்து "ரவி..உன்ன நினைக்காம இருக்கவே முடில..மண்டைக்குள்ள நீ தாண்டா  இருக்க " என சிணுங்கினாள்.

"இங்கனாப்ல..அதே தான் ..நீ எங்க போனாலும் நா வருவேன்.."

"செத்துப்போனா..??"

"அப்பவும் வெரட்டி வருவேன்.."

சத்தமாய் சிரித்தாள். பாவம் விளையாட்டாய் சொல்கிறேன் என நினைத்திருப்பாள். அவள் தலையில் கை வைத்து என் பக்கமாய் இழுத்து உதட்டில் முத்தமிட்டேன். ஆரஞ்சு பழத்தில் தேன் ஊற்றியது போல் இனிப்பு. உடல் முழுக்க ஒரு பரவசம் பரவியது. கொஞ்சமாய் கண்ணை திறந்து என்னை பார்த்தாள். அந்த பார்வை முத்தத்தை விட போதையாய் இருந்தது. என்னை முழுவதுமாய் கட்டிக்கொண்டாள். எனக்கெல்லாமே நீ தான் என்பது போல் ஒரு ஸ்திரம் அந்த தழுவலில் இருந்தது. என் உடல் முழுக்க அவளது
அணைப்பால்,வெதுவெதுவென இருக்கிறது."

                                                                                       -- முற்றும் 


கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
why...
why...
why did you finish so fast..
I was expecting more than 30 episodes....
come on man... I didn't expect this from you..
bandhu இவ்வாறு கூறியுள்ளார்…
ஓ! இரண்டாவது உலகம் உங்க கதை தானா!
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
@bandhu --hahaha.athaan Padam flop aakirucho.