அன்புடைமை

  


பத்தாம் கிளாஸ் ஏ செக்சனுக்கு ராவுகாலம் காலைல பத்தரைக்கெல்லாம் ஆரம்பிச்சிரும். பயபுள்ளைக எல்லாம் தமிழ் புக்க எடுத்து வச்சிக்கிட்டு கஞ்சா இழுத்த அகோரிகள் மாதிரி முழிச்சுக்கிட்டுருப்போம்.மொத நாள் நடத்துன பாடத்தை ஒரு ரவுண்ட் கேள்வி கேட்டுட்டுத்தான் மணி ஐயா அன்னைக்கு கடையவே தெறப்பார். அப்டிதான் அன்றைய தினமும் களை கட்டிக்கிட்டு இருந்துச்சு. நாங்க தான் கடைசி பெஞ்ச், அய்யா எப்பவும் தன்னோட கேள்விக்கணைய பின்னாடி இருந்துதான் ஆரம்பிப்பார். பொதுவா கடைசி பெஞ்சில  முரட்டு பீஸ்களா தான் உட்காந்திருப்பாய்ங்க ஆனா எங்க டெஸ்க்ல நாங்க மூனு பெரும் பாவப்பட்ட ஜென்மங்க. கிள்ளி வச்சாலே அழுதுருவோம். எப்பயுமே அய்யா தாக்குதலை எங்ககிட்ட இருந்து தான்  ஆரம்பிப்பார். கேள்விக்கு பதில் சொல்லலேனா வாய்ப்பு அடுத்தவனுக்கு போய்டும்.சொல்லாதவன்லாம் நின்னுக்கிட்டே இருக்கணும். மொத்தமா முடிஞ்சவுடனே, நிக்குற பிரமுகர்களுக்கு கடைசியா சிறப்பு வழிபாடு நடக்கும். அய்யாகிட்ட தர்மடி வாங்கி ஊர  விட்டு ஓடுன கேசுலாம் இருந்துச்சு.

என்னோட பெஞ்ச்ல எனக்கு இடது பக்கம் அம்மு என்கிற அமுதராஜ். வலது பக்கம் ராம்ஜி. இவனுக ரெண்டு பேருக்கும் சுற்றளவு கொஞ்சம் அதிகம்ங்கிறதால ,அஞ்சு பேர் உட்கார வேண்டிய பெஞ்ச்ல மூணு பேரா அடங்கிப்போனோம். அம்மு தான் எப்பவும் எங்க கிளாசுக்கே ஓப்பனிங்
 பேட்ஸ்மேன்.மொத கேள்வி அவனுக்கு தான்.ஆளு எப்பயுமே படிச்சதை  வாய்க்குள்ள முனுமுனுத்துக்கிட்டே இருப்பான்.கேக்குறப்போ நமக்கும் டரியல் ஆகும். ராம்ஜி அடி வாங்குறப்போ கைய எப்டி நீட்டுறதுன்னு மொதவே தற்காப்புகலைக்குள்ள போயிருவான்.நிலவரத்தை அறிய ரெண்டு பேரிடமும் பேசினேன்.

"அம்மு..படிச்சிட்டியா... சரஸ்வதிதேவியே  வெள்ளச்சட்ட ப்ளூ பேண்ட் போட்டுக்கிட்டு ஆம்பள கெட்டப்ல வந்த மாதிரி இருக்கு..."

"மூடுடா..படிக்கல படிக்கலனு சொல்லிட்டு நீ எப்டியாச்சும் தப்பிச்சிருடா.."

"அம்முக்குட்டி சத்தியமா இன்னைக்கு சரியா படிக்கலடா..டேய் ராம்ஜி நீ.."

ராம்ஜி எங்க ரெண்டு பேரையும் ஒரு முறை பார்த்துவிட்டு ,கையை பீப்பி போல் வைத்து "வடக்குப்பட்டி ராமசாமி ...உ..ஊஊஊஊ......" ன்னான். சிரித்தோம். மணியய்யா சரியாய் வகுப்புக்குள் வந்தார்.  எல்லாரும் மொத்தமாய் எழுந்து "வணக்கம் அய்ய்ய்யா...." னு கோரஸா சொன்னோம்.
மொத்த வகுப்பும் அமைதியானது.எதுவும் பேசாமல் தமிழ் புத்தகத்தை புரட்டினார். ஐயா ஆக்சன் சீனுக்கு ரெடியாகிறார்னு அர்த்தம்.

"கடைசியாளு எந்திடே..."பிறர்க்கு" எனும் முடியும்  குறள் சொல்லுடே...."

அம்மு எந்திரிச்சி ஒன்னும் தெரியாதவன் மாதிரி "நானா ஐயா.." ன்னான்.

"ம்ம்..இல்ல உங்க மாமியா..சொல்லுலே அமுதராசா..."

"அன்பிலார்  எல்லாம்.......எல்லாம்....எல்லாம் ...."

"அடுத்தவெ.."

"ஐயா ப்ளீஸ்யா..சொல்லிடுறேயா..அன்பிலார் எல்லாம் ..எல்லாம்..."

"  நீ ச்சொல்றதுக்குள்ள கடேசி தேர்வு வந்துரும்லே...அடுத்தவே எந்தி..சிவராசா.."

எனக்கு நல்லா தெரிஞ்ச குறள். சரியாத்தான் ஆரம்பிச்சேன். அன்பிலார் எல்லாம் தமக்குரியர்..தமக்குரியர்...... அன்புடையார்..அன்புடையார் ...". சுத்தமாய் மறந்து போனது. யாரோ செய்வினை செய்து விட்டது போல் உணர்ந்தேன். பிற்பாடு தான் அது யாரென உணர்ந்தேன்.


"சூப்பெர்டே..கடேசி பெஞ்சுக்கு சுளுக்கு எடுக்கணும் போலயே...அடுத்தவே...:

ராம்ஜி சிரித்துக்கொண்டே எழுந்தான்.  புன்னகையோடு

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு." என்றான்.

பிறகு சந்தோசத்தோடு உட்கார்ந்து கொண்டான். நானும் அம்முவும் அவனை ஏக்கத்தோடு பார்த்தோம். "இந்த  ஒன்னு தான்டா படிச்சேன்..எங்க நீ சொல்லிருவியோன்னு பயந்திட்டே இருந்தேன்..தேங்க்ஸ் டா.." ன்னான். கடுப்பில் அவன் காலில் ஒரு மிதி மிதித்தேன். ஒரே சந்தோசம்  என்னன்னா அன்றைய தினம் நிறைய பேர் பதில் சொல்லாம நின்னிட்டு இருந்தோம். கூட்டமா அடிவாங்கிறதுல  ஒரு திருப்தி இருக்கு. ஆனா அய்யா கோவத்தில் இருக்கிறார்னு அவர் அடிக்கடி பல்ல கடிக்கும்போதே தெரிந்தது.
எல்லாரையும் கேள்வி கேட்டு முடிந்தாகிவிட்டது. அய்யா வாட்சை கழற்றி பெஞ்ச் மேல வைத்தார். "டேய் எவனாது போய் பக்கத்து கிளாஸ்ல பெரம்பு வாங்கிட்டு வா " என்றார்.
ராம்ஜி எழுந்து உடனே ஓடினான். இனத்துரோகி. கொஞ்ச நேரத்தில் மூணு அடியில் சிகப்பு கலர் டேப் சுத்தப்பட்ட ஒரு கொடூரமான பிரம்புடன் வந்தான்.திருவள்ளுவர் மேலே கண்டபடி கோபம் வந்தது . கொஞ்சமாய் தொடை நடுங்கியது . திரும்பி அம்முவை பார்த்தேன் அவனுக்கு உடம்பே குலுங்கிக்கொண்டிருந்தது.

"அம்மு..பயமா இருக்காடா..."

"இல்ல ரொம்ப சந்தோசமா இருக்கு..சு&* .. வாய மூடிட்டு நில்லுடா"

"ஹிஹி..டென்ஷன் ஆகாதடா..பெரம்பு சைஸ பாத்தேல்ல..கண்டிப்பா மொத அடி வாங்குறவன் செத்துருவான்..நாமெல்லாம் தப்பிச்சிரலாம்.."

"வெண்ண  பேசாம இருடா..அதுக்கு ரெண்டு அடி சேத்து விழுகும்".நியாயமான பயம் தான்.


"நிக்குரவன்லாம் வரிசையா வாங்கடே " னு அய்யா பிரம்பை ஒரு முறை வளைத்து வார்ம் அப் செய்தார்.போய் வரிசையில் நின்றோம். கிட்டத்தட்ட முப்பது பேர் இருந்த க்யூவில் நாங்கள் நடுவில் நின்றோம். அடி விழுக ஆரம்பித்தது. முதுகெலும்பில் ஒரு குளிர்ச்சி பரவியது. வழக்கமான கூக்குரல்கள் கேட்க ஆரம்பித்தது.

"அய்யா..ப்ளீஸ் யா நாளைக்கு படிச்...ய்ய்ஆஆஆ...."

"நேத்து பீவர்யா ...ஆஸ்பிட்.....ய்ய்ய் ஆஆ...."

அடிவாங்கியபடி க்யூ கரைந்து கொண்டு போனது. அழுது ஆர்ப்பரித்து சிலர் அதிக நேரம் எடுத்துக்கொண்டனர். "கையை நீட்டி கண்ணை மூடிக்கொள்ள வேண்டும்..ரெண்டே அடி..அவ்ளோ தான்.." எனக்கு நானே சமாதானம் சொன்னேன். எனக்கு முன்னாடி நின்ன ராஜ்குமார் என்னை பாத்து லேசாய்  சிரித்தான்.

"டேய் நாயே ..எதுக்கு சிரிக்கிற..நம்ம என்ன தேசிய விருது வாங்கறதுக்கா லயன்ல நிக்குறோம்..நீயும் அடிதான பக்கி வாங்கப்போற..."

"போடா இவனே..நாங்கெல்லாம் ஆம்பள மாறி நின்னு கை நீட்டுவோம்..ஒன்னைய மாதிரி பிதுங்குனியா.."

எனக்கு கோபம் கொப்பளித்தது. அந்த நாட்களில் அய்யாவிடம் அடி வாங்கி எவன் ''உஸ்ஸ்ஸ்...அய்ய்ய்யாஆஆ... "  என  கையை உதறி கதறாமல், உணர்ச்சியை காட்டாமல் அசால்டாய் போகிறானோ அவன் கெத்தானவன். இது போல் வகுப்பில் ஒரு அஞ்சாறு பேரு இருந்தார்கள். ராஜ்குமாரும் அந்த பரம்வீர் சக்ரா க்ரூப்பில் ஒருவன். நானும் என்னுடைய வீரத்தை காட்ட வேண்டும் என சூளுரைத்தேன். ராஜ்குமார் போய் கையை நீட்டினான். ரெண்டு அடி வலுவாய் விழுந்தன. சலனமே இல்லாமல் போனான். கிளாசில் லேசாய் சிரிப்பு சத்தம் வந்தது.

" போகுது பாரு..எரும கணக்கா..அடுத்தவன் வாளே ..டைம் ஆவுதுல..."

பயப்பந்து வயிற்றுக்குள் பௌன்ஸ் ஆனது. தைரியமாய் வலது கையை தள்ளி நீட்டினேன். அய்யா அஞ்சடிக்கு பிரம்பை தூக்கி என் கையை நோக்கி இடி போல இறக்கினார். என் கையில் எதோ டேங்கர் லாரி ஏறியது போல் இருந்தது. இருந்தும் மூஞ்சில் எந்த வித ரியாக்ஸனும் காட்டவில்லை. அய்யா கடுப்பானார். நான் வைராக்கியமாய் அடுத்த கையை நீட்டினேன். அய்யா ரெண்டு மடங்கு வேகத்தில் தன்னுடைய ரெண்டாவது ஷாட்டை இறக்கினார். எனக்கு வலி உயிர் போனது. கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அடக்கிக்கொண்டேன். "சாதிச்சிடோம்டா சிவா..சாதிச்சிட்டோம்.." னு மனசுக்குள் சொல்லிக்கொண்டேன். கதையில் அப்பொழுது தான் ஒரு பெரிய திருப்புமுனை. அப்பொழுது அய்யா மதம்கொண்ட யானையாய் மாறினார்.

"  எல்லாம் கொழுப்பெடுத்து அலைரீங்களாடே...இந்தா வரேம்டே.."

பெரம்பில் என்னை சரமாரியாய் தூர் வாரினார். கொஞ்ச நேரத்தில் வாட்சை கழட்டிட்டு கையை வச்சி கன்னத்தில் வேறு இலவச இணைப்புகள் வழங்கினார். நான் ஒரு சொட்டு கண்ணீர் விடலையே.

"  போய்த்தொல மாடு..."

கிளாடியேட்டர் போல் பெருமை பொங்க நடந்தேன்.மொத்த வகுப்பும் என்னையே பார்த்தது. தம்கட்டி ஒரு வழியாய் பெஞ்சில் போய் உட்கார்ந்தேன். குனிந்து கொண்டு கதறி அழுதேன். அப்றம்..வராதா...அடிச்ச அய்யாவே கைய உதறிட்டு இருக்கறார். அம்மு என்னை பார்த்து "இதெல்லாம் தேவையா" ன்னான்.

என் கை விரல் ஓரத்தில் ரத்தம் வந்திருந்தது. மூஞ்செல்லாம் வீங்கிப்போய் இருந்தது. சொல்ல மறந்துட்டேனே அன்னைக்கு அய்யா எங்களுக்கு கேள்வி கேட்ட திருக்குறள் அதிகாரத்தோட பேர் என்ன தெரியுமா..அன்புடைமை...
கருத்துகள்

SATHISH இவ்வாறு கூறியுள்ளார்…
Nice..
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லா வரைட்டி எண்டர்டைன்மெண்ட்...

இப்போ வாத்தியார்கள் எல்லாம் பசங்களுக்கு பயப்பட்டுட்டு இருக்காங்க...
அரசு பள்ளிகளில் ஒரு சில மாணவர்கள் போதையுடன் உட்காருறாங்க. ஒண்ணுமே பண்ண முடியறது இல்ல...
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Machaan only u can write like this...
superb narration...
Keep it up...

Regards,
1144
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லா வரைட்டி எண்டர்டைன்மெண்ட்...

Boss ithu entertainment illa..Nadar Boys School la paduchavangaluku than theriuum appo evlo beethi agum nu...
Ganeshanithq இவ்வாறு கூறியுள்ளார்…
Naa 8th la vangi irruken.. Summa nalla palukum...