படைப்பாளி
எத்தனை படங்கள்,எவ்வளவு வாசிப்பு, இடைவிடாத ரசனை இவ்வளவு இருந்தும் இன்னும் என்னால் ஒன்னும் செய்ய முடியவில்லையே. எனக்குள் இருக்கிற படைப்பாளி மட்டையாகிக்கிடக்கிறானே என தாங்கொணா துயரம் அடைந்து கொண்டு இருந்தேன். ஸ்கூல்ல ஒரு தடவை திருப்பூர் குமரன் வேஷம் போட்ட போது எல்லோரும் கை தட்டியதும், ஒரு பெரியவர் வந்து கண்கலங்கி என்னை கட்டிக்கொண்டது ஆகிய காட்சிகள் என்னுடைய 34 இஞ்ச் மன ஸ்க்ரீனில் ஓடியது. புது உத்வேகம் பெற்று என் தன்னம்பிக்கை தாறுமாறானது. டைரிகளில் ரொம்ப வேகமாய் எழுதி,அதை விட வேகமாய்கிழித்தேன். அடிக்கடி மொட்டை மாடியில் உட்கார்ந்து வானத்தை வெறித்து பார்த்தேன். மணிரத்தினத்தின் திரைக்கதையில் உள்ள பிழைகளை ஆராய்ந்தேன். எனக்குள் இருக்கிற படைப்பாளி "கலா"க்காவே "எக்செல்லென்ட்" சொல்லுமளவுக்கு உக்கிரமாய் நடனம் ஆடினான். களத்தில் இறங்குவதென முடிவு கட்டி,ஒரு நாள் சதீசுக்கு போன் செய்தேன். 

"சொல்லுப்பா..பேசி ரொம்ப நாளாச்சு..எதுவும் பிகர் செட் ஆகிடுச்சா??"

"ப்ச். ஒரு முக்கியமான மேட்டர்.. ஒரு குறும்படம் எடுக்கலாமானு யோசிச்சிட்டு இருக்கேன்.."

"சூப்பர் நல்லதா போச்சு. அடுத்த வாரம் என் மச்சினச்சி கல்யாணம் வருது. அதுல வந்து ஆரம்பிச்சிரு.."

"யோவ்..என்ன வெளாட்டா இருக்கா.."

"இல்லப்பா..குறும்படம்னா போட்டோ தான..."

போனை வைத்தேன். என்னை எள்ளிநகையாடும் இந்த உலகுக்கு நான் யாரென புரியவைக்க வேண்டுமென சூளுரைத்தேன். இராவோடு இராவாய் ஒரு உயிரைக்கரைக்கும் காதல் கதை எழுதினேன். ரொம்ப பெரிசாய் இருந்ததால் அதை கைமா பண்ணி பத்து நிமிடமாய் மாற்றினேன். மீண்டும் மீண்டும் படித்து பார்த்தேன். எனக்கே அழுகை வந்தது. பார்த்து உறையப் போகிற ரசிககண்மணிகளை நினைத்து பரிதாபப்பட்டேன். கொஞ்சம் யோசித்து பார்த்ததில் பட்ஜெட் பாதாளத்தில் இருந்தது தெரியவந்தது. அதனால் ஐ.டி ஹீரோயின், கொரியர் ஆபிஸ் கிளார்க் ஆனாள். பேங்க் மேனேஜர் கதாநாயகன்,
பலசரக்கடை வைத்தான். அதனாலென்ன கோழியா முக்கியம்,குழம்பு தான் முக்கியம். கேமரா முதற்கொண்டு தொண்ணூறு சதவீத வேலை முடிந்து விட்டதாய் தோன்றியது. ஆனால் அதற்கு பிறகு தான் "சனி பகவான்" சிறப்புத்தோற்றத்தில் என் படத்தில் எனக்கே தெரியாமல் இருந்திருக்கிறாரென தெரிந்தது. நாயகனும் அவனது தோழர்கள் ஆகியோரை சேர்ப்பதுக்குள் சலூனுக்கு போகாமலே எனக்கு பாதி முடி குறைந்து போனது. கதாநாயகன் ரோலுக்கு எவனைக்கேட்டாலும் "மச்சி..நான் வீகேண்ட்லாம் பிசி.." "என்னோட ஒய்பை கேட்டுச்சொல்றேன்.." "சென்னை வர முடியாதுடா..." என காரணங்கள் 
சொன்னார்கள். சிலர் சொன்ன காரணங்கள் என் கதையை விட பெரிதாய் இருந்தததால் இங்கே நான் குறிப்பிடவில்லை. கடைசியாய் நவீன் ஞாபகம் வந்ததது. அவன் ஒரு சாம்பார் சாதமே என மனம் யோசித்தது. அது சரி நம்ம என்ன "ராம்போ" படமா எடுக்க போறோம் என என்னை நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன். அவனிடம் பேசி ஓகே பண்ணினேன்."ஒன்னும் பிரச்சனையேயில்ல... ரெண்டே நாள் தான் சூட்டிங்...நம்ம போரூர்ல கிஷோர் வீடு இருக்குல அங்க சனிக்கிழம காலைல எட்டுக்கு வந்திரு.."

"பயமா இருக்குடா.. எனக்கு அவ்வளவா நடிக்க வராது..பாத்துட்டு கடுப்பாகிற மாட்டேளே.."

"ஒன்னுமில்லடா..நீ சும்மா எப்பயும் போல இரு அதுவே போதும். ஹீரோ கேரக்டர் கூட கொஞ்சம் அரலூசு தான்.."

"நோ ஜோக்கிங் ப்ளீஸ். அப்றம் என் பேர போடுறப்போ கடைசி ரெண்டு "என்" வரும்..அத மறந்துடாத.."

"டன்"

பவர்ஸ்டார்லாம் எவ்வளவோ பரவாயில்லை என நினைத்துக்கொண்டேன். இதுவே இந்த கதியென்றால் ஹீரோயின் தேடுதல் பற்றி சொன்னால், கமலுக்கு அனுப்பியது போல் எனக்கு நீங்களே மணி ஆர்டர் அனுப்புவீர்கள். "அய்யயோ எங்க வீட்ல தெரிஞ்சா கொன்றுவாங்க.." ,"எல்லாமே கேர்ல்ஸ் நடிக்கிறாங்கனா யோசிக்கலாம்" , "எனக்கு அலையன்ஸ் பாத்திட்டு இருக்காங்க..சாரி.." போன்ற பதில்கள் வந்து என் லட்சியத்தை பதம் பார்த்துக்கொண்டிருந்தது. பெண் குலத்தின் மீதே கோபம் வந்தது. கடுப்பில் பேசாமல் ஹீரோவை ஹோமோசெக்சுவலாய் மாற்றி விடலாமா என யோசித்தேன். நல்லவேளையாய் ஒளி பிறந்தது.ஆபிசில் உடன் வேலை செய்யும் கல்கத்தா பொண்ணு "நான் நடிக்கிறேன்" என்றாள். அவளும் சனிக்கிழமை மட்டும் தான் நான் ப்ரீ என்றாள். எது எப்படியோ அந்த சத்தியஜீத்ரேவே கொல்கத்தா காளியை அனுப்பி என் துயரம் போக்கியிருக்கிறார் என பரவசம் அடைந்தேன். வெற்றிகரமாய் அந்த சனிக்கிழமை வந்தது.


காலையில் ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பி போரூர் அடைந்து வேலையை ஆரம்பித்தேன். கேமரா, மூவி மேக்கர் மென்பொருள், உடைகள், இடங்கள் எல்லாம் தயார். நவீனும் வந்து விட்டான். அவனுக்கு கைலி கட்டிவிட்டு பலசரக்கடை அண்ணாச்சியாக்கினேன். ஹீரோயின் தன்யா வருகிறவரை  இவனை ரெடி செய்வோம் என எண்ணி ""டேய் நவீன் எங்க உன் கடைல இருக்கிற தேங்கா எண்ணைக்கு விலை சொல்லு பாக்கலாம்" அவன் பெருமையாய் கைலியாய் மடித்து விட்டு "கோக்க நட் ஆயில் ஆப் லிட்டர் பாட்டி ருப்பீஸ் ..." என்றான். நான் கடுப்பானேன். அப்பயே திட்டினால் ஓடிவிடுவான் என்பதால் அமைதியானேன். நம்ம கல்கத்தா காளி வர லேட் ஆனதால் கால் செய்தேன்.

"தன்யா எங்கம்மா இருக்க..திருச்சிலேர்ந்தே இங்க அஞ்சு மணி நேரத்துல வந்திரலாம்..இங்கிருக்கிற மந்தவெளில இருந்து வர இவ்ளோ நேரமா.."

"காலைல பாத்ரூம்ல வழுக்கி விழுந்திட்டேன்.ஒரு வழியா கெளம்பி வந்து பஸ்ஸ்டாப்ல நிக்குறேன். ஒரு கார்காரன் சேரை அடிச்சு விட்டுட்டான்" என ஆங்கிலத்தில் சொன்னாள்.

"சரி வேகமா வா மா " என போனை வைத்தேன். அவள் சொன்ன காரணத்தை யோசித்து பார்த்த போது அவள் கண்டிப்பாய் நல்லா நடிப்பாள் எனத்தோன்றியது. பத்தரைக்கு வந்து சேர்ந்தாள். நம்ம ஹீரோ 

வெண்பொங்கல் சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தார். தன்யாவை பார்த்த போது எதோ அவனது அத்தை பொண்ணை பார்ப்பது போல வெக்கப்பட்டுக்கொண்டே பார்த்தான். இருவரையும் ஹலோ சொல்ல வைத்தேன். கொஞ்ச நேரம் எல்லோரையும் உட்கார வைத்து அந்த சீனை விளக்கினேன். அந்த பத்து நிமிடத்துக்குள் தன்யாவுக்கு மூனு காலும், நவீனுக்கு நாலு கொட்டவியும் வந்தன.

"ஷண்முகம் கைலியை மடித்த படி சாமான்களை கொடுத்த வண்ணம் உள்ளான். கோமதி கடைக்கு வருகிறாள். "கல்ல பருப்பு இருநூறு" என்கிறாள் மொட்டையாய். அவளை ஒரு முறை ஊடுரவுகிற மாதிரி பார்த்துவிட்டு ,பொட்டணம் கட்டி கொடுக்கிறான். அவள் தலையை மீண்டும் பார்த்து விட்டு அவனாய் சீயக்காய் பாக்கெட் சேர்த்து கொடுக்கிறான். அவள் மிதமாய் சிரித்துவிட்டு கிளம்புகையில் கடையில் ஐம்பது ரூபா நோட்டை நீட்டும் சிறுவனிடம் "ஏன்..சில்ர கொண்டு வராதுதான...வாங்குறது மூனு ரூபாய்க்கு.." என கடிந்துவிட்டுப் போகிறாள்." சொல்லி முடித்தேன்.
அமைதியாய் கேட்டுவிட்டு தன்யா, " வாட் இஸ் சில்ர, கள்ளே பருப்பு, சீக்காய்.." என டவுட் கேட்டு தெளிந்தாள். நம்ம ஹீரோ கான்பிடென்ட்டாய் இருந்தார். எடுக்க ஆரம்பித்தோம். நவீனை பொட்டணம் மடிக்க சொன்னால் கல்லபருப்பை பேப்பருக்குள் போட்டு கத்திக்கப்பல் செய்வது போல எதோ செய்து கொண்டிருந்தான். அவனை அசால்டாய் தெரிந்தவனை பார்ப்பது போல் சைடாய் பார் என்றால் ஜூவில் புலியை பார்ப்பது போல் பார்த்தாள். முதலில் சிரித்து கலாய்த்து ஜாலியாய் வேலை பார்த்தேன். பின் அமைதியானேன்.பின் வெறியானேன். பின் கத்தினேன்.

"டேய் எத்தன தடவ சொல்றது லைட்டா சிரி...ஆல்ரெடி செட் ஆகிடுச்சு...ஏன் இவ்ளோ அகலமா சிரிக்கிற.."

"தன்ஸ்..இப்படி பயந்து போய் பார்க்கக்கூடாது..அற்பமா பாரு..அவன் மூஞ்ச பாத்தே பேசு..."

"நவீன் கைலி விழாது டா..அதான் பெல்ட் போட்ருகோமே..நேரா பாரு..."

"எம்மா அது ஈநூறு இல்ல இருநூறு... ஏன் மூஞ்சி சாணிய மிதிச்ச மாதிரி போகுது..அவ்வளவு ரியாக்சன் தேவ இல்ல.."இப்படியாக அந்த ஒரு பேரா வை எடுக்க சாயங்காலம் ஆனது. நவீன் வந்தான். "ஆறு மணிக்கு கெளம்பிடலாம்ல..நாங்க பேமிலியா நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போறோம்.." நான் எதுவும் பேசவில்லை. அவனையே பார்த்தேன். நாம வேணும்னா "நாளைக்கு.." இழுத்தான். தன்யா வந்தாள். அவளும் ஒரு காரணம் சொன்னாள். அவள் மேற்கொண்டு நாளை முடியாது அடுத்த வாரம் ஐ ஆம் ப்ரீ என்றாள். திரும்பி நவீனை பார்த்தேன். "அடுத்த வாரம் மகா சிவராத்திரி வீட்ல பங்சன் இருக்கு..". மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவர்களை அனுப்பி வைத்தேன். எல்லா ஆர்வமும் வடிந்து வலியுடன் வீடு வந்து படுக்கையில் சாய்ந்தேன். கங்கா கால் செய்தான்.

"சொல்றா"

"ஹாய் டா.. நான் ஒரு ஷாட் பிலிம் எடுக்கலாம்னு இருக்கேன்..இந்த பிசா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மாதிரி லைவ்லியா ட்ரை பண்ணலாம்னு..."

"ஹஹஹா"

"ஏன்டா சிரிக்கிற.."

"எல்லார்குள்ளேயும் ஒரு படைப்பாளி தூங்கிட்டே இருக்கான்..."

"கரெக்டு டா"

"அவன் தூங்கிட்டு மட்டுமே இருந்தா எல்லாருக்கும் நல்லது.."  


கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது..
நான் உங்களுடைய புதிய முயற்சியை பாராட்டுகிறேன்...
நானும் தங்களைப் போன்று ஒரு குறும்படம் எடுத்தேன்.. என் படத்தில் நாயகி என்று யாரும் இல்லாததால், நான் தங்கள் அளவு சிதையவில்லை.
எடிட்டிங் செய்ய ஆள் இல்லாததால் வெறும், ஒளி, ஒலி பதிவுகளோடு நிற்கின்றது...

தாங்கள் இதுபோல் இன்னும் ஆயிரம் படைக்க எல்லாம் வல்ல இறை நிலையை வேண்டுகிறேன்