லூஸர்ஸ்-3

                               
                                                    லூஸர்ஸ் - பகுதி 1

                                                     லூஸர்ஸ் - பகுதி 2

              


அந்த வலியை உடல் முழுவதும் உணர முடிந்தது. பல்லைக் கடித்துக்கொண்டுஉட்கார்ந்தேன். கிரிக்கெட் பந்து பார்க்க அழகாய் இருக்கும். ஆனால் அசந்தோமேயானால் பாம்பு போல் கவ்வி விடும். வேகமாய் பேண்ட்டை இறக்கித் தொடையை பார்த்தேன். சிகப்பு கலரில் வட்டமாய் தடம் இருந்தது. தொட்டால் கொடூரமாய் வலித்தது. ரன்னரில் இருந்த பிரதீப் வந்து பக்கத்தில் நின்றிருந்தான். வெளியிலிருந்து சுருளி முதலுதவி பெட்டியுடன் ஓடி வந்தான்.காயத்தைப் பார்த்தான்.

"என்னடா இப்படி வீங்கிருக்கு..நல்ல வேளை தொடையில பட்டுச்சு...."

எரிச்சலாய் அவனைப் பார்த்தேன். பேசிக்கொண்டே எதையோ எடுத்து காயத்தில் தடவினான். ஜில்லென்று இருந்தது. "என்ன மச்சி தொடைல புல்லா முடியா இருக்கு..". இப்போது கடுப்பானேன். "டேய் மடக்கூ%...இப்ப அது ரொம்ப முக்கியம்..நா என்ன ரம்பாவா.. எடுத்திட்டு கெளம்பு..." என்னை ஏற,இறங்க பார்த்தான். எதுவும் பேசாமல் எடுத்துக்கொண்டு ஓடினான். மதுரை எஸ்.வி.என் கல்லூரியில் ஒரு பயிற்சிப்போட்டி அது. முதலில் பேட் செய்த அந்த கல்லூரிக்காரர்கள் 145 ரன்கள் எடுத்திருந்தார்கள். நாங்கள் நாற்பது ரன்னில் ஐந்து விக்கெட்டுகள் பறிபோய் நின்று கொண்டிருக்கிறோம். தரமான பாஸ்ட் பவுலிங்கை வைத்திருந்தார்கள். எங்கள் அணியில் நான் எப்போதுமே கூட்டத்தில் ஒருத்தனாகவே இருந்திருக்கிறேன். அணிக்கு உபயோகமாய் எதுவும் பெரியதாய் செய்ததில்லை."இன்னைக்கு அடிக்கிறேன்டா" என என் தன்னம்பிக்கை பொங்கும் போது தான்,அந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளனின் பந்து என் தொடையை தாக்கியது. நல்லவேளையாய் அது "கண்ட" இடத்தில் பட்டுத்தொலைக்கவில்லை. ஒரு முடிவுக்கு வந்தேன். இனி பயந்து பயனில்லை. முயற்சி செய்வோம்.யாரும் என்னிடம் எதிர்பார்க்கவில்லை. நான் அவுட்டானால் யாரும் தலையில் கை வைக்கப் போவதில்லை. 

அந்த சனியன் இடது கையில் பந்துடன் ஓடி வந்துகொண்டு இருந்தது. "சர்"ரென காற்றை கிளித்துக்கொண்டு மீண்டும் என் இடுப்பை நோக்கி பந்து வந்தது. பந்தை கீப்பருக்கு பின்னால் லெக் சைடில் க்ளான்ஸ் செய்தேன். பந்து சீறிக்கொண்டு ஓடியது. பவுண்டரி.நிறைய பேர் கை தட்டினார்கள். அடுத்த பந்து க்ளீன் "கவர் டிரைவ்". ஆப் சைடு பீல்டர்கள் வேடிக்கை பார்க்க, பந்து பவுண்டரியை நோக்கி "தரத்தர" வென ஓடியது. இப்போது சத்தமாய் கை தட்டினார்கள். ஐயப்பன் வெளியிலிருந்து விசில் அடித்தான். எனக்குள் பட்டாம்பூச்சி,கரப்பாம்பூச்சி எல்லாம் பறந்தது. கவர்டிரைவ் ஆடி விட்டால் உங்களுக்கு ஒரு பேட்ஸ்மேன் அங்கீகாரம் கிடைத்து விடுகிறது. அடுத்து இரண்டு ஓவர்களுக்கு சிங்கிள் தட்டிக்கொண்டு இருந்தேன். அதுவரை நன்றாய் ஆடிக்கொண்டிருந்த பிரதீப் எல்.பி.டபுள்யூ ஆனான்.அடுத்து வந்த அனந்த்து,கரடி ரெண்டு பேருமே பந்தை ஆகாசத்துக்கு அனுப்ப ஆசைப்பட்டு அவுட்டானார்கள். வீரா உள்ளே வந்தான். ஸ்கோர்போர்டை பார்த்தேன். 88/8 என்று இருந்தது. அந்த எட்டுக்களின் வரிசையை ரசிக்க முடியவில்லை.நம்ம நல்லா விளையாடினால் கடவுளுக்கே பொறுக்காதோ என நொந்து கொண்டேன். ஒரு வேகப்பந்து வீச்சாளனின் ஓவரில் பதினைந்து ரன்கள் அடித்தோம். நிறைய ஒய்டுகள் வேற போட்டான். "யாரு பெத்த பிள்ளையோ" என நினைத்துக்கொண்டேன். இடையிடையே பவுண்டரிகள் பறந்தது.மூன்று ஓவர்களில் இருபத்து ஒன்பது ரன்கள் தேவை.இப்போது எதிரணி பதறியது மாதிரி இருந்தார்கள். கூடிக்கூடி பேசினார்கள். அந்தக்கேப்டன் என் மேல் நம்பிக்கை வைத்து ஐந்து பேரை பவுண்டரிக்கு பக்கத்தில் நிறுத்தியிருந்தான்.ரன்னர் வீரா இளைத்துப் போயிருந்தான். பக்கத்தில் போனேன். பேசினான்.

"சிங்கிள் தட்டுப்பா..இல்லேனா பவுண்டரியப் போடு..டூ..த்ரீ லாம் ஓட முடியாது.."

"டேய் நம்ம என்ன வீடியோ கேமா விளாடுறோம்..காளி கேட்டார்னா ஒன்ன கடிச்சுத் தின்னுருவாறு..."

இப்படியே விட்டால் "கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கையில் இளைஞர் மரணம்" னு தினத்தந்தில செய்தி வந்துரும்னு தோணியது. நான் நேரத்தைக் கடத்த,"க்ளோவ்" பிஞ்சிருப்பதை காட்டி வேற கொண்டு வர சைகை செய்தேன். சுருளி திரும்பவும் க்ளோவ்களுடன் உள்ளே ஓடி வந்தான். 

"இவரு பெரிய ரிக்கிபாண்டிங்..வெண்ண... இருக்கிறதே மூனு செட்டு க்ளோவ்.." நான் கண்ணடித்து வீராவை காட்டினேன். வியர்த்துப்போய் இளைத்துக்கொண்டிருந்தான். சுருளி வீரா பக்கத்தில் போய் "என்னடா பண்ணுனே..இப்படி இளைக்குது.. " என்றான். வீரா சிரித்துக்கொண்டே இளைத்தான். வீரா அடுத்த ஓவரில் தொடர்ச்சியாய் இரண்டு பவுண்டரிகள் அடித்ததும்,நாங்கள் கண்டபடி ஓடியதும்,கடைசி ஓவரில் ஒன்பது ரன் எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலைக்குப் போட்டி வந்தது.காளிமுத்து சார், மற்ற அனைவரும் வெளியில் நின்று கை தட்டிக்கொண்டிருந்தார்கள். முதல் பந்து நோபால், ரெண்டு ரன்கள் ஓடினோம். இதயம் பட படவென அடித்தது. ஒருமுறை உட்கார்ந்து எழுந்தேன். பேட்டின் ஹேண்டிலை இருக்கிப் பிடித்தேன். ஆறு ரன் ஆறு பால். என் மண்டைக்குள்ளிருந்து அந்த சத்தம் கேட்டது. "கமான்டா..இது தான் சரியான நேரம்..எல்லா பீல்டர்ஸ்ஸும் முன்னாடி நிக்குறாங்க..விடாத..கண்டிப்பா ஓ.பி பால்..." அந்த கிளர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. எட்டு விக்கெட்டுகள் போயிருக்கிறது. கவனமாய் இருக்க வேண்டும். சத்தம் தொடர்ந்தது. "தைரியம் வேணும் மிஸ்டர் ..ஸ்ட்ரைட் சிக்ஸ் மாதிரி கெத்து இருக்கா..யோசி..வின்னிங் சிக்ஸ்.."ஓ.பி யாய் வந்த பந்தை கிரீஸில் நின்ற படி நேராய் தூக்கினேன். "ட்டாக்". பந்து உறுமிக்கொண்டு பறந்தது. வெகு நேரம் பறந்து நேராய் பவுண்டரியை கடந்து ஆலமரத்திற்கு பக்கத்தில் போய் விழுந்தது.சிக்ஸ். ஜெயித்து விட்டோம். எல்லோரும் கிரவுண்டுக்குள் ஓடி வந்தார்கள். நானும் வீராவும் கட்டிப்பிடித்துத் தாவினோம். எனக்கு பெருமையாய் இருந்தது. கார்த்தியண்ணன் வந்து தலையைக் கோதினார்.நண்பர்கள் வந்து கட்டிப்பிடித்தார்கள்.கரடி பக்கத்தில் வந்து "மச்சி..எதுவும் ஊக்கமருந்து பயன்படுத்துனியா.." என்றான். எஸ்.வி.என் கல்லூரி பி.டி வாத்தியார் வந்து எங்களுக்கு கைகொடுத்து "வெல் ப்ளேடு" சொன்னார். சந்தோசமாய் ஊருக்குக் கிளம்பினோம். போகும் போது ஸ்கோர்போர்டை திரும்பிப்பார்த்தேன். "வி.கே.சி வொன் பை 2 விக்கெட்ஸ்". அந்த நாள் முடிந்ததில் எனக்கு விருப்பமேயில்லை. 

எல்லோருக்கும் வெள்ளைக்கலர் ஜெர்சி வந்திருந்தது. பத்தாம் நம்பர் டீ ஷர்ட்டுக்கு பெரும் அடிதடி நடந்தது. கடைசி ஒருமனதாய் சுருளிக்குக் கொடுப்பதாய் முடிவானது. மூன்றே வாரத்தில் யுனிவர்சிட்டி போட்டிகள் தொடங்கயிருந்தது.காளிமுத்து சார் இரவு ஒன்பது மணிக்கு ஆஸ்டலில் அவர் தங்கியிருந்த அறைக்கு வரச்சொல்லியிருந்தார். போயிருந்தோம். கைலிகளிலும்,ஷார்ட்ஸ்களிலும் போனோம். பேச ஆரம்பித்தார். அனந்த்து கொட்டாவி விட்டான். எல்லோரும் திரும்பி அவனைப்பார்த்தோம். 

" சார்..சீரியசாவே வந்துச்சு..".
"பெருசா ஒண்ணுமில்ல..நல்லா போயிட்டிருக்கு...மேட்ச் முடியிற வரைக்கும் சில விஷயங்களை பாலோ பண்ணனும்..அது ரொம்ப முக்கியம்....மூனே விஷயம் தான்.. ஒன்னு ...காலைல எல்லாரும் யோகா பண்ணனும்..அதிகாலைல...  ரெண்டாவுது  ஆன் டைமுக்கு கிரவுண்டுல இருக்கனும்..மூனாவுது..மூனாவுது.."

சொல்லிக்கொண்டு லேசாய் சிரித்தார். அனந்த்து ஆர்வமாய் "மூனாவுது..." என்றான்.

"யாரும் மாஸ்டர்பேட் பண்ணக்கூடாது "

                                                                                                         ----தொடரும் 

கருத்துகள்

லெமூரியன்... இவ்வாறு கூறியுள்ளார்…
Ha ha ha ....final uh oru sixer shot. :-) romba naalaikkaparam varren siva unga blog pakkam. Nice..
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
Nandri lemuriyan. Aalave kaanom