நமோ நமோ


                                                   

காலையில் எழுந்தவுடன் சுவற்றில் ரெண்டு பெரியவர்கள் படம் தெரிந்தது. கண்ணைக் கசக்கி கொஞ்சம் கவனித்து பார்த்ததில் ஒன்று சர்தார் வல்லபாய் பட்டேல் படம்,மற்றொருவர் யாரெனத் தெரியவில்லை. மீசை வைத்திருந்தார், மெலிந்த உருவம்.. எவ்வளவு யோசித்தும் யாரெனத் தெரியவில்லை. பாடப்புத்தகங்களில் அந்த முகத்தை பார்த்த ஞாபகம் இல்லை. இப்போது தான் மூளையில் அந்த எண்ணம் சுரீரென வந்தது. நம்ம வீட்டில் இந்தப்படங்கள் எப்படி வந்தது??. எழுந்து திரும்பிப் பார்த்தால் ஒரு மிகப்பெரிய அறையில் நான் படுத்திருந்தேன். ஒருவேளை தத்ரூபமாய் ஹைச். டியில் கனவு வந்திருக்கிறதா..இல்லை...இது  நிஜம் தான். அறை முழுக்க அழகான வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நான் பைஜாமா போல் ஒரு உடை அணிந்திருந்தேன். பயத்தில் எனக்கு வியர்க்கத்தொடங்கியது. எழுந்து போய் வேகமாய் ஜன்னலைத் திறந்தேன். வெயில் சுள்ளென முகத்தில் அடித்தது. கண்ணைக்குறுக்கி ஒரு கையை நெற்றிக்கு மேலே வைத்து, வெயிலை மறைத்து வெளியே பார்த்தேன். எங்கும் ஹிந்தியில் எழுத்துப் பலகைகள். நிறைய போலிஸ் வாசலில் நின்றிருந்தார்கள். ஒருவன் என்னைப் பார்த்தவுடன் பூமி அதிரும் வண்ணம் காலை கீழே வைத்து சல்யூட் அடித்தான்.  எழுந்த பதினைந்து நிமிடத்தில் ஒரு காலைப் பொழுது ஒருவனை இவ்வளவு பயமுறுத்துவது நியாயமில்லை. உள்ளே வந்தேன்.சுவற்றில் மாட்டியிருந்த  கண்ணாடியைப் பார்த்தேன். மிரண்டு போனேன்.


கண்ணாடியில் எப்போதும் தெரியும் அந்த சுமாரான மூஞ்சி தெரியவில்லை.அது கூட பரவாயில்லை.தெரிந்தது அந்த உருவம். தலை முழுக்க நரை,கம்பீரமான தோற்றம்..லேசான சிவப்பில் குர்தா..அதே நிறத்தில் தேகம். அது வேறு யாருமில்லை..நம்ம பாரத பிரதமர் தான்..கண்ணாடியில் ஒருமுறை முகத்தைத் தொட்டுப்பார்த்தேன். வாயை அசைத்துப் பார்த்தேன்.அவரும் அசைக்கிறார். "அடப்பாவமே..கம்ப்யூட்டரைத் தட்டித்தட்டி ஒரு நாள் பைத்தியமாவேன்னு தெரியும்..ஆனா அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு நினைக்கலேயே... ". திடீரென அறையில் ஒரு ஒளி தோன்றியது... அறை முழுக்க ஒரு ரீங்காரம் எதிரொலித்தது. "பாஸ்..யாரது பயமுறுத்திறது...நான்லாம் பின்னாடி ஒளிஞ்சி நின்னு "பே" னு கத்தினாலே பயந்திருவேன்...நீங்க என்னைய மிரட்டி நோ யூஸ்.." பயந்து பயந்து பேசினேன்.

அந்த வெள்ளை ஒளி பேசியது. "தம்பி பயப்படாதே... இன்று ஒரு நாள் நீ தான் இந்தியாவின் பிரதமர்.. இது எங்களுடைய ஏற்பாடு.." குரல் கொஞ்சம் முதிர்ச்சியாய் இருந்தது.டப்பிங் சீரியல்களில் கேட்டது மாதிரி இருந்தது. 

"பாஸ்..நீங்க நேத்து நைட் கே டிவி ல சங்கர் படம் பாத்துட்டு உளறுறீங்க..மொத யாரு சார் நீங்க..."

"தம்பி பொறுமையாய் இரு..நான் தான் சித்திரகுப்தன்..சுருக்கமாய் சி.ஜி. மேலுலகில் ஒரு ரியாலிட்டி ஷோ போய்க்கொண்டிருக்கிறது..அது அங்க ரொம்ப பிரபலம்..அதன் படி சாதாரண மானிடன் ஒருவன் அதிகார பீடத்தில் இருபத்து நாலு மணி நேரம் இருந்தால் எப்படி இருக்கும் என லைவ்ல காட்டுகிறோம்..அதுக்கு நீ செலக்ட் ஆகியிருக்க..கங்க்ராட்ஸ்.."


"என்னது மேலோகத்துல ரியாலிட்டி ஷோவா...அப்போ இதுல இருந்து செத்தாலும் தப்பிக்க முடியாதா..பாஸ் அதிருக்கட்டும்..என்னைய எப்பிடி செலக்ட் பண்ணீங்க..இதுக்கு எதுவும் பேமென்ட் இருக்கா??"

"குலுக்கல் முறையில் தேர்வு நடந்தது..சன்மானம் உண்டு ஆனால் அது நீ "மேலே" வரும்போது தான் தருவோம்..பார்த்து செயல்படு..ரொம்பவும் ஓவராய்ப் போனால் நாங்கள் சங்கு சத்தம் கொடுப்போம். மூன்று முறைக்கு மேல் நீ பெனால்ட்டி வாங்கினால் மீண்டும் பழைய உடலுக்கேப் போய்விடுவாய்...சென்று வருகிறேன்.."

"சி.ஜீ பாஸ்..அப்போ அடுத்த இருபத்து நாலு மணி நேரத்துக்கு நாந்தான் மிஸ்டர் நமோவா??"

பதிலேதும் சொல்லாமல் சிரிப்பு சத்தத்துடன் அந்த ஒளி மறைந்தது. எனக்கு இப்போது ஒரு தெம்பு வந்திருந்தது. மீண்டும் மீண்டும் கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக்கொண்டேன். டெய்லி சைக்கிள் அகர்பத்தி கொளுத்தி சாமி கும்பிட்டது வீணாகவில்லை. குளித்துக் கிளம்பினேன். காரில் செக்ரட்ரி ஏறிக்கொண்டார். பின்னேயும் முன்னேயும் எனக்கு பெரிய படை பந்தோபஸ்து. எந்தப்பக்கம் திரும்பினாலும் சல்யூட் அடிக்கிறார்கள். குருப்பெயர்ச்சி எனக்கு இப்படி வொர்க் அவுட் ஆகிருச்சே என கண் 
கலங்கினேன். செக்ரட்ரி ஹிந்தியில் பேசிக்கொண்டே இருந்தார். "இன்று முழுவதும் என் கூட எல்லாரும் ஆங்கிலத்தில் தான் பேசணும்" னு ஆங்கிலத்தில் சடாரென சொன்னேன். அவர் சந்தோசமாய் சரியென்று தலையாட்டினார். நான் சொன்னால் அவர் லத்தின் மொழியிலேயே பேசுவார் போலிருந்தது.அலுவலகம் போய்ச்சேர்ந்தேன்.

அமெரிக்காவில் இருந்து கால் என்றார்கள். "வெள்ளை மாளிகையிலிருந்து நீங்கள் அங்கே வரணும்னு அழைப்பு விடுக்கிறார்கள்.." என்று ஒரு அதிகாரி சொன்னார். யோசித்துப்பார்த்து பின்பு கடுப்பானேன்.."ஓ..அவய்ங்க நம்மள அசிங்கப் படுத்துவாய்ங்க..அப்புறம் அழைப்பாய்ங்களாமா..மரியாதையா வீட்டுக்கு நேர்ல வந்து பவ்யமா கூப்ட்டா தான் வருவோம்..போன்ல கூப்ட்டா வர முடியாதுன்னு சொல்லிரு..". அதிகாரி தலையை சொறிந்து கொண்டு போனார். வெங்கி வந்திருந்தார். போனில் யாரிடமோ ,"பாய்..த்வாரொலோ மீறு சூடன்ட்டி"னு பேசிக்கொண்டு இருந்தார். அருகில் வந்தார்.

"ஜீ..அருண் பட்ஜெட் ஷீட்டை உங்களுக்கு மெயில் அனுப்பியிருந்தாராமே..திருப்தி தானே... வேறேதும் மாற்றம் இருக்கா??.."

"ஆமா..ஒரு பெரிய சேஞ்ச் இருக்கு..தேங்கா பர்பிக்கு நாம வரி விலக்கு அளிக்கிறோம்..அத சேத்துக்கோங்க..இது ஏழைகளின் அரசு.."

வெங்கி மிரண்டுபோய் என்னைப் பார்த்தார். என் காதுக்குள் ஒரு சங்கு சத்தம் கேட்டது. முதல் பெனால்டி போல.அதற்குள் ஒரு சபாரிசூட் ஓடி வந்தார். "சார்..சென்னையிலிருந்து போன்..மேடம் லயன்ல இருக்காங்க.." என்றார். திடீரென உடல் நடுங்கியது. சமாளித்து போனை வாங்கினேன்.அவர் பேசுவதற்கு முன்னாடியே நான் பேசினேன்.
"மேடம் வணக்கம். நாடும் நாட்டு மக்களும் நலமா.."

"வாவ்ஜி..தமிழ் அழகா பேசுறீங்க..எப்படி??"

"அதுவா..ப்ரீ டைம்ல எங்க கேப்டன்ஜி நடிச்ச தமிழ்ப்படம்லாம் பாத்தேன்..இப்போ தமிழ் என் நாக்குல சாமர்சால்ட் அடிக்குது..அவரு படம் ஒன்னொன்னும் தாறுமாறு..அதுவும் மேடம் நரசிம்மான்னு ஒரு படம்..ச்சே சான்சே இல்ல.."

எதிர்முனையில் எந்த சத்தமும் இல்லை.இதற்கு மேல் கேப்டனைப்பற்றி பேசுவது நல்லதல்ல எனப் புரிந்தது. பேச்சை மாற்றினேன்.

" சாப்பாடு போடுறீங்க..உப்பு விக்குறீங்க...மருந்துக்கடைய வேற திறந்துட்டீங்க..கலக்குறீங்க மேடம்...அடுத்ததா "அம்மா புள்ளைங்க" னு ஒரு ஐ.பி.ல் டீம் வேற வாங்குறீங்களாமே? "

"அது எதோ ரூமர்..நம்பாதீங்க ஜீ.... இந்த லங்கன் பாய்ஸ் பிரச்சனை பண்ணிக்கிட்டே இருக்கானுங்க..அவனுங்கள கொஞ்சம் கண்டிச்சு வைங்க..ஊர்ல ஒரே பிரச்சனை பண்றாங்க ஜீ.."

"ஓ அப்டியா...பாத்துக்கலாம் மேடம்...அடுத்தவாட்டி அவனுங்க டெல்லி வர்றப்ப நாக்க புடுங்கிக்கற மாதிரி நாலு வார்த்த கேக்குறேன்.."

"சரி ஜீ...இங்க கரண்ட் இல்ல..ஒரே வெக்கையா இருக்கு..நாம அப்புறம் பேசுவோம்..பாய் ஜீ.."

"சுகப்பிரியா"

"என்னது ஜி"

"சாரி மேடம்..சுக்ரியா.."

"ஹஹா..வெரி ஹுமரஸ் பி.ம்..."

மீண்டும் சங்கு சத்தம் கேட்டது. ரெண்டாவது பெனால்டியும் ஆகிவிட்டது. ஆனது ஆச்சு இன்னும் யாரிடமாவது பேசி விடுவோம்னு யோசிச்சேன். அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு போனை போடச்சொன்னேன். லைனில் வந்தார்.

"அர்விந்த் பாய்... ஆப் கெய்சா ஹே....ஜெயில்ல இருக்கீங்களா.. வீட்டுக்கு வந்தாச்சா? "

"மே..அச்சா ஹூ ஜீ... இப்போ வீட்டுக்கு வந்தாச்சு.. அது தீகார்ல வத்தகுழம்பு நச்சுனு இருந்துச்சு அதான் ஒருவாரம் பெயில் எடுக்காம ரெஸ்ட் எடுத்துட்டு வந்தேன்.."


"சூப்பர் ஜீ....எல்லா ஏரியாலையும் ஸ்கோர் பண்றீங்களே...இப்போ எங்க இருக்கீங்க.." 


" அத ஏன் கேக்குறீங்கஜீ..பொழுது போகலயே..சரி பெங்கால்ல போய் ஒரு ரயில் மறியல் பண்ணிட்டு வருவோமேனே கெளம்பி வந்தேன்..மத்தியானம் வரைக்கும் எல்லா ரயிலையும் மறிச்சு பிரிச்சனை பண்ணதுக்கபுறம் தான் தெரிஞ்சது..அது பங்களாதேசாம்..உழைப்பெல்லாம் வீணா போச்சு ஜீ.."


"சோ சேட்..பேசாம சந்தர்மந்தர்ல ஒரு உண்ணாவிரதத்த போட்டுற வேண்டியது தானே..."


"இல்ல ஜி..கொஞ்சம் அல்சர் பிரச்சனை..அது அடுத்த வருஷ அஜெண்டால இருக்கு.."
இந்தமுறை சங்கு சத்தமாய் அலறியது. திடீரென மயங்கினேன்.முழித்துப் பார்த்தால் நான் சென்னையில் இருந்தேன்.ஓ பெனால்டி முடிஞ்சதா...நான் நானாகவே இருந்தேன்.ஆறு மணி நேரம் பிரதமர் வேலை பார்த்த அழுப்பு இருந்ததால் தூங்கிப்போனேன். எழுந்தவுடன் டீ.வி யைப் போட்டேன். டைம்ஸ் நவ்வில் அர்னாப் கோஸாமி கோவமாய் பேசிக்கொண்டிருந்தார்."அதென்ன தேங்கா பர்பிக்கு மட்டும் வரிவிலக்கு??..கைமுறுக்கு..பப்பர மிட்டாய் சாப்பிடுபவனெல்லாம் கேனயனா.." என கேட்டுக்கொண்டிருந்தார். 

ரீமோட்டால் என் தலையில் அடித்துக்கொண்டேன்.  


கருத்துகள்

லெமூரியன்... இவ்வாறு கூறியுள்ளார்…
ha ha ha....nalla irukku siva..!
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல வேலை, சுஷ்மா-க்கு போன் போட்டு, கடலை போடாம விட்டீங்க..
நல்ல கற்பனை வளம்... பாராட்டுக்கள்.