எழுத்தாளன் - பகுதி3 (நிறைவுப் பகுதி )

                                            எழுத்தாளன்- பகுதி 1

                                        எழுத்தாளன் - பகுதி 2

ஹைதராபாத்தின் "ஜூப்ளி ஹில்ஸ்" பணக்காரர்கள் வாழும் பகுதி. பாறைகளைக்குடைந்து மாளிகைகள் கட்டியிருப்பார்கள். பளபளக்கும் வெளிநாட்டு இறக்குமதி கார்கள் வீடுகளின் முன் நின்று சிரிக்கும். குமரேசன் வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தான். காலை குளிர்க்காற்று முகத்தில் அடித்து அவனின் வியர்வையை துடைத்தது. அப்பல்லோ மருத்துவமனை வளாகம் அந்த அதிகாலை நேரத்திலேயே சுறுசுறுப்பாய் இருந்தது. குமரேசன் கையில் வைத்திருந்த ஃப்ளாஸ்க்கை தூக்கிக்கொண்டு நாலாவது மாடிக்கு ஏறினான். சுகுணாம்மா முன்னால் போய் நின்றான். அவள் லேசாய் சிரித்து அவனது கையிலிருந்த காபியை குடித்தாள். 


ஜேக்கப் மூன்று நாளாய் ஐ.சி.யுவில் இருந்து முதல் நாள் தான் பொது வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார். யாரிடமும் இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை.சுகுணாம்மா வழக்கம் போல வீட்டில் போய் குளித்து வர கிளம்பினாள். 

ஜேக்கப் கண் முழித்துப் பார்த்தார். தலையை லேசாய் தூக்கி சுகுணாம்மாவைத் தேடினார். குமரேசன் அவரைப் பார்த்து "அம்மா..குளிச்சிட்டு வர போயிருக்காங்க..வந்திருவாங்க.." என்றான். பெட் பேனை எடுத்து வைத்தான். ஜேக்கப் கூச்சமாய் அவனைப் பார்த்தார். "சும்மா போங்க..நான் வேணா திரும்பிக்கிறேன்..". போனார். கொஞ்ச நேரம் குமரேசன் அமைதியாய் இருந்தான். அவர் மெல்லமாய் கட்டிலில் எழுந்து இருந்து உட்கார்ந்தார்.

"ஜேக்..பாத்து..பாத்து...இப்போ பரவாயில்லையா.."

அவர் தலையாட்டினார். கொஞ்ச நேரம் கண் இமைக்காமல் அவரைப்பார்த்துக்கொண்டிருந்தான். கொஞ்சமாய் கனைத்து விட்டு பேசத்தொடங்கினான்.  "அடுத்த நாள் காலைலேயே அம்மா அவன கெளம்ப சொல்லிட்டாங்க...எனக்குத் தெரியும் அன்னிக்கு அவ்ளோ குடிச்சதுக்கு காரணம் அவனாத்தான் இருக்கும்... லூசு நாய்.."

அவர் குமரேசனையே பார்த்துக்கொண்டிருந்தார். "சரியான கிறுக்கன்..யார்கூட எப்பிடி பழகணும்னு தெரியாது..நல்ல வேள ஒழிஞ்சான்.. சுகுணம்மா மண்ணைத் தூத்தி அவன் மேல எறிஞ்சி திட்டுனப்போ மட்டும் கொஞ்சம் சங்கடமா இருந்துச்சு..அடுத்த நாள் காலைலேயே வீட்ட விட்டு கிளம்பிட்டான்.ஆபிஸ்ல வேற அவன பாக்கவேயில்ல. டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போயிட்டான்னு சொல்றாங்க.."

ஜேக்கப்புக்கு லேசாய் வியர்த்தது. நடந்ததெல்லாம் ஒரு முறை மனதிற்குள் ஓடியது. குமரேசனிடம் அது பற்றி பேசலாமாவென தெரியவில்லை. அமைதியாய் இருந்தார். குமரேசன் தொடர்ந்தான்."போறப்போ..உங்க கிட்ட கொடுக்கச் சொன்னான்..." குமரேசன் ஒரு கவரை நீட்டினான்.  ஜேக்கப்புக்கு பதட்டம் அதிகமானது. அவர் பயந்தபடியே அதை வாங்கினார். கையில் நடுக்கம் தெரிந்தது. குமரேசன் சத்தமாய் "என்னாச்சு ஜேக்...நர்சை கூப்பிடவா" என்றான். வேணாம் என கையசைத்தார். அந்த கவரை வாங்கி இடது பக்கம் இருந்த டேபிளில் வைத்தார்.

ரண்டு வாரத்தில் ஜேக்கப் நல்லமுறையில் தேறி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஊரிலிருந்து பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அவரைப் பார்க்க வந்திருந்தார்கள். எப்போதும் போலில்லாமல் அவரது வீடு இரைச்சல்களாலும், கீச்சுக்குரல்களாலும் களை கட்டியிருந்தது. வீட்டு வாசலில் எந்நேரமும் நிறைய செருப்புகள் கிடந்தன. வீட்டுக்குள்ளேயே கொஞ்சமாய் நடக்க ஆரம்பித்திருந்தார், எனினும் படிகள் ஏற அனுமதியில்லை. அப்படியொரு நாள் தான் குமரேசன் கொடுத்த அந்த கவர் அவர் கண்ணில் பட்டது. அதை நினைக்கும் போதெல்லாம் அவருக்குள் ஒருவித அசௌகர்ய உணர்வு வந்து போனது. என்னதான் எழுதியிருக்கிறான்னு பார்ப்போமென்ற வைராக்கியத்தில் அந்த கவரை பிரித்தார். ஒரு பெரிய வெள்ளைத்தாள் அதில் நீல நிற மையில் குண்டு குண்டாய் தமிழ் எழுத்துக்கள். நீல நிற நோட்டில் படித்த அதே கையெழுத்து. படிக்க தொடங்கினார்.

"ஜேக், வணக்கம். நீங்கள் இந்த கடிதத்தை ஒரு வேளை படிக்கும் படி அமைந்தால் மிகவும் சந்தோசம். தலை நரை போல மாரடைப்பு ஏதோ ஒரு கட்டத்தில் எல்லோருக்கும் இப்போதெல்லாம் வந்து விடுகிறது. அதுகுறித்து பயம் தேவையில்லை. உங்கள் மேல் சுகுணாம்மாவிற்கு எவ்வளவு பாசமென்று என்னை அவர் திட்டிய போதுணர்ந்தேன். தெருவில் மானம் போனாலும் அந்த வகையில் எனக்கு சந்தோசம். அம்மாவுக்கு என்னைவிட நிறைய கெட்ட வார்த்தைகள் தெரிந்திருப்பது ஒரு உபரித்தகவல். இத்தனை நாள் அம்மாவிடம் திட்டு வாங்கி அதுவரை உங்களுக்கு "அட்டாக்" வராதது வியப்பே...."

லேசாய் சிரித்தார். மீண்டும் வாசிக்கலானார். "அதிருக்கட்டும். நாம் போன புது வருடத்துக்கு இரண்டு பாட்டில் ரம்மை காலி செய்த போது கூட டேங்கர் லாரி போல கம்பீரமாயல்லவா வீட்டிற்கு போனீர்கள். வெறும் நாலு ரவுண்டில் கீழே விழுந்ததேன்?? அதுவும் நிலைப் படி தடுக்கி.. கொஞ்சம் குழப்பமாய் இருந்தது". ஜேக்கப் எச்சிலை விழுங்கினார்."என்னுடைய நோட் டேபிளில் இருந்த போதே எனக்குப் புரிந்தது. நீங்கள் கண்டிப்பாய் அதை படித்திருப்பீர்கள். ஆமாம் அதிலென்ன அவ்வளவு பயம். எழுதிய எழுத்தெல்லாம் எழுதியவனுடைய கருத்து மட்டும் தானா?? கதாபாத்திரங்கள் அதன் மன ஓட்டத்தை நேராக பேசக்கூடாதா?? அதையெல்லாம் விடுங்கள் போகட்டும். நானெல்லாம் கதையெழுதக்கூடாதா?? டால்ஸ்டாய், மார்க் ட்வைன் போல காலத்தால் கரைக்க முடியாத காவியங்கள் படைக்கக் கூடாதா?? ..ஸ்ஸ்..எத்தனை "கூடாதா"...என் கதைகளில் ஒரே வார்த்தை இத்துனை முறை "கூடாது". கடிதம் என்பதால் அடித்தெழுத முடியவில்லை.

நீங்கள் எத்தனை பக்கம் படித்தீர்ளெனத் தெரியவில்லை. முழுமையாய் படித்திருந்தால் அது என் கதாநாயகன் ஷ்யாமின் டைரி எனத் தெரிந்திருக்கும். நூறு சதவீத உண்மையுடன் ஒரு சம்பவத்தை ஒருவரால் விளக்கமுடியாது. கற்பனை இல்லாத விவரிப்பு நீங்கள் சாப்பிடும் "கேப்ப ரொட்டி" போல..யாருக்கும் பிடிக்காது..நான் உண்மையிலேயே கோல்கொண்டா போனதில்லை..கஞ்சா இழுத்ததில்லை..உள் நீச்சல் அடித்ததில்லை..உண்மையில் எனக்கு நீச்சலே தெரியாது.. நீங்கள் பயப்படும் அளவுக்கு வில்லத்தனங்கள் செய்ய எனக்கு வாய்ப்பில்லை.இதில் ஒரே ஒரு சந்தோசம். ஒருவருக்கு பயத்தைக்கொடுத்து மரணத்தின் வாசல் வரை தள்ளும் வீரியம் என் எழுத்துக்கு இருந்ததென்பது தான். கற்பனையும் உண்மையும் , தங்கமும் செம்பும் போல... அதன் சதவீதங்களை எழுத்தாளனே அறிவான்.சரி..நேரமாயிற்று விடைகொடுங்கள். இனி நான் குடிக்கும் ஒவ்வொரு முறையும் உங்களை
நினைத்துக்கொள்வேன்.வாய்ப்புக்கிடைத்தால் சிந்திப்போம். நன்றி."

ஜேக்கப்புக்கு பாரம் குறைந்தது போல இருந்தது. அவன் மேல் இரக்கம் பிறந்தது.சேரில் சாய்ந்து கொண்டே அவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தார். அவன் அடங்காத மாடாகவே வாழ்ந்து வந்தான். அவனைப்பற்றிய எந்தவொரு தகவலும் யாருக்கும் முழுமையாக தெரிந்திருக்கவில்லை. தன்னுடைய சொந்த விஷயங்களை அவன் யாரிடமும் ஒரு முறை கூட பேசியதில்லை. திடீரென அவர் மூளையில் சில குழப்பங்கள் உருவானது போல இருந்தது. மீண்டும் மீண்டும் "கற்பனை..உண்மை..தங்கம்..செம்பு.." என்கிற வார்த்தைகளை உச்சரித்தார். எழுந்தார். வீட்டில் எல்லாரும் மொட்டை மாடியில் இருந்தார்கள். கிளம்பி வெளியேறினார். சிரமப்பட்டு வேகமாய் நடந்தார். 14-C ப்ளாக்கை அடைந்தார். காற்று பலமாய் வீசியது. யோசிக்காமல் இடது புறமாய் வீட்டின் பின் பக்கம் போனார். 
அங்கே எதுவும் மரமேயில்லை. கீழே காங்க்ரீட் தரை. மண் எதுவும் இல்லை. குறிப்பிட்டுச்சொல்ல வேண்டுமானால் பத்து பேர் கூட நிற்க முடியாத ஒரு கொள்ளைப்புறம். சிரித்தார். அவன் முகம் ஒரு முறை வந்து போனது. வெளியே வந்தார். காலணி செகரட்டரி கண்ணில் தென் பட்டார்.

"என்ன ஜேக்கப் சார் அதுக்குள்ளேயும் வாக்கிங் ஆரம்பிச்சாச்சா...உடம்ப பாத்துக்கோங்க..."

"சரி சார்.."

"ஒரு மாசமாவே இங்க ஒன்னும் சரியில்ல..உங்களுக்கு இப்படி ஆகியிருச்சி.. போன மாசம் செக்யூரிட்டி ஒராள நைட்ல இருந்து காணோம். போலிஸ் கீலிஸ்னு இன்னும் அலஞ்சிகிட்டு இருக்கோம்.."

"செக்யூரிட்டிய காணோமா.."

"ஆமா சார்..ஷிவ்லால் யாதவ்னு...யூ.பி காரன்..சிரிச்ச முகமா இருப்பானே..."

ஜேக்கப் தலையில் ஒரு குரல் கேட்டது "கற்பனையும் உண்மையும் ...தங்கமும்செம்பும் போல... அதன் சதவீதங்களை எழுத்தாளனே அறிவான்". அவருக்கு லேசாய் நெஞ்சு வலிப்பது போல இருந்தது.

                                                                                                               ----முற்றும்                                                     

கருத்துகள்

லெமூரியன்... இவ்வாறு கூறியுள்ளார்…
semma siva. attagaasam. enakku intha technical la vimarsikkalaam teriyaathu. aana superb. And ganja adikkama ipdilaam elutha mudiyuma? :-) I use to get Himachal pradesh weed when i lived in Hydreabad. :-) :-) :-)