திருப்பூர் குமரன்



தலையில் கையை வைத்துக்கொண்டார். எனக்கு வயிறு வைப்ரேசன் மோடில் இருந்தது. என் முகத்தில் வியர்வை இருந்ததை சுற்றியிருந்தவர்கள் வியப்பாய் பார்த்துக்கொண்டிருந்தார்கள். பத்துவயதில் எனக்கு வந்த கஷ்டம் யாருக்கும் வரக்கூடாதென்று எண்ணிக்கொண்டேன். இன்னொருமுறை சொதப்பினால் பரமசிவம் சாரின் எருமைமாட்டுக்கையால் எனக்கு அடி உறுதி. ஒருமுறை யோசித்துப்பார்த்துவிட்டு மீண்டுமொருமுறை நடந்து வந்து உரக்கப்பேசினேன்."இந்த உடம்புக்கு கையிரண்டு காலிரண்டு எனக்குடுத்த இறைவன்... அந்த உயிரை மட்டும் இரண்டாக கொடுத்திருந்தால் நாட்டுக்காக அடுத்தடுத்து கொடுத்திருப்போம்..........." சொல்லிவிட்டு மிரட்சியாய் அவரை பார்த்தேன். வேகமாய் பக்கத்தில் வந்தார்.

"அப்பிடியே தான். ஒன்னே ஒன்ன மட்டும் சேதத்துடு... "உயிரை மட்டும்"னு சொல்றப்ப ஒரு ஏக்கம் தெரியணும்... அதோடு சொல்லிரு.. இன்னைக்கு வீட்டுக்குக்கிளம்பிறலாம்.."

கன்னம் தப்பித்த சந்தோசம் வெகு நேரம் நீடிக்கவில்லை.அந்த "உயிரை மட்டும்" அடுத்த அரைமணி நேரம் என் உயிரை வாங்கியது. ஆண்டு விழாவில் "திருப்பூர் குமரன்" நாடகம் தான் போடுவேன் என பரமசிவம் சார் அடம்பிடித்திருந்தார். ஐந்தாம் வகுப்பில் திருப்பூர் குமரனைத் தேடினார். தலையை சொறிந்துகொண்டே நிமிர்ந்து பார்த்த என்னை எப்படி அந்த வேஷத்திற்கு தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை. அன்னைக்கு நான் லீவில் இருந்திருக்கக் கூடாதாவென பலமுறை யோசித்திருக்கிறேன். ராஜபார்ட் ரங்கதுரை படத்தின் இறுதி காட்சி தான் எங்கள் நாடகத்தின் முக்கியமான பகுதி. அதை சார் நிறைய தடவை வி.சி.ஆரில் போட்டுக்காட்டி உயிரை வாங்குவார். பெரும்பாலான நாடகத்தின் வசனங்கள் அவ்விடமிருந்தே உருவப்பட்டன. அவர் அந்த வருடம் வெறியாய் இருந்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது. எங்கள் பள்ளியில் புதிதாய் வேலைக்கு சேர்ந்திருந்த ஆசிரியைகள் ஒரு காமெடி நாடகம் தயார் செய்து கொண்டிருந்தார்கள். அது தான் அந்த வருடத்தின் "ஹைலைட்" என்று ஹெட்மாஸ்டர் பீற்றி வருவதாக ஒரு வதந்தி இருந்தது. அச்செய்தி வேப்ப மரத்தின் பின்னால் நின்று பரமசிவம் சாரை நிறைய சிகரெட் புகைக்க வைத்தது.

பரமசிவம் சாரின் தொப்பையும் வழுக்கையும் அவரது நாற்பது வயதை நியாயப்படுத்தும். அடிக்கடி கர்சீப்பை வைத்து முகத்தை துடைத்துக்கொள்வார். தினமும் சாயங்கால ரிகர்சலுக்கு முன் சொந்த செலவில் எங்களுக்கு பஜ்ஜியும் பலாச்சுளைகளும் வாங்கித்தருவார். நாடகத்தின் முதல் காட்சியில் திருப்பூர் குமரன் தன் அம்மாவிடம் சென்று போராட்டத்துக்காக ஆசி வாங்குவார். அம்மாவோ வருத்ததுடன் வழியனுப்புவார். அதில் அம்மா ஒரு வசனம் சொல்லுவார் ,"குமரா..பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு போயிருக்கும் உன் மனைவி திரும்ப வந்தால் நான் என்ன பதிலப்பா சொல்லுவேன்..". அம்மாவாக நடித்தவள் சி கிளாஸ் அஜந்தா. அவள் ஒருமுறை "பிரசவத்திற்கு" என்று சொல்வதற்கு பதிலாய் "பிரதோசத்திற்கு" என சொல்லிவிட்டாள். பரமசிவம் சார் பக்கத்தில் வந்து "லூசுக்கழுத" என சொல்லி அவள் தலையில் ஒரு "யார்க்கர்" போட்டார்.அஜந்தா ஏங்கி ஏங்கி அழுதாள். அதன் பிற்பாடு அவளுக்கு எப்போதும் டங்க் ஸ்லிப் ஆகவேயில்லை. வீட்டுக்கு கிளம்பும் போது அஜந்தா என்னிடம் வந்து "அவரு எது வாங்கி கொடுத்தாலும் நா இனிமே திங்க மாட்டேன்..இன்னிக்கு தின்னதையே இப்ப வாந்தி எடுக்கப் போறேன்.." எனச்சொல்லி வாய்க்குள் விரலை விட்டாள். நான் பீதியானேன். நல்ல காலம் செரிமானமாகிவிட்டது போல அவளது இரைப்பை ஒத்துழைக்கவில்லை.

அம்மாவின் கதியே அப்படியென்றால் திருப்பூர் குமரனை விட்டிருப்பாரா?? வெளுத்து வாங்கினார். எனக்கு உளறல் பிரச்சனையில்லை ஆனால் வசனங்கள் மறந்து போய்விடும். குமரன்  பிரிட்டிஷாரிடம் போராட்டத்தில் பேசும் வசனம் மிகப்பெரியது. திருப்பூர் குமரன் இவ்வளவு நீளமாய் எப்படித்தான் பேசினாரோ என நினைத்துக்கொள்வேன். ஆக்ரோஷமாய் பேசிக்கொண்டிருக்கும் போதே அடுத்த வரி மறந்து போகும், முகத்தைக்குறுக்கி ஓரக்கண்ணால் சாரை பார்ப்பேன். அவர் மதம் கொண்ட யானை போல ஓடி வந்து கொண்டிருப்பார். அடைமழையாய் அடித்து நொறுக்குவார். உண்மையில் ரெண்டாவது மூன்றாவது அடியிலேயே எல்லாம் ஞாபகம் வந்து விடும். அவர் அடிக்கென்றே ஒரு மகத்துவம் இருந்தது.

"இருபத்தொரு வயசுல நாட்டுக்காக செத்தவெண்டா...எவஞ்சாவான்?? அப்டியே சிங்கம் மாதிரி உருமிட்டு சாஞ்சுட்டான்...எப்பேர் பட்ட வைராக்கியம் இருந்தா சாகுற போது கூட கொடிய விடாம இருந்திருப்பான்... அப்படியாப்பட்டவன் குரல் எப்டியிருக்கும்... நீ கஞ்சிக்கு செத்தவன் கெனக்கா மொனங்குற..."


'வைராக்கியம்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் அப்போது தெரிந்திருக்கவில்லை. அர்த்தம் கேட்க அது சரியான நேரமில்லை என்பதால் அமைதி காத்தேன். பரமசிவம் சார் எல்லா வசனத்தையும் நடித்துக் காண்பிப்பார்.வாட்ச்சை மேஜையில் கழட்டி வைத்து விட்டு, தொண்டையை உருமி ஆரம்பிப்பார். மொத்த வசனத்தையும் தங்கு தடையின்றி கணீரென்று பேசுவார். அவர் கண்களெல்லாம் கலங்கியிருக்கும். முகம் ஆக்ரோஷமாய் இருக்கும். நடித்து முடித்து விட்டு "இப்டி பண்ணனும்"பார். நான் குல தெய்வத்தை ஒரு முறை கும்பிட்டுக்கொள்வேன்.

ஒரு வாரத்தில் எல்லாம் இலகுவானது. வசனங்கள் பதிந்து போனது. நெஞ்சை நிமிர்த்தி, குரலை உயர்த்தி நேராய் கண்களை வைத்துக்கொண்டு பேசுவது பிடிபட்டது. சார் ஓரமாய் உட்கார்ந்து கொண்டு "அவ்ளோ தான்..அருமே..அருமே.." என்பார். வீட்டில் கூட சட்னியில் உப்பு அதிகமாய் இருந்தால் "ஓவர் ஆக்டிங்" செய்ய ஆரம்பித்தேன். இந்த "ஆண்டுவிழாப் பேய்" எப்ப எறங்குமோ?? என நொந்து கொண்டாள் அம்மா. முன்பு எருமை மாடாய் தெரிந்த பரமசிவம் சார் இப்போது பசு மாடாய் தெரிய ஆரம்பித்தார். மிக அழுத்தமாய் திருப்பூர் குமரன் எனக்குள் பதிந்து போனார். தனியாய் இருக்கும் வேளையில் குமரன் பிரிட்டிஷ் போலீசிடம் பேசும் காட்சி என் மனக்கண்ணில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். இந்தியக்கொடியை மானசீகமாக கையில் ஏந்திக்கொண்டு "இறுக்கமாய்" பிடித்துக்கொள்வேன். பரமசிவம் சார் சொல்வது போல "லட்சிய உடும்புப் பிடி.."

"உனக்கு அது மேடையா தெரியக்கூடாதுடா..திருப்பூர் வீதியா தான் தெரியனும்..நீ தான் குமரன்..எதுக்கும் பயப்படாத குமரன்...தேசபக்தியால் தோலெல்லாம் இரும்பாப் போனவன்..உயிற துச்சமுனு இருந்தவன்...தமிழ்நாட்ல பிற்பாடு ஏற்படப்போற புரட்சிக்கு விதை நீ..முக்கியமா தேசியக்கொடிய விட்டுவிடாமல் உயிர்மாய்த்த கொடிகாத்த குமரன்..."  பரமசிவம் சார் மகுடி ஊத நான் பாம்பானேன். ஆனால் மொத்த ஸ்கூலும் எங்கள் மீது வெறியாய் இருந்தது. நாடகத்துக்கு கூடுதலாய் பதினைந்து நிமிடம் வேண்டுமென்றார் சார். "ரங்கீலா" பாடலை தூக்கிவிட்டால் நமக்கு அந்த பதினைந்து நிமிடம் கிடைக்குமென தலைமைக்கு மேற்கொண்டு யோசனையும் சொன்னார். பள்ளியின் கலைக்காதலர்கள் கொதித்தார்கள். எல்லோரும் சாருக்கு எதிராக தங்கள் குரலை பதிவு செய்தார்கள்.தலைமையாசிரியர் பரமசிவ சாரிடம் பேசினார்.

"ஒரு மணி நேரம் நாடகம் பாத்தா எல்லாருக்கும் போர் அடிச்சிரும் சார்..ஒரு பாட்டு ..ஒரு நாடகம் அது தான நம்ம ஐடியா.."

"ஏங்க திருப்பூர் குமரன விட, தெரியாத மொழிப்பாட்டு பெருசா போச்சா.."

"எல்லாம் சேர்ந்தது தான் கலை நிகழ்ச்சி...நீங்.."

"செரி விடுங்க..அப்போ "நேத்து ராத்திரியம்மா" வையும் போட்டு கலைய வளருங்க..."

கடைசியில் "ரங்கீலா" தப்பித்தாள். அந்த மிகப்பெரிய நாள் வந்தது. வேட்டி சட்டை மற்றும் முழு மேக்கப்புடன் சாயங்காலமே தயார் செய்யப்பட்டேன். அம்மா அஜந்தாவுக்கு தலையெல்லாம் பவுடர் கொட்டப்பட்டு இன்ஸ்டன்ட் கிளவியானாள். கடைசிக்காட்சியில் வரும் ரத்தத்திற்காக சிவப்பு மை பாட்டில் தயாராய் இருந்தது. வசனத்தை ஆரம்பித்திலிருந்து ஒருமுறை சொல்லிப்பார்த்தேன். திருப்தியாய் இருந்தது. மறந்து விட வாய்ப்பேயில்லை என தைரியம் வரும் வரை சொல்லிப்பார்த்தேன். பரமசிவம் சார் திடீரென வந்து திருநீர் பூசி விட்டார். 



"அதிகமா தண்ணி குடிக்காத...அப்புறம் மேடைல ஏறுனதுக்குப்புறம் ஒன்னுக்கு வரும்..."

"சரி சார்"

"நிமிந்து நின்னு பேசணும்..கூன் போட்டுட்டு கெளவி மாதிரி நிக்கக் கூடாது"

"சரி சார்"

மேடை ஏறினோம். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தது. திருப்பூர் குமரன் சாகும்போது மக்கள் கூட்டம் அமைதி காத்தது. கடைசியில் கொஞ்சமாய் கைத்தட்டல் கேட்டது. முடிந்து மேடையிலிருந்து பின்பக்கமாய் கீழிறங்கினோம். பரமசிவம் சார் ஓடி வந்து கட்டிக்கொண்டார். தன் தொப்பையை வைத்து அமுக்கி தன் ஆனந்தத்தை வெளிப்படுத்தினார். சரியாக மேடைக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தோம். எனக்கு வியர்த்துக் கொட்டியிருந்தது. தண்ணீர் குடித்தேன். பெரிதாய் கைத்தட்டல் சத்தம் கேட்டது.

"ரங்கீலா ஆரம்பிச்சிட்டாங்க போல...சரி கெளம்புறேன்" என பரமசிவன் சார் தன் பாக்கெட்டுக்குள் கை விட்டு சைக்கிள் சாவி தேடினார்.

நான் அவரை கொஞ்சம் குழப்பமாய் பார்த்தேன்.

"மூணாவது பரிசோ..ஆறுதல் பரிசோ தருவாங்க..அதுக்கெதுக்கு நா தேவுடு காக்கணும்...ம்ம்ம் ஒரு மாசமா குமரன் புண்ணியத்துல சந்தோசமா இருந்தேன்.."

அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

"மத்த விஷயத்தலெல்லாம் ஜெயிச்சா தான் வெற்றி..பிடிச்ச விஷயத்தை பண்ணினாலே வெற்றி...அடுத்தவனுக்கு எது பிடிக்கும்? எது பண்ணினா கைத்தட்டுவாங்கனு தேடிட்டே அலையக்கூடாது... " சைக்கிளை மிதித்து கிளம்பினார். இருளை கிழித்து அந்த சைக்கிள் போய்க்கொண்டிருந்தது. வேகமாய் ஓடிப்போய் சாரின் சைக்கிளில் ஏறிக்கொண்டேன்.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
super post.. nice message..
லெமூரியன்... இவ்வாறு கூறியுள்ளார்…
Super siva..