பாபநாசம்

                                      


நாயகன் நடிக்கும் போது கமலுக்கு முப்பத்திரண்டு வயது. அதற்கும் முன்பே சலங்கை ஒலி, மூன்றாம் பிறை, ராஜபார்வை, மரோ சரித்ரா போன்ற மைல்கல்களை கடந்து விட்டிருக்கிறார். ஆக கமல் தன் வாழ்நாளில் முப்பத்திரண்டு வயதிற்குள் அடைந்த உயரங்களை இப்பொழுது இருக்கிற எந்த ஹீரோவும் நினைத்துப்பார்க்கக்கூட வாய்ப்பில்லை. இணையங்களில் இந்த ஹீரோக்களின் ரசிகக்குஞ்சுகள் சண்டையிடும் போதும், ஒரு டொச்சு போட்டோவை போட்டு "லைக்" போடு "ஷேர்" பண்ணு என்று உயிரை வாங்கும் போதும் தாங்கொணா கோபம் வரும். கமல் "வேட்டையாடு விளையாடு" படத்தில் சொன்னது போல "த்தா..சின்ன பசங்களா..யார்ட்ட?" என கேட்கத்தோன்றும். கமலைப் பற்றிய எவ்வளவு விமர்சனங்கள் ஊடகத்தில் அலசப்பட்டிருக்கும் ஆனால் அவரின் நடிப்பை யாரும் விமர்சிக்க செய்ய முயன்றதில்லை. அது அவர்களால் முடிந்ததுமில்லை. இதோ இப்போது கூட உத்தமவில்லன் ஊத்தியது. திட்டிதீர்த்து விமர்சனங்களில் கூட கமலின் நடிப்பை அங்கீகரித்தனர். இத்துடன் முடிந்து விட்டது என விமர்சித்தவர்களுக்கு பாபநாசம் மூலம் தான் ஏன் "உலக நாயகன்" என உணர்த்தியிருக்கிறார்.

கதையை முழுக்க சொல்லி "பிரம்மஹத்தி" சாபம் வாங்கிக்கொள்ள ஐடியாயில்லை. மலையாள த்ரிஷ்யமும் பார்த்திருப்பதால் எங்கே பல்பு வாங்கி விடுவோமோ என பயந்து கொண்டே தான் போனேன். எங்கும் மூலத்தை மீறவில்லை நடிப்பில் மட்டும் கமல் தன் பீஷ்மத்தனத்தை காட்டிவிட்டார். மோகன்லாலுடன் ஒப்பிடக் கூடாதென்றாலும் பல இடங்களில் கமல் தன் சொந்த வழியில் சிக்சர் அடித்து விட்டார். இரண்டு வேற வெர்சன்கள். படம் முழுக்க எல்லோரும் 'திருநவேலி' பாஷ பேசுறாங்க. எங்கும் எரிச்சல் இல்லை. போக போக இதமாகி விடுகிறது. உண்மையில் அது திருநெல்வேலி பாஷையும் இல்லையாம் "உவரி பாஷை" என ஜெயமோகன் கூட "ஸ்கூப் நியூஸ்" சொல்லியிருக்கிறார்.



திரிஷ்யத்தின் வெற்றிச்சூத்திரமே அதன் திரைக்கதை தான். இது வரை வந்த இந்திய திரைப்படங்களில் மிகச்சிறந்த பத்து திரைக்கதைகள் பட்டியலிட்டால் அதில் த்ரிஷ்யம் கண்டிப்பாய் இருக்கும். மலையாள பதிப்பை பார்க்காதவர்கள் பாபநாசம் பார்த்தால் மெர்சலாவார்கள். தமிழ் படங்களின் இலக்கணங்கள் பல இடங்களில் மீறப்பட்டிருக்கும். படத்தில்  ஹீரோவுக்கு ஐம்பது வயதிற்கும் மேல எனக்காட்டுவதே நம்மூருக்குப்புதுசு. பொதுவாய் கமல் தன் கேரக்டரயும் தாண்டி "கமல்த்தனங்களை" காட்டுவார். விளக்கிச்சொன்னால் இலைமறைக்காயாய் பகுத்தறிவு வசனங்கள் பேசுவார், புத்திசாலித்தனமான கேலிகள் செய்வார். அது குணாவாக இருந்தாலும் சரி , தெனாலியானாலும் சரி. இதில் சுயம்பு லிங்கத்தின் எல்லைக்குள் தன்னை அடக்கிக்கொள்கிறார். திருநீர் பூசிக் கொள்கிறார். கோவிலுக்கு போகிறார். "ஆண்டவனுக்கு பயந்தா போதும்" என வசனம் பேசுகிறார்.



கெளதமி என்றவுடனே எனக்கு எரிச்சலாய் இருந்தது. மீனாவையே நடிக்க வைத்திருக்கலாம் எனத்தோன்றியது. உண்மையிலே கெளதமி சொதப்பவில்லை. வட்டார மொழியைத் தான் கொஞ்சம் கஷ்டப்பட்டபடி பேசுகிறார். எல்லோரும் திறம்பட நடித்திருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் படம் டாப் கியருக்கு போகும் போது பல இடங்களில் தியேட்டரில் விசில் பறக்கிறது. ரொம்ப அரிதாகவே நம் பொறுமையை சோதிக்காத யதார்த்த சினிமா வருகிறது. பார்த்து விடுங்கள்.படத்திற்கு கூட வந்த நண்பர் பிரபு இண்டர்வெல்லில் முழுக்கதையும் சொல்லாவிடில் பிஸ் அடித்துவிட்டு வீட்டுக்கு போய் விடுவதாக மிரட்டினார்.

"டேய்..நீ என்னடா..அவனவன் கதையை சொல்லிராதேனு கெஞ்சுவான்..நீ கதைய சொல்லிறுனு உயிரெடுக்குற..."

"இல்லடா..நான்ல மகாநதி பாத்துட்டு மூணு நாள் அழுதவன்...இதுல வேற குடும்பம் குட்டினு காட்றானுக..பயமா இருக்கு...நா கொஞ்சம் சாஃப்டு டைப்..சோகத்துக்கு செட் ஆக மாட்டேன்"

பிற்பாடு முழுக்கதையும் சீன் பை சீன் கேட்டுட்டுத் தான் படம் பார்த்தான். படத்துல வர்ற கேரக்டர்ஸ்ஸ விட கூட வர கேரக்டர்ஸ் விசித்திரமா இருக்கானுக. 

கொசுறு செய்தி: ஒரு வருஷம் முன்னாடி த்ரிஷ்யம் பார்த்து கண்ல தண்ணி வச்சுட்டன். இந்திய சினிமா உலகத்தையே நாக்கைத்துறுத்தி மிரட்டும் நாள் 
வெகுதூரத்தில் இல்லை என தீராக்கனா கண்டேன். இணையத்தில் தேடிய போது த்ரிஷ்யம், "சஸ்பெக்ட் எக்ஸ்" என்ற கொரிய படத்தை சுட்டு எடுத்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டை படிக்க நேரிட்டது. "அடப்பாவி நீங்களுமா??" என டென்சனாகி அந்த கொரிய படத்தை டவுன்லோடி பார்த்தேன் (ஆம் சப்டைட்டிலுடன் தான் ) பிளாட் தவிர வேறு பெரிய ஒற்றுமை கிடையாது என்று அந்த வழக்கை என் மனதிற்குள் தள்ளுபடி செய்தேன். ஆனால் ஒரு ஆனந்த அதிர்ச்சி சஸ்பெக்ட் எக்ஸ். படம் திர்ஷ்யத்தை விடவும் சூப்பர். என்னை போல் சக சைக்கோக்கள் தரவிறக்கி பார்த்து பயனடையுங்கள்



கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
சக சைக்கோக்களா?

ஆமா.
நானும்தான்.
:-)