டவுசர் காலங்கள் - பகுதி 3

                                       


 "இத எழுதி கிழிக்க இவ்வளவு நேரமாடா..."


ராதாகிருஷ்ணன் சாரின் குரல் அவரின் வீடு முழுக்க எதிரொலித்தது. ரானாகினாவை நாங்கள் "ட்டூஷன் சார்" என்றே சொல்வோம். ட்யூசன் போனால் பிள்ளைகள் பேரறிவு பெற்று விடுவார்கள் என்று பெற்றோர்கள் நம்பத்தொடங்கியிருந்தார்கள்.ஆகையால் ரானாகினா சாரின் ட்யூசனில் கூட்டம் அள்ளும். அவர் கைராசிக்காரர் ஒன்னுக்குமத்ததெக்கூட உருப்படியாக்கிவிட்ருவாரென எங்கள் ஏரியாவில் அவரைப் பற்றி டாக் இருந்தது. கிட்டத்தட்ட நூறுக்கும் மேற்பட்ட மாணவமணிகளுடன் 
ட்யூசன் நடத்தி எங்கள் ஏரியாவின் கல்வித்தந்தையாகயிருந்தார் ரானா கினா. ஒரு பிரவுன் கலர் கைலி, மேலே ஒரு காட்டன் துண்டு, தடிமனான கண்ணாடி, கையில் ஹீரோ பேனாவுடன் "எல்லாரும் புக்க மூடி ஓரமா வை" என சொல்கிறாரென்றால் ஒரு ஆக்சன் சீக்வன்ஸ்க்கு ரெடியாகிறார் என்று அர்த்தம். அன்று "ட்யூசன் டெஸ்ட்" இருக்கும். எங்களுக்கு அன்று சயின்ஸ் டெஸ்ட். வெள்ளைத்தாள், பேனா சகிதம் எல்லோரும் சில அடிகள் இடைவெளி விட்டு அமர்ந்து கொள்ள  வேண்டும். சார் கேள்விகளை சொல்வார் குறித்துக்கொள்ளவேண்டும். பிறகு பதில்கள் எழுத வேண்டும்.

ட்யூசன் சீனியர்கள் பெரும்பாலும் இந்த டெஸ்ட்களுக்கு அஞ்சுவதில்லை. இதுவும் கடந்து போகும் என்கிற மனநிலையில் இருந்தார்கள். அந்த ட்யூசனில் காலங்காலமாக படிக்கும் "வடக்கடை" கணேசன் எனக்கு தோஸ்த். அவன் அவ்வப்போது ட்யூசன் நெளிவு சுளிவுகள் பற்றி போதனைகள் செய்வான். "சார் அடிக்கிறப்ப அவர் கண்ண நிமிந்து பாக்க கூடாது" ,"தெனமும் துந்நூறு வச்சிட்டு வா" , "டெஸ்ட் இருக்கிற அன்னைக்கு ட்யூசன் பீஸ் கொடு" போன்றவைகளை நாங்கள் பிரமாஸ்திரமாக கருதினோம். அன்றைய சயின்ஸ் டெஸ்ட் முடியும் தருவாயில் இருந்தது. பத்தாவது பையன்களுக்கு கணக்கு சொல்லிக்கொடுத்தவாரே சார் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். நிறைய பேர் ஹாலிலும், இடப்பற்றாக்குறையால் கணேசன் உட்பட நாங்கள் ஒரு நாலு பேர் ஒரு ரூமிலும் எழுதிக்கொண்டிருந்தோம். எல்லோரும் எழுதி முடித்துவிட்டோம். பேப்பரை போய்க்கொடுத்தால் எங்கே உடனே திருத்தி விடுவாரோ என யாரும் கொடுக்கவில்லை.எனக்கு அன்று ட்யூசன் எப்போது முடியுமென்றிருந்தது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உலககோப்பை அரையிறுதிப்போட்டி கல்கத்தாவில் நடந்து கொண்டிருந்தது. "என்னாச்சோ..ஏதாச்சோ" என யோசித்துக்கொண்டிருந்தேன்.




நாங்கள் உட்கார்ந்த ரூமில் தான் டிவி இருந்தது.ஹாலில் இருந்து பார்த்தால் டிவியிருப்பது தெரியாது. திடீரென பக்கத்து வீட்டிலிருந்து ஆரவார கூச்சல் கேட்டது. எங்களால் ஆர்வத்தை அடக்கமுடியவில்லை. "அனேகமா ஜெயசூர்யாவ தூக்கிடாய்ங்கனு நெனைக்குறேன்" என்றான் செல்வா. எல்லோரும் ரூமில் இருந்த டிவியை போடுவதென முடிவெடுத்தோம்.வாசலுக்கு ஒருத்தன் காவல். சார் வந்தால் இரும வேண்டும். கணேசன் சுவிட்சை ஆன் செய்ய வேண்டும். ஒரு வேளை சார் திடீரென உள்ளே நுழைந்து விட்டால் பவர் வயரை பிடுங்கி விட நானும் ஒரு எல்லைப்பாதுகாப்பு பணியில் இருந்தேன். கூட்டு முயற்சியுடன் டிவியை போட்டோம். சத்தத்தை முன்பே குறைத்து விட்டோம். ஜெயசூர்யா அவுட்டாகியிருந்தார். இலங்கைக்கு இருபத்து ஒன்பது ரன்னுக்கு மூனு முக்கிய விக்கெட்டுகள் காலி. நானும் கணேசனும் ஹைஃபை பண்ணிக்கொண்டோம். தொண்ணூறுகளின் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேய் பயத்தை விட ஜெயசூர்யா பயம் அதிகம். மனுஷன் அஞ்சே ஓவரில் ஆட்டையை முடிச்சிருவான். வெளியேயிருந்து "பேப்பர்லாம் வை" னு வாத்தியாரின் சத்தம் சன்னமாய் கேட்டது.

கணேசனை டிவியை ஆஃப் பண்ண சொன்னேன். அவன் தவறுதலாக வால்யூமை கூட்டிவிட்டான். டோனிகிரேக்கின் காந்தக்குரல் அந்த வீடு முழுக்க பரவியது. ஒரே வினாடியில் பேங்க் கொள்ளையர்களை பார்ப்பது போல் மொத்த ட்யூசனும் எங்களைப்பார்த்தது. சார் தன்னுடைய முட்டைக்கண்களை உருட்டிக்கொண்டு "டேய்" என்ற படி உள்ளே வந்தார். கணேசனின் கை இன்னமும் டிவியிலேயே இருந்தது. எங்கள் முழிகளையும் கணேசனையும் வைத்து நடந்ததை யூகித்துவிட்டார். மின்னல் வேகத்தில் எங்கள் எல்லாரையும் வெளுத்து வாங்கினார். மூச்சு வாங்கிக்கொண்டே "முழங்கால் போடுங்கடா எருமைகளா" என்றார்.ட்யூசன் முடிந்து எல்லோரும் போய்விட்டார்கள். நாங்கள் மட்டும் வெயிட்டிங்கில் இருந்தோம். வாத்தியார் எங்கள் டெஸ்ட் பேப்பர்களுடன் வந்தார். ஒவ்வொருவரையும் கூப்பிட்டுத்திருத்தினார். சப்சப்பென கன்னங்களில் அறை. கணேசன் "வெர்னியர் காலிப்பர்" படத்தை தந்தூரி சிக்கன் போல வரைந்திருந்ததை பார்த்து வெறியேறினார். அவனுக்கு அஞ்சு நிமிட குருபூஜை நடத்தினார். அவன் ஏங்கியேங்கி அழ ஆரம்பித்தான். அவ்வளவு சோகத்திலும் கணேசன் அழுவது எனக்கு சிரிப்பை உண்டாக்கியது. அடக்கிக்கொண்டேன்.




"எல்லாரும் சயின்ஸ் புக்க எடு... திரும்பவும் மிட்டேர்ம் போசன படி" என்றார். கொஞ்சம் இடைவெளி விட்டு "உட்கார்ந்து படி" என்றார். எல்லோரும் புக்கை கையில் வைத்து உட்கார்ந்து கொண்டோம். எல்லாருடைய முகங்களும் கொஞ்சம் வீங்கியிருந்தன. செல்வாவுக்கு உதடு வீங்கியிருந்தது. கணேசன் விபத்தை சந்தித்தவன் போல இருந்தான். செல்வா என் பக்கத்தில் வந்து "ஜெயசூர்யா ஆவி அங்கேர்ந்து இங்க வந்து நம்மாளு மேல இறங்கிருச்சு போல" என்றான். நான் பதில் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து "நம்ம கணேசுதான் வெங்கடேஷ் பிரசாத்.." என்றான். வெகுநேரம் அடக்க முடியாமல் சிரித்தோம்.கணேசன் நிமிரவே இல்லை. எங்களுக்கு குற்றஉணர்ச்சியாய் இருந்தது. வாத்தியார் வெளியில் அவர் சைக்கிளை துடைத்துக்கொண்டிருந்தார். கணேசன் தோளைத்தொட்டேன்.

"கணேசா..சாரிடா..எல்லாருக்கும் தானே அடி விழுந்துச்சு.. விடுடா..ரொம்ப வலிக்குதா..." என்னை சோகமாய் பார்த்தான். ஒரு மணி நேரத்திற்கு முன் சிரிப்பு வெடியாய் இருந்தவன்,இப்போது சோக கீதமாய் மாறிப்போயிருந்தான்.

"பரிமளா முன்னாடி அடிச்சிட்டார்டா.. ரொம்ப அசிங்கமாயிருச்சுடா...". பரிமளா(பெயர் மாற்றப்படவில்லை) கணேசனின் ரெண்டாவது ஒன் சைடு லவ். ட்யூசனில் எட்டாவது படித்து வந்தாள். வாத்தியார் அவன் கன்னத்தோடு சேர்ந்து அவன் காதலிலும் அடித்திருக்கிறார். 

"அதெல்லாம் பிரச்சனையில்ல கணேசா..வாத்தியார் எல்லாரையும் தான் அடிக்கிறாரு...". அவன் சமாதானம் ஆனது போல தெரியவில்லை. பக்கத்து வீட்டிலிருந்து  "நோ ப்ராப்ளம்..நோ ப்ராப்ளம்" பாட்டுக்கேட்டுக்கொண்டிருந்தது. அது பிரபுதேவா நடித்த லவ் பேர்ட்ஸ் ரிலீஸ் ஆகியிருந்த சமயம். கிரிக்கெட்டில்லாமல் வேற ஒரு நிகழ்ச்சி மாற்றப்பட்டால் மேட்ச் மோசமாக போகிறதென்று அர்த்தம். செல்வா "அங்கேயும் போச்சா" என்றான். வாத்தியார் உள்ளே வந்தார். நாங்கெல்லாம் சட்டென 
புக்குகளை பார்க்க ஆரம்பித்தோம். அவர் பக்கத்தில் வந்தார். குனிந்து இருந்ததால் நிறைய நகங்களுடன் இருந்த அவர் கால் மட்டும் தெரிந்தது.

"டேய் உங்க நல்லதுக்கு தாண்டா சொல்றோம்...விளையாடுறவன் லட்சம் லட்சமா சம்பாதிச்சிட்டு போயிருவான்..உனக்கு என்ன பிரயோஜனம்.." நாங்கள் இன்ஸ்டண்டாய் திருந்திவிட்டது போல முகத்தை வைத்துக்கொண்டோம். அந்த படுபாவி கணேசன் சரியான பட்டனை திருப்பியிருந்தால்,அந்நேரம் வீட்டில் நிம்மதியாய் டிவி பார்த்துக்கொண்டிருந்திருப்போம். வாத்தியார் கருணை அடிப்படையில் எங்களை விடுவித்தார். மணி எழாகியிருந்தது. தெறித்து வெளியில் ஓடி 
வந்தோம். வேகமாக ஓடி சைக்கிளையெடுத்து கணேசனையும் ஏற்றிக்கொண்டேன். கணேசனின் வீட்டில் கிரிக்கெட் ஓடிக்கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் அங்கேயே பார்த்துவிட்டு வீட்டுக்கு போவோம் என உட்கார்ந்தேன். சச்சின் விளாசிக்கொண்டிருந்தார். கணேசனின் பாட்டி கையை கண்ணுக்கு மேல் வைத்து முகத்தில் பலஅபிநயங்கள் செய்து டிவியில் ஸ்கோரை பார்க்க முயற்சி செய்தார். என் பக்கம் திரும்பி "சச்சின் எம்புட்டு'' என்றார். பாட்டி சச்சினின் பழம்பெரும் ரசிகை. "அறுவது" என்றேன். உதட்டை மடித்து தலையாட்டிக்கொண்டாள். கொஞ்ச நேரத்தில் விக்கெட்டுகள் விழுந்தன. கணேசன் பாயை விரித்து படுத்தே விட்டான்.

ஐந்து விக்கெட்டுகள் விழுந்திருந்தது. வினோத் காம்ப்ளி களம் இறங்கினார். அவர் ஒரு இடதுகை ஆட்டக்காரர். பாட்டியை திரும்பிப்பார்த்தேன்.




"ம்ம்க்கும்..நேரா அடிக்கிறவனுகளே அவுட்டாயிட்டாய்ங்க..இந்த நொட்டங்கைக்காரன் கிழிக்கவா போறயான்..." என்றாள். எனக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.அன்றைய போட்டியில் இந்தியா தோற்று, வினோத் காம்ப்ளி தேம்பி அழுதது அடுத்த நாள் தலைப்பு செய்தியானது. இருபது வருடங்கள் கழித்து  இப்போதும் எப்போதாவது டிவியில் அந்த போட்டி காட்டப்படும் போதும் காம்ப்ளி அழுகையுடன் சேர்ந்து கணேசனின் அழுகையும் ஞாபகம் வருகிறது. 


                                                                                              -ஒருவேளை தொடரலாம் 

கருத்துகள்