பிரதி புதன் பேசலாம் -2

 இடி இறங்கியது போல அதிர்ச்சியில் பாலகுரு உட்கார்ந்திருந்தார். என்னால் அவரின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிந்தது.அதே இடியை ஒரு வாரத்திற்கு முன் மதுரையில் நானும் சந்தித்து, அதன் சத்தம் காதுகளை விட்டு  இன்னும்  போனபாடில்லை. அவர் முகம் வியர்த்திருந்தது. பக்கத்தில் இருந்த வாட்டர் கேனில் தண்ணீரைப்பிடித்து அவருக்குக் கொடுத்தேன். என் முகத்தை பார்க்காமல் வாங்கி மடக்கென குடித்தார். "ஓ பயப்படறாராமா ... 'அண்ணா கிட்ட பழைய மாதிரி போன்ல மணிக்கணக்குல       பேசணும் போல  இருக்குனு'  நினைவு நாள்  விழாவுல  கண்ண கசக்குனானே .."




அந்த குரலுக்கு ஒரு குரல்வளை இருந்திருந்தால் பிடித்து  அழுத்தியிருப்பேன். பாலகுருவின் பக்கத்தில் போனேன். அவர் என்னை குழப்பமாய் பார்த்தார். அழுவது போல குரல் நடுங்கி பேசினார்.

"தம்பி.. அவரு எனக்கு அப்பா மாதிரி..அவர் பேர வச்சு விளையாட்டுத்தனம் பண்ணாத...உண்மையிலேயே அவர் உன்கிட்ட பேசுறாரா...பணம் ஏதுனா வேணும்னா கூட ..."

அவரை தொடர விடாமல் நிப்பாட்டினேன்.

"சார்..என்னப் பாத்தா உங்களுக்கு எப்படித்தெரியுது...சத்தியமா பெர்சனல் லோன் கூட வாங்கித்தர்றேன் ...தயவு செஞ்சு அவரு எழுதுறத உங்க மேகசின்ல போடுங்க..."

எனக்கும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அடக்கிக்கொண்டேன். 

"திடீர்னு உடம்பு அதிருற மாதிரி தலைக்குள்ள குரல் கேட்டா எப்படி இருக்கும் தெரியுமா..காலைல ஆறு மணிக்கே எழுப்பி விட்ருவார்..வாக்கிங் போலாம்பார்..இப்போ இந்த ஒரு வாரத்துல மட்டும் நாலு புக் வாங்க வச்சுட்டார்..அவர் சொல்ல சொல்ல புக்க கைல வச்சிட்டு நான் பக்கம் திருப்பனும்..எவ்வளவு நேரம் சார் அப்படி உட்கார்ந்திருக்க முடியும்...டாய்லெட்ல ஒரு புக் வச்சு ,டெய்லி அதுல பத்து பக்கம் படிக்க.... அதாவது திருப்ப சொல்றார்...சார் நான்லாம் இங்கிலிஷ் மீடியம் படிச்சேன்..ஸோ எனக்கு தமிழும் வராது..இங்க்லீசும்  வராது..டெய்லி தமிழில எதையாச்சும் எழுத வச்சு டார்ச்சர் பண்ணுறார்..'தத்தி.. ரெண்டு சுழி 'ன' போடு' ம்பார்..
எங்கப்பா கூட என்னைய இவ்வளவு டார்ச்சர் பண்ணல....ஒரு ஏழெட்டு கட்டுரை தானாம்.. அப்புறம் போயிடுறேன்னு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மேல சத்தியம் பண்ணிருக்கார்...ப்ளீஸ் .."

அவரை கும்பிட்டேன். பாலகுரு என் தோளில் தட்டினார். என் கண்ணில் இருந்து நீர் உருண்டு வந்து கீழே விழுந்தது. ஒரு ஆண் இன்னொரு ஆண் முன் அழுவதென்பது அந்த அழுகைக்கான காரணத்தை விட சோகமானது.

"உனக்கு கேக்குறது உறுதியா அவர் வாய்ஸ் தானா.."

"நெட்ல பழைய வீடியோஸ்லாம் பாத்தேன்..அதே குரல் தான்.. என்ன அங்க நிதானமா பேசுறார்..எங்கிட்ட உறுமலா பேசுறார்.."

"ஒரு தடவ அவர் பூர்வ ஜென்மம்  சம்பந்த பட்ட தொடர் ஒன்னு எங்க பத்திரிக்கைல எழுதிட்டிருந்தார்...ஒரு பொண்ணு பெங்களூர்ல இருக்குற அவரு வீட்டுக்கே  போயி ..போன ஜென்மத்துல நான் தான் உங்க மருமக..என்னை உங்க வீட்ல சேத்துக்கோங்கனு அடம்பிடிக்க ஆரம்பிச்சிருச்சு...அப்புறம் அது போலீஸ் கம்பளைண்ட் வரைக்கும் போச்சு.. இவரு எனக்கு போன் பண்ணி "நல்ல வேல பாலா..முதல்ல ஏலியன் கதை எழுதலாம்னு இருந்தேன்..எழுதிருந்தா என்ன வந்திருக்குமோ" னு சிரிக்கிறார்.."



பாலகுரு கண்களும் கலங்கியிருந்தது. கொஞ்சம் நேரம் மௌனமாய் இருந்தோம்.அமைதியான குளத்தில் எறியப்பட்ட கல் போல அந்த சத்தம் வந்தது.

"இன்னைக்கு என்ன உலக அழுகை தினமா..ஒரே அழுகாச்சியா இருக்கே....நாளைக்கு ஞாயத்திக்கிழமை..இப்போ ஆர்டிகிள்  பிரஸ்ஸுக்கு போனாத்தான் ப்ரூஃப்  பார்த்து நேரத்துக்கு பப்ளிஷ் பண்ண முடியும்.. பாக்கெட்ல இருக்குற பேப்பர அவன்கிட்ட கொடுத்திட்டு..மிச்ச அழுகைய அழுங்க.."

எதுவும் சொல்லவில்லை. பாக்கெட்டிலிருந்து நாலாய் மடிக்கப்பட்ட இன்னொரு பேப்பரை எடுத்து பாலகுருவிடம் நீட்டினேன். அவர் அதை வாங்கி விட்டு, டிராயரிலிருந்த கண்ணாடியை எடுத்து போட்டுக்கொண்டு படிக்கத்தொடங்கினார். என் தமிழ் கையெழுத்தை தெளிவாய் காட்ட ஒரு கண்ணாடி இது வரை தயாரிக்கப்படவில்லை. முயற்சித்தார்.

குழந்தைகளின்  உலகம்  உதாசீனப்படுத்த பட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரு குழந்தையின் மிகப்பெரிய லட்சியமே அது வேகமாய் வளர்ந்து மனிதனாய் மாற வேண்டியது தான் என புகட்டிக்கொண்டே இருக்கிறோம். வீட்டுக்கு வரும் மாமாக்களிடம் ஆங்கில ரைம்ஸ் பாடிக்காட்ட வேண்டும். பண்டிகைகளின் போது சிறு குழந்தைகளுக்கான வேஷ்டி/சேலை கட்டி போட்டோக்களுக்கு போஸ் கொடுக்க வேண்டும். பாழாய்ப்போன ஸ்கூலுக்கு சனிக்கிழமையும் போக வேண்டும். நோட்டுகளில் மிஸ்ஸிடம் ஐந்து ஸ்டார் வாங்க வேண்டும். ஹிந்தி, அபாகஸ், கராத்தே,ஸ்விம்மிங் என பக்கத்து வீட்டுக்குழந்தைகள் கற்றுக்கொள்வதை தாமும் கற்றுக்கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமை விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையிடம் "நாளைக்கு ஸ்கூலுக்கு போகணும் ..மறந்திராத.." னு சொல்லுவது அக்மார்க் அடல்ட் அயோக்கியத்தனம். ஆழ்துளை கிணற்றின் துவாரம் கொஞ்சம் பெரியதாய் இருந்தால் அடைத்திருப்போம். எப்படியும் நாம் நினைத்தால் கூட நம் சைஸுக்கு அதில் விழ முடியாதென்பதால் தான் அது மெத்தனமாக விடப்படுகிறது. சமுதாயம் முழுக்க பெரியவர்கள் தோண்டி வைத்த கிணறுகள் பிள்ளைகளைத்தின்ன காத்துக்கிடக்கிறது.

சுரன்  பார்த்தேன். வெக்கை நாவலை மிகச்சரியாய் சினிமாப்படுத்தியிருக்கிறார்கள். பொதுவாய் கொஞ்ச வயது நடிகர்கள் வயதான வேடத்தில் நடிக்கும் போது இருநூறு,முன்னூறு  வயதுக்காரர்கள் போல ஒரு மாதிரி இருமிக்கொண்டு அதிகமாய் நடிப்பார்கள். தனுஷ் கச்சிதமாய் நடித்திருக்கிறார். இன்னொரு தேசிய விருது கிடைத்தால் ஆச்சர்யப்படமாட்டேன். கூச்சப்படாமல் வெற்றிமாறனை தமிழின் தலைசிறந்த இயக்குனர்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். இனி ஜி.வி பிரகாஷ் வீட்டுக்கு நடிக்க கேட்டுப்போகும் இயக்குனர்களை பெயிலில் வெளிவர முடியாத காவலில் வைக்க எடப்பாடிக்கு சிபாரிசு செய்கிறேன்.


ஸ்ரேல் கம்பெனி ஒன்று வாட்ஸாப் செயலியை ஹேக் செய்து நிறைய பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், ஆக்டிவிஸ்டுகள் ஆகியோரின் சொந்த விஷயங்களை திருடி விட்டதாய் சொல்கிறார்கள். "கார்டியன்"னில்  கூட வாட்ஸாப் ,சம்பந்தபட்டவர்கள் மீது வழக்குப் போட்டிருப்பதாய் எழுதியி ருந்தார்கள். இது அரசாங்கத்துக்கு தெரியாமல் நடந்திருக்கும் என நான் நகக்கண் அளவு கூட நம்பவில்லை. அரசாங்கத்துக்கு உளைச்சல் கொடுப்பவரை மோப்பம் பிடிப்பது ஆதிகாலத்துப் பழக்கம். அவ்வளவே. தவிர சொந்த விஷயங்களை வாட்ஸாப்பில் மட்டுமல்ல எந்த ஆப்பில் வைத்தாலும் நமக்கு ஆப்பு வைக்கப்படும். 
"வணக்கம் கங்காராம்  சார் ...நாங்க ஐ.டி புரஃபசனல்களுக்கு சல்லீசான  வட்டியில் லோன் தர முடிவு செய்திருக்கோம்" னு  வருகிற காந்தகுரல் பெண்களின் அழைப்புகளும் தகவல் திருட்டின் ஒரு படிநிலை தான்.எத்தனை  புத்திசாலித்தனமான என்கிரிப்ஷன்கள் செய்தாலும் ,இந்த களவாணிகள் டீக்ரிப்ட் செய்து விடுவார்கள்.வீட்டை பூட்டுபோட்டு விட்டுத்தான் செல்வோம். ஜன்னல் ,பின் கதவு எல்லாவற்றையும் அடைத்திருப்போம். தெருவுக்கு ரெண்டு செக்யூரிட்டிகள் கூட இருப்பார்கள். இருந்தும் எங்கயாவது ஓட்டையைப் போட்டு  லலிதா  ஜுவல்லரிக்குள் இறங்கியதைப் போல பொம்மை முகமூடியைப் போட்டு இறங்கிவிடுவார்கள். இன்றைய தேதிக்கு வீட்டில் விலை உயர்ந்த பொருட்களை வைத்துக்கொள்ளாமல் திருடர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குங்கள். அதாவது வாட்ஸப்பில் உங்கள் மேனேஜரை "தேங்கா மண்டையன்"னு நண்பருடன் கேலி செய்து கொள்ளலாம். ஆனால் ஏ.டி.எம் பின் நம்பரை பொண்டாட்டிக்கு கூட அனுப்பிவிடாதீர்கள்.


ர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் வளருவது நல்லதா கெட்டதா என தெரியவில்லை. அதையெல்லாம் யோசிக்காமல் அது தினமும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நம்முடைய ஈ.சி.ஜி ரிசல்ட்டை வைத்துக்கொண்டு நாம் இன்னும் ஒரு வருடத்தில் செத்துப்போய்விடுவோமாவென சொல்லிவிடுவார்களாம். அதாவது நமது ஈ.சி.ஜி கிராஃப் பேட்டர்னை வைத்துக்கொண்டு ஏற்கனவே ஆராய்ச்சி செய்யப்பட்ட பதினேழு லட்சத்து  சொச்ச ரிப்போர்டுகளையும் வைத்து நமது வாழ்நாள் குறித்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.இந்த செயற்கரிய சேவையை செய்தது பெனிஸில்வானியாவைச்சேர்ந்த ஒரு ஹெல்த் சிஸ்டம் கம்பெனி. ஆக இனி நாம் ஈ.சி.ஜி க்கு போனால் ,டெஸ்ட் ரிசல்ட் இப்படிக்கூட வரலாம்.

"பையனுக்கு கல்யாணத்தை அக்டோபரில் வைத்துக் கொள்ளுங்கள்.பதினாலு,பதினஞ்சு முகூர்த்த தினங்கள். உங்கள் ஹௌசிங் லோனை நவம்பருக்குள் முடித்து விடுங்கள். அதே போல ஆபிசில் மிச்சமிருக்கும் இருக்கும் பதினாலு நாள் லீவை வேகமாய் எடுத்து விடுங்கள். நீங்கள் டிசம்பர் பத்தில் சாகப்போகிறீர்கள்" 


ஹாராஷ்டிராவில்  இடியாப்பக்குழப்பங்கள்  இன்னும் இழுத்துக்கொண்டே போகிறது. தேர்தலுக்கு முன் சண்டை போட்ட சிவசேனாவும்  என்.சி .பி யும்  கூடிப்பேசுகிறார்கள் . பாரதிய ஜனதா நூறு சீட் ஜெயித்தும் அது "நாய் பெற்ற தெங்கம்பழம் " ஆனது.  காங்கிரஸ் "நல்லெண்ண வேப்பெண்ண வெளெக்கெண்ண..பாகிஸ்தான் ஜெயிச்சா எனெக்கென்ன .." என்பது போல யாரையும் கண்டுகொள்ளாமல் நிற்கிறது. ஒரு வேளை  காங்கிரசும் .என்.சி .பியும்  மனசு வைக்கும் பட்சத்தில் சேனையின் இளைய தளபதி  "ஆதித்ய தாக்ரேவாகிய நான் " சொல்ல வாய்ப்பிருக்கிறது. என்ன செய்தாலும்  நம்ம வடக்கூரான் அமீத்ஷா கர்நாடகாவில் செய்தது போல  ஏதாவது "உருண்டை" உருட்டி வைத்திருப்பார்.பொறுத்திருந்து பார்ப்போம். எது எப்படியோ மும்பை நியூஸ் சேனல்களின் டி.ஆர்.பி  இன்னும் ஒரு மாதத்திற்கு எகிறும் . 


பாலகுரு பேப்பரை மடித்தார். மூன்றாவது,நான்காவது பக்கங்களை அவர் படிக்கவேயில்லை. எழுந்து நடந்து கதவு வரை சென்றார். பின் குறுக்காய் ஒரு முறை நடந்தார்.நான் அவரை பார்வையால் தொடர்ந்தேன். என்னை நோக்கித்திரும்பினார்.


"சு..சு..சுப்ர..."

"சுந்தர்  சார்.."

"ஹா..சுந்தர்..ஒருவிஷயம் இருக்கு..அவர் பேர போட்டு பிரசுரிக்க முடியாது... பிரச்சனையாகிடும். தமிழ்நாட்ல அவரைப் படிக்காதவுங்க ரொம்பக்குறைவு. அறிவியல் அறிந்தவர்ங்கிறதால அவரை மொத்த தமிழ்ச் சமூகமே ஆசானா ஏத்துக்கிச்சு. அவர் என்ன எழுதினாலும் கேள்வி கேட்காம ஏத்துப்பாங்க. கேலி செஞ்சா எவ்வளவு பெரிய ஆளானாலும் சிரிச்சிட்டு கடந்திருவாங்க. அவரின் எழுத்தோட வீச்சு அப்படி. அவர் ஒரு மேதமை நிலைய ரொம்ப சீக்கிரமே அடைஞ்சிட்டார். அப்படி ஒரு பிம்பம் எழுதறது வேற ..இப்போ இதை என்ன பேர்ல பிரசுரிக்கறதுனு குழப்பமா இருக்கு..."




பாலகுரு "பிரசுரிப்பது" என்கிற வார்த்தையை அடிக்கடி உபயோகப்படுத்தியது எனக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. ஆனால் அவர் சொல்லும் சிக்கல் நியாயமானதாய் தெரிந்தது.

"சார்..அவரும் கேட்டுக்கிட்டே தான இருப்பாரு..ஏதாவது சொல்வாரு னு நினைக்குறேன்"

தலையை திருப்பி பார்த்தேன். எதுவும் சத்தம் வரவில்லை. தேவையில்லாத போது நொண நொணனு பேசுறது. தேடுறப்போ காணாமப்போறதென மனதிற்குள் கடிந்து கொண்டேன். லேசாய் "ம்க்கும்" சத்தம் கேட்டது. பெரிசு வந்திட்டது.


"பாலாவ ரொம்ப யோசிக்காதே முடி கொட்டிரும்னு சொல்லு...பேர் என்ன பேரு...ரெங்கன்னு  போட்டுக்க சொல்லு..பயோ டேட்டால 'இன்ஜினியரிங் படித்திருந்தாலும்  இலக்கியத்தின் பால் ஈர்க்கப்பட்டு கொஞ்ச நாள் ஒரு பத்திரிக்கையில்  வேலை செய்தார். உலக இலக்கியங்கள் படித்திருப்பதால் , தமிழில் காலத்தால் அழியா படைப்புகளை எழுத வேண்டுமென்பதே இவரது அவா. தற்சமயம் சமகால நிகழ்வுகளை சோஷியல் கமெண்ட்ரி செய்து வருகிறார்'னு போட்டுக்க சொல்லு"

கேலி வசனங்களை கட் செய்து விட்டு சொன்னதை சொன்னேன். பாலகுரு " அதெல்லாம் சரி..பிசிக்கலா ஆளு வேணும்ல...எங்களுக்கு ஆடிட்டுக்கு போட்டோ ..மத்த விஷயம்  எல்லாம் வேணும்ல.."
   
நான் திரும்பவும் குரலை எதிர் பார்த்து திரும்பினேன். "அட முண்டமே..நீ தான் அந்த ரெங்கன்..உன் போட்டோ..ஆதார்...இத்யாதிகளையெல்லாம் அவன்கிட்ட கொடு "

பாலகுரு அவர் என்ன சொன்னார் என்பது போல புருவத்தை உயர்த்திக்கேட்டார். எனக்கு அவரிடம் இதை இப்படி சொல்வதென்று சங்கடமாய் இருந்தது. ஒரே நாளில் தமிழுக்கும்,தமிழ் பத்திரிக்கையாசிரியனுக்கும் எத்தனை 
அதிர்ச்சிகளைத்தான்  கொடுப்பது.


கருத்துகள்