பிரதி புதன் பேசலாம் -7

ண்ணைத்திறக்க  நிறைய பிரயத்தனம் செய்யவேண்டியிருந்தது. இடது கையும்,தோள்பட்டையும்  சுளீரென்று வலித்தது. மயங்கிவிழுவது அவ்வளவு உன்னதமானதல்ல போல. வலது கையில்  ஒரு டுயூப் வழி  "ட்ரிப்ஸ்" ஏறிக்கொண்டிருப்பதையும், படுத்திருக்கும் கட்டிலின் மாடலையும்  பார்த்தவுடன் நான் எங்கிருக்கிறேன் என யூகிக்க முடிந்தது. தவிர மயங்கி விழுந்து கண் திறக்கையில்  ஷாப்பிங் மாலிலோ சரவணா ஸ்டோரிலோ இருக்க வாய்ப்பில்லை. கால் மாட்டில் சென்றாயன் உட்கார்ந்திருந்தான். மொபைலில் கேம் விளையாடிக்கொண்டிருந்தான்.

"இப்போ ஈன்னு சிரிச்சிட்டு உன்னைப் பாத்து  "ஜி" னு சொல்லுவான் பாரு...இந்த 'ஜி'..'ப்ரோ' னு கூப்பிடுறவனையெல்லாம் குண்டாஸ்ல  உள்ள போடணும் ...தமிழ்நாட்ல டெங்குவ  விட வேகமா இந்த நோய் பரவிட்டு இருக்கு  "

                              
எனக்கு பதிலேதும் சொல்லத்தோன்றவில்லை. ஏ.சி கொஞ்சம்  அதிகமாய் இருந்ததால் குளிரியது.தலையை திருப்பி நாலாபுறமும் பார்த்தேன்.

"Parani143$  இந்நேரம்  அவுங்க வீட்டுக்கு போயிருக்கும்...உனக்கு முறைவாசல்  பண்றது அது வேலையில்லை ...பாஸ்வர்டுகள் தள்ளியிருப்பதே யூஸருக்கு நன்று..."

அவர் சொல்லும்வரை உண்மையில் எனக்கு அவள் ஞாபகம் வரவில்லை. நெற்றிப்பொட்டில்  குங்குமம் வைத்த அவள் முகம் கண்முன் வந்தது.  நான் அன்று அந்த அசோக் லேலண்ட் வேலையை விடாமல் இருந்திருந்தால்..அவளின் அப்பாவை ஆண்களின் அந்தரங்க உறுப்பைக்குறிக்கும் கெட்ட வார்த்தை சொல்லித்திட்டாமல் இருந்திருந்தால்... காட்சிகள் ஒருவேளை மாறி இருந்திருக்கலாம். நானும் தினமும் பரணிக்கு டாட்டா சொல்லிவிட்டு, பிள்ளைகளை ஸ்கூலில் விட்டுவிட்டு ஆபீஸ் போய்க்கொண்டிருந்திருப்பேன்.


"ஜி.."

சென்றாயன் மொபைலை விலக்கி தலையை தூக்கி சிரித்துக்கொண்டே என்னைப்பார்த்தான். நானும் லேசாய் சிரிக்க முற்பட்டேன்.

"என்னடா..நீ எப்போ வந்தே.."

"உங்களோட போன்ல இருந்து கால் வந்துச்சு..அவுங்க தான் கூப்பிட்டாங்க..கீழ் வீட்டுக்காரங்க கொடுத்திருப்பாங்கன்னு நினைக்குறேன்... அப்புறம் வீட்டுக்கு வந்து உங்கள அள்ளிட்டு வந்து இங்க போட்ருக்கு..ஜி.. பாத்தா தெரில...ஆனா நீங்க செம்ம கனம்..Bone வெயிட் போல.."

பேசிக்கொண்டிருக்கும்போதே நர்ஸ் வந்து சொட்டு சொட்டாய் விழுந்து கொண்டிருக்கிற  "ட்ரிப்ஸ்" ஸை ஒரு முறை சரி பார்த்தாள். பின் என்னைப்பார்த்து "எழுந்தாச்சா..டீஹைட்ரேசன்...சரியா தூங்கலை போல ... சார் வந்து பார்ப்பார்.. இருங்க " .

சென்றாயன் அவள் பேசுவதை கவனமாய் கேட்டுக் கொண்டிருந்தான். அவள் போனவுடன் என் பக்கத்தில்  வந்தான். "ஜி..ஹார்ட் அட்டாக்னா கூட தப்பிச்சிடலாம்... தமிழ்நாட்ல  டீஹைட்ரேஷன்னு அட்மிட் ஆனா அவளோ தான்..எதுக்கும் இங்க சிசிடிவி இருக்கானு பாத்துக்கவா.."

"சென்று...முடிலடா..வாய குறைச்சிட்டு எப்போ டிஸ்சார்ஜ்னு கேளு.."

சிரித்துக்கொண்டே எழுந்து வெளியே சென்றான். எல்லோருக்கும் சிரமம் கொடுப்பதாய்  சங்கடமாய் இருந்தது. யாரேனும் பாலா சாருக்கு சொல்லியிருந்தால்...என் பிரச்சனைகள் அவருக்கு தெரிய வந்தால்...என்ன நினைப்பார்...சங்கடம் தற்சமயம் கொஞ்சம் உப்பி குண்டாகிக்கொண்டிருந்தது. எனக்கு ரகசியங்களை தூக்கிக்கொண்டு அலைவது அவஸ்தையாய்  இருந்தது. சென்றாயன் வந்து " டாக்டர பார்த்திட்டு..ஓகே னா சாயங்காலம் கிளம்பிடலாமாம்.."

"தம்பி இங்க வைப்ரேஷன் நல்லா இருக்கு.. குடியுரிமைச்சட்டம்.. வெங்காயம்..ஹைதராபாத் என்கவுன்டர்னு..இந்த வாரம் வலுவான லைன்அப்.. நாம வேணும்னா இங்கேயே ரெண்டு நாள்..."

பதிலேதும்  நான் பேசவில்லை.ன்று சாயங்காலமே வீட்டுக்கு வந்துவிட்டோம்.  "Looking For Alaska"வை  கையில் எடுத்து இரண்டாவது முறையாக படித்தேன். பரணி  இரண்டு மூன்று வாட்ஸாப் மெசேஜுகள் அனுப்பியிருந்தாள். எதையும் படிக்கவில்லை. சென்றாயனிடம் என்னைப்பற்றி விசாரித்துக்கொள்வாள் எனத்தோன்றியது.

"இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு..எழுதலாமா..பாஸ்ஸ்...."

  கோபம் தலைக்கேறியது. கண்கள் கலங்கத்தொடங்கியது. ஹெட் போனை தலையில் மாட்டிக்கொண்டு  மொபைலில் பாட்டைப்போட்டேன். முப்பது நொடிகள் வெறும் இசை மட்டுமே வந்து கொண்டிருந்தது. ஏ.ஆர். ரகுமானுக்கு என் அவசரம் புரியவில்லை. ஒருவழியாய் ஸ்ரேயா கோஷல் தன் திருவாய் திறந்தாள்.

"முன்பே வா..என் அன்பே வா...ஊனே வா..உயிரே வா"

"லேப்டாப்பை எடு எழுதலாம்.."

சத்தத்தைக்கூட்டினேன். கோஷல் கிட்டத்தட்ட  காதிற்குள் கத்திக்கொண்டிருந்தாள்.


"நான் நானா
கேட்டேன் என்னை நானே"

லேப்டாப்பைத்திறந்தேன். ஈமெயிலைத்தேடி அதில் தமிழில் எழுதத்தொடங்கினேன்.

"பாலா சாருக்கு,
                                     பிரியமான வணக்கங்கள். உங்களிடம் இனியும் உண்மையை சொல்லாமல் இருப்பதில் நியாயம் இல்லை. உங்களை நான் சில வருடங்கள் முன்னமே பார்த்திருக்கிறேன். ஒரு முறை மலர் மருத்துவமனை வளாகத்தில்..மறுமுறை..செயின்ட் ஆண்டனிஸ் சர்ச்சுல..ஆம்..நானும் அந்த ஆசாமி தான்... உங்ககிட்ட நான் சொன்ன அந்த வாராகி கதையை தவிர்த்து எல்லாமே உண்மை தான்..அவர் தான் "பாலாட்ட போய் இப்பிடி சொல்லு..சாஃப்டான ஆளு..எம்மேல பிரியமான பையன்..நமக்கு சான்ஸ் இருக்குன்னு சொன்னார்..". நான் முதல்ல முடியாதுன்னுட்டேன். அவர் உடனே "இப்போ உன் காதலிய பாக்க திருட்டுத்தனமா தோப்புக்கு போறே..பாம்பு கடிச்சிருது..டாக்டர்ட்ட போயி என்ன சொல்லுவ?..கொல்லைக்கு போனேன் பாம்பு கடிச்சிட்டதுனு தான் சொல்லுவ..டாக்டருக்கு தெரிய வேண்டியது பாம்பு கடிச்சது மட்டும் தான்..நீ எதுக்கு அங்க போனேன்றதில்ல....நீ பொய் சொல்லல..உண்மைக்கு கொஞ்சம் மேக்கப் போட்டு அழகா காட்டுற..அவளோ தான்" னார். சரின்னு இறங்கிட்டேன். 

    ஆனால் எனக்கு குரல் கேட்பதில் எள்ளளவும் பொய்யில்லை. புத்தகங்கள் படித்துக்கொண்டே அவர் பேச்சை காதில் கேட்டுக்கொண்டு  நான் நிம்மதியாய் இருந்திருக்க வேண்டும். அதை விட்டுட்டு இதை வெளியே சொன்னவுடன் தான் என் சிக்கல்கள் அதிகமானது. ஒரு ஆயிர வருசத்துக்கு முன்னாடி எனக்கு குரல் கேக்குதுனு நான் சொல்லிருந்தா என்னை சாமியா கும்பிட்டுருப்பானுங்க..இப்போ அறிவியல் வளர்ந்திருச்சுல அதான் வாய்க்குள்ள ப்ரோலாக்சினை தினுச்சி.."உனக்கு பிரச்சனை..உனக்கு பிரச்சனை" டெய்லி ரெண்டு தடவ ஞாபக படுத்துறானுங்க...அவ்ளோ அறிவியல் புடுங்கிங்கன்னா என்னா மயித்துக்கு மங்கல்யான் விடுறப்போ பூஜை போடுறானுங்க?...செத்துப்போனவுங்களுக்கு திதி கொடுக்குறானுங்க?..திருப்பதில போய் மொட்டை போடுறானுங்க....நமக்கு மேல ஒரு சக்தி இருக்காம்..ஆனால் அது எப்படிப்பட்டதென்று இவர்களே வரையறுத்துக்கொள்வார்களாம்...

அப்பா போட்டோவை வைத்து மாலை போட்டு.. பலகாரங்கள் வைத்து  கண் நனைந்து..கை கூப்பி கும்பிட்டால் அது பாசம். அந்த அப்பா மனம் நெகிழ்ந்து பிள்ளையிடம் பேசினால் அது ஸ்கிட்ஸோஃபிர்னியா..
  
  எனக்கு உள்ளே கேட்கும் குரலை விட வெளியே கேட்கும் குரல்கள் தான் அசௌகர்யம் தருகின்றன. எனக்கு அவர் ஆசான். என் துயரங்களிலிருந்து என்னை வேற்று உலகத்துக்கு அழைத்துச்சென்றவர். நான் மரிக்கயிலேயே அவர் மரிப்பார்..

உங்களை நான் இனி அநேகமாய் சந்திக்கமாட்டேன். குழப்பங்களுக்கு மன்னிக்கவும். உங்களின் மனம் போல நீங்கள் செழுமையாய் வாழ அந்த அரங்கன் உங்களுக்கு அருள் புரியட்டும்.

                                                                                                    இப்படிக்கு
                                                                                                       சுந்தர் "எழுதியதை மீண்டுமொருமுறை படித்துப்பார்த்தேன். இது அச்சுக்கு போவதில்லை என்பதால் மெனெக்கெட தேவையில்லை. அனுப்பினேன் .ஹெட் போனில் " கண்ணில் என்ன கார்காலம்..கன்னங்களில் நீர்க்கோலம்.." என எஸ்.பி.பி உருகிக்கொண்டிருந்தார். பாடலை நிப்பாட்டினேன்.கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. மணியை பார்த்தேன். ஒன்றரை. டாய்லெட் போய்விட்டு வந்தேன். சுடுதண்ணி வைத்து, ஷாம்பூ போட்டுக்குளித்தேன். வீட்டை சுத்தமாய் பெருக்கினேன். எனக்குப் பிடித்த ஸ்கை ப்ளூ சட்டை போட்டுக்கொண்டேன். ஒரு சின்ன பேப்பரில்  பேங்க் அக்கவுண்ட் நம்பரும்..ஏ.டி.ம் பின் நம்பரையும் எழுதினேன்..அதை ஒரு கவரில் போட்டேன்.என்னுடைய மோதிரத்தையும் கழட்டி அதில் போட்டேன். முகப்பில் "TO MY SENDRU" என எழுதினேன். சென்றாயன் ஞாபகம் வந்தான். நாளை எனக்காக அவன் அழுவான். கட்டிக்கொண்டு அழுவான்.அருவி போல அழுவான். எனக்கும் கலங்கியது. தலையை சீவிய பின் மாடிக்கு கிளம்பினேன்.

வாட்ஸாப்பில் பரணிக்கு "அப்பாவிடம் நான் மன்னிப்பு கேட்டதாய் சொல்லிவிடு" என அனுப்பினேன். மொட்டைமாடி ஜிலுஜிலுவென இருந்தது. இடிஇடித்துக்கொண்டிருந்தது. தாமதிக்க விரும்பவில்லை. தடுப்புச்சுவர் மேலே ஏறினேன். சென்னை இரவில் ரம்மியமாய் இருந்தது.முகத்தில் குளிர்ந்த காற்று மோதியது. ஒரு காலை தூக்கி...இதயம் படபடத்தது. கடவுளே வலிக்காமல் கூட்டிச்செல் என மனதிற்குள் நினைத்துக்கொண்டே தாவ தயாரானேன். 

"டேய்..அபஸ்வரம்..முதல்ல கீழ இறங்கு.."

குரல் பின்னாளில் இருந்து வந்தது. அதிர்ச்சியாய் திரும்பிப்பார்த்தேன். அவர் சிரித்தபடி  நின்று கொண்டிருந்தார். அவரே தான்.. சுஜாதா சார்..வகிடெடுத்து சீவிய தலை..டக் இன் பண்ணிய பேண்ட் சட்டை..கம்பீரமான கூன்.. 

இறங்கினேன். கண்ணிமைக்காமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். கும்பிட்டேன். மழை பெய்யத்தொடங்கியது.
                   ----------------முற்றும் ------------------------

கருத்துகள்