ஆரஞ்சுக்காவியம் -பகுதி 11

 




னக்கெல்லாம் வாழ்க்கை நல்லாப்போய்க்கொண்டிருந்தாலேயே நடக்க வாய்ப்பே இல்லாத நாலு நெகட்டிவ் சினாரியோவை நினைத்து கவலைப்பட்டுக் கொள்வேன். இந்த லட்சணத்தில் பேய் போல உடம்பெல்லாம் டாட்டூவும்.. ரத்த சிகப்பில் முடியை வைத்துக்கொண்டு..எதிர்காலத்திலிருந்து அரக்கன் போல வந்திருக்கும் லூக்காஸை  பார்த்து நான் பயப்படுவது  நியாயமானது தான். கிட்டத்தட்ட பார்ட்டியிலிருந்து  எல்லோரும் கிளம்பியிருந்தனர். ரெபெக்கா..யோரீஸ்..ஈவா ஜோடி மட்டும் தான் பாக்கியிருந்தனர். தல்பீர் சோபாவில் தலைகீழாய் படுத்துக்கிடந்தான். ஈவாவும் லூகாஸும்  ஒரே சேரில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். நானும் யோரீஸும் காலி கிளாஸ்களையும்..சிப்ஸ் பாக்கெட்டுகளையும் அள்ளி குப்பைக்கூடையில்  போட்டுக்கொண்டிருந்தோம். என்னைத்தவிர யாருக்கும் மணி பார்க்கிற யோக்கியதை கூட இல்லாமல் தடுமாறிக்கொண்டிருந்தனர். நான் அடிக்கடி ஈவாவை பார்ப்பதை கவனித்த யோரீஸ் "எப்பயுமே நம்ம தட்டுல இருக்குறப்போ அந்த சாப்பாட்டோட அருமை நமக்கு தெரியாது.." என்றான். ஈவாவிடம் நான் நோ சொன்னதில் யோரீஸுக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தது.

"ஆளே பார்க்க ஒரு தினுசா இருக்காப்ல..அதுனால தான் பாத்தேன்.."

"நல்ல பையன்பா..ரொம்ப படிச்சவன் போல..அவனும் ஈவாவும் பிசிக்ஸ் பத்தி பேசுனா மணிக்கணக்குல பேசுறாங்க.. அவனது டச்சும் இங்கிலீஷுமே வித்யாசமா இருக்கு.."

எனக்கு ஈவா சொன்ன லூக்காஸ் இவன் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. என் பயமெல்லாம் இந்த மலைமாடு என்ன திட்டத்துடன் வந்திருக்கிறது என்பது தான். கொஞ்ச நேரத்தில் யோரீஸின் மொபைலுக்கு ஒரு அழைப்பு வந்தது. எடுத்து பேசிவிட்டு அமைதியாய் தரையில் உட்கார்ந்தான். ரெபெக்கா சுதாரித்து பக்கத்தில் வந்து டச்சில் அவனிடம் எதுவோ பேசினாள். மொழி புரியவில்லையெனினும் ஏதோ துக்க நிகிழ்வு என புரிந்து கொள்ள முடிந்தது. ரெபெக்கா என் பக்கம் திரும்பி "ஓப்பா ஜோ.. இறந்து விட்டார்" என்றாள். "ஓ..சாரி" என்றேன். அதாவது யோரீஸின் தாத்தாவாகிய ஜோனதன் இறைவனடி சேர்ந்திருக்கிறார். எனக்கு உண்மையில் அவ்வளவு சோகமாய் இல்லை. அவரை சிலமுறை தான் பார்த்திருக்கிறேன். எப்போது என்னை பார்த்தாலும் "ஒன்னுக்கு வர மாட்டிங்குது..நேத்து சாயங்காலம் போனது.." என்பார். இனி அந்த சங்கடமில்லை. யோரீஸும் ரெபெக்காவும் கிளம்பினார்கள். நான் ரெபெக்காவிடம் போய்ச்சேர்ந்தவுடன் போன் செய்யுமாறு கூறினேன். தலையாட்டியபடி கிளம்பினாள். கதவை அடைத்து விட்டு திரும்பியதும் எனக்கு லேசாய் உலுக்கிப்போட்டது. லூக்காஸ் எழுந்து உட்கார்ந்திருந்தான்.

கைகள் ரெண்டும் தேக்கு போல இருந்தது. ஆங்காங்கே வயர் போவது போல நரம்புகள் தெரிந்தன.அவன் போட்டிருந்த பச்சை நிற டீ ஷர்ட்டுக்குள் காற்றுப்புக வாய்ப்பில்லை. கண்கள் லேசான சிகப்பில் இருந்தன. என்னை சினேகமாய் பார்த்தான். எனக்கு இருந்தும் பயம் அதிகமானது. ஜுராஸிக் பார்க்கில் டைனோசரிடம்  தனியாய் மாட்டிக்கொள்ளும் சின்னக்குழந்தை போல முழித்துக்கொண்டிருந்தேன்.

"எங்க ஊர்ல எல்லாம் வயசானவங்கள பாக்கவே  முடியாது.. "

நான் எதுவும் சொல்லாமல் அவனை பார்த்துக்கொண்டே இருந்தேன். பாக்கெட்டிலிருந்து ஒரு சின்ன பாட்டிலை எடுத்தான். அதிலிருந்த திரவத்தை ஒரு விரலில் எடுத்து தோளில் இருக்கும் டாட்டூவில் வைத்தான். லேசாய் புகை வந்தது. கண்ணை மூடிக்கொண்டு மூச்சை இழுத்தான். இந்த போதைப்பேய் எந்தக்காலத்திலும் மனிதனை விடப்போவதில்லை. இப்போது நெட்டிமுறித்து எழுந்தான். அவனைப்பார்க்க அவெஞ்சர்ஸ் பட தானோஸ் போல இருந்தது. திரும்பவும் பேச ஆரம்பித்தான். முதலில் ஜெர்மனில் எதுவோ பேசிவிட்டு நிப்பாட்டி ஆங்கிலத்தில் தொடர்ந்தான். ஆங்கிலத்தையும் ஜெர்மன் மொழி  போலவே பேசினான்.கவனித்து புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. 

"அறுபது வயசுல எல்லாரையும் கொன்றுவாங்க..அரசாங்க கொலை. பூமி தாங்கலையாம்..ஆக்சிஜன் பற்றாக்குறையாம்..மருந்து.. சாப்பாடு..எதுவும் போதவில்லையாம்... அறுபதாவது பிறந்த நாள் முடிஞ்சவுடனே வீட்ல எல்லாருக்கும் டாட்டா சொல்லிட்டு  ஹெல்த் சென்டருக்கு போக வேண்டியது தான்..ஒரே ஊசி ..அவ்வளவு தான்..தேவன்..பிதா.. பரிசுத்த ஆவி..."

அவன் சிலுவை போடுவது போல நெஞ்சில் செய்து கொண்டான். நான் அவனையே சலனமில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். "ஏன்..ஈவா உங்க கிட்ட சொல்லலையா.." என்றான். எனக்கு அதிர்ச்சியேதுமில்லை. ஈவாவின் கணினியில் என்னைப்பற்றிய குறிப்புகள் கிடைத்திருக்கும். அவன் பார்வையே அதை உறுதி செய்தது. இந்த சில வினாடிகளில் அவனிடம் பேசுவதற்கு தைரியம் வந்திருந்தது.

"என்ன செய்ய உத்தேசம் லூக்காஸ்..மரம் கிரம் நட்டு வைக்கலாம்னு வந்தீங்களா.."

"இல்ல வேரூண்ட வந்திருக்கிறேன்.."

அவன் எதையும் மறைத்து பேசுவது போல தெரியவில்லை. அவனிடம்  ஒரு தெளிவான திட்டம் இருக்க வேண்டும். கொஞ்சம் என் பக்கத்தில் வந்தான். பக்கத்தில் படுத்திருந்த ஈவாவுக்கு கேட்காமல் இருக்க வேண்டும் என நினைத்திருக்கலாம்.

"லூகாஸ்..காலங்களுக்கு நடுவே பயணித்தல் மிகப்பெரிய விளைவுகள கொடுக்கலாம்னு உனக்கு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.. நிறைய உயிர்..."

"ஸ்டாப் தேர்..அப்பிடியே விட்டுட்டா மட்டும் பூமி செழிச்சிருமா..கொத்து கொத்தா செத்தாச்சு...மழை...மகரந்த சேர்க்கை..நீர் ஊற்று.. பூக்கள்.. பழங்கள்..மாசில்லா காற்று.. என எல்லாத்தையும்  திரையில் மட்டுமே பார்த்திட்டு இருக்கோம்...நீங்க டைனோசர பாக்குற மாதிரி .."

"அதுக்கு .."

"ம்ம்...ஆட்சி ..அதிகாரம்  வேணும் ..எல்லாத்தையும் இப்போயிருந்தே ஒழுங்கு செய்யனும்...ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி அதன் கீழ் மொத்த உலகையும் கொண்டு வர வேண்டும்..அதற்கு நிறைய பணம் வேண்டும் ..நிறைய தியாகங்கள் செய்ய வேண்டும் ..மானஸ்வி ..மயிருனு சுயநலமா சுத்தக்கூடாது..என்ன ...இந்த மாற்றங்களை இங்கே செய்தால் அங்கே பல பேர் மாண்டு போவார்கள்..போகட்டும் ..இப்போது மட்டும் அங்கே யாரும் நிம்மதியாய் வாழ்ந்துவிடவில்லை .."

மூச்சு வாங்கினான். இப்போது அவனை பார்க்க சீமானின் ஐரோப்பிய பதிப்பு போல தெரிந்தான். கண்களில் நேர்மை தெரிந்தாலும் இவன் என்ன செய்ய நினைக்கிறான் என பயமாகத்தான் இருந்தது. "ஏற்கனவே பாழாய்ப்போன சூழலை..இங்கே சரி செய்வதால் என்ன பயன்.." என்றேன்.

"ம்ம்ம்... அதே புராணம் தான்... நேரம் தட்டையானதில்லை..இங்கே செய்யும் மாற்றம் அங்கேயும் பாதிப்புகளை கொடுக்கும்..ஒரு வேளை மீண்டும் ஜீவநதிகள் உருவாகலாம்.. பச்சையான காடுகள் தென்படலாம்..காற்று சண்டையில்லாமல் கிடைக்கலாம்.."

அதுவரை அசுரன் போலத்தெரிந்தவன் இப்போது நல்லவனாய் தெரிந்தான்.அவனது நோக்கம் நல்லது தான், அதன் வழிமுறை ஆபத்தானது. கொஞ்சம் எனக்குள்ளிருக்கும் சமுத்திரக்கனியை உசுப்பி இவனிடம் பேசினால் இவன் திருந்தி விட நல்ல வாய்ப்பிருக்கிறது என தோன்றியது. அதற்குள் அவன் செய்தி சேனல் நேர்காணல் போல என்னை பேச விடாமல் அவனே பேசினான்.

"என்ன ...பணம் ...அதானே..எல்லா மாற்றத்திற்கும் முதல் தேவை .. அடுத்த முப்பது வருடங்களிலே என்ன கண்டுபிடிப்புகள் வரப்போதுனு உங்களுக்கு தெரியாது ..எனக்குத்தெரியும்...நீங்களெல்லம் நினைத்தே பார்க்க முடியாத நிகழ்வுகள் ..உதாரணமா  உடம்புல இருக்குற மொத்த கேன்சர் செல்லையும் புதுப்பித்து எந்த வகை கேன்சரையும் விரட்டும் சி-டியூப் மெஷின்... 

இன்னைக்கு உங்களுக்கு மின்சாரத்துல எவ்வளவு ட்ரான்ஸ்மிசன் லாஸ் இருக்கு ..40 சதவீதம்..அதாவது 100 கிலோவால்டுக்கு நாப்பது கிலோவால்ட் சேதாரம் ..பெராக்ஸ்னு உலோகம் கண்டுபிடிச்சிருக்கோம் ... அதை  மின்கடத்தியாய் உபயோகித்தால் ...லெஸ் தேன் ஒன் பெர்ஸன்ட் லாஸ்  தான்..."

அவன் கைகளை மேலும் கீழும் ஆட்டி புரட்சிக்காரன் போல பேசிக்கொண்டிருந்தான். நிறைய மேடைகளில் பேசியிருக்க வேண்டும். எனக்கு ஏதோ குடுகுடுப்பைக்காரன் தலைக்குள்ளேயே இறங்கி உடுக்கை அடிப்பது போல இருந்தது. 

"இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..அத்தனை கண்டுபிடிப்புகளுக்கும்    டிசைன் ..ப்ரோட்டோ-டைப்  எல்லாமே என்கிட்ட இருக்கு ..ஒரு கார்ப்பரேட் நிறுவனம் உருவாக்கலாம் ..இதை வைத்து  ஆயிரம் கோடிகள் ..லட்சம் கோடிகள் ..ம்ஹீம் அதற்கும் மேலே சம்பாதிக்கலாம்..பின் ஆட்சிகளை உருவாக்கலாம்..பூமியை நாம் விரும்பிய படி சுத்தலாம் ..என் தாத்தா சொல்வது போல எல்லாப்புரட்சிக்காரனின் ஆயுதத்தையும் எதிராளியே தீர்மானிக்கிறான்.. ஏன் ஒரு நோயை வேண்டுமென்றே பரப்பி  அதற்கு மருந்து .."


அவன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அவனுடைய கழுத்தில் நீண்ட ஊசி போல ஒன்று விசுக்கென குத்தியது.மயங்கி முட்டிங்கால் போட்டு ஒரு பக்கமாய் கீழே விழுந்தான். சீனியர் ஈவா நின்றுகொண்டிருந்தாள். வேகமாய்  நடந்து வந்து அவனை ஒரு முறை பார்த்தாள். என்னிடம் திரும்பி "இன்னும் ரெண்டு நாளைக்கு எழுந்திருக்க மாட்டான் ..அதுக்குள்ளே இவன் பண்ண கிறுக்கத்தனத்த எல்லாம் அழிக்கனும் " .அவள் அவனின் சட்டை..பேண்ட் பாக்கெட்டுகளை தேடினாள். அவன் தங்கியிருக்கும் ஓட்டல் அறையின் சாவி கிடைத்தது. அவள் ஒரு முறை ஜூனியர் ஈவா பக்கத்தில் தூங்குவதை பார்த்தாள். என்னிடம் திரும்பி  "இவள எதுவும் பண்ணுனானா??"

நான் கொஞ்சம் யோசித்து "முத்தம்.." னு சொல்லத்தொடங்கயிலேயே அவனைப்போய் கன்னத்தில் அறைந்தாள்."வயசுக்கு மரியாதையில்ல.. ராஸ்கல்.." என சொல்லிக்கொண்டே விடாமல் அடித்தாள். நான் அவளை தடுத்து நிப்பாட்டி "ஏங்க..கொடுத்தது நீங்கங்க.." என்றேன். என்னை முறைத்து விட்டு "இவனைத்தூக்கிக்கொண்டு...நாம அவன் ரூமுக்கு போகனும் ...வண்டி ஏதும் இருக்கா.." . 

கொஞ்ச நேரத்தில் ரெபெக்காவின் காரில் ஏறி கிளம்பினோம்.

------------------------------------------------------------------------------------------------------------------------

அடுத்த ரெண்டு நாட்கள் ஈவா தூங்கவேயில்லை. லூகாஸின் ரூமில் கிடைத்த துப்புக்களை வைத்துக்கொண்டு அவன் தொடர்பு கொண்டவர்களையெல்லாம் கண்டுபிடித்தாள்.எல்லாமே ஆரம்பகட்டத்தில் இருந்தது. ஒரு லேப்பை வாடகைக்கு எடுக்க முயற்சி செய்திருக்கிறான். ஒரு பார்மா கம்பெனியிடம் பேசியிருக்கிறான். சி.சி.டி.வி புண்ணியத்தில் அவன் கொண்டு வந்த ஃபைல்கள் ஒரு பெரிய சாக்குப்பையில் வைத்து கேரேஜில் பதுக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தோம். ஈவா என்னைக்கூட அதை திறக்க விடவில்லை. 

சில நேரங்களில் நமக்கான நல்ல விஷயங்கள் நமக்கே தெரியாமல் நமக்கு பின்னால் நடந்து கொண்டிருக்கும். இதே காலகட்டத்தில் சைமன் ,மானஸ்வியிடம்  பேசிவிட்டிருக்கிறான். கதறி அழுதிருக்கிறான்.அவளுக்கு கவலையை விட அதிர்ச்சியே மேலோங்கி இருந்திருக்கிறது. பியூஸிடம் போய் மானாவாரியாய் கேள்வி கேட்டிருக்கிறாள். பிறகு வீட்டுக்கெல்லாம் பேசி ஒரே நாளில் நிச்சியம் நிறுத்தப்பட்டிருக்கிறது.நியாயப்படி நான் நடந்த சம்பவங்களுக்கு சினிமா ஹீரோக்கள் போல ரோட்டில் குத்தாட்டம் போட வேண்டும் ஆனால் ஈவா உலக நலன்..அது இதுவென கூறி என்னை இந்த சி.ஐ.டி வேலைகளில் ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறாள். தவிர மானஸ்வியிருக்கும் மனநிலையில் அவளிடம் பேசுவது நல்லதல்ல. அவளுக்கு நேரம் தேவை.

அன்று சனிக்கிழமை. ரூமில் தூங்கிக்கொண்டிருந்தேன். மதிய வேளை.தல்பீர் வந்து கட்டிலில் மிதித்தான்.

"சிவா..எந்திரியா..அவ கல்யாணம் முடிவாயிருந்தப்பவே ஹட்ச் டாக் மாதிரி பின்னாடி சுத்துவ..இப்ப தான் நின்றுச்சே..போயி அவ கிட்ட பேசுயா.. அதெல்லாம் டாப் பிகரு..டிமாண்ட் அதிகம்..விட்டா உங்க ரோஹன் கூட ட்ரை பண்ணுவாரு "

 சிரித்தேன். "விடுறா..பாவம் கொஞ்சம் ஹீல் ஆவட்டும்..டைம் போகட்டும் "

 "அதுக்குள்ள அவய்ங்க வீட்ல சீமந்தமே முடிச்சிருவாங்க.வெறித்தனமா மாப்ள பாக்குறாங்களாம்..பிரியா சொல்லுச்சு"

அதற்குள் ரூம் பெல் அடித்தது. "ஜி..நீங்க போய் திறங்க.. நான் பேண்ட் போட்டுக்கிறேன்" என நைட் பேண்ட் எடுக்க ரூமிற்குள் போனான்.அவன் பாக்ஸரில் இருந்தான். போய்க்கதவை திறந்தேன். மானஸ்வியும் பிரியாவும் நின்று கொண்டிருந்தார்கள்.மானஸ்வி..என் மானஸ்வி... தலை முடியை மெனெக்கடாமல்  சுருட்டி கிளிப் வைத்திருந்தாள். கண்களில் எதுவும் பெரிய சோகம் தெரியவில்லை. ஒரு ப்ளூ ஜீன்சும் வெள்ளைக்கலர் சட்டை போட்டிருந்தாள்.

"ஜி..விருந்தாளிகள வாசல்லயே வச்சி  வெறிச்சு பார்த்தா ஓடிருவாங்க.. கொஞ்சம் வழிய விடுங்க.உள்ள வந்தப்புறம் பாத்துக்கலாம்.."  பிரியா ஓரத்தில் இருந்து கத்தினாள். மானஸ்வி லேசாய் சிரித்தாள்.


 மனிதர்களின்  மனநிலையை தெரிந்து கொள்ள இதுபோன்ற மொக்கை ஜோக்குகள் அவசியம். மனசிற்குள் "வெல்டன்..பிரியா குரங்கு.." என  சொல்லிக்கொண்டேன். இருவரும் உள்ளே வந்தார்கள்.பிரியா கையில் ஒயின் பாட்டில் வைத்திருந்தாள். தல்பீர் ரூமிலிருந்து வந்து இருவரையும் வரவேற்றான்.

"என்ன பிரியா.. முழு நேர குடிகாரியா மாறிட்டியா..விட்டா நீயே காச்சி குடிச்சிருவ போலயே .."

"டேய் மாடு..இவ ரூம்ல போர் அடிக்குதுன்னா..அதான் இங்க கூட்டிட்டு வந்தேன்..ஒரு படம்..டின்னர்னு கொஞ்சம் ஜாலியா டைம் பாஸ் ஆகும்னு கூட்டிட்டு வந்தேன்.."

பிரியா பிறந்ததிலிலிருந்து செய்த ஒரே நல்ல காரியம் இதுவாகத்தான்  இருக்கும். தல்பீர் என்னைக்காட்டி "அய்யயோ..எங்காளு குடிக்க மாட்டாரே..அவரு ஆன்மீகக்கடல்ல முத்தெடுக்க முங்கியிருக்காரே.." என்றான்.

மானஸ்வி என் பக்கம் திரும்பி "ப்ளீஸ்..சிவா..எனக்காக" என்றாள் . கண்ணையும் மூக்கையும் குறுக்கி கெஞ்சுவது போல செய்தாள். அதற்கு பின்னும் நான் குடிக்கவில்லையென்றால் என் சந்ததியினர் என்னை மதிக்க மாட்டார்கள்.

                                                                                                         ---அடுத்த பகுதியில் முற்றும் 

 

கருத்துகள்