ஞாயிறு, 9 மே, 2021

ஆரஞ்சுக்காவியம் -பகுதி 12(இறுதிப்பகுதி)

                               
மு
தலில் சீட்டு விளையாடுவதாய் தீர்மானமானது. அதன் பின் ஒரு படம்.பிறகு சமையல், சாப்பாடு என நிகழ்ச்சி நிரல் செட்டானது.
 ஒரு டேபிளை போட்டு அதில் பெட்சீட்டை விரித்து களத்தை தயார் செய்து கொண்டிருந்தேன். மானஸ்வி ரூமையே அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போது தான் கவனித்தேன். ஏதோ ஐ.டீ ரைட் நடந்த இடம் போல ரூமே கொடூரமாய் காட்சியளித்துக்கொண்டிருந்தது. ஆங்காங்கே சீரிய இடைவெளியில் ஜட்டி,சாக்ஸுகள்..துண்டு..சிகரெட் அட்டை..பெல்ட் என கிடந்தது. மானஸ்வி தன் போனை எடுக்க ஜன்னல் பக்கம் நடந்தாள். நடக்கையில் ஏதோ குப்பை கூளத்தில் நடப்பது போல காலை பார்த்து பார்த்து வைத்து நடந்தாள். என்னிடம் திரும்பி "சிவா..ரூம் எப்பயும் இப்படித்தா இருக்குமா" என்றாள்.

"சே..சே.. இன்னைக்கு காலைல கொஞ்சம் க்ளீன் பண்ணோம்..மத்த நாளுல இவ்வளவு சுத்தமாலாம் இருக்காது.." என்றேன்.

என்னையே ஒரு மாதிரி பார்த்தாள்.மிகவும் அந்தரங்கமாய் இருந்தது. ஹாலில் நானும் அவளும் மட்டுமே இருந்தோம். இத்துனூண்டு கண் அது எத்தனை விதமான உணர்வுகளை கடத்துகிறது.பிரியாவும் தல்பீரும் ஸ்நாக்ஸ் எடுக்க கிச்சன் போனவர்கள் வெகு நேரமாகியும் வரவில்லை. கிச்சனுக்குள் நுழைந்தேன். இருவரும் பிரிட்ஜுக்குள் இருந்த கேக்கையும்..சாக்லேட்டையும் எடுத்தபடி பேசிக்கொண்டிருந்தார்கள்.

"தல்லு..அவங்க வீட்ல இருந்து கூப்பிடுறாங்க.. போனை எடுக்க மாட்டிங்குறா..."எப்படி எல்லாத்தையும் மறச்சிட்டு எங்கிட்ட பேசுனான்"னு மட்டும் ஒரு தடவ கேட்டா..அதத்தவிர வேற எதுவும் அத பத்தி பேசல.." 

"கரெக்டான இடத்துக்கு தான் கூட்டிட்டு வந்திருக்க..இங்க சோக டிகிரில டாக்டரேட் பண்ணவரு ஒருத்தர் இருக்காரு.. அவருகிட்ட பேசுச்சுனா அதுக்கு அந்த சோகமே தேவலாம்னு ஓடிரும்.."

அவன் நான் வந்ததை இன்னும் பார்க்கவில்லை. என்ன தான் பேசுகிறார்கள் கேட்போம் என விட்டு விட்டேன்.சர்தாரை சாவகாசமாய் அப்புறம் மிதித்துக்கொள்ளலாம். பிரியா தொடர்ந்தாள்.

" இல்லடா..அவளுக்கு என்ன உள்ள ஓடுதோ யாருக்கு தெரியும்..எவ்ரி ஒன் க்ரீவ்ஸ் இன் தெயர் ஓன் வே..அவ அடிக்கடி உங்கள பத்தி தான் பேசிட்டு இருப்பா..சிவா அத சொன்னான்..இத சொன்னான்னு சிரிச்சிட்டு இருப்பா..அதான் இங்க கூட்டிட்டு வந்தேன்.."

என்னை பார்த்தவுடன் பிரியா பேசுவதை நிறுத்தினாள். அவதாரில் வரும் பண்டோராவாசிகள் போல பெண்களுக்குள்  ஒரு நெட்ஒர்க் இருக்கிறது. அவர்களை அவர்களாலேயே அதிகபட்சம் புரிந்து கொள்ள முடியும்.ஆண்கள் எவ்வளவு முக்கினாலும் அது நடந்தேறாது.பிரியாவுக்கு கல்யாணமாகி சில வாரங்கள் தான் ஆகியிருந்தது.திரும்பவும் சென்னைக்கு சில வாரங்களில் திரும்பப்போகிறாள்.அவளது சொந்த சங்கடங்களையெல்லாம் விட்டுவிட்டு மானஸ்விக்கு உதவுவது சந்தோசமாய் இருந்தது.தேவயானி போல அவள் காலுக்கு பக்கத்தில் எதையாவது போட்டுவிட்டு எடுப்பது போல   தொட்டுக்கும்பிட வேண்டும் போலதோன்றியது.  

"சரி வாங்க போலாம்..லெட்ஸ் மேக் திஸ் எ மெமரபில் டே.." 

தல்பீர் என்பக்கத்தில் வந்து தாழ்ந்த குரலில்  "யோவ்..உங்..காதலுக்கு உன்ன விட அக்கா தான்  தீவிரமா உழைக்குது..உனக்கு பொண்ணு பொறந்துச்சுனா அக்கா பேர வை.."

"டேய் எரும எனக்கு கேக்குது..மெதுவா சொல்லு"  என பிரியா சொன்னாள்.

அச்சச்சோ என்பது போல தல்பீர் தலையில் கை வைத்தான். அவள் ரொம்பவும் சாதாரணமாய் சிரித்துக்கொண்டே நடந்தாள்.அவளுக்கு எல்லாமுமே தெரிந்திருக்கிறது.. எதையும் காட்டிக்கொள்ளவில்லை. ஒரு நொடியில் அவள் திரும்பவும் பின்னால் வந்து எங்களிடம் "என்னோட ஆக்சுவல் நேம் வினோதினி..வீட்ல எல்லாரும் அப்பிடித்தான் கூப்பிடுவாங்க..ஹோப் தட் ஹெல்ப்ஸ்" என சொன்னாள். நான் எச்சிலை விழுங்கிக்கொண்டேன்.

ஒரு மணிநேரம் சீட்டு விளையாடினோம். சிரித்து சிரித்து கதைகள் பேசினோம்.  தான் பனிரெண்டாவது படிக்கையில் காதலித்த போது ரத்தத்தில் கடிதம் எழுதிய கதையை தல்பீர் சொல்லிக்கொண்டிருந்தான். நான் நிறைய முறை கேட்டிருக்கிறேன். இருந்தும் என்னாலேயே சில இடங்களில் சிரிப்பை அடக்க முடியாது. குறிப்பாய் அவன் ரத்தம் பத்தாமல்..வலியையும் தாங்க முடியாமல்..அவர்கள் பண்ணையின் கோழி தொடையை கீறி அதில் ரத்தம் எடுத்ததாய் சொல்லும் போது...அடிவயிற்றிலிருந்து சிரிப்பு வரும். பிரியாவும் மானஸ்வியும் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். மானஸ்வி என்னை இடையிடையே கூர்மையாய் பார்த்துக்கொண்டிருந்தாள். என்ன தான் போய்ச்சேருமிடம் தெரியமென்றாலும் எந்த பக்கம் மேடு வரும்..வளைவு வரும்..என்கிற பதட்டம் எனக்கிருந்தது.

எல்லோரும் சாப்பிட உட்காருகையில் மானஸ்வி என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்."எங்க படிச்சீங்க..சேலம் சென்னையிலேர்ந்து எவ்வளவு தூரம்..அப்பா என்னா செய்றாங்க.."  போன்றவையெல்லாம்   கேட்டுக்கொண்டிருந்தாள். தல்பீர் அவளிடம் "ஏங்க எங்கிட்ட..அவரு ஜாதக ஜெராக்ஸ் இருக்கு.. வேணுமா" என்றான். அவள் லேசாய் வெட்கப்பட்டாள். எனக்கு வானத்திலிருந்து யாரோ பூப்போடுவது போல இருந்தது. கொஞ்ச நேரத்தில் பாத்திரங்களை கழுவுவதாய் பிரியா கிச்சனுக்குள் போனாள். நாகரீகம் தெரிந்த நண்பர் தல்பீரும் அத்தெய்வீக பணியில் இணைந்து கொண்டார். மானஸ்வி ரூமை சுத்தம் செய்ய வேக்கம் க்ளீனரை எடுத்துக்கொண்டு உள்ளே போனாள். நானும் உள்ளே போய் கீழே கிடந்த புத்தகங்களை ஒதுங்க வைத்தேன்.கொஞ்ச நேரம் கழித்து என் பக்கத்தில் வந்தாள்.

"ஸீ..உங்களுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கும்.நான் பெரிய காயத்திலிருந்து குணமாக முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.என்னால இப்போயிருக்கிற மனநிலையில எதன் மேலயும் பெரிய நம்பிக்கை வைக்க முடில..உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்..ஆமா தான்..இதுவரை பாவம்னு நான் மனசுக்குள்  பதுக்கிவச்ச விஷயம்லாம் நேர்மையா மேலோங்குது..லெட் அஸ் கிவ் சம் டைம்..எப்பிடி போகுதுனு பாக்கலாம்.."

"காத்திருக்கிறேன் .."


அவள் இந்த முறை மிகக்காதலுடன் பார்த்தாள். திடீரென போனில் மெசேஜ் வந்திருந்தது. தல்பீர் அனுப்பியிருந்தான். எடுத்துப்பார்த்தேன். "யோவ்..அந்த மொக்க கவிதைய மட்டும் சொல்லிறாத..எல்லாம்  நல்லாப்போயிட்டுருக்கு..."
அப்போது தான் எனக்கு அதைச்சொன்னாலென்னவென்று தோன்றியது. தல்பீருக்கு தெரியாது அதை எழுதியது நானில்லையென்பது.அவள் இன்னமும் என்னை பார்த்த படி நின்றிருந்தாள்.புருவத்தை உயர்த்தி என்ன என்பது போல கேட்டாள். நான் அவள் கண்களை பார்த்தபடி சொல்லத்தொடங்கினேன்.

                       தூக்கமில்லா என் இரவுகளில் 

                                                மெல்லிசைப்பாடல் நீ 

                      வெளிச்சமில்லா அத்தருணங்களின் 

                                                    விட்டில் பூச்சி நீ...

                       என் சிரிப்பின் சாவியை உன் 

                                                 உதட்டில் வைத்திருக்கிறாய்

                         நீ அருகில் இருக்கையில் மொத்த  

                                        உலகமும் வீணாய்த் தெரிகிறதேன்..


அவள் கண்கள் கலங்கியிருந்தது. இது அவளுக்கும் பிடிக்கவில்லையென்றால் வேறு யாருக்குத்தான் பிடிக்கும். மெதுவாய் என் பக்கத்தில் வந்து தோளில் சாய்ந்து கொண்டாள். நமக்கு பிரியமானவர்கள் அன்பாய் தோளில் சாய்வதைப்போல வேறு சுகமான தருணம் உண்டா.

---------------------------------------------------------------------------------------------------------------------------- 

வா மீண்டும் அந்த ஜெல்லை எடுத்து முகத்தில் போட்டுக்கொண்டாள். அவளுக்கு வியர்த்திருந்தது. பார்சல் வாங்கி வந்திருந்த ரொஸ்டேட் ஸ்டீக்கை அவளிடம் கொடுத்தேன். "நாங்..காலம் விட்டு காலம் வந்ததுல ஒரே பிரயோஜனம் இது தான்.." என சிரித்துக்கொண்டே வாங்கினாள். லூகாஸை ஒரு மரச்சேரில் கெட்டிப்போட்டிருந்தோம். அவன் உருவாக்கிய கால எந்திரம் முதல் எல்லாமுமே கைப்பற்ற பட்டுவிட்டது. கிட்டத்தட்ட செய்து முடிக்கப்படவேண்டிய அனைத்தும் முடிந்திருந்தது. அவனை மயக்கமூட்டி மீண்டும் அழைத்துச்செல்வது தான் பாக்கி. இவனை இன்னொருமுறை தூக்கவேண்டுமாவென நினைத்த போதே மலைப்பாய் இருந்தது.

"ஏங்க.. இவன் அங்க போய் உளறிட்டா உங்களுக்கு பிரச்சனை இல்லையா.."

"அதுக்கும் பிளான் பண்ணிட்டேன்.. அலெக்ஸ்க்கு எங்க கம்பெனி ஷேர் கொடுத்துட்டேன்..முடிஞ்சிரும்..செலெக்ட்டிவ் மெமரி க்ளீன் அப்.."  

நான் அவளை முறைப்பது போல பார்த்தேன். அவளுக்கு புரிந்து லேசாய் சிரித்து "ஓ சாரி " என்றாள் 
    
"சிவ்..எங்கிருக்கேன்னு சில நேரம் மறந்திருது..சொல்றேன்..உனக்கு புரியற மாதிரி சொல்லனும்னா..அதாவது மூளையில எல்லா தகவல்களும் ஒரு ஷெல்ப்ல புக் அடுக்குன மாதிரி இருக்கும்..தேவைப்படுறப்போ நியூரான்கள் மூலமா எல்லாத்தகவல்களையும் எடுத்துக்குவோம்..உதாரணமா என்னை நீ பார்த்தோனே..நியோகார்டெக்ஸ்..ஹிப்போகேம்பஸ் பகுதிகளோடு  உதவியோட நியூரான் என்னைப்பற்றிய தகவல்களை தூக்கிட்டு வருது..அதுனால தான் உன்னால என்னையும்..நம்ம பழைய உரையாடல்களையும் நினைவு கூற முடியுது.. இப்படிகோடிக்கணக்கான தகவல்கள் மூளையின் முடிச்சுக்களில் உள்ள  கோடிக்கணக்கான செல்களில் பதிஞ்சிருக்கு..ஸ்.ம்.சி ல என்ன பண்ணுவாங்கன்னா..உனக்கு ஊசி போட்டுட்டு என்னை பற்றி பேசுவார்கள்..உன் மூளையின் எந்த பகுதியிலெல்லாம் என்னைப்பற்றிய தகவல்கள் ஸ்டோர் ஆகியிருக்குன்னு தெரிய வரும்...எல்லாமே ஒரே இடத்துல இருக்காது..விச் மேக் இட் காம்ப்ளெக்ஸ்.. எங்கெல்லாம் தகவல் இருக்குன்னு ஒரு ஆக்டிவ் செல் மேப் கணினி திரையில தெளிவா காண்பிக்கும்...அப்புறம் சில நேனோ குச்சிகளில் நியாமிக்ஸ் மாதிரி திரவங்களை வச்சி  அதை 
அழிச்சிருவாங்க..எட்டு மணி நேரம் கழிச்சு முழிச்சு பாக்கிறப்போ உனக்கு என்னை பத்தி எதுவுமே நியாபகம் இருக்காது.. "எனக்கு அதை விளக்கமாய் தெரிந்த கொள்ள பயமாயிருந்தது.எதிர்காலங்கள் நாம் நினைப்பது விட ஆச்சர்யங்களை உள்ளடக்கியிருக்கிறது.

"அப்போ இவனுக்கு அத பண்ணிவிட்டு வீட்ல விட்ருவீங்க..உங்க சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் மறந்திருவான்..அவன் பாட்டுக்கு காயடிச்ச மாடு மாதிரி அமைதியா போயிருவான்..இல்ல .."  

"எல்லாத்துக்கும் இத ஈஸியா பண்ணிட முடியாது..இப்போதைக்கு கிரிமினல்சுக்கும்..தாங்க முடியாத துக்கம் நடந்தவுங்களுக்கும் கோர்ட் அப்ரூவலோட மட்டும் பண்றாங்க ..ஸ்.ம்.சி சீஃப்  அலெக்ஸ் எனக்கு பழக்கம்..அதுனால தான் இல்லீகலா பண்ணப்போறேன்..இல்லேன்னா இந்த அனுமதி வாங்காத ஆராய்ச்சி..ஸீசியம் எல்லாத்துக்கும் எனக்கு தூக்கு தண்டனை தான்.."  

"சம்பந்தப்பட்ட எல்லாமே மறந்திருமா.." 

"எஸ்..லைக் இட் நெவர் ஹேப்பன்ட் .."

கொஞ்ச நேரம் நின்று கதைகள் பேசிக்கொண்டிருந்தோம். பிறகு இரவு வந்தவுடன் அவனை தூக்கிக்கொண்டு அந்த ஊசி மரக்காட்டை அடைந்தோம். அந்த இரவிலும் ஈவாவுக்கு இடம் பற்றிய குழப்பமில்லை.சரியாய் அந்த மரத்திற்கு கீழ் நின்றாள். மண்ணில் தோண்டி அந்த உருண்டை பந்தை எடுத்தாள். என் பக்கம் திரும்பி "இது தான் பைனல் குட் பை..இனி நா வர மாட்டேன்..வரவும் முடியாது..எல்லாத்தயும் அழிச்சிடுவேன்..இட் வாஸ் நைஸ் ஸ்பெண்டிங் டைம் வித் யூ..சாரி ஃபார்  தி மெஸ் " . சிநேகமாய் அவளை கட்டிக்கொண்டேன். எனக்கு நெற்றியில் முத்தம் கொடுத்தாள். 

கீழே கிடந்த லூகாஸ் "ஓப்பா..ஓப்பா" என புலம்பிக்கொண்டிருந்தான். மயக்கத்தில் கனவாய் இருக்கலாம். பல ஐரோப்பியர்கள் தாத்தாவை "ஓப்பா"வென கூப்பிடுவதை பார்த்திருக்கிறேன். போகும்போது ஈவா என்னை பார்த்தபடியே போனாள். கண்கள் கலங்கியிருந்தது. காலங்கள் கடந்த கவலை.

-------------------------------------------------------------------------------------------------------------------------

காதல்  என்பது இருவர் ஒன்று சேர்வது. கல்யாணம் என்பது பலபேர் ஒன்று சேர்வது போல நடிப்பது. வேறு வேறு பழக்க வழக்கங்கள் உள்ள இரு பிரிவினர்  கல்யாணம் செய்து கொள்வதென்பது கால இயந்திரம் கண்டுபிடிப்பதை விட கஷ்டமானது. அதுவும் சேலத்திலிருந்து சொந்தங்களையெல்லாம் ஓட்டிக்கொண்டு நாக்பூர் வரை வந்து திருமணம் செய்து முடித்ததற்கு எனக்கு நோபல் பரிசே கொடுத்தாலும் தகும். 

"தம்பி..மச்சா(ன்) மோதிரம் அவுங்கள மண்டபத்துக்குள்ள நுழையுறப்ப போடணும்னு சொல்லிரு.."

"சிவா பேட்டா..அப்பா அம்மா ஏன் பாரட்ல டான்ஸ் ஆடாம இருக்காங்க..எங்க சொந்தக்காரங்களெல்லாம் ஒரு மாதிரி பாக்குறாங்க.." 

"டே மாப்ள.. மறு வீட்டு விருந்துல அசைவம் இல்லேன்னா எப்படிடா ..ஊர்ல இருந்து அம்பலத்தார வேற கூட்டிட்டு வந்திருக்கோம்


இப்படி ஊர்ப்பட்ட பிரச்சனைகளை சமாளித்து மானஸ்வி கழுத்தில் தாலி கட்டினேன். நெருங்கிய சிலரைத்தவிர மற்றவரை அன்று இரவே ட்ரெயின் ஏற்றி விட்டு மானஸ்வியின் வீட்டுக்கு திரும்பினேன். இரவு பதினோரு மணி .  வீடு பெரியதாய் இருக்கும். ஹாலிலும்..வராண்டாவிலும்  நிறைய விருந்தினர்கள் தூங்கிகொண்டிருந்தார்கள்.மானஸ்வியின் அம்மா என்னை பார்த்தவுடன் கிச்சனிலிருந்து வந்து எதையோ கையில் மறைத்தபடி எடுத்து வந்து என் தலையை சுற்றினாள். தீட்டுக்கழிப்பதாய் சொன்னார்கள். பக்கத்திலிருந்த சில அத்தைகள் "வேகமா ரூம் போங்க மாப்ள.. தூங்கிறபோறா.." . தெம்பில்லாமல் சிரித்தேன்.

ரூமிற்குள் போனேன்.சினிமாவில் காட்டுவது போல கிளர்ச்சியாவெல்லாம் இல்லை. ரொம்ப அயற்சியாய் இருந்தது. மான்ஸ் பக்கத்தில் வந்து கட்டிக்கொண்டாள். எப்பேர்ப்பட்ட தருணம். ஆனால்  எனக்கு "சரிமா..கொஞ்சம் வழிவிடு உட்கார்ந்துக்குறேன்"  னு சொல்ல வேண்டும் போல இருந்தது. அமைதியாய் நகர்ந்து பெட்டில் உட்கார்ந்தேன்.அவள் மெரூன் மட்டும் வெள்ளை கலந்த ஒரு பட்டுச்சேலை கட்டியிருந்தாள். பக்கத்தில் வந்து தலையை கோதி விட்டு "தம்??" என்றாள். இதுவல்லவோ பொண்டாட்டி. "ச்சே ..என்கிட்ட இல்லையேம்மா..டிராலில இருக்கு.."  அவள் "ஸு " என வாயில் விரல் வைத்தபடி  சொல்லிவிட்டு ஜன்னலுக்கு மேலே இருந்த ஷெல்ப்பில்லிருந்து ஒரு கிங்ஸ் பாக்கெட்டை எடுத்து வந்தாள்.

"என்னம்மா இது நம்ம ப்ராண்ட் இல்லயே.."

"கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க மாப்பிள்ளை சார்" என என் வயிற்றில் கிள்ளினாள். ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து இழுத்தேன்.பக்கத்தில் வந்து சாய்ந்து கொண்டாள். சிகரெட்டை நீட்டினேன். அவளும் வாங்கி இழுத்தாள்.அவள் தன் போனில் எங்களை போட்டோ எடுத்தாள்.   பேசிக்கொண்டே இருந்தோம். முத்தம்..அணைப்பு..கலவி எல்லாத்தையும் விட பேச்சு தான் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான நெருக்கத்தை கூட்டுகிறது. நடந்தவையெல்லாம் ஒரு கனவு போல இருந்தது. நானும் அவளும் சேர வேண்டியது ஒரு இயற்கை நிகழ்வு. சூரிய கிரகணம்.. பௌர்ணமி.. அடைமழை..போல இதுவும் ஒன்று. எங்களைச்சுற்றி நடந்தவையெல்லாம் அதற்காகவே நடந்தன. நான் அவளை அந்த ஆரஞ்சு தேசத்தில் சந்திக்க வேண்டும் என்பதும் அந்த சங்கிலித்தொடரின் ஒரு நிகழ்வு தான். ஆரம்பத்திலிருந்து கடைசி வரை நடந்தவற்றை யோசித்து பார்த்தால் என்னளவில் எங்களின் கதை ஒரு காவியம் தான். யாரிடமும்..ஏன்.. கதாநாயகியிடமே சொல்ல முடியாத காவியம்.ஆரஞ்சுக்காவியம்.

-----------------------------------------------------------------------------------------------------

அந்தப்பெரியவர் கையில் வைத்திருந்த கூடையை கஷ்டப்பட்டு சுமந்து வந்தார். சத்தமாய் இருமுறை இருமினார். வூஹானின் ஈஸ்ட் லேக் பகுதி அமைதியாய் இருந்ததால் அது பலமுறை எதிரொலித்தது.கூடைக்குள் ஆப்பிள்..பீச்..அப்ரிகாட் பழங்கள் நிரம்பிக்கிடந்தன. அவர் கைகளில் ஸ்வஸ்ட்டிக் சிம்பல் டாட்டூ இருந்தது. அவருக்கு அந்த நேரம் ஒரு போன் வந்தது.


"ம்ம்..ஹென்றி லூகாஸ்.."

""

"இல்ல..சைனால இருக்கேன்..வர ஒரு வாரம் ஆகும்". போனை வைத்தார். ரெண்டு பக்கமும் திரும்பிப்பார்த்து உறுதி செய்து விட்டு..பாக்கெட்டிலிருந்த சிரஞ்சை எடுத்து பழங்களுக்குள் அந்த மருந்தை செலுத்தினார். மீண்டும் கூடையை எடுத்து ஓரமாய் வைத்து விட்டு மரத்தின் பின்னால் நின்று கொண்டார். வௌவால்கள் வரத்தொடங்கின. ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. அவைகள் கொத்தி கொத்தி அந்த பழங்ளை தின்றன.  அவர் சிரித்தபடி பார்த்துக்கொண்டிருந்தார். பின் முனங்குவது போல குனிந்தபடி சொன்னார் "எதிராளியே நம் ஆயுதத்தை தீர்மானிக்கிறான்"

                                                                                                           -----முற்றும்---------   

   

கருத்துகள் இல்லை: