சில சம்பவங்கள் : பகுதி 1


                         1. அரசு மருத்துவமனை 

 
                   


து கொரோனாவுக்கு முந்தைய காலம். மே மாத ஞாயிற்றுக்கிழமை. ஞாயிற்றுக்கிழமைகள் எவ்வளவு அழகானவை, திங்கட்கிழமைகளைப்போல சிடுமூஞ்சிகள் அல்ல அவை.எழுந்தவுடன் உடல் முழுக்க ஒரு சந்தோசம் பரவும். லேப்டாப்புகள் மூடப்பட்டு உலகம் திறக்கப்படும். நினைத்த நேரத்தில் காலைக்கடமைகளை முடிக்கலாம். போனில் நீட்டி முழக்கி பேசலாம். டீவியே கதியென கிடக்கலாம். அன்றைய ஞாயிறும் ரம்மியமாகவே  தொடங்கியது.ஆடா,கோழியா,மீனா என்கிற போட்டியில் கோழி  வென்றிருந்தது. வழக்கம்போல பையை தூக்கிக்கொண்டு கறிக்கடை நோக்கி பயணத்தைத்துவங்கினேன். லிஃப்ட்டில்  பயணப்பட்ட சக அபார்ட்மெண்ட்வாசிகளுடன் "டெம்பிளேட்" புன்னகையை பரிமாறிக்கொண்டு தரைத்தளம் அடைந்தேன். என் வண்டியை நோக்கி நடக்கும்போது தான் ஆம்புலன்ஸ் நிற்பதைக்கவனித்தேன். பொதுவாய் கறி வாங்க போகும் போது கடவுளே எதிரில் வந்தாலும் ஒரு "ஹாய்" சொல்லி விட்டு கண்டுகொள்ளாமல் போய்விடுவேன் . ஆனால் சற்குணம் சார் சோகத்துடன் ஆம்புலன்ஸ் முன் நின்றிருந்ததை பார்த்ததும் லேசாய் படபடப்பு வந்தது. அவரின் பக்கத்தில் போய் நின்றேன். ஒரு வயதான பெண்மணியை ஸ்ட்ரெக்ச்சரில் வைத்து குளுக்கோஸ் ட்ரிப்ஸ் சகிதம் ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.

சற்குணம் என்னைப்பார்த்து "பாட்டி சார்..திடீர்னு காலைல இருந்து நினைவில்லாம போயிட்டா" என்றார். சற்குணமே ஐம்பதை நெருங்கிக்கொண்டிருந்தார். அவர் பாட்டிக்கு எத்தனை வயதிருக்கும்னு நினைத்துப்பார்க்கும்போதே எனக்கு ரெண்டு முடி நரைத்து விட்டிருந்தது. அதற்குள் ஆம்புலன்ஸுக்குள் இருந்த பெண் "ஒருத்தர் தா(ன்) கூட இதுல வர முடியும்..மத்தவுங்க உங்க வண்டில வந்துருங்க " என்றார். பாட்டியின் மூத்த குமாரர் துளசி , கொஞ்சம் தடுமாறி கைப்பிடிகளின் உதவியுடன் ஆம்புலன்சில் ஏறிக்கொண்டார். துளசி ஐயா ஒரு ஒய்வுபெற்ற அரசுப்பதிவாளர். ஆம்புலன்ஸ் கிளம்பியது. நான் என் டூ வீலரில் , சற்குணம் சாருடன் ஆம்புலன்ஸை  பின்தொடர்ந்து போனேன்.பாட்டிக்கு  ஐந்து பிள்ளைகளாம். சற்குணத்தின் அம்மா தவிர மற்றவர்கள் எல்லாம் ஆண் பிள்ளைகள். சற்குணம் சார் வண்டியில் உட்கார்ந்து கொண்டு நிறைய பேருக்கு தகவல் சொல்லிக்கொண்டே வந்தார். 

"காலைல மெய்டு தான் பாத்துட்டு தொளசிய எழுப்பிருக்கா..க்ரோம்பேட்ட பார்வதி ஆஸ்ப்பிட்டலுக்கு போக சொல்லிருக்கேன்.. ஒபினியன் கேட்டுட்டு அடையார் மாத்தலாம் "

"இல்ல .. அழாத..நா பாத்துட்டு கூப்பிடுறேன்..நா பின்னாடியே தான் போறேன் "

ஆம்புலன்ஸ் குரோம்பேட்டை பார்வதி ஆஸ்பத்திரி பக்கம் திரும்பாமல் நேராய் போனது. நாங்கள் வண்டியை வேகமாய் தொடர முயலுகையில் நிறைய டூவீலர்கள்  ஆம்புலன்சிற்கு கிடைக்கும் பாதையில் வண்டியை முண்டிக்கொண்டு பின்தொடர்ந்தார்கள். வெறுப்பாய் இருந்தது. அவர்களையும் ,அவர்கள் அம்மாக்களையும் திட்டும் மனநிலையில் இல்லாததால் நான் அமைதியாய் பின்தொடர்ந்தேன். வண்டி தாம்பரம் அரசு மருத்துவமனைக்குள் நுழைந்தது. வண்டி நின்றதுமே ஒரு வார்டு பாய் உதவியுடன் ஸ்ட்ரெக்சரை இறக்கிக்கொண்டிருந்தார்கள். நானும் போய் உதவி செய்தேன். சற்குணம் பின்னால் மூச்சு வாங்க நடந்து வந்தார். அந்த ஆம்புலன்ஸ் செவிலி பெண்ணிடம் "பாப்பா..உங்கள பார்வதிக்கு தான போகச்சொன்னேன்.."  என்றார். அந்தப்பெண் ஸ்ட்ரெக்ச்சரை தள்ளிக்கொண்டே லேசாய் கண்களை குறுக்கி என்னை சைகை காட்டி பக்கத்தில் அழைத்தாள்.மற்ற நேரமென்றால் கிளர்ச்சியாகியிருப்பேன். சூழ்நிலை கருதி சீரியஸாய் பக்கத்தில் போனேன். "கொஞ்சம் டவுட்டா இருக்கு..டாக்டர பாக்கணும்..கூடவே வாங்க " என்றாள். இப்போது எனக்குள் சைரன் அடித்தது. ஸ்ட்ரெச்சரை  தள்ளிக்கொண்டே  மருத்துவமனையின் வலது மூலைக்கு போய்க்கொண்டிருந்தோம். 

துளசி அய்யாவும் ,சற்குணம் சாரும் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மூச்சு திணறியபடி நடந்து வந்து கொண்டிருந்தார்கள். பாட்டி அசைவில்லாமல் கிடந்தாள். அவசர சிகிச்சைப்பிரிவை அடைந்திருந்தோம். செவிலி அங்கிருந்த துப்புறவு பெண்ணிடம் "டூட்டி டாக்டர் யாருக்கா.." . அக்கா வலதுபுறம் இருந்த ஒரு அறையை காட்டி "ஆனந்தி மேடம்.." என்றார். ஆனந்தி மேடம் வெளியே வந்து எட்டிப்பார்த்தார். சாப்பிட்டுக்கொண்டிருந்த அவர் கையை கூட கழுவாமல் வெளியே வந்தார். விஷயத்தை யூகித்திருப்பார். " ஐ.சி.யூ உள்ள தள்ளிட்டு  போங்க.. பானுவும், சிஸ்டரும்  மட்டும் உள்ள போங்க..மத்தவுங்கள வெளில நிக்க சொல்லுங்க" .ஆம்புலன்ஸ் ஓட்டுனரும்  நானும்   வெளியே நின்று கொண்டோம்.  பெரியவர்கள் இருவரும் வந்து சேர்ந்தார்கள். துளசி அய்யாவை எதிர்த்தாப்பில் இருந்த சேரில் உட்காரவைத்தோம். கொஞ்சம் தண்ணி வாங்கிக்கொடுத்தோம். கலங்கிய கண்களுடன் என்னைப்பார்த்தார்.


"அப்டிலாம் போயிற மாட்டா..அயன் லேடி....ஃபர்ஸ்ட் எயிட் கொடுத்து,கான்சியஸ் வந்திட்டவுடன் பார்வதிக்கு கூட்டிட்டு போயிடுவோம்". தலையாட்டினேன்.

" போனவாரம் எந்திரிச்சி சுக்குக்காபி போட்டுத்தரேங்குறா.. 'சாதா இருமல் தாம்மா..சும்மாயிரு'ன்னாலும் கேக்கல ". அழத்தொடங்கினார். எத்தனை வயதானாலும்  கடவுளுக்கே என்றாலும் கூட அம்மாவை கொடுத்துவிட முடியுமா. நான் அவரின் தோளில் ஆறுதலாய் கை வைத்தேன். சற்குணமும் தன் கண்ணாடிக்குள் கைவிட்டு கண்ணீரைத் துடைத்தார்.  வீட்டின் பெரிய மூதாட்டி என்பவள் ஒரு வம்சத்தின் மனசாட்சி. கடந்த காலங்களை அந்த குடும்பத்திற்கு தேவைப்படும்போதெல்லாம் ஊட்டுவாள். காலத்தில் தான் பார்த்த அத்தனை சந்தோஷங்களையும் துக்கங்களையும் அசைபோட்டுக்கொண்டே முதுமையில் நீந்துவாள். அவளின் இல்லாமை மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கும். திடீரென ஒரு ஏரி காணாமல் போவது போல.  இந்த களேபரத்தில் அப்போது தான் ஒரு விஷயத்தை யோசித்தேன். நான் நினைத்தது போல அரசு மருத்துவமனை இல்லை. செவிலியர்கள் ஆங்காங்கே ஓடிக்கொண்டிருந்தார்கள். இடம் மிகச்சுத்தமாய் இருந்தது.  ஷங்கர் படங்களை போல இல்லாமல், சாப்பாட்டை பாதியில் விட்டுவிட்டு மருத்துவர் ஓடி வேலை செய்கிறார். 

சற்குணம் சாரை கூப்பிட்டு கையிலிருந்த பையை சுட்டிக்காட்டி "பத்திரம்' என்றேன். தலையாட்டினார். அதில் நிறைய பணம் இருந்தது. கொஞ்ச நேரத்தில் டாக்டர் வெளியே வந்தார். எனக்கென்னவோ அவரென்ன சொல்லப்போகிறார் என்று யூகிக்க முடிந்தது. 

"சாரி சார்...ஷி இஸ் நோ மோர்..ஒரு டென் மினிட்சுக்கு முன்னாடி போயிருப்பாங்கனு நினைக்குறேன். வரும்போதே ரெஸ்பாண்ட் பண்ணல"

துளசி அய்யா ஓங்கி அழத்தொடங்கினார். நானும் சற்குணம் சாரும் அவரை பக்கத்தில் போய் பிடித்துக்கொண்டோம். எனக்கும் கொஞ்சம் படபடவென இருந்தது. அவருக்கு உடல் வேர்த்திருந்தது. பக்கத்திலிருந்த லெட்ஜர் நோட்டை எடுத்து கொஞ்சம் விசிறிவிட்டோம். சற்குணம் போனில் எல்லாருக்கும் தகவல் சொல்லத்தொடங்கினார். டாக்டர் அவர் அறையிலிருந்து என்னை அழைத்தார். போனேன். ஒரு ஃபார்மை நீட்டினார்.

"சார் இதுல பெரியவர்கிட்ட கையெழுத்து வாங்கிக்குங்க..அப்புறம் பாட்டியோட அட்ரஸ் ப்ரூஃப்.. ஐடி ப்ரூஃப் எடுத்திட்டு வந்து லாபில இருக்கிற ஆபீஸ்ல கொடுத்தீங்கனா..ரெண்டு சீட் கொடுப்பாங்க...அதுல ஒன்னு ரோஸ் கலர் இன்னொன்னு மஞ்சக்கலர்..ரோஸ் கலர் சீட்ட நீங்க வச்சிக்கோங்க.." 

 ஒரு உயர் அரசு அதிகாரி இப்படி பதமாய் பேசுவது பேரதிர்ச்சியாய் இருந்தது. வெங்கடாசலபதியே இறங்கிவந்து தோளில்  கை வைத்து பக்தரிடம் "என்ன சுப்பு..சௌக்கியமா..போறப்போ எக்ஸ்டராவ ரெண்டு லட்டு வாங்கிட்டு போய் பக்கத்து வீட்டு மூர்த்திக்கும் கொடுத்திரு " என்று சொல்வது போல இருந்தது. 

"மஞ்ச ஷீட்ட வெளில கொடுத்தீங்கன்னா ஆம்புலன்ஸ் அரேஞ்ச் பண்ணிடுவாங்க..அந்த க்ரே ஆம்புலன்ஸ்.." . ஜன்னல் வழியே கையை நீட்டி வெளியே காட்டினார். ஒரு நவீன ஆம்புலன்ஸ் நின்று கொண்டிருந்தது.

"பாடிய க்ளீன் பண்ணி கொடுப்பாங்க..ஜுவெல்லம் செக் பண்ணி வாங்கிக்கோங்க" தலையாட்டினேன். அரசு ஆஸ்பத்திரியிலேயே  இறந்தால் , வீடு முப்பது கிலோமீட்டர் தூரத்துக்குள் இருந்தால்  க்ரே ஆம்புலன்சில் இலவசமாய் வீட்டில் ஒப்படைப்பார்களாம். எனக்கு குழப்பமாய் இருந்தது. ஒரு அரைமணி நேரத்தில் அலுவலக வேலையெல்லாம் முடித்தோம் . சொன்னது போல கலர் கலராய் படிவங்கள் கொடுத்தார்கள். எதையெல்லாம் வைத்து இறப்புச்சான்றிதழ் எப்போது வாங்கலாம் என விளக்கினார்கள். அதற்குள் நிறைய உறவினர்கள் வந்துவிட்டிருந்தார்கள். சற்குணம் சார் காலையில் சாப்பிடாததால் சோர்வாய் இருந்தார். பாட்டியை வண்டியில் ஏற்றுவதற்குள் டீ வாங்கிக்கொடுத்துவிடுவோம் என வெளியே கூட்டி வந்தேன். ரெண்டு பேரும் டீ குடித்தோம்."கிண்டில இருந்து ஹெல்ப்புக்கு ரிலேடிவ் பையன் வந்திட்டு இருக்கான்.. அவன பேசாம வரவேனான்னு சொல்லிருவோமா..எல்லாம் தான்  முடிஞ்சதே"

சரியென தலையாட்டினேன். அதற்குள் அந்த ரிலேட்டிவ் ஆட்டோவில் வந்து விட்டிருந்தார். அவருக்கும் ஐம்பது வயது இருக்கும்போல இருந்தது.கவனமாய் ஆட்டோவில் இருந்து இறங்கி மெதுவாய் நடந்து ஆஸ்பத்திரிக்குள் போனார். சற்குணம் சார் "வேலு" வென கத்தியது அவருக்கு கேட்கவில்லை.

"ஏன் சார்.. உங்க குடும்பத்துல பிறக்கும்போதே எல்லாருக்கும் நாப்பது வயசாகிருமா" . சத்தம் வராமல் சிரித்தார். என் பக்கத்தில் மெதுவான குரலில் " சார் ..உள்ள யாருக்கும்  நீங்கேதும் காசு கொடுத்தீங்களா" என்றார். உதட்டைப் பிதுக்கி "இல்லை" என்றேன். 

கொஞ்ச நேரத்தில் பாட்டியை வண்டியில் ஏற்றி அந்த சாம்பல் நிற அமரர் ஊர்தி கிளம்பியது. கடைசி வரை ஒரு பைசா கூட செலவாகவில்லை. யாரும் லஞ்சம் கேட்கவில்லை. முகம் சுழிக்க வில்லை. நாங்களும் எல்லாருக்கும்  நன்றி சொல்லிவிட்டு கிளம்பினோம். வண்டியில் சற்குணம் சார் பின்னாலிருந்த படி "இது உண்மையிலேயே அரசு ஆஸ்பத்திரி தானா" என்றார். நான் "வேறேதும் நாட்டு அரசோட ஆஸ்பத்திரியா  இருக்குமோ " என்றேன். தோளில் தட்டி சிரித்தார். அது ஒரு சோகமான நாளாகினும் புது நம்பிக்கையை கொடுத்தது. பணமில்லாமலும்  இந்த உலகத்தில் நிம்மதியாய்  வாழவும்,சாகவும் முடியுமென்று எண்ணிக்கொண்டேன்.  நாம் வெட்டியாய் சமூகவலைத்தளங்களில் குறை சொல்லிக்கொண்டிருக்கையில், ஒரு கூட்டம் எந்த எதிர்பார்ப்புமின்றி தினந்தோறும் அறம் செய்துகொண்டிருக்கிறது.   
கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
மனதை தொட்டது மணிரத்னம் படம் போல்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Very Nice da ur comic sense as always cool, specjllay I loved these lines, பாட்டி சார்..திடீர்னு காலைல இருந்து நினைவில்லாம போயிட்டா" என்றார். சற்குணமே ஐம்பதை நெருங்கிக்கொண்டிருந்தார். அவர் பாட்டிக்கு எத்தனை வயதிருக்கும்னு நினைத்துப்பார்க்கும்போதே எனக்கு ரெண்டு முடி நரைத்து விட்டிருந்தது☺️☺️Keep it up!!!