சில சம்பவங்கள் : பகுதி 2

 

                                             மெமரீஸ் 

நான் கொஞ்சம் குரலை உயர்த்தி  "ப்ளீஸ் நிறுத்துங்க ..." என்று கத்திய பிறகு தான் வண்டியை நிப்பாட்டினான்.  "என்ன பிரச்சனை"  என்பது போல சலீம் அதிர்ச்சியாய்  என்னைப்பார்த்தான். நான் காரின் பின்சீட்டில்  தலையில் கையை வைத்து உட்கார்த்திருந்தேன். எனது உடல் முழுவதும் நடுங்கிக்கொண்டிருந்தது. வெளியில் பெய்யும் பனிமழைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. இது பயத்தில் நடுங்கும் நடுக்கம்.  டிரைவர் சீட்டின் மேலே இருக்கும் கண்ணாடியை சரி செய்து அது வழியே  என்னைப்பார்த்து "என்னாச்சுங்க..தலை வலியா "  என்றான். வண்டியை ஓரங்கட்டி நிப்பாட்டினான்.

"என்னோட ஷோல்டர் பேக் கார்ல ஏத்தல..ட்ரன்க்க திறங்க.. செக் பண்ணனும்"

" சர்ஜி.. அதுல எதுவும் எக்ஸ்பென்சிவ்வா இருந்துச்சா"

உண்மையில் அதில்தான் எல்லாமுமே இருந்தது. ஒரு மனிதன் வெளிநாட்டில் வந்து எதையெல்லாம் தொலைத்து விடக்கூடாதோ அதெல்லாமும் அந்தப்பையில் இருந்தது. என்னுடைய பாஸ்போர்ட், சான்றிதழ்கள், பணப்பை , லேப்டாப் மற்றும் சில முக்கிய கோப்புகள். பாக்கெட்டில் இருந்த நூறு ஈரோவைத்தவிர அனைத்தையும் அந்தப்பையில் தான் வைத்திருந்தேன். சமீர், காரின் ட்ரங்க்கை திறந்தான். ரெண்டு குண்டு டிராலிகள் மட்டும்  இருந்தது. "எங்களை வச்சு நீ என்ன பண்ணப்போற..மெய்ன் பீச விட்டுட்டியே" என்று அவைகள் சிரிப்பது போல இருந்தது. சமீருக்கு விஷயம் புரிந்தது. "வண்டில ஏறுங்க..திரும்பவும் ரயில்வே ஸ்டேஷன் போய் பாக்கலாம்" என்று கூறி வண்டியில் ஏறினான். நானும் எதுவும் சொல்லாமல் மந்திரிச்சு விட்ட கோழி போல வண்டியில் ஏறினேன். 

மணி இரவு பதினொன்றை தாண்டியிருந்தது. என்ஸ்கடேவின் தெருக்கள் வெறிச்சோடிக்கிடந்தது.  மிக மெதுவாய் வெள்ளை மழை போல பனி பெய்து, ரோடு, மரங்கள், தெருவிளக்குகள் எல்லாவற்றின் மீதும் வெள்ளை பூசிக்கொண்டிருந்தது. இது நெதர்லாந்தின் கடைக்கோடி ஊர். இங்கே வந்து இறங்கி அரைமணிநேரத்தில் ஒரு திகில் அனுபவத்தில் தள்ளப்பட்டிருக்கிறேன்.

"ஜி..உங்க பேரு "

"சிவராஜ்"

"இந்தியாவா "

"ம்ம் "

"அந்த பேக்க  ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து வெளில வரும்போது கைல வச்சிருந்தீங்களா... யாருன்னா உங்க கூட பேச்சு கொடுத்தாங்களா.."

இது போன்ற சூழ்நிலையில்,  கூட இருப்பவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வதென்பது அந்த பொருளைத் தொலைத்ததை விட அதிக வலியைக்கொடுக்கும். திரும்பவும் ரயில்வே ஸ்டேஷன் வந்திருந்தோம். கிட்டத்தட்ட காலியாக இருந்தது. என் மண்டைக்குள் கடைசி ரெண்டு மூன்று மணி நேரத்தில் நடந்ததெல்லாம்  "ஹைலைட்ஸ்" ஓடியது. அதில் கூட அந்த பேக் சம்பந்தப் பட்டவை  ரப்பர் வைத்து அழிக்கப்பட்டிருக்கிறது.  எல்லா இடத்திலும் தேடினோம் . நான் நின்று தண்ணீர் குடித்த இடம், காருக்காக காத்திருந்த இடம்,தலையை சொரிந்த இடம்..ம்ஹீம் எதிலும் இல்லை. நெதர்லாந்து மண்ணில் கால் வைத்து நாலு மணி நேரம் தான் ஆகிறது. தற்சமயம் "நான் இன்னார்" என நிரூபிக்க என்னிடம் எந்த ஆவணமும் இல்லை. என்னை நினைத்தால் எனக்கே பரிதாபமாய் இருந்தது. இந்த பாவ உடலை விட்டு தப்பித்து எங்கேயாவது ஓடி விட வேண்டுமென்பது போல இதயம் கன்னாபின்னாவென துடித்துக்கொண்டிருந்தது. இதெல்லாம் பத்தாதென நினைத்த விதி, அந்த கணத்தில்  இன்னொரு டீ ஸ்பூன் காரத்தை சேர்த்தது.

இரண்டு போலீஸ்காரர்கள் வாக்கி டாக்கி ,துப்பாக்கி சகிதம் எங்களை நோக்கி வந்தார்கள். எனக்கு அவ்வளவு பதட்டம் இல்லை. நீச்சல் தெரியாதவனுக்கு அம்பது அடி ஆழமோ, நூறடி ஆழமோ  எல்லாம் ஒன்று தான். சமீர் தான் பயந்து போனான். அந்த மாதத்தில் தான் பாரீஸ் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு நடந்திருந்தது. ஐரோப்பா முழுவதுமே ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தார்கள்.

"ஜென்டில்மென்..கைகளை மேலே தெரியும் படி தூக்கி ..சுவற்றை நோக்கி திரும்பி நில்லுங்கள்..நகராதீர்கள்.."


போலீஸ் இருவரும் ஆறடியில் மல்லுயுத்த வீரர்கள் போல இருந்தார்கள். நானும் சமீரும் அவர்கள் சொன்னதை செய்தோம். சமீர் கொஞ்சம் தெளிவான பவ்யமான குரலில் "ஆபிசர்.. நா கேப் ட்ரைவர்..என்னோட கஸ்டமர் அவரு ..பேக்க மிஸ் பண்ணிட்டேன்னு சொன்னாரு.. அதா(ன்)தேடிட்டு இருந்தோம்.." .  அதில் ஒரு போலீஸ்கார் சமீரின் முகத்திற்கு பக்கத்தில் வந்து "உஸ்ஸ்ஸ்" என்றார். அமைதியானான். எங்களை பரிசோதித்தார்கள். பிற்பாடு ரயில் நிலையத்தில் இருந்த ஒரு அறைக்கு கூப்பிட்டு போனார்கள். சமீரை பார்க்க சங்கடமாய் இருந்தது. எனக்கும் அவனுக்கும் வெறும் அரைமணிநேர சகவாசம் தான். அதுக்கே அல்லல் படுகிறான்.நான் நடந்தவற்றையெல்லாம் ஆங்கிலத்தில் அவர்கள் முன் கொட்டினேன். அதில் ஒருவர் என்னை ஆழமாய் பார்த்தார். திரும்பவும் பேசத்தொடங்கினார். எல்லா டச்சுக்காரர் களையும் போலவே இலக்கணத்தை துறந்த ஆங்கிலம் பேசினார். 

' இந்தியால இருந்து இன்னைக்கு நைட் ஏழு மணிக்கு ஆம்ஸ்டெர்டாம் வந்தீங்க.. அங்கிருந்து ட்ரெயின் ஏறி என்ஸ்கடே வந்தீங்க..அப்புறம் கேப்ல ஏறி ஹோட்டல் கிளம்புனீங்க..திடீர்னு தான் பேக் காணோம்னு தோணிருக்கு '

நானும் சமீரும் கோரஸாய் தலையாட்டினோம். " ஒரு வேல பேக் இங்க இருக்குமோனு திரும்பவும் ஸ்டேஷன் வந்து தேடிருக்கிறீங்க..". திரும்பவும் தலையாட்டல். அவர் நாங்கள் சொல்வதையெல்லாம் போனில் யாருக்கோ டச்சில் சொல்லிக்கொண்டிருந்தார். இரண்டு பேரும் எழுந்து போய் தனியே பேசிக்கொண்டார்கள். என்னிடம் வந்து என்னுடைய பாஸ்போர்ட் நம்பரையும்..நான் வந்த பயண டிக்கெட்டயும் கேட்டார்கள். கொடுத்தேன். 

"ஆம்ஸ்டெர்டாம் ஏர்போர்ட் அத்தாரிட்ட பேசிட்டு வர்றோம்..உண்மை பேசுனா பயப்படத்  தேவையில்லை..ஒரு அரை மணி நேரம் இங்க வெயிட் பண்ண வேண்டி வரும்..அந்த மெஷின்ல காஃபி குடிக்கணும்னா குடிச்சிக்கோங்க... "  ஒரு ஓரத்தில் இருந்த காஃபி மெஷினை கை காட்டிவிட்டு வெளியே போனார். கொஞ்ச நேரம் நானும் சமீரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. எழுந்து போய் காஃபி எடுத்துக்கொண்டு வந்தேன். சமீர் என்னைப்பார்த்து "கொஞ்சம் கவனமா இருந்திருக்கனும் நீங்க.."என்றான். இதே வார்த்தையை முப்பத்திரெண்டு வருடமாய் எத்தனை குரல்களில்  கேட்டிருக்கிறேன். இப்போது ஒரு ஆப்கானி கேப்  டிரைவரிடம் கேட்கிறேன். நாடு விட்டு நாடு வந்து பிழைத்துக்கொண்டிருப்பவனின்  அன்றாடத்தில் வந்து குழப்பம் விளைவித்து கொண்டிருக்கிறேன். எல்லோருக்கும் சொல்வதையே அவனுக்கும் சொன்னேன் "சாரி "  . அவன் எதுவும் சொல்லவில்லை. சுடச்சுட காஃபி வயிற்றுக்குள் இறங்கியது. உடல் கொஞ்சம் இலகுவானது. மூச்சை இழுத்து விட்டேன். நடந்தவற்றை நூறாவது முறையாக மனதிற்குள் ஓடவிட்டேன். இந்த முறை காட்சிகள்  பதட்டமில்லாமல்  ஓடியது..

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

                                                    இரவு  7.40 மணி 

ஆம்ஸ்டர்டாம் ஏர்ப்போட்டில் இருந்து இரண்டு பெரிய டிராலிகள், கையில் ஒரு ட்ராவல் பேக் , தோளில் ஒரு கருப்பு பேக் சகிதம் வெளியே வருகிறேன். ஆம் அந்த பேக் இப்போது தோளில் தான் இருக்கிறது.  அத்தனை உருப்படிகளையும் வைத்துக்கொண்டு மெட்ரோ ஸ்டேஷன் நோக்கி நடக்கிறேன். டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்கிறேன். எனக்குப்பின்னால் ஒரு வயதான ஆண் நிற்கிறார். அவரை எந்த கோணத்தில் பார்த்தாலும் திருடராய் தெரியவில்லை. டிக்கெட் கவுண்டரை அடைந்தேன். ஒரு பெண் கம்பியூட்டர் முன் அமர்ந்திருந்தாள்.

"என்ஸ்கடே டிக்கெட் வேணும் "

"முப்பது ஒன்பது ஈரோ..கார்ட் ஆர் கேஷ் ?"

அவள் புருவங்கள் அடர்த்தியாய் இருந்தன.கண்களின் கருவிழி நீல விழியாய் இருந்தது. லிப்ஸ்டிக் போட்டிருந்தாளா இல்லையா என சொல்வது கடினம். வலது கையில் ஒரு விரலில் மோதிரம் அணிந்திருக்கிறாள். நிச்சயம் திருமணமானவள். இவையெல்லாம் தேவையில்லாத தகவல்கள். எடிட்டில் தூக்கியிருக்க வேண்டும். கதைக்குள் புகு.

"கார்ட் "

"வேகமா கொடுங்க..ட்ரைனுக்கு பத்து நிமிஷம் தான் இருக்கு "

டிக்கெட்டை வாங்கிக்கொண்டு ஓடுகிறேன். வண்டி வந்தது. பல போராட்டங்களுக்கு பிறகு என் அனைத்து பொதிகளையும் ட்ரைனுக்குள் ஏற்றி நானும் ஏறிக்கொண்டேன்.இன்னமும் அந்த பாசக்கார பேக் என்  தோள்களை தழுவியிருக்கிறது.


                                           

                                                                   இரவு  09:00

ட்ரெயின் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது.  நான் கையில் வைத்திருந்த "Fault in our stars" நாவல் படித்துக்கொண்டிருந்தேன். இன்னும் சில மணி நேரத்தில் நடக்கவிருக்கும் கிரக பலன்கள் தெரியாமல் சந்தோசமாய் இருக்கிறேன். எதிரில் இருப்பவர்கள் நெட்டி முறிப்பதும் , எழுந்து நடப்பதுமாக இருந்தார்கள். மிக முக்கியமாய் அந்த பிரசித்தி பெற்ற பேக் என் இடது பக்கம் இன்னமும் இருக்கிறது. அது அழகாய் ஒரு நாய்க்குட்டி போல என்  மேல் சாய்ந்திருக்கிறது.

 ஒரு நிறுத்தத்தில் சிலர் இறங்கினார்கள். ஒரு பெரியவர் தன் மனைவியுடன் எங்கள் பெட்டியில் ஏறினார்.என்னைப்பார்த்து லேசாய் சிரித்தார்.

"நீங்க ஆசியனா"

"ஆமா..இந்தியன் "

"ஓ..வெரி நைஸ் கன்றி அண்ட்  பீப்பிள்..என்னோட கசின் ரெண்டு முறை டெல்லி போயிருக்கிறான்.." 

"அப்பிடியா நல்லது "

"தாஜ்மஹால் பார்த்திருப்பீங்களே  ..எப்பிடி இருக்கும்  அந்த உலக அதிசயம்?"

'ஒரே ஒட்டக வீச்சம். போற வழியெல்லாம் குப்பை,சாக்கடை,ஏமாத்துக்காரர்கள். சம்மர்ல போனா அடிக்கிற வெயிலுக்கும் அந்த சூழலுக்கும்  காதல் மேலேயே ஒரு வெறுப்பு வந்திரும்'னு சொல்ல நினைத்து தேச நலன் கருதி "நல்லாருக்கும்"மென முடித்துக்கொண்டேன்.


                                                   இரவு 09:30

ட்ரைன் என்ஸ்கடேவை அடைந்திருந்தது. அது தான் கடைசி ஸ்டேஷன். எல்லோருமே இறங்கினார்கள். நானும் இறங்கும் உத்வேகத்தில் இருந்தேன். இந்தியாவில் அப்போது இரண்டரை மணி ஆகிக்கொண்டிருந்திருக்கும். எனக்கு தூக்கம் கண்ணை கட்டிக்கொண்டிருந்தது. என்னுடைய தோளில் பேக்கை போட்டுக்கொண்டு மற்ற லக்கேஜுகளை எடுத்துக்கொண்டிருந்தேன். தோளில் இருக்கும் பை, புடைப்பாய் இருப்பதால் இறங்கிக்கொண்டிருப்பவர்கள் மேலே இடிக்கிறது. சிலர் முறைக்கிறார்கள். சிலர் முனங்கிவிட்டு செல்கிறார்கள். அந்த பெரியவர்  இறங்கும்முன் "நீங்க  அந்தப்பையை கீழே வச்சிட்டு..உங்க லக்கேஜையெல்லாம் எடுங்க..அது பெட்டர் ". அவசரமாய் பையை சீட்டில் வைத்து விட்டு எல்லாவற்றையும் எடுக்கிறேன். பின்னால் ஒருத்தர் தள்ளுகிறார். அப்பிடியே நடக்கத்தொடங்குகிறேன். ட்ரெயினில் இருந்து இறங்குகிறேன். நடக்கத்தொடங்குகிறேன். பை அனாதையாய் பயத்துடன் அந்த சீட்டில் உட்கார்ந்திருக்கிறது.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் காபி குடித்து முடிப்பதற்கும் ,போலீஸ்காரர்கள் உள்ளே வருவதற்கும் சரியாய் இருந்தது.

"நீங்க இந்தியன் எம்பசிக்கு ஒரு .."

அவர்களை பேசவிடாமல் நான் பேசினேன்.

"சார். என் பேக் ட்ரெயின்ல  தான்  இருக்கு. நா வந்தது தான் கடைசி ட்ரெயின்..இது தான் கடைசி ஸ்டாப்..யாருகிட்டயாச்சும் சொல்லி ட்ரெயின்ல செக் பண்ண முடியுமா..இப்போ உடனே பண்ண முடியுமா "

அவர் என்னை போய் பெஞ்சில்  உட்காரச்சொன்னார். திரும்பவும்  யாருக்கோ போன் பண்ணி டச்சில் பேசினார்.ஒரு அரைமணிநேர காத்திருப்பிற்கு பின் சில போலீஸ்காரர்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்கள் கையில் என்னுடைய அழகு பெத்த பேக் இருந்தது. போன உயிர் எனக்கு இன்ஸ்டால்மென்ட்டில்  வந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் உள்ளிருந்த ஆவணங்களை சரிபார்த்து , சில கையெழுத்துக்களை வாங்கிக்கொண்டு என் உயிரினும் மேலான பையை என்னிடம் ஒப்படைத்தார்கள். வாங்கிக்கொண்டேன். போலீஸ்காரர் வெறுப்பாய் என்னைப்பார்த்து  "கொஞ்சம் பொறுப்போட இருக்கப்பாருங்க..எவனாவது இவ்வளவு முக்கியமான விஷயங்கள விட்டிட்டு போவானா..ட்ரெயின் அரைமணிநேரத்துல ஆம்ஸ்டெர்டாம் போயிருக்கும்..நீங்க வாரக்கணக்கா அலைய வேண்டி இருந்திருக்கும் "

முகம் சோகமாய் மாறிக்கொண்டது . "சாரி சார்..ஐ ல் பி கேர்ப்ஃபுள்..தேங்க்ஸ் எ லாட் ".  இனிமே இந்த யோகா கீகா செஞ்சாவுது இந்த ஞாபக மறதியை ஒழிச்சிக்கட்டணும்னு மனதிற்குள் எண்ணிக்கொண்டேன். காரை நோக்கி நடந்தோம். கார் வரை சமீர் எதுவும் பேசவில்லை. நான் பேக்குடன் பூனை போல அமைதியாய் பின்னால்  உட்கார்ந்து கொண்டேன். சமீருக்கு ஒரு போன் வந்தது. எடுத்துப்பேசினான். "ஓகே..ஓகே " என்று மட்டும் சொல்லிவிட்டு போனை வைத்தான். கொஞ்ச நேரத்தில் அவன் தலையில் அவனே அடித்துக்கொண்டான். நான் பதறிப்போனேன்.

"ஏம்ப்பா..என்னாச்சு"

திரும்பி  என்னைப்பார்த்து  "நீங்க உங்க போனை அந்த ரூம்லயே  வச்சிட்டு வந்திட்டிங்களாம்..போய் எடுத்துக்க சொல்லி அந்த ஆபிசர் கால் பண்ணாரு

  கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Climax Super da, i loved it 😊😊nammala yaaralayum thirutha mudiyaathu ☺️
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Very nice👌👌