சில சம்பவங்கள் : பகுதி 3

                                     தியாக தீபம்  திலீபன் 
எல்லாக்காலத்திலேயும் விசித்திரமானது இந்த இலக்கிய உலகம். இலக்கியவாதிகள் கனவுலகில் இருந்து வந்த ஸ்லீப்பர் செல்கள்.  சமையல் எரிவாயு விலை கூடிவிட்டதென ஊரே அரசுகளைத் திட்டிக்கொண்டிருந்தால், எதையாவது படித்துவிட்டு ,இவர்கள் எங்கோ ரஷ்யக்கல்லறையில் உறங்கிக்கிகொண்டிருக்கும் "டால்ஸ்டாய்"க்கு அறைக்கூவல் விட்டுக்கொண்டிருப்பார்கள். அடுத்தவேளை சோறு உறுதி செய்யப்படாத நேரத்திலும் அத்தனை ஆனந்தமாய் சுற்றுவார்கள். ஒரு புத்தகமும், மரத்தடியும் கிடைத்தால் போதும் இந்த பாழாய்ப் போன உலகத்தில் இருந்து, "போர்டிங் பாஸ்" இல்லாமலே கனவுலகில் பறக்கத் துடங்கிவிடுவார்கள்.  அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தின் சகவாசம் எனக்கு 2008ம் ஆண்டின் புத்தக கண்காட்சியில் கிடைத்தது.

நான் ரொம்ப நேரம் யோசித்து விட்டு தி.ஜா வின் "மரப்பசு"வை கையில் எடுத்தேன். பில் போடுமிடத்தில் இருந்த பெரியவர் "மோகமுள் ஆச்சா"  என்றார். என் முகத்தை பார்க்கவில்லை. கேள்வியின் கோணத்தை புரிந்துகொண்டு "ஆங்..படிச்சிட்டேங்கைய்யா" என்றேன். பாக்கி ரூபாயும் ,பில்லையும் கையில் கொடுத்து விட்டு ஒரு விசிட்டிங் கார்டையும் கையில் கொடுத்தார். நான் வாங்கி வாசிக்கும் முன்பாகவே "சனிக்கிழமைகள்ல இலக்கிய கூட்டம் இங்க நடக்கும்..Do Come if you are free" என்றார்.  தட்டையாய் பார்த்தார். எந்த வித சலனமுமில்லை.  முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு "கல்யாணத்துக்கு வந்துருங்க" என பத்திரிக்கை நீட்டுவது போல இருந்தது. சரியென தலையாட்டிவிட்டு நடந்தேன். போகும்போது அவரை திரும்பிப்பார்த்தேன். அவரின் முகம் அந்த தாடிக்குள் ஒளிந்து கிடந்தது. நாய்க்குட்டியை தடவிக்கொடுப்பது போல தன் தாடியை தடவிக்கொண்டே இருந்தார். பின்னாளில் அவர் தான் எழுத்தாளர் விக்ரமாதித்தன் என அறிந்து கொண்டேன்.(சில வருடங்களுக்குப்பின் "நான் கடவுள்" படத்தில் நடித்தார்)


பெரும்பாலும் என்னுடைய எல்லா சனிக்கிழமைகளும் வேலையில்லாதவை என்பதால் அந்த இலக்கியக்கொட்டகைக்கு போகத்தொடங்கியிருந்தேன்.கே.கே நகரில் இருக்கும் ஒரு புத்தக கடையின் மொட்டை மாடியில் தான் அந்த கூட்டங்கள் நடக்கும். அதிகம் போனால் இருபது பேர் வருவார்கள். நான் நினைத்தது போல இல்லாமல் எல்லா வயதினரும் வந்துகொண்டிருந்தனர். ஒரு நாள் தாஸ்தோவாஸ்கியின் "வெண்ணிற இரவு" பற்றி பேசுவார்கள். முன்னறிவிப்பின்றி மாக்சிம் கார்க்கியின் "தாய்" யை சிலாகிப்பார்கள். உலக நாவல்கள் பற்றி பேசத்தொடங்கினால் கச்சேரி கேட்பது போல பல பச்சிகள் தலையாட்டி ரசித்து கேட்டுக்கொண்டிருப்பார்கள்.  பால்வாடி பையன் பன்னெண்டாம் வகுப்பு மேத்ஸ் க்ளாஸ் அட்டென்ட் செய்வது போல இருந்ததெனக்கு. கூட்டத்தில் கலந்து ஓரமாய் உட்கார்ந்து கொள்வேன். இப்படிக்கூட ஒரு நாவலையோ,சினிமாவையோ ரசித்து பார்க்க முடியுமா என்றிருக்கும். அவர்கள் சொன்ன அந்த கதைகளை என்னால் அதேயளவு ரசனையோடு படிக்க முடியவில்லை. "அவுங்க சொன்னதே இத விட நல்லாருந்துச்சு"  என்றிருக்கும். இந்தக்கூட்டங்களில் பெரும்பாலும் சண்டைகள் இல்லாமல் முடிந்ததில்லை. சில நேரங்களில் கை கலப்பில் கூட முடியும். அந்தச்சண்டைகள் மிகவும் சுவாரஸ்யமாய் இருக்கும்.  

"என்ன பெரிய ஜேன் ஆஸ்டின்..சாண்டில்யனோட கடல்புறா படிச்சிருக்கியா.. அவன விட Period Fiction எவன்டா எழுத முடியும்..  வெள்ளைக்காரய்ங்க  மோண்டா கூட உங்களுக்கு தீர்த்தம்.."

"அய்யா தேசப்பிதா..எங்கிட்ட சொன்னதையெல்லாம் போய் உங்க சுஜாதா,மணிரத்னம்,கமலஹாசன் கிட்ட சொல்லுங்க.. நீ சத்தியம் பண்ணி சொல்லு கணேஷ் வசந்த ஒரிஜினல்னு... இவனுங்க "Bourne Identity" நாவல சுட்டு வெற்றி விழா னு ஒரு படத்த எடுத்தத கூட மன்னிச்சிடுவேன்..ஆனா ஹாலிவுட்டுக்கு சவால் விடுகிற படைப்புனு பேசுறப்போ காண்டாகுமா..ஆகாதா"

இது போன்ற சண்டைகளில் உணர்ச்சி வசப்பட்டு  ஏதோவொரு கூட்டணியை ஆதரித்தோ எதிர்த்தோ பேசிவிடக்கூடாது. அப்படி பேசினால் வண்டி நம்ம பக்கம் திரும்பி விடும். அமைதியாய் இந்த சண்டைகளில் கேட்கும் முக்கிய வார்த்தைகளை குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். ஜேன் ஆஸ்டின், கடல் புறா, Bourne Identity  போன்றவைகள் பின்னாட்களில் புத்தக,திரைப்பட தேடல்களில் உதவக்கூடும். இந்தக்கூட்டங்களில் அதிகமாய் விக்கிரமாதித்தன் அய்யா உட்காரமாட்டார். தாடியை தடவிக்கொண்டே பேசுவதை குனிந்த படி கேட்டுக்கொண்டேயிருப்பார். திடீரென  எழுந்து கீழே போய்விடுவார். அப்படியொரு நாள் கூட்டத்தின் நடுவே அய்யா திடீரென குனிந்த அழுது கொண்டிருந்தார். சத்தம் கேட்காத படி அழுததால் பேசிக்கொண்டேயிருந்திருக்கிறார்கள். சுந்தரம் தான் கவனித்து சுட்டிக்காட்டினார். 
எல்லோரும் அமைதியாய் அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம். கொஞ்ச நேரத்தில் எழுந்து கீழே போய்விட்டார்.

சுந்தரம் எழுந்தார். இடது கையால் தன் கண்ணாடியை சரி செய்தார். உடைந்த குரலில் பேசினார். "நண்பர்களே..வீழ்ந்து விட்டோம்..முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாய் நம் உறவுகள் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.. திகில் செய்திகளை சுமந்த வண்ணம் வங்கக்காற்று இங்கே வந்து நித்தம் நம்மை பயம் கொள்ளச்செய்கிறது". அழுது விடுவார் போலிருந்தார். ஈழ யுத்தத்தின் கடைசி நாட்கள் அவை. இலங்கை அரசு மொத்த நிலத்தையும் சுற்றி வளைத்து ஷெல் மழை பொழிந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் அந்த மொட்டை மாடி கூட்டத்தில் அமைதி நிலவியது. எனக்குத்தெரியும் அது நீடிக்காதென்று. எதைப்பற்றி பேசவும் அவர்களுக்குத் தயக்கமே இருந்ததில்லை. சென்சிடிவ் விஷயங்கள் என்றென கடந்து செல்ல மாட்டார்கள். வெந்த புண்ணில் ஏறி உட்கார்ந்து விவாதம் செய்வார்கள். அப்படித்தான் அந்த பச்சை டீஷர்ட் ஆரம்பித்தார்.

"இத்தனை இழப்புகளுக்கும் என்னைப்பொறுத்தவரை புலிகளின் யுக்திகளும் ஒரு காரணம்..தற்கொலைப்படை தாக்குதல்கள் கொன்றது எதிரிகளை மட்டுமா..எத்தனை அப்பாவிகள் செத்தார்கள்.."

எல்லோரும் தங்களின் இருக்கைகளில் அமர்ந்துகொண்டே குரல் வந்த திசை நோக்கி பார்த்தோம். சுந்தரம் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டிருப்பது தெரிந்தது. ஆனால் அவருக்குத்தெரியும் இது "Just another day in that bloody terrace" . அது ஒரு கருத்துப்பெருவெளி. எக்கருத்தையும் களமாடலாம். பச்சை தொடர்ந்தார்.

"இங்க ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தாக்குதலில் செத்தது எத்தனை உயிர்கள். Fatal Injury எத்தனை பேருக்கு... புலிகள் செய்த மிகப்பெரிய ஸ்ட்ராட்டஜிக் ப்ளன்டர் அது..ஒரு கொலை மற்றொரு கொலையை  பிரசவித்தே தீரும்... "

மொட்டைமாடி கொஞ்சம் வெப்பமானது. சுந்தரம் கையை தூக்கி எழுந்தார். அவர் எப்போதும் காவி வேஷ்டி தான் அணிந்திருப்பார். என்ன வேலை செய்தார் என்பதெல்லாம் எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை. செருமிக்கொண்டு பேசத்தொடங்கினார்.

"தமிழரின் ஆதிப்பிரச்சினை இது தான். வரலாறு தெரியாமல் வாயாடுவது.."
வாலிபால் போல, சில நேரங்களில் எவ்வளவு வேகமாய் சர்வீஸ் போடுகிறோமோ அவ்வளவு வேகமாய் பந்து திரும்ப வரும். அதை பெர்சனலாய் எடுத்துக்கொள்ளக்கூடாதென்பது விதி. சுந்தரம் தொடர்ந்தார்.

"இலங்கையில்  நடந்த கருப்பு ஜூலை பற்றி கேள்வி பற்றிருப்பீர்கள்..ஒரு யுகத்தில்  நடக்கக்கூடாத அட்டூழியங்கள் இலங்கையில் அந்த ஒரு வாரத்தில் நடந்தது. கும்பல் கும்பலாய் வந்து தமிழர்களை சிங்கள அமைப்பை சேர்ந்தவர்கள் கொன்று குவித்தார்கள். இளைஞர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டார்கள். குங்குமம் அணிந்திருந்த பெண்கள் எல்லாம் சூறையாடப்பட்டார்கள். போலீஸாரெல்லாம் அரணாய் நின்றார்கள் சிங்களருக்கு. பிணங்களின் நடுவே புத்த பிட்சுக்கள் சிரித்தபடி நடந்தார்கள்.. இதையெல்லாம் நான் சொல்லவில்லை. நேரில் பார்த்த நார்வே டூரிஸ்ட் ஸ்கார்ஸ்டீன் சொல்கிறார். குஜராத் கலவரம் போல பத்து மடங்கு வன்முறை அது. பிணக்குவியல் மேலே எந்த உலக நியாயங்களும் எடுபடாது.  "

பச்சை உட்கார்ந்த படி பேசினார். "மறுக்கல சார்..அறவழிபோராட்டம் தானே நிரந்தர தீர்வாக இருக்க முடியும்.."

சுந்தரம் தீ பிளம்பானார். "மடையா..கிறுக்கா.." மாடி அதிரும்படி கத்தினார். ஏதாவது கெட்ட வார்த்தையில் திட்டுவாரென எதிர்பார்த்திருந்தேன். நடக்கவில்லை. சுந்தரம் முகமெல்லாம் வேர்த்திருந்தது. பக்கத்தில் இருந்தவர்கள் அவரை ஆசுவாசப்படுத்தி உட்கார வைத்தனர். தண்ணீர் குடித்தார். திரும்பவும் எழுந்தார். எல்லாரையும் பார்த்து கேட்டார் "எந்த மயிராண்டிக்காச்சும் திலீபன தெரியுமா...அப்பறமென்ன அறம்,அஹிம்சை "
எல்லோரும் அமைதியாய் அவரையே பார்த்தோம். அந்தப்பேரை சத்தியமாய் அதற்குமுன் நான் கேள்விப்பட்டதில்லை. அவர் கையிலிருந்த ஒரு புத்தகத்தை திருப்பி மாவீரன் திலீபனின் உருவத்தை எங்களுக்கு காட்டினார். கண்ணாடி போட்டுகொண்டு அந்த சரித்திர நாயகன் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தான். அவனைப்பற்றி எதுவுமே தெரியாமலே உடல் ஒரு மாதிரி சிலிர்த்தது.

"திலீபன் இருபத்து மூன்று வயதில் புலிகளின் அரசியல் பிரிவு தலைவரானார். ஈழப்போரில்  இந்திய தலையீடுகள் அதிகமிருந்த காலமது. அஹிம்சை தானே இந்தியா பேச நினைக்கும் மொழி. அதிலேயே பேசுகிறேன் என்று இறங்கினார்.  1987 செப்டெம்பர் 15ல் இந்தியாவிடம் ஐந்து கோரிக்கைகளை முன் வைத்து உண்ணாவிரதம் தொடங்கினார். அவைகள் மிகவும் எளிமையானவை மட்டுமல்ல நியாயமானவையும் கூட.  பொடா சட்டத்தில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை விடுவிக்க வேண்டுமென்பது பிரதானமானது. இந்த அரசியில் கோமாளிகள் செய்கிற உண்ணாவிரதமில்லையது, உரிமை மீட்கும் வெறி கொண்ட புலியின் உண்ணாவிரதம். அன்றைய தினம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர், உண்ணாவிரதம் நடந்த  நல்லூர் கந்தசாமி கோயிலில் கூடினார்கள்.  தாய்மார்கள் பயத்துடன் திலீபனுக்கு திருநீரிட்டு வாழ்த்தினார்கள்."

எனக்கு அந்த காட்சிகள் மனக்கண்ணில் படம் போல ஓடிக்கொண்டிருந்தது. காற்றின் மெல்லிய சத்தத்தை தவிர வேறேதும் சத்தம் அங்கே கேட்கவில்லை.

" மேதகுவிடம் கூட திலீபன் 'அண்ணா..நா எதோ மிரட்றதுக்காக இத செய்யல..கடேசி வர பின் வாங்க மாட்டேன்' என சொல்லித்தான் சென்றிருக்கிறார். இந்தியாவும் இலங்கையும் இந்த சம்பவங்களை பொருட்படுத்தவில்லை. காந்தி அதே மொழியில் பேசியபோது உற்று நோக்கிய உலகம், திலீபனை கண்டுகொள்ளவில்லை. நாட்கள் ஓடிக்கொண்டே இருந்தது. நீரைக்கூட தவிர்த்து திலீபன் காலனையும் கலங்க வைத்துக்கொண்டிருந்தான். உடல் உருகிபோய்க் கொண்டிருந்தான். அறம்,நீதி,அமைதி எல்லாமே திலீபனுடன் சேர்ந்து செத்துக்கொண்டிருந்தன."

"நாட்கள் போய்க்கொண்டே இருந்தன.யாருமே எதுவும் செய்யவில்லை. பத்தாவது நாளில் அபாயக்கட்டம் அடைந்தான் அந்த மாவீரன். அப்போதும் மருத்துவ உதவியை தவிர்த்தான். வேண்டாமென வீம்புகொண்டான். அவன் துப்பாக்கி முனையில் பேராசை கோரிக்கைகள் வைக்கவில்லை. அறத்தின் வழி நின்று சில நியாயங்களை கேட்டான். உலக நாடுகள் வேடிக்கை பார்த்தன. இது உலகின் வேறேதோ இனத்தில் நடந்திருந்தால் குறைந்த பட்சம் அதைப்பற்றிய பதிவாவது இருந்திருக்கும்."


"கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களின் முன்னிலையிலேயே திலீபன் செப்டம்பர் 26ல் இறைவனடி சேர்ந்தான் . இல்லை இறைவனானான். நல்லூர் உண்ணாவிரத திடலில் பெரிய மரண ஓலம் கேட்டது.  அவன் ஆயுதத்தால் வீழவில்லை அஹிம்சையால் வீழ்ந்தான். அஹிம்சையும் அறமும் ஈழத்தை காப்பாற்றவில்லை. வெறும் இருபத்து மூன்று வயதில் அத்தனை வைராக்கியத்துடன் உயிர் விட எவனுக்கு தைரியம் வரும். அவன் டாக்டருக்கு படித்துக்கொண்டிருந்தவன். நினைத்திருந்தால் "தானுண்டு தன் வேலையுண்டென" இருந்திருக்கலாம். இந்நேரம் ஏதோ ஒரு நாட்டில் பெரிய டாக்டராய் ,தன் குடும்பத்துடன்  வாழ்ந்திருக்க முடியும். அவனேன் இந்த இனத்திற்காக உயிர் நீத்தான்..இங்கே பாருங்கள் யாருக்குமே அவன் பெயர் நியாபகத்தில்  இல்லை. அவனுக்காக வைக்கப்பட்ட நினைவிடங்கள் இடிக்கப்பட்டுவிட்டன.  எந்தத்தாய் நிலம் தம் இனம் காக்குமென நினைத்தானோ அது இன்று இனச்சாவு நடக்கையில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது "

சுந்தரம் அமைதியாய் சாரில் உட்கார்ந்தார். பக்கத்துக்கு வீட்டு மாடியில் சில இளைஞர்கள் மஞ்சள் டீசர்டில் டி.வி முன் உட்கார்ந்து கொண்டு டி.வி  ஒலியை அதிகப்படுத்தினர். "எங்க தல தோனிக்கு பெரிய விசில அடிங்க.." என்ற சத்தம் விண்ணைப்பிளந்தது.கருத்துகள்