சில சம்பவங்கள் : பகுதி 4

                                         CHRONCILES OF AYYAMMA




தொண்ணூறுகளில் சைக்கிள் ஓட்டத்தெரிந்து  கொள்வதென்பது ஒரு கௌரவ மைல்கல். பாலகனிலிருந்து பருவத்திற்குள் பயணிக்கும் முதற்படிக்கட்டு. பல அடிகளையும், விழுப்புண்களையும் பெற்று ஒரு வழியாய் நான் என்னுடைய எட்டாவது வயதில் அந்த சிறப்பிற்குரிய வித்தையை கற்றிருந்தேன். வாடகை சைக்கிளை எடுத்து மணிக்கணக்கில் தேனியின் எல்லா சந்துகளையும் சுத்தத்துவங்கியிருந்தோம். ரெண்டு கைகளையும் விட்டு சைக்கிள் ஓட்டுகிற பையன்கள் எங்கள் உலகத்தில்  மிகப்பெரிய ஹீரோக்களாய் பார்க்கப்பட்டனர்.  "முக்கா ரூவா" கொடுத்தால் லட்சுமி சைக்கிள் கடையில் ஒரு மணி நேரத்துக்கு வாடகை சைக்கிள் கிடைக்கும். அதிலும் சிறுவர்கள் ஓட்டும் "அரை வண்டி" நாளோ ஐந்தோ தான் இருக்கும். சனி,ஞாயிறுகளில் காலையில் வேகமாய் போகவில்லையென்றால் ஏதாவது மொக்கை வண்டி தான் மிச்சமிருக்கும். அவைகளில் பெல் வேலை செய்யாது, பிரேக் பேருக்கென்று இருக்கும், செயின் எந்த நேரமும் அறுந்துவிடும். எங்கள் எல்லோருக்கும் "மெஜென்டா" கலரில் இருக்கும்  ஒரு சைக்கிள் தான் டாப் டார்கெட். காலை எட்டு மணிக்கெல்லாம் சைக்கிள் கடையின் முன் "FERRARI" க்கு காத்திருக்கும் மைக்கில் ஷூமேக்கர் போல உட்கார்ந்திருப்போம். யாரோ ஒரு அதிர்ஷ்டசாலிக்கு "மெஜன்டா" கிடைப்பாள். மற்றவர்கள் கிடைத்ததை வைத்து சந்தோஷப்படுவார்கள். 

பல வாரங்களுக்குப்பின் அன்றைக்கெனக்கு "மெஜென்டா" கிடைத்தாள். நேரான ஹேண்ட் பார்,கனீரென்ற பெல். அழுத்திப்பறந்தேன். பங்களா மேடு, மதுரை ரோடு, என்.ஆர்.டி ரோடு எல்லாவற்றையும் சுற்றிவிட்டு மணியை பார்த்தேன். இன்னும் கால் மணி நேரம் தான் இருந்தது. இன்னொரு "ஒரு மணி நேரத்திற்கு" நீட்டிப்பு செய்து வண்டியை வைத்துக்கொள்ள மனது ஏங்கியது. வீட்டில் போய் காசு கேட்டால் அம்மா தோசைக்கரண்டியால் வெளுத்து வாங்க வாய்ப்பு பிரகாசமாய் இருந்தது. ஏற்கனவே "சட்டையில் இன்க் கொட்டியது", "கையெழுத்து கேவலமாய் இருப்பது" போன்ற பெண்டிங் கேஸுகள் என் மேல் இருந்ததால் அம்மாவிடம் போகும் முடிவை கைவிட்டேன். இந்த நேரங்களில் எல்லாம் எனக்கு ஆபத்பாந்தவனாய் இருப்பது அய்யம்மா தான். அப்பாவின் அம்மாவை நாங்கள் "அய்யம்மா" என கூப்பிடுவோம். அய்யம்மாவின் வீட்டிற்கு வண்டியை விட்டேன்.

அய்யம்மா வீட்டில் சும்மா இருந்து நான் பார்த்ததில்லை. தரைகள் பேர்ந்து கிடந்தால் சிமெண்ட் கலந்து அவளே பூசுவாள். சுண்ணாம்பு கலந்து சுவற்றிற்கு வெள்ளையடித்துக்கொண்டிருப்பாள். வெளியே திடீரென செடிகள் வைத்து பதியம் போடுவாள். வாத்துப்படம்  போட்ட கூடை பின்னுவாள். ரொம்ப டயர்ட் ஆன நேரங்களில் வித விதமாய் சாமி கும்பிட துவங்கிவிடுவாள். கண்களை மூடிக்கொண்டு உதடுகள் நடுங்க சாமிப்படங்களின் முன் நின்றிருப்பாள். சில நேரங்களில் நானும் அய்யம்மாவின் பக்கத்தில் போய் நின்று கொள்வேன். அய்யம்மாவின் முகத்தை உற்றுப்பார்த்து என் முகத்தை அதே போல பக்தி டோனில் வைத்துக்கொள்ள முயற்சி செய்வேன். இடையிடையே கண்களை திறந்து அய்யம்மா ஆன்மீக உலகத்திலிருந்து இந்த உலகத்திற்கு வந்து விட்டாளா என பார்த்துக்கொள்வேன். கண் விழித்தவுடன் அய்யம்மா எனக்கு  திருநீர் பூசிவிட்டு  "கால் ரூபா" கொடுப்பார். அந்த கால் ரூபாயை பாக்கெட்டில் போட்டுவிட்டு நான் பக்தியில் நெகிழ்வேன். 

அந்தக்காலங்களில் அய்யம்மாவிற்கு மாரியம்மா என்ற ஆன்மீக தோழியிருந்தார்.  மாரியம்மா எப்போதும் மஞ்சள் அல்லது சிகப்பு சேலை தான் கட்டியிருப்பார். எனக்கு மாரியம்மாவை பார்த்தாலே பயம். குரல் ஒரு மாதிரி கீச்சு கீச்சு என்றிருந்தாலும் ,பேசும் போது கண்கள்   திடீரென பெரிதாகும். லாரி பிரேக் அடித்தாற்போல்  "உஸ்" என சத்தம் கொடுத்து  வித்தியாசமாய் ஒலியெழுப்பி  முன்னறிவிப்பின்றி அருள் இறங்கி சாமியாடுவார்.

"பங்குனிக்கப்புறம்  எல்லா விசேஷமா இருக்குமுத்தா..கலங்காதடி .. எம்பிள்ளைகள அப்பிடி விட்ருவேனா..வீரபாண்டிக்கு  நடந்து போய் ஆறு செவ்வாய்க்கு  தீபம் போடு  அப்புறம் பாரு   "

இப்படியாக கொஞ்ச நேரத்தில் பேச்சுவார்த்தை முற்றுப்பெற்று அய்யம்மா மாரியம்மாவிற்கு டீ போட்டுக்கொடுத்து வழியனுப்பி வைப்பாள். மாரியம்மா வந்துவிட்டு போன சில நாட்கள் அய்யம்மாவின் வீட்டில் ஆன்மீக நடவடிக்கைகள் அதிகமாக இருக்கும். கோயில்களுக்கு நேர்த்திக்கடன்கள் போடப்படும். எலுமிச்சைப்பழங்கள் வீட்டின் ஏதோ ஒரு மூலையில் குங்குமம் தடவி வைக்கப்படும். கையில்  கலர் கயிறுகள் கட்டப்படும். 

நான் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு அய்யம்மாவின் வீட்டிற்குள் போனேன். வீட்டில் இருக்கும் மர டேபிளில்  எதையோ எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள் அய்யம்மா. நான் உள்ளே வரும் சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தாள். 

"என்ன சிவராஸ்..சும்மா வந்தியா.." 

"ம்ம்.."

என்னை ஒருமுறை கவனமாய் பார்த்துவிட்டு 

"லேய் ..என்னடா கரிச்சட்டிகனக்கா  போய்க்கிட்டிருக்க... வெயில்லயே ஆடுவியோ..  "

அது அன்பின் வெளிப்பாடு. பாடி சேமிங் எல்லாம் எங்கள் சிலபஸ்ஸில் இல்லை. 

"அய்யம்மா..சைக்கிள் ஓட்டனும்..காசு வேணும் "  

"ஓ... அதான் கோளாறா இங்க வந்தியா..எம்புட்டு"

"முக்கா ரூவா "

"ஏய்..கொள்ளக்காசா இருக்கு..நீ சின்னப்பயனு ஏமாத்துறானுக போலுக்க.."

"ம்ஹீம் .. எல்லாருக்கும் அதான் ..."

கொஞ்ச நேரம் யோசித்து பார்த்துவிட்டு தன் சுருக்குப்பையை எடுத்தாள். அதற்குள் சில்லறைகள் சத்தம் போட்டது. எச்சில் முழுங்கிக்கொண்டேன். ஒரு ரூபாய் எடுத்து கையில் கொடுத்தாள். 

"சூதானமா ஓட்டு..மெயின் ரோடு போகக்கூடாது.." 

இது போன்ற நேரங்களில் சொல்லப்படும் எல்லா அறிவுரைக்கும் நல்ல பிள்ளை போல தலையாட்டி விடுவது மரபு.

"தேங்க்ஸ் அய்யம்மா "

வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பத்தயாரானேன்.


"டேய் நில்லு..உனக்கு இங்கிலிஷ் தெரியுமா " .வீட்டின் வாசலுக்கு பக்கத்தில் வந்து கொஞ்சம் தாழ்ந்த குரலில் அய்யம்மா கேட்டாள். கொஞ்சம் யோசித்தேன். எப்படியும் இங்கிலீஷிஸில் அய்யம்மா கேள்வி கேட்பதற்கு வாய்ப்பில்லை எனபதை உறுதி செய்துகொண்டு "ம்ம் ..தெரியுமே "  என்றேன்.

"சைக்கிளுக்கு காச கொடுத்திட்டு ஒரு எட்டு இங்க மறுபடியும் வந்திட்டுப்போ.." 

"ம்ம் "

போய் சைக்கிளுக்கு அடுத்த ஒரு மணி நேரத்திற்கான காசை கொடுத்து விட்டு திரும்பவும் அய்யம்மா வீட்டுக்கு வந்தேன். வீட்டின் ஜன்னல்கள் அடைக்கப்பட்டு வீடே பாதி இருளில் இருந்தது. நான் முதலில் வழக்கம்போல அய்யம்மாவின் "வீட செம்மடுத்துறேன்" வேலையாய் தான் இருக்குமென நினைத்தேன். ஆனால் இது வேறு வில்லங்கம் என பின்னர்தான் தெரிந்தது. வீட்டின் ஹாலில் இருந்த மர டேபிளின்  முன் அய்யம்மா உட்கார்ந்திருந்தாள்.  ஆங்கில  ஆல்ஃபபெட்டுகள்,எழுத்துக்கள்  எழுதப்பட்ட போர்டு ஒன்று டேபிளின் மேல் இருந்தது. பக்கத்தில் மெழுகுவத்தி எரிந்துகொண்டிருந்தது.

"என்னய்யம்மா தாயம் விளாடுறீங்களா.."


அய்யம்மா திரும்பி என்னைப்பார்த்தாள். அது ஒரு மாதிரியான சந்தேகப்பார்வை. எனக்கு அந்த வயதில் மிகவும் பரிட்சயமான பார்வையது. "இவன ஆட்டைல சேக்கலாமா வேணாமா" என பெரியவர்கள் எங்களை ஒரு மாதிரி குழப்பத்தில் எப்போதும் பார்ப்பார்கள்.

"இங்க வந்து உட்காரு.. உனக்கு இதெல்லாம் தெரியும்ல"

முன்னமே சொன்னது போல அந்த போர்டில் கட்டங்கள் போட்டு ஆங்கில ஆல்ஃபபெட்டுகள் எழுதப்பட்டிருந்தது. ஸ்கேர்ள்  வைத்து  அளந்து ஒரேயளவாய் எழுத்துக்கள் வரையப்பட்டிருந்தன. சில கட்டங்களில் "யெஸ்" "நோ " வென இருந்தது.  நான்  "தெரியும்" என்பது போல தலையாட்டினேன்.

"சிவராஸ்.. இந்த ஒரு ரூவா காச நடுவில அந்த கட்டத்துல வைக்கணும். நாம ரெண்டு பேரும் ஆளுக்கொரு பக்கமா அதுல வலது கை ஆட்காட்டி விரலை வைக்கணும். பெறகு அவுங்க கூட நாம பேசத்தொடங்கலாம். கேள்வி கேட்கலாம். அப்புறம் காசு நம்ம விரலோடு சேர்ந்து அதுவா நகந்து போகுமாம். காசு எந்தெந்த கட்டத்துக்கு போகுதோ அந்த எழுத்தும் வார்த்தையும் தான் அவங்க நமக்கு சொல்ற பதில்.." 

கேம் கொஞ்சம் குழப்பமாய் இருந்தது. "எவுங்க? "

"ஆவிகள் ...நாம சித்தப்பாட்ட பேசப்போறோம்...பழனிசாமிட்ட"

பிற்காலத்தில் தான் அது ஆவிகளிடம் பேசுகிறவர்கள் பயன்படுத்தும் ஓஜா போர்டு என்பதை தெரிந்து கொண்டேன்.அப்போது தெரிந்திருக்கவில்லை. அய்யாமாவிற்கு பழனிசாமி என்கிற ஆண்குழந்தை இருந்ததாகவும் அவர் சிறுவயதிலேயே அம்மையில் இறந்ததாகவும் கேள்விப்பட்டிருந்தேன். அய்யம்மாவின் புத்திர சோகத்தையும் ,பிள்ளையிடம் பேச வேண்டும் என்கிற ஏக்கத்தையும் புரிந்து கொள்கிற அறிவும் ஆற்றலும் எனக்கு அப்போது வாய்க்கவில்லை. எனக்கு அது ஒரு போர்டுகேம். ஆவி என்கிற வார்த்தை ஒரு வித பயத்தையும்,கிளர்ச்சியையும் தந்தது.

மெழுகுவர்த்தியின் நிழல் அந்த வெள்ளை நிற போர்டில் கோணலாய் தெரிந்தது. அய்யம்மாவின் சோகமான முகத்தை  அந்த மஞ்சள் வெளிச்சத்தில் பார்க்க முடிந்தது. கைகளை கூப்பி அய்யம்மா பேசத்தொடங்கினாள். யாரிடமோ கேட்டு மனப்பாடம் செய்து சொல்வது போல இருந்தது.

"பூலோகத்தில் உள்ள ஆவிகளுக்கு வணக்கம். உங்களின் அமைதிக்காக நாங்கள் பிராத்திக்கிறோம். எங்களின் அன்பை ஏற்றுக்கொள்ளுங்கள். எங்களுடன் பேச உங்களுக்கு சம்மதமா"

கையிலிருந்த ஒரு ரூபா காசை "ஸ்டார்ட்" என்ற கட்டத்தில் வைத்தாள். என்னைப்பார்த்து கண்ஜாடை காட்டினாள். நான் எனது வலது கை ஆட்காட்டி விரலை காசின் ஒரு மூலையிலும் ,அய்யம்மா மறு  மூலையிலும் வைத்துக்கொண்டோம். எனக்கு கொஞ்சம் படபடப்பாய் இருந்தது. ரெண்டு, மூன்று நிமிடங்கள் ஆகியும் காயின் நகரவில்லை. எனக்கு வியர்க்கத் தொடங்கியது. கை வேற வலிக்கத்தொடங்கியது.

"அய்யம்மா..தண்ணி தவிக்குது..உள்ளபோய் குடிச்சிட்டு வந்திரவா"

"கிருத்துவம்  புடிச்சிவனே..செத்த நேரம் அமேதியா உட்கார முடியாதா "

அமைதியானேன். இந்த பாழாய்ப்போன ஆவிகளுக்கு ஒரு பங்க்சுவாலிட்டி இல்லையே என எனக்கு கோபமாய் இருந்தது.எனக்கு அந்த இருட்டில் ஆவிகளை விட அய்யம்மாவை பார்க்கத்தான் பயமாய் இருந்தது. போன மாதத்தில் பத்ரகாளியம்மனுக்கு வேண்டுதல், இந்த மாதத்தில் ஆவிகள் உலக தொடர்பு என அய்யம்மாவின் எக்ஸ்டரா கரிகுலர் ஆக்டிவிட்டிஸ் எல்லை மீறி போய்க்கொண்டிருந்தது.தவிர என் சைக்கிள் வேற ஏக்கத்துடன் வெளியே நின்றுகொண்டிருந்தது. அய்யம்மா ஏழாவது முறையாக  "பூலோகத்தில் உள்ள ஆவிகளுக்கு வணக்கம்.." என்று ஆரம்பித்தாள். எப்பேர்ப்பட்ட பேய் வந்தாலும் "தேங்க்ஸ் ஃபார் கமிங்" சொல்லும் மன நிலையில் இருந்தேன். "எங்களுடன் பேச சம்மதமா" என அய்யம்மா சொல்லி முடிக்கையில் காயின் நகரத்தொடங்கியது. எனக்கு குபீரென்று இருந்தது. ஒரு ரூபா காசு மெதுவாய் நகர்ந்தது. அய்யம்மா என்னையே  பார்த்தார்.   சத்தியமாய் நான் நகர்த்தவில்லை. நகர்ந்து வந்த காயின் சரியாய் "YES " என்ற கட்டத்தில் நின்றது. அதே நேரத்தில் ஜன்னல் கதவும் லேசாய் சத்தத்துடன் அடித்தது. வீல் என கத்தி வீட்டிலிருந்து தெறித்து ஓடி வெளியே வந்து நின்றேன். அழத்தொடங்கினேன். அய்யம்மாவும் வெளியில் வந்தார்.

" லேய்..ஊமக்குசும்பா..வெளாட்டுத்தனம் பண்றியா"

"அய்யம்மா சத்தியமா நான் நகட்டல..நீங்க தான நகுட்டினீங்க..பயமாருக்கு"


  இந்தமுறையெனக்கு அழுகை பீறிட்டு வந்தது. வீட்டிற்குள் இருந்து தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள். அய்யம்மாவின் முகத்திலும் கலவரம் தெரிந்தது.   நான் கொஞ்ச நேரத்தில் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். அய்யம்மாவும் நானும்  அதற்கப்புறம்  இந்த சம்பவம் பற்றி  பேசியதாய் நினைவில்லை.  கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் ஓடிவிட்டது. பல ஆங்கிளில் யோசித்து பார்த்துவிட்டேன் ,இதுவரை  திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை.  எனக்கு காசு அதுவாக நகர்ந்ததோ என்கிற  பயம், அய்யம்மாவிற்கு நான் நகட்டினேனோ என்கிற பயம். ஆவிகள் சிலருக்கு பயம்..சிலருக்கு நம்பிக்கை. 

கருத்துகள்