சில சம்பவங்கள் : THE COLLEGE ( Chapter: Rise of Rebels)

 

                                                   ஜூன் 2001
ராண்டாவில் கூட்டமாய் பெற்றோர்களும், மாணவர்களும் நின்றிருந்தனர். ஒரு மாதிரி "ங்கொய்ங்" என்ற  சத்தம் அங்கெங்கும் ரீங்காரமாய் எதிரொலித்துக் கொண்டிருந்தது.வெளியே வந்து எட்டிப்பார்த்தேன். கல்லூரியின் கட்டிடங்கள் பெயர்களெல்லாம் வித்தியாசமாக இருந்தது. "சிவா" "விஷ்ணு" "கணபதி" "குமரன்".  கோவில்களுக்கு அடிக்கப்படும் இளஞ்சிவப்பில் கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது.கூட்டத்தில் திடீரென சலசலப்பு  அதிகமானது. அட்மிஷன்களை கவனிக்கும் அலுவலர்கள் கோஷம் போல கத்தினர் 

"அடுத்த இருபதை உள்ள அனுப்புங்க"  

சரியாய் இருபது சேர்கள் போடப்பட்டிருந்தது. பெற்றோர்கள் சேர்களில் உட்கார்ந்து கொள்ள.. நாங்கள் நின்றுகொண்டிருந்தோம். பி.டி எனப்படுகிற இராமச்சந்திரன் சார் உள்ளே வந்தார். அவரை ஒரு கல்லூரியின் உடற்பயிற்சி ஆசிரியர் என்று பார்ப்பவர்களால் சொல்லிவிட முடியாது. ஒரு சாயம்போன சட்டை, வெள்ளை வேட்டி, அடர்ந்த வெள்ளைத்தாடி,கண்ணாடிக்குள் தெரியும் முழியாங்கண்கள்  என  பயமுறுத்துவதெற்கென்றே  செய்து வைத்தார்ப்போல ஒரு தோற்றம். குரலும் சளைத்ததல்ல என அவர் பேசத்தொடங்கியதும் தெரிந்தது.

"ராமகிருஷ்ண தபோவனத்தால் நடத்தப்படும் இந்த கல்வி நிறுவனம் குருகுலக்கல்வியை கற்பித்து, விவேகானந்தர் கூற்....கூற்றின் படி இளைஞர்களை  உருவாக்கி.."

தான் பார்த்து வாசித்துக்கொண்டிருந்த பேப்பரை ஆழமாய் பார்த்தார்.பின்பு மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டார். நிமிர்ந்து எங்களெல்லோரையும் பார்த்தார். அந்த வெள்ளைத்தாடியை தன் இடது கையால் தடவிக்கொண்டார்.

"இது ஒரு போர்டிங் காலேஜ். யாரும் டே ஸ்காலர் கிடையாது. எல்லா விவரமும் உங்க அப்ளிகேஷன்லேயே பார்த்திருப்பீங்க..இருந்தாலும் சொல்றோம் கேட்டுக்கிடுங்க. தினமும் காலைல நாலே  முக்காலுக்கு  எழும்பனும். அஞ்சறை  டூ  ஏழு ஸ்டடி அவர். ஏழு மணிக்கு பிஸிக்கல் ஜெர்க்ஸ் ..சூர்ய நமஸ்கார். எட்டுக்கு பிரேயர். அப்புறம் ப்ரேக்ஃபாஸ்ட்"     

சொல்லிக்கொண்டே எங்களின் முகங்களையெல்லாம் நோட்டம் விட்டபடி இருந்தார். அது சிங்கம் காட்டுக்குள் வரும் புது விலங்குகளை பார்ப்பது போல இருந்தது. முகத்தில் மருந்துக்கு கூட சிரிப்போ..வரவேற்போ தென்படவில்லை.  மதுரைக்கும் சோழவந்தானுக்கும் நடுவில் விவேகானந்தா கல்லூரி ஒழித்து வைக்கப்பட்டிருக்கிறது. தென் மாவட்டங்களில் "சாமியார் காலேஜ்" என அறியப்படும் இந்த கல்வி நிறுவனம் பற்றி நிறைய பேர் அறிந்திருக்க மாட்டார்கள். 


"நைன் தேர்ட்டி டூ  டவெள் தேர்ட்டி கிளாசஸ்.. மேல இருக்கிற ஹால்ல தான் பிரேயர் நடக்கும். அந்த ஹால்ல ஒவ்வொரு ஸ்டூடெண்ட்டுக்கும் ஒரு ஸ்கொயர் பாக்ஸ் ஒதுக்குவாங்க. அங்க தான் பிரேயர் டைம்ல உட்காரனும். அதை வைச்சு தான் அட்டெண்டன்ஸ் எடுப்பாங்க. பெர்மிஷன் இல்லாம ரெண்டு பிரேயர் ஆப்சென்ட் ஆன்னா வீட்டுக்கு தந்தி போயிரும்..அப்புறம் என்கொய்ரி தான் "

அவர் பேசிக்கொண்டே போனார். கல்லூரியின் விதிமுறைகளை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டு,தெரிந்தே வந்திருந்தாலும்... எனக்கு பி.டி யின் குரலில் அதை கேட்பது பேயே நேரடியாய் வந்து திகில் கதை சொல்வது போல இருந்தது.  கல்லூரியை பற்றி நமக்கிருக்கும் கனவுகளில் கண்ணிவெடி வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது . ஊரே "மின்னலே" வில் வரும் "வசீகரா" பாடிக் கொண்டிருக்கையில் நாங்கள் தினமும் மூன்று வேளை பஜனை பாடப்போகிறோம்.

"கைக்குத்தல் அரிசில சாப்பாடு.. இயற்கை உணவு .. சாப்பாடு ஆரோக்கியமானதா இருக்கும்.. நீங்க எதிர்பார்க்கிற டேஸ்ட்ல  இருக்காது.. மெஸ்ல பசங்களே தான் செர்வ் பண்ணனும். சாப்பிடறப்போ பேசக்கூடாது. மீறினா..நடவடிக்கைகள் இருக்கும்.."  

"நடவடிக்கை" கள் என்பது அரசாங்கங்கள் சொல்லும் "சட்டம் தன்  கடமையை செய்யும்" என்பது போன்ற சொலவடை. நாங்க "அடிச்சி தோலை 
உறிச்சிருவோம்" என்பதை  மறைமுகமாக சொல்வது.கொஞ்ச நேரத்தில் வெளியே வந்து எல்லா அப்ளிகேஷன்களையும் முடித்து..கட்டணத்தை கட்டிவிட்டு..ரசீதுக்காக காத்திருந்தேன். தோளில் யாரோ தட்டினார்கள். திரும்பினேன். கிட்டத்தட்ட ஆறடியில் ஆஜானுபாகுவாய் அவன் நின்று கொண்டிருந்தான்."பாஸ்...குணா..குணசேகர்" . கையை நீட்டினான்.

"சிவராஜ்" . கை கொடுத்தேன். பக்கத்தில் வந்து ஹஸ்கி குரலில் "பாஸ் பாட்டனிக்கு B வருமா..P வருமா .." என சொல்லி அப்ளிகேஷன் பாரத்தை என் கையில் அவசரமாய் திணித்தான். கொஞ்சம் குழப்பத்துடன் அதை வாங்கிப்பார்த்தேன். அவன் அங்கே இளங்கலை தாவரவியலுக்கு விண்ணப்பிக்கிறான். ஆனால் Botanyக்கு ஸ்பெல்லிங் தெரியவில்லை. முதலில் கேலி செய்கிறான் என்று தான் நினைத்தேன். ஆனால் அவனது பனிரெண்டாவது மதிப்பெண்களை விண்ணப்பத்தில் பார்த்தேன். எல்லாப்பாடத்திலும் மதிப்பெண்களெல்லாம் மூன்று இலக்கத்தை அடைய  முக்கிக்கொண்டிருந்தது. இது பத்தாவது மார்க்ஸீட்டா என குழப்புவது போல மார்க்குகளை அள்ளியிருந்தான்.

"B தான் பாஸ் வரும்"  

"அப்பிடியே நீங்களே.." என சொல்லி தன் பேனாவையும் என் கையில் திணித்தான். அவன் விண்ணப்பத்தை ஒரு பெஞ்சில் உட்கார்ந்து பூர்த்தி  செய்தோம். பக்கத்தில் ஒரு பெரியவர் வந்து நின்றார். வேட்டியை ஒரு முறை சரி செய்து கெட்டினார். "லே..இந்த பாரத்தையே ரொப்ப முடியலேயே..நீ  எந்த காலத்துல டிகிரி வாங்கப்போற ..இதென்ன காசுக்கு பிடிச்ச கேடா ". அவர் மேல் பீடி நாற்றம் அடித்தது. 


குணா வேகமாய் எழுந்து அவரை தள்ளிக்கொண்டு நடந்தான். "ப்போய்.. உம்ம பேசாம தான வரச்சொன்னோம்..". அவரை  ஒரு மரத்தடியில் நிற்க வைத்துவிட்டு வந்தான்.

"பாஸ் ..ஃபாதர்...மதியம் சாப்பாடு லேட்  ஆவுதுல அதான் சூடாக்கிட்டாரு "

 அன்றைய தினம் குணா அந்த கல்லூரியில் வந்து சிக்கினானா அல்லது கல்லூரி அவனிடம் சிக்கியதா என்பது அந்த விவேகானந்தருக்கே வெளிச்சம்.
    
                   -------------------------------------------------------------------
                           ஆகஸ்ட்  2001

காலையில் நாளே முக்காலுக்கு எழுவதென்பது எரிச்சலை கொடுக்கும் தான்.  அத்துடன் வார்டன் தன் கையிலிருக்கும் பிரம்பை வைத்து ஜன்னல் கம்பிகளில் இழுத்து... அதிலெழும் ஒலியுடன் எழுவதென்பது பதினெட்டு வயதில் யாருக்கும் வரக்கூடாத சோகம் என எண்ணிக்கொண்டே எழுவேன் . அரைத்தூக்கத்தில் பெட்ஷீட்,தலையணையை சுருட்டிக்கொண்டு ரூமை நோக்கி நடந்து போய்க்கொண்டிருப்போம். நூற்றுக்கணக்கான சக மாணவர்களும் ஸாம்பிக்கள் போல அவ்வண்ணமே நடந்து போய்க்கொண்டிருப்பார்கள். குணா பக்கத்தில் இடித்தபடி வந்து கொண்டிருந்தான்.

"மல  மாடு..இடிக்காம வாயேன்டா.." 

"ஏன்..இந்த முத்தையா மூதேவிக்கு அந்த குச்சியை வச்சி சொரண்டாம எழுப்ப முடியாதாமா"

"நாளைக்கு காபி போட்டுட்டு வந்து எழுப்ப சொல்றேன்"

கண்ணை மூடிக்கொண்டே கனைப்பது போல  சிரித்தான். நானும் குணாவும் வேறு வேறு ரூம். தினமும் காலையில் எழுந்து...கூடவே என் ரூமுக்கு வந்து டூத் பேஸ்ட் கடன் வாங்குவது அவனது வாடிக்கை.

"யோவ் சிவா..இன்னும் கொஞ்சம் கொடும்யா..இழுவிக்கிட்ருக்க"  கருகிக்கொண்டே கொடுப்பேன். முதல் மூன்று மாதத்தில் கல்லூரியின் நெளிவு சுளிவுகளை கற்கத்தொடங்கியிருந்தேன்.மெஸ்ஸில் வாயசைக்காமல் பேசுவதெப்படி..ஒரே வேட்டியை துவைக்காமல் ஒரு வாரம் மாற்றி மாற்றி கட்டுவதெப்படி..பிரேயர் ஹாலில் அதிவேகமாய்  தூங்குவதெப்படி...என கல்லூரியின் அத்தியாவசிய தேவைகளை கற்றிருந்தேன். ரூமில் கார்த்தி..தவசி என எங்களைத்தவிர ரெண்டு பேர் மட்டும் இருந்தார்கள். தவசி நாலரை மணிக்கே எழுந்து குளித்து விடுவான். திருநீர் பட்டை அடித்து வெள்ளை வேட்டி சட்டையில் ஸ்டடி Hour க்கு தயாராகியிருந்தான். அவன் பக்கத்தில் எப்பவும் திருநீர் வாடை அடிக்கும். தூரத்தில் கார்த்தி செல்ப்ஃக்குள் தலையை விட்டு தூங்கிக்கொண்டிருந்தான்.

குணா தவசியை கூப்பிட்டான். "ஏம்யா..இவ்ளோ துடுக்கா ஸ்கூல்ல படிச்சிருந்தேன்னா..இன்ஜினியரிங்..கிஞ்சினியரிங்  போயிருக்கலாம்ல..."

தவசி தன் கையில் கட்டியிருந்த சில்வர் வாட்சில் டைம் பார்த்தான். நேர விரயம் செய்வது தவசிக்கு பிடிக்காது. யாரையும் சூடு சொல் பேசி காயப்படுத்த மாட்டான். அந்த கல்லூரியின் லட்சிய மாணவர்களில் ஒருவன் என்பது அவனை பார்த்த நாளிலேயே எனக்கு தெரிந்தது. மேத்ஸ்ஸில் பி.ஹ்ச்.டி வாங்க வேண்டுமென்பது அவனது கனவு. தவசி என் பக்கம் திரும்பி சிரித்துவிட்டுப்போனான்.

"பதிலே சொல்லாம சிரிச்சிட்டு போறான்..அப்டினா என்னவாம் .."

"அவன ஊத்த வாய கழுவிட்டு வந்து என்கிட்ட பேச சொல்லுங்கனு அர்த்தம் "

என் தலையில் டமால் என அடித்தான். திடீரென ரூமிற்குள் வார்டன் சின்னசாமி நுழைந்தார். அதுவரை தூங்கிக்கொண்டிருந்த கார்த்தி செல்ஃப்க்குள் தலையை விட்டு எதையோ தேடுவதைப்போல நடித்தான். கல்லூரி ஈடு இணையற்ற நடிகர்களை இந்த சமுதாயத்துக்காக உருவாக்கிக் கொண்டிருந்தது. சின்னச்சாமி அந்த கல்லூரியின் முன்னாள் மாணவர். முதலாமாண்டு மாணவர்களுக்கு பொறுப்பு வார்டன். அவர் என்னையும் கார்த்தியையும் பார்த்து "நீங்க ரெண்டு பேரும் குருகுல ஆபிசுக்கு சாப்டுட்டு வந்துருங்க..ஒரு என்கொய்ரி " . நாங்கள் பேச முனைவதற்குள் கிளம்பிப்போய்விட்டார். குணா எங்கள் இருவரையும் பார்த்து சிரித்தான். பக்கத்தில் வந்து கை குலுக்கினான். "First என்கொய்ரில்ல... வாழ்த்துக்கள்.. நீங்க ரெண்டு பேரும் வயசுக்கு வந்துட்டீங்க... நல்ல தரமான கேசா இருந்தா நா உங்களுக்கு கேன்டீன்ல பப்ஸ்  வாங்கித்தரேன்.."

எனக்கு பயமாய் இருந்தது. எவ்வளவு யோசித்தும் எந்தத்தப்பும் புலப்படவில்லை. கார்த்தி தான் "நீயா ஏதாவது  உளறாத..ஏதாவது சப்ப கேசா தான் இருக்கும்..பயப்படாத "  என தேற்றினான். சாப்பிட்டுவிட்டு நேராய் குருகுல ஆபிஸ் போனோம். உள்ளுக்குள் ஏற்கனவே இருபது பேர் இருந்தார்கள். குருகுல ஆபிஸ் என்பது விடுதியின் தலைமைச்செயலகம். காலை முதல் மாலை வரை அங்கு மாணவர்கள் சம்பந்தப்பட்ட விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும். பீடி..குட்கா குடித்தவர்கள்..பாத்ரூமில் வார்டன்களின்   அந்தரங்க படம் வரைந்தவர்கள்..இரவில் கொல்லைப்புறம் வழியாய் சோழவந்தான் போனவர்கள் என எல்லா நேரமும் சதா போராளிகளால் குருகுல அலுவலகம் நிரம்பி வழியும். 

உள்ளே நுழைந்ததும் இருப்பவர்கள் எல்லோரும் எங்களது பக்கத்து ரூம் காரர்கள் என தெரிந்தது. விஷயம் அவ்வளவு வீரியமில்லை என கிரகித்துக்கொண்டேன். ஆபிசின் உள்ளே பரமானந்த சுவாமியும் இருந்தார். அவர் புதிதாய் குருகுலத்தின் இணைச்செயலராய் பதவியேற்றிருந்தார். அந்த காலத்திலேயே இன்ஜினியரிங் படித்து..நல்ல வேலையெல்லாம் பார்த்து விட்டு..துறவறம் பூண்டிருக்கிறார்.  காவி அணிந்து,சந்தனம் பூசிய படி  அவரது சாரில் அமர்ந்திருந்தார்.

"ரூம் நம்பர் 23,24 காரவிய்ங்க எல்லாம் வலது பக்கம் வந்து நில்லு.." சின்னச்சாமி எங்களை கை காட்டி சொன்னார்.எல்லோரும் வலது பக்கம் போய் நின்றோம். "டேய் நீ வாடா ..நீ அந்தப்பக்கம் நில்லு.. " .சாமியண்ணன் வந்து எங்களுக்கு எதிரில் நின்றான். பெயரைப்போலவே சாமியண்ணன் ஒரு வித்தியாசமான ஆசாமி. அதிகம் பேச மாட்டான். ஏதாவது ஒரு கேசில் சிக்கிக்கொண்டே இருப்பான். சின்னச்சாமி கேஸை சாமிக்கு விளக்கினார்.

"சாமிஜி..இந்தப்பையன் மூனு  நாளா பிரேயருக்கு ஆப்சென்ட்..ரூல் படி வீட்டுக்கு தந்தி கொடுத்திட்டோம்..நேத்து வந்து நான் இங்கே தான் இருக்கேன்றான்..விசாரிச்சா..தினமும் ப்ரேயருக்கும் வர்றானாம்..அப்புறம் ஏன்டா ஆப்சென்ட் விழுகுதுனு கேட்டா..அவனோட எடத்துல உட்காராம பேன் காத்து வருது னு  வேற இடத்துல உட்கார்ந்திருக்கான்

எல்லோரும் சிரிப்பை கட்டுப்படுத்தி நின்று கொண்டிருந்தோம். சாமியண்ணனை பார்ப்பதை தவிர்த்தேன். அவன் முகத்தை பார்த்தால் நம்மையறியாமல் சிரிப்பு வந்து விடும்.திரும்பி சுவாமிஜியை பார்த்தேன். கதை கேட்பது போல கண்களை குறுக்கி கேட்டுக்கொண்டிருந்தார்
 
"இந்த பசங்க பக்கத்தில தான் உட்கார்ந்திருக்கான்..விசாரிச்சிட்டேன்.."

எங்கள் பக்கத்தில் இருந்து சிலர் தலையாட்டினார்கள். எனக்கும் அவனை பார்த்த நியாபகம் இருந்தது. பரமானந்த சுவாமி அவன் பக்கம் திரும்பி  "கையடிச்சு சொல்லு..நீ பிரார்த்தனைக்கு வந்தேன்னு" . நாங்கள் ஒருவரையொருவர் திகிலாய் பார்த்துக்கொண்டோம். சாமியண்ணன் சின்னச்சாமி சார் பக்கம் திரும்பி "சார்" என்றான். சின்னச்சாமி சுதாரித்துக்கொண்டு "டேய்.. சாமிஜி..கைல அடிச்சு சத்தியம் பண்ணச்சொல்றாரு"  எங்களை கொஞ்ச நேரத்திலேயே வெளியனுப்பி விட்டார்கள். வெளியே வந்து ரொம்ப நேரம் சிரித்துக்கொண்டிருந்தோம். எல்லோரும் கலைந்து கிளாசுக்கு போய்விட்டார்கள். சாமியண்ணன் ஆபிசிலிருந்து வெளியே வந்தான். அவன் வெகுளியாய் இருந்தான். எந்த வித சங்கடமுமின்றி தனக்குத்தோணுவதை செய்ய ஒரு தில் வேண்டும். சிஸ்டம் கேட்கிற கேள்விகளுக்கு சாமி சொல்லும் பதில்கள் சுவாரஷ்யமானவை. பல பேரின் மனஅழுத்தத்தை சாமி போன்றவர்கள் போக்கிக்கொண்டிருந்தார்கள். அவனிடம் பேசணும் போல இருந்தது. 

"என்னடா ..என்ன சொன்னாங்க" 

"பனிஷ்மென்ட் சர்விங்காம்.. ஒரு மாசத்துக்கு" (ஒரு மாத காலம் எல்லா வேளை யும் மாணவர்களுக்கு பரிமாறிவிட்டு இரண்டாவது பந்தியில் தான் சாப்பிட வேண்டும் )

"பரமானந்தா சாமி..நல்லவர்..ஹார்ஸ் பனிஷ்மென்ட் தரமாட்டார்னு சொன்னானுங்க.."


"ஆமாயிவனே..நானும் அப்பிடித்தான் நினைச்சேன்... மொத ஒரு வாரம் தான் போட்டாரு..அப்புறம் பொசுக்குன்னு  ஒரு மாசம்ட்டாரு.."

"ஏன் என்னாச்சு நடுவுல.."

"சாமிஜி  வெக்கையாயிருக்கு..இன்னைக்கு ஒரு நா மட்டும் பேனுக்கு கீழ அதே யெடத்துல உட்கார்ந்திட்டு..நாளைல இருந்து என்னோட இடத்துல உட்கார்ந்திக்கிறேன்னு சொன்னேன் "

அவன் கேலி செய்யவில்லை. மனதிலிருந்து எழும் எண்ணங்களை நிறைய வடிகட்டிகள் போட்டு சலித்து..உலகியல் நடைமுறைக்கு ஒத்துவருகிறதா என்று சரிபார்த்து தான் எல்லோரும் பேசுகிறோம். சாமியண்ணன் போன்றோருக்கு அந்த வடிகட்டிகள் இல்லை. உலகத்திற்கு பொழுதுபோக்காய் அவர்கள் தென்பட்டாலும் அவர்கள் போராளிகள் தான்.
கருத்துகள்