செவ்வாய், 23 மார்ச், 2021

ஒரு ஆரஞ்சுக்காவியம் -5

என்ஸ்கடேவிலிருந்து  ஹேங்களோ ஒன்பது கிலோமீட்டர் தூரம் தான். சில நேரங்களில் சைக்களில் கூட நானும் தல்பீரும் இருபது நிமிடத்தில் போயிருக்கிறோம். இப்போது காரில் போய்க்கொண்டிருக்கிறோம் இருந்தும் அது வந்தது போல தெரியவில்லை. "யோவ்..யோரீஸ்..உன் கார் என்ன பிரசவ வலில இருக்கா..சத்தம் வருதே தவிர  ..வண்டி நகர மாட்டிங்குதே...". நான் பின் சீட்டில் படுத்திருந்தேன். கொஞ்சம் பலத்தை திரட்டி கவனமாய் பார்த்தேன். ரெபெக்காவின் மடியில் படுத்திருந்தேன். முன்னாலிருந்து தல்பீர் தலையை விட்டு எட்டிப்பார்த்து சிரித்தான். "என்ன சர்தார்.. அன்னைக்கு ரெபெக்காவ பார்த்தா  ஸீன் பட நடிகை ஜூலியா ஆன் மாதிரி இருக்குன்னு சொன்னியே..அத சொல்லவா.." சொல்லிவிட்டு சத்தமாய் சிரித்தேன். தல்பீர் என் வயிற்றில் குத்தினான். என்னைத்தவிர எல்லோரும் தெளிவாய் இருந்தார்கள். திருட்டு கேபிளில் பார்க்கும் படம் போல மொத்த உலகமும் ஒரே தெளிவில்லாமல் தெரிந்தது. ஆனால் உடல் முழுக்க எடை இல்லாமல் பறப்பது போல இருந்தது. எதை பார்த்தும் எனக்கு பயமே இல்லை. நினைத்ததை அதே நொடியில் சொல்ல முடிகிறது. இத்துனூண்டு ட்யூபுக்குள் வரும் புகைக்கு எத்தனை மகிமை. நான் மட்டும் எந்த நாட்டுக்காவது பிரதமரானால் இதை மாணவர்களுக்கு சத்துணவிலேயே சேர்த்து விடுவேன். தைரியம்,சந்தோசம், வெளிப்படைத்தன்மை..இத விட என்ன மயிரு வேண்டிருக்கு...

ரெபெக்கா என் தலை மயிரை கொத்தாய் தன் வலது கையால்  பிடித்து என்னை உட்கார வைத்தாள். அப்போதும் நான் அவள் தோளில் சாய்ந்து கொண்டேன். அவள் அத்தனை வேர்வையிலும் வாசமாய் இருந்தாள். என் கன்னத்தில் தட்டினாள். 

"டேய் சிவா..எழுந்திரு...எத்தனை ஷாட் இழுத்த..நாங்க இருபது நிமிஷத்தில வந்திடுறோம்னு சொன்னோமே...எந்த கேனயனாவது டக்கீலா சாப்பிட்டிட்டு ஹூக்கா இழுப்பானா

"இந்த ரெண்டு மணி நேரம் தான் என் வாழ்க்கையிலேயே சந்தோசமானது. அத நிப்பாட்டனுமா.."

"டேய்..நீ மொத உன்  மூத்திரத்த நிப்பாட்டனும்..நீ மட்டும் இப்போ நிதானத்துல இருந்திருந்தேனா உன்ன நானே அடிச்சு கொன்னிருப்பேன்..."

உண்மை தான். தற்சமயம் எனக்கும் இந்த உலகத்துக்கும், எனக்கும் என் உடலுக்குமான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. சில மணித்துளிகளுக்கு  முன் என் பேண்ட்டிலேயே மூச்சா போயிருந்திருக்கிறது. இத்தனைக்கும் என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. தல்பீர் தான் பேண்டை கழட்ட வந்தான். திடீரென மீண்டும் ஒரு முறை கண்ணை சிமிட்டி பார்த்தால் "ஒரு பூப்போட்ட" டவுசரில் இருந்தேன். வாழ்க்கையே சினிமா போல "எடிட் ஆகி..எடிட் ஆகி" தேவையானது மட்டும் தான் எனக்கு தெரிகிறது. என்னவொரு அருமருந்து அது... 

-----------------------------------------------------------------------------------------------------------------------------

 


நாமளே பார்க்காமல் நம் வீட்டுக்குள் ஒரு ரூம் இருந்து அதை ஆச்சர்யமாய் பார்ப்பது போல என்னை நானே பார்த்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு தூக்கமாய் வந்தது. ரொம்ப நாளைக்கு பிறகு ஊருக்கு போய்விடலாம் என்ற எண்ணம் தோன்றியது.இந்த ரெண்டு வாரத்தில் எனக்குள் எத்தனை மாற்றங்கள். பாத்ரூமுக்கெல்லாம் போய் அழுகிறேன். அவளுக்கு வரும் நவம்பரில் நிச்சயமாம். மொத்தக்குடும்பமும் இங்கே வருகிறதாம். எரிச்சல் எனக்குள் இனப்பெருக்கம் செய்துகொண்டிருந்தது.

"டேய் தல்பீர்..நா கெளம்புறேன் டயர்டா இருக்கு "

"DEV.D...நீ ஒரு வாரமா சரக்கடிக்கவேயில்ல அதான் இவ்வளவு குழப்பம்.. இன்டர்நெட்ல நெறய முடி வளர்த்துட்டு பேசுற ஸ்பிரிட்டுவல் குரு பேச்சலாம் கேட்க ஆரம்பிச்சிட்ட..இதெல்லாம் செட் ஆவாது..அவனவன் பிறந்ததுலேர்ந்து நல்லவனா இருக்கான்.அவனுக்கே ஒன்னும் நடக்கல. நம்ம ரெண்டுவாரத்துல என்ன சர்க்கஸ் பண்ணாலும் க்யூவை முந்திட்டு போக முடியாது

அவன் என்னுடைய மனசாட்சி போல. அவனுக்கு இதெல்லாம் நடந்திருந்தாலும் நானும் இப்படியே பேசியிருப்பேன். அவன் மேலே பெரிதாய் கோபமெல்லாம் வரவில்லை. என் பக்கத்தில் வந்து தோளில் கை வைத்தான். எனக்கு கண்கள் கலங்கியது.அடக்கிக்கொண்டேன்.

"வா...ரெபெக்கா கூப்பிடுறா பாரு.. எதிர்த்தாப்ல பர்கர் கிங்ல சிக்கென கொரிச்சிட்டு..அப்புறம் இங்க வந்து லைட்டா ரெண்டு பெக் மட்டும் போட்டுக்குவோம்.."

"இல்லடா..எனக்கு சுத்தமா பசிக்கல..சரக்கடிக்குற ஐடியாவே இல்ல.." 

ரெபெக்கா வெளியேயிருந்து கத்திக்கொண்டிருந்தாள். "பத்து நிமிஷம்..உட்கார்ந்திரு..வந்து பேசுவோம்.." வேகமாய் பர்கர் கிங் நோக்கி ஓடினான்.கடவுளே அந்த நேரத்தில் அவனை பார்க்க வந்திருந்தாலும் சிக்கன் எலும்புகளை அவன் குப்பையில் போடும் வரை காத்திருந்திருக்க வேண்டும். அந்த பாரில் இள மஞ்சள் நிறத்தில் வெளிச்சம் இருந்தது. கூட்டம் மொய்த்தது. எல்லா டேபிளிலும் பீர் ஜக்குகளும் ஹூக்கா புகை எந்திரமும் இருந்தது. சில பட்சிகள் சொருகிய கண்களுடன் அந்த டியூபில் வாயை வைத்து ஊதி..விருப்பமில்லாமல் புகையை  வெளிவிட்டு கொண்டிருந்தார்கள். ஒருத்தன் வந்து தலையை தட்டினான். திரும்பினேன். ஆறரை அடிக்கு குறைவில்லாமல் இருப்பான். மூக்கில் சில்வரில் ஊசி போல ஏதோ குத்தி இருந்தான்.

"இன்னைக்கு ASAS ஆடலாமா..வர்ரீங்களா.."

அவன் என்னை யோரீஸ்,ரெபெக்காவுடன் பார்த்திருக்க வேண்டும். அந்த பக்கிகள் ஊரிலிருக்கும் எல்லாரிடமும் ஒரண்டை இழுத்து வைத்திருக்கின்றன. "ASAS" எனப்படுவது அங்கு பிரபலமாக இருக்கும் பார் விளையாட்டு. அதாவது    "Abuse..Shot... Abuse... Shot".  எதிராளிக்கு ஒரு வசை பின் ஒரு டக்கீலா ஷாட்..வசை ..பிறகு ஷாட். யார் வசைக்கு நிறைய கை தட்டல் கிடைக்கிறதோ..யார் கடைசி வரை விழாமல் நிற்கிறார்களோ அவரே வெற்றியாளர்.சிலவாரங்களுக்கு முன்னால் இதே பாரில் வைத்து பல ஆறடி பூதங்களை ரெபெக்கா வெளுத்து வாங்கினாள்.அதன் எதிர்வினையாய் தான் இது இருக்க வேண்டும்.நான் ரெபெக்காவையும் யோரிசையும் தேடினேன்.

"ஏன் அம்மா இல்லாம..குழந்த வராதா...நீ இன்னும் வயசுக்கு வரலையா.."

அவன் சொல்லிவிட்டு செயற்கையாய் சிரித்தான்.ஏற்கனவே இருந்த எரிச்சலில் வேதியல் மாற்றம் ஏற்பட்டு கோபமாய் உருவெடுத்தது. 

"சரி வாடா..ஆனா இங்கிலிஷ்  ஓகேவா.." என்றேன் 

அவன் ஒரு மாதிரி முழித்து சரியென்றான்.


வசைகள் டச்சில் தான் பெரும்பாலும் நடைபெறும். ஆனால் வெளிநாட்டவர் வந்தால் ஆங்கிலத்துக்கு மாற்றிக்கொள்வார்கள். வசைகள்  சர்வ நாராசமாய் இருக்கும். முதல்முறை கேட்கும்போது நான் மிரண்டுபோனேன். அவன் டேபிளுக்கு என்னை கூட்டிக்கொண்டு போனார்கள். ஒரு பத்து பேர் நின்றிருந்தார்கள். நாங்கள் இருவரும் எதிரெதிரே உட்கார்ந்து கொண்டோம். என்னை வைத்து செய்யப்போகிறார்கள். எங்கள் முன் ஆளுக்கொரு சின்ன கிளாஸ் இருந்தது. அதை ஃபில் செய்ய ஒருத்தன் நின்று கொண்டான்.  அவனை எல்லோரும் "தியோ" என்றழைத்தார்கள். ஒரு பெண் விசிலடித்து"ஸ்டார்ட்" என்றாள். அவன் கண்கள் ஒரு மாதிரி பச்சை கலந்த நீலத்தில் இருந்தது. அவன் குனிந்து கிளாசை எடுத்து என்னை பார்த்த படி "ஏசியன்ஸ் எல்லோரும் ஏன் இவ்வளவு குட்டியா இருக்கீங்க..அஞ்சாவது மாசத்துல அம்மா ஆய் போறப்போவே கீழ விழுந்துடீங்களா.." சொல்லி விட்டு டக்கீலாவை மடக்கென குடித்தான். எல்லோரும் "ஹே.." வென கத்தி ஒலியெழுப்பினார்கள். முகத்தை கோணலாக்கி சேகுவேரா போல ஒற்றைக்கையை தூக்கினான். எல்லோரும் என்னையே பார்த்தார்கள். நான் கிளாஸை கையில் எடுத்தேன். எல்லோரையும் பார்த்து விட்டு அவனை பார்த்தேன். ரெபெக்காவின் உடல் மொழியது.

"எங்களுக்கு ஒரு அப்பா அதான் இப்படியிருக்கோம்.. உனக்கென்னப்பா பல அப்பா அதான் பல்க்கா இருக்க..உம்புள்ள உன்னை விட பல்கா இருப்பான் போலயே.."

சொல்லிவிட்டு சட்டை செய்யாமல் டக்கீலாவை குடித்தேன். நிறைய பேர் கத்தி ஆர்ப்பரித்தார்கள். உண்மையில் வசைகள் வன்முறையற்ற வடிகால். அதற்கு பின் நடந்து முடிந்த பத்து ரவுண்டுகளில் எங்களின் மொத்த குடும்பம்..அந்தரங்க உறுப்புகள் எல்லாமே சபைக்கு வந்துவிட்டிருந்தன. அவன் ஆங்கிலத்தில் தடுமாறினான். எனக்கும் நாக்கு கொஞ்சம் உளர தொடங்கியது. கோபத்தில் அவன் ஹூக்கா டியூபை வாயில் வைத்துக்கொண்டு "என் வீட்டு நாய்,பூனை மலத்தையெல்லாம் ஒரு சேர பார்த்தது போல இருக்கு உன் முகம்... " என்றான். ரசித்து ஒரு முறை இழுத்தான். இப்போது போட்டி டக்கீலாவில் இருந்து ஹூக்காவிற்கு மாறியிருந்தது. அது ஷிஷா ஹூக்கா எனவும் ..அதை இழுப்பதற்கு ஒரு கெத்து வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள். இப்போது மொத்த கூட்டமும் எங்கள் டேபிள் முன் இருந்தது. எனக்கும் ஒரு ஹூக்கா ஜார் கொடுக்கப்பட்டது. 

அவன் என்னை கோபமாய் பார்த்துக்கொண்டிருந்தான். "ஆனா அதையெல்லாம் விட உன் வாய் இப்படி நாறுதே..உம்பொண்டாட்டி கண்டிப்பா கோமால தான் இருப்பா.."  என சொல்லிவிட்டு ஒரு உறி உறிந்தேன். நானே வெடித்து மீண்டும் ஒட்டிக்கொண்டது போல இருந்தது. நூற்றி ஐம்பது கிலோமீட்டர் வேகத்தில் பைக்கில் கையை விட்டுக்கொண்டு போவது போல இருந்தது. அதற்கப்புறம் எத்தனை முறை உறிந்தேன்..யார் ஜெயித்தா என்பதெல்லாம் எனக்கு தெரியவில்லை. யோரிசும் ,தல்பீரும் என்னை தூக்கிக்கொண்டு  போவது கொஞ்சம் மங்களாய் தெரிந்தது. ரெபெக்கா யாரிடமோ சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.  

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கார் ஹேங்களோவில் உள்ள யோரீஸின் பண்ணை வீட்டுக்குள் போனது. வருகிற வழியெல்லாம் நாலு முறை நானே தனியாக நடந்து சென்று மூச்சா போகிற அளவு முன்னேறியிருந்தேன். பாதி போதை தெளிந்திருந்தது அதனால் பாதி சோகமும் திரும்பியிருந்தது. எல்லோரும் இறங்கி வீட்டை நோக்கி நடந்தார்கள். தல்பீர் என்னை கைத்தாங்கலாய் கூட்டிக்கொண்டு போனான்.என்னிடம் மெதுவான குரலில் பேசினான்.

"த்தா..நீ முழு லூசா மாறுறதுக்குள்ள ஊரு போய் சேந்திரு.."

"நா.."

"நீ ஒரு மயிறு கவுண்டரும் கொடுக்க வேண்டாம்..பொத்திட்டு வா"

நம்முடைய மனசாட்சியும் நம்மைப்போலவே  மரியாதையில்லாமல் பேசுகிறதென்று நொந்து கொண்டேன். கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு முன்னால் இருக்கிற இடத்தில் விறகுகளை போட்டு நெருப்பு மூட்டினான் யோரீஸ். நாங்கள் மூனு பேரும் அதையே பார்த்துக்கொண்டிருந்தோம். அந்த வீடு மூன்று பக்கமும் மக்கா சோழ காடுகளாலும் ஒரு பக்கம் புல் வெளியாலும் சூழ பட்டிருந்தது. நெருப்பு இப்போது உயரமாய் எரிந்து கொண்டிருந்தது. எல்லோரும் ஒரு ஜெர்க்கினையும் போட்டுக்கொண்டு நெருப்புக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்கள். எனக்கு ஜெர்க்கின் தேவைப்படவில்லை.யோரீஸ் என் உள்ளங்கையை இறுக்கிப் பிடித்தான்.இந்த முறை பீறிக்கொண்டு வந்தது அழுகை. அழத்தொடங்கினேன். உடல் குலுங்கி குலுங்கி...மூச்சை நிப்பாட்டி..குழந்தை போல அழுதேன். தல்பீர் என்னை ஆச்சர்யமாய் கண்கலங்கியபடி பார்த்தான். ரெபெக்கா தோளில் சாய்த்துக்கொண்டாள்.

"நா..எதையும் பிளான் பண்ணல..அழகா இருக்கானு தான் மொத நினைச்சேன்..இப்படி பிடிச்சு போய் மாட்டிப்பேன்னு நினைக்கல... வாழ்க்கைல ஒரே ஒரு காதல் ..என் மொத்த வாழ்க்கைய விட அடர்த்தியான காதல்..அது ஏற்கனவே இன்னொருத்தன காதலிக்கிற ஒரு பொண்ணு மேல போய் வந்திருக்கு..இது கிட்டத்தட்ட கள்ளக்காதல் மாதிரி தான்ல.."

தல்பீர் வேகமாய் தலையாட்டினான். அவனை மிதிக்க வேண்டும்போல இருந்தது.செய்யவில்லை 


"அவ கூட பேசிட்டு இருந்த அந்த நாலு மணி நேரம் தான் என் வாழ்க்கையிலேயே நான் அதிகம் சந்தோசமா இருந்தது.."

தல்பீர் "உஃப்" என ஊதினான். ரெபெக்கா பக்கத்தில் வந்து தலையை கோதி விட்டாள். நான் யோரீஸிடம் திரும்பி "ஒரு பாட்டு பாடுறீங்களா ப்ரோ..." என்றேன். அவன் கிட்டார் இசைத்துக்கொண்டே அழகாய் பாடுவான். ரெபெக்கா வீட்டிலிருந்து கிட்டாரையும் எடுத்து வந்து கொடுத்தாள். கொஞ்சம் யோசித்த படி பாடத்தொடங்கினான். அந்த பாடலை தமிழ்படுத்தினால் குத்து மதிப்பாய் இவ்வாறு வரும்

"நீயில்லா உலகம் 

             நீரில்லா நரகம் 

நீயில்லா தருணங்கள் 

    என் கல்லறை காலங்கள்..

உன்னை சிரிக்க வைக்க 

   உலகையே  கோமாளியாக்குவேன் 

நீ அழும் பட்சத்தில் 

  அத்தனை காரணத்தையும் எரித்து சாம்பலாக்குவேன் "

பாடல் இப்படி போய்க்கொண்டிருந்தது. தல்பீர் மரத்தில் முட்டுவது போல செய்து கொண்டிருந்தான். இந்த முறை எனக்கு சிரிப்பு வந்தது.  தல்பீர் என் பக்கத்தில் உட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் அதே இடத்தில் தூங்கிப்போனேன்.என் சட்டை பாக்கெட்டிலிருந்து போனை எடுத்து " ஐ  லவ் யு ..ட்ரூலி..டீப்ளி..மேட்லி " என டைப் செய்து மானஸ்விக்கு அனுப்பியிருக்கிறான். மக்கா சோளப்பயிர்கள் சாய்ந்து ரம்யமாய்  காற்றுக்கு நடனமாடியபடி இருக்க.. நான் நடப்பதறியாமல்   தூங்கிக்கொண்டிருந்தேன்.


------------------------------------------------------------------------------------------------------------------------------

                                                                                       ----தடையில்லாமல் தொடரும் கருத்துகள் இல்லை: