புதன், 3 ஜூன், 2009


பேருந்தல்...

காலை மணி 11
மே மாத வெயில் தமிழகமெங்கும் அடித்து கொண்டிருக்க
சென்னையில் மட்டும் செருப்பை சுழற்றி அடித்து கொண்டிருந்தது !

அத்தனை சூட்டிலும் இந்த வெள்ளைக்காரன் உடையை
வேலை நிமித்தமாய் அணிந்து வந்து
பேருந்துக்காக காத்திருந்தேன்!!!!
அந்த பச்சை தேர் இருமிக்கொண்டே வந்து சேர்ந்தது
பாதி சென்னை பஸ்சில் தான் இருந்தது.
என்னையும் உள்ளே அள்ளி போட்டுகொண்டு
ஊர்வலத்தை தொடக்கியது ஊர்தி!

கால் வைக்க இடம் தெரியாததால் "ஆம்ஸ்ட்ராங்"
போல் நடந்தேன்!
வண்டியில் "ஹோர்ன்" தவிர அனைத்திலும்
சத்தம் வந்தது!!!!

ஒருவர் 4 ரூபாய்க்கு ரேடியோ
ஸ்டேஷன் வாங்கினார்
மற்றொருவர் 3 ரூபாய்க்கு
லைட் ஹவுஸ் வாங்கினார்
இன்னொருவர் 2 ரூபாய்க்கு
தலைமை செயலகமே வாங்கினார்!!!!

ில்லரை இல்லாமல் 10 ரூபாய் தாள் கொடுத்ததால்
கண்டக்டர் டிக்கெட்டுடன் என்னையும்
சேர்த்து கிழித்தார்...

கூட்டம் அதிகமானது.
பேருந்தின் "காற்று இல்லா" பகுதிக்கு தள்ளப்பட்டேன்
அங்கே இருவர் கரங்களுக்கு நடவே
என் தலை மாட்டிக்கொள்ள- டிரைவர்
பிரேக் போடும் போதெல்லாம் எனக்கு
தூக்கு தண்டனை !!!!!!!!!!

அங்கிருந்து திமிரி தப்பித்து தடுமாறுகையில்
என் ஸூக்கள் கூடை கிழவியின்
கால்களை பதம் பார்த்தது!!!
"Very Sorry"
என அவசரமாய் ஆங்கில
சமாதானம் சொன்னேன்...
"
எருமமாதிரி வளந்திருக்கே அறிவு இருக்க?"
என பதிலுக்கு தரமான தமிழ் கேள்வி கேட்டாள்..

அத்தனை கூட்டத்திலும் "பெண்கள் தங்கங்கள்"
என முன்னோர் சொன்னதை நம்பி ஒரு சிலர்
உரசி பார்த்து கொண்டிருந்தனர்!!!!!!!

சில ஊருக்கு புதுசுகள் நிறுத்தத்திற்கு நிறுத்தம்
"
எம்ப்ளாய்மென்ட் ஆபீஸ்" வந்திருச்சா
என கேட்டு கண்டக்டர்ஐ கடுப்பாக்கினர்!!

சென்னை தூசி என் கண்ணில் பட்டு
கண்கள் காவிரி ஆனது
இமைகள் கர்நாடகாவாகி
என் கண்ணீர் அடைத்தது!!!!

கடைசி இருக்கையில் சில தன் மான
தமிழர்கள் ஈழ பிரச்சனையை நீளமாய் பேசினர்.
பின்பு இருக்கைகளில் கொஞ்சம் பரப்பி அமர்ந்தனர்,
இன்னொருவர் வந்தால் இருக்கையில் தாங்கள்
இறுக்கி அமர வேண்டும் என்பதால்!!

என் இடம் வந்தது
பேருந்திலிருந்து துப்ப பட்டேன்..
சட்டை கசங்கி இருந்தது
வெக்கையில் தகித்த வேர்வையில்
குளித்திருந்தேன்.
கை கால்களில் வலித்தது
இருந்தும் சிரித்தேன்.

எனக்கு தெரியும் எல்லா அனுபவங்களுமே
இனிமையானவை தான் நமக்கு
இரசிக்க தெரிந்தால்!!!!!!!!!!!!!